கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 2,801 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

மறுநாள் காலையில் செங்கோடக் கவுண்டன் வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கேணியிலிருந்து நெல் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கவலை ஏற்றத்தில் பூட்டியிருந்த மாடுகளைச் சக்கையாக வேலை வாங்கினான். ‘டிரேய்!’ ‘டிரேய்!’ என்று அவன் மாடுகளை அதட்டிய சத்தம் அரை மைல் தூரம் கேட்டது.

செங்கோடனுடைய உள்ளமோ அடுப்பில் வைத்த சோற்று உலையைப்போல் அடிக்கடி கொதித்துக் கொண்டும் பொங்கிக் கொண்டும் இருந்தது. குமாரி பங்கஜாவைப் பற்றி அடிக்கடி நினைவு வரத்தான் செய்தது. அதோடு அவளைப் பார்த்த இடமாகிய அரசமரமும் அதற்குப் பின்னாலிருந்த பொய்மான் கரடும் கண் முன்னால் வந்தன. பொய்மானைத் தேடிப் போவது பற்றிப் பெரியவர்கள் எத்தனையோ கதை சொல்லுவார்களே? அது தன் விஷயத்தில் சரியாகப் போய் விட்டதல்லவா?

இத்தனை நாளாகத் தன்னை விரும்பிக் கட்டிக் கொள்ளக் காத்துக் கொண்டிருந்த செம்பவளவல்லியை விட்டுவிட்டு அந்தத் தளுக்குக்காரியிடம் தன் மூட மனம் போயிற்று அல்லவா? அதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. பலர் முன்னால் அவமானப்பட நேர்ந்துவிட்டது! போதும்! போதும்! இந்த ஜன்மத்துக்குப் போதும்!

செங்கோடனுடைய உள்ளக் கொதிப்பை அதிகப்படுத்தும்படியான காரியங்கள் அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்து கொண்டிருந்தன.

வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஹரிஜனச் சிறுவனைச் செங்கோடன் அவ்வப்போது கூலிக்கு அமர்த்திக்கொள்வது வழக்கம். அந்தச் சிறுவன் தான் முதன்முதலில் அவனுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்ப ஆரம்பித்தான்.

“என்ன எசமான்! நேற்று சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டாவாமே…” என்று அந்தப் பையன் மேலே பேசுவதற்குள், செங்கோடன் அவனுடைய தலையில் பலமாக ஒரு குட்டுக் குட்டி, “போடா! படவா ராஸ்கோல் சினிமாவாம்! கலாட்டாவாம்! ஓடிப்போய் மடையைச் சரியாக வெட்டிவிடு! இங்கே வம்பு பேசிக்கொண்டு நின்றாயோ, மண்வெட்டியால் உன்னை ஒரே வெட்டாய் வெட்டிவிடுவேன்!” என்றான்.

“என்னாங்க இன்றைக்கு இவ்வளவு கோபம்! போலீஸ்காரன் கிட்டப் பூசை வாங்கிக்கிட்டது நெசந்தான் போலிருக்கு!” என்று சொல்லிக்கொண்டே சின்னான் தன்னை அடிக்கவந்த செங்கோடனிடம் அகப்படாமல் ஓடித் தப்பினான்.

பிறகு கிராமத்திலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். வேறு வழியாகப் போக வேண்டியவர்கள் கூடச் செங்கோடனைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று அந்தப் பக்கமாக வந்தார்கள். ஆனால் செங்கோடன் அவர்களுடைய விசாரணை விஷயத்தில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.

“என்னப்பா செங்கோடா?”

“ஓகோ! நீங்கதானா? எப்போது வந்தீங்க? கவனிக்கவே இல்லையே!”
“எங்களையெல்லாம் நீ கவனிப்பாயா? பெரிய மனுஷனாய்ப் போய்விட்டாய்!”

“அதுதான் தெரிஞ்சிருக்கே! பின்னே எதற்காக வந்தீங்க?”

“நேற்று ராத்திரி சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டா என்று சொன்னார்கள்! அதைப்பற்றிக் கேட்கலாம் என்று வந்தேன்.”

“அதைப்பற்றி என்ன கேட்கலாம் என்று வந்தீங்க?”

“அது நெசமா, என்னதான் நடந்தது என்று கேட்பதற்காகத்தான்!”

“நெசமில்லாதது உங்கள் காதில் வந்து விழுமா? ட்ரேய்! ட்ரேய்! சுத்தப் படுக்காங்குளி மாடு! நீயும் வெறும் வம்பு கேட்டுக்கொண்டா நிற்கிறாய்? வேலை வெட்டி இல்லாத பெரிய மனிதர்கள் தான் வம்பு பேசுவதற்காக வருகிறாங்க! உனக்கு என்ன கேடு! ட்ரேய்! ட்ரேய்!”

இப்படியாக மாட்டைத் திட்டுகிறதுபோல் வம்பு பேச வந்தவர்களையெல்லாம் திட்டிச் செங்கோடன் அனுப்பிக் கொண்டு வந்தான்.
கடைசியாக, ஒரே ஓர் ஆசாமியிடம் அவனுடைய ஜம்பம் பலிக்கவில்லை. அன்றைக்குச் செம்பா வராமலிருந்தால் நல்லது என்று செங்கோடன் எண்ணிக் கொண்டிருந்தான். தன்னுடைய மனம் சரியில்லாத நிலைமையில் தாறுமாறாக ஏதாவது தான் பேசிவிட்டால் என்ன செய்கிறது என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. ஆனால் நாம் விரும்பியபடி இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது? செம்பா வழக்கமாகத் தன் அப்பனுக்கு சோறு கொண்டு போகும் வழியில் செங்கோடன் கேணிக்கு வந்து சேர்ந்தாள்.

செங்கோடன் அவளை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி ‘ட்ரேய்’ ‘ட்ரேய்’ என்று மாட்டை ஓட்டத் தொடங்கினான்.

கேணித் தண்ணீர் வாய்க்காலில் விழும் சலசலப்புச் சத்தம் தொடர்ந்து கேட்டது.
செம்பா கொஞ்சம் நேரம் நின்று பார்த்தாள். செங்கோடன் அவளைப் பார்த்துப் பேசாமலிருக்கவே அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

“ஓகோ! இதற்குள் அவ்வளவு ராங்கி வந்துவிட்டதா? என்னைப் பார்த்துப் பேசக்கூட பிடிக்காமல் போய்விட்டதா? ஒரு நாளிலேயே இப்படியா? சரி; நான் போய்விட்டு வாரேன்!” என்றாள் செம்பா.

“போவானேன்? அப்புறம் திரும்பி வருவானேன்?” என்றான் செங்கோடன்.

“நான் திரும்பி வந்தால் உனக்கு இனிமேல் பிடிக்காதுதான்! ஒரே போக்காக நான் தொலைந்து போய்விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும்! இல்லையா?”

“எதற்காக இவ்வளவு கோபதாபம் என்று தெரியவில்லை. இப்போது என்ன வந்துவிட்டது? நேற்றைக்கு இந்த நேரத்திலேதான் எல்லாம் பேசி முடிவு செய்து கொண்டோமே!”
“நேற்றுச் சங்கதி நேற்றோடு போய்விட்டது. இன்றைக்கு என்ன? எல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் மறைக்கலாம் என்று பார்க்காதே!”

“என்னத்தை நான் செய்துவிட்டேன். என்னத்தை உன்னிடம் மறைக்கப் போகிறேன்?”

“ஏ ஆத்தாடி! இந்த ஆண்பிள்ளைகளின் புனை சுருட்டை என்னவென்று சொல்ல? நேற்றுச் சாயங்காலம் அரசமரத்தடியில் நீ அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்து இளிச்சிக்கிடு நின்றது, அப்புறம் சினிமாவிலே அவளைத் தூக்கிக்கிட்டு ஓடியது எல்லாம் எனக்குத் தெரியாது என்றா எண்ணிக் கொண்டாய்?”

செங்கோடனுடைய மனத்தில் சுருக்கென்றது; முகத்தில் அசடு வழிந்தது. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “நேற்றுச் சங்கதி நேற்றோடு போயிற்று என்று நீதானே சற்று முன்பு சொன்னாய்?” என்றான்.

“நம்முடைய பேச்சைப்பற்றியல்லவா சொன்னேன்? அந்தப் பெண்பிள்ளை அப்படி நேற்றுச் சங்கதி என்று விட்டு விடுவாளா! அந்த….” என்று செம்பவளவல்லி இங்கு எழுதத் தகாத வசை ஒன்றைச் சொன்னாள்.

“இந்தா! இதோ பார்! என்னை நீ என்ன வேணுமானாலும் ஏசிக்கொள்! என் முட்டாள்தனத்துக்கு வேண்டியதுதான் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்நியப்பெண் பிள்ளையைப்பற்றிக் கன்னாபின்னாவென்று பேசாதே! நாக்கு அழுகிப் போகும்!” என்றான் செங்கோடன்.

“என் நாக்கு எதற்காக அழுகவேண்டும்! பொய்யும் புனைசுருட்டும் சொல்லுகிறவர்கள் நாக்கு அழுகட்டும்! அவள் அந்நியப் பெண்பிள்ளையாயிருந்தால், இங்கே எதற்காகப் பட்டப் பகலில் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறாள்? பட்டிக்காட்டுக் குடியானவன் வயலுக்குத் தண்ணீர் இறைக்கும் இடத்தில் பட்டணத்துச் சீமாட்டிக்கு என்ன வேலை?” என்றாள் செம்பா.

“செம்பா! என்ன உளறுகிறாய்? பட்டணத்துச் சீமாட்டியாவது, இங்கே என்னைத் தேடிக்கொண்டு வரவாவது? எப்போது வந்தாள்? ஒரே புளுகாய்ப் புளுகுகிறாயே?”
“நான் புளுகினால் என் நாக்கு அழுகிப் போகட்டும். என் தலையில் இடி விழட்டும், மாரியாத்தா என்னைக் கொண்டு போகட்டும். நீ சொல்லுவது பொய்யாக இருந்தால்?”

“ஐயையோ! எதற்காக இப்படியெல்லாம் கோரமான சபதங்களைச் செய்கிறாய்?”

“இங்கே இந்த மேட்டிலே ஏறி வந்து நீயே பார்த்துக் கொள்; வருகிறாளா, இல்லையா என்று. நான் இச்சமயம் வந்தது உனக்கு ஏன் பிடிக்கவில்லையென்று இப்போதல்லவா தெரிகிறது! பூசைவேளையில் கரடி புகுந்தது போல் நான் வந்துவிட்டேன். ஆனால் நான் வெட்கத்தையும் மானத்தையும் விட்டவள் அல்ல. யாராவது காலிலே விழுந்து கேட்டுக்கொண்டாலும் இங்கே ஒரு நிமிஷங்கூட நான் தாமதிக்க மாட்டேன். நீயும் உன் மோகனாங்கியும் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழுந்தாலும் சரிதான்!”

செம்பாவின் வார்த்தைகள் செங்கோடன் மனத்தில் ஓர் ஆசையையும் ஒரு நம்பிக்கையையும் உண்டு பண்ணின. கொஞ்சம் பயமும் ஆவலுங்கூடத் தோன்றின. கவலைமாடுகளை அப்படியே விட்டுவிட்டு, கிணற்றங்கரை வாய்க்கால் மேட்டில் ஏறிப் பார்த்தான். செம்பா சொன்னது உண்மைதான். சற்றுத்தூரத்தில் குமாரி பங்கஜா வந்து கொண்டிருந்தாள். ஆனால் தனியாக வரவில்லை. அவளுக்கு இருபுறத்திலும் இரு ஆண்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சினிமாக் கொட்டைகையில் செங்கோடன் அரைகுறையாகப் பார்த்த மனிதர்கள் என்றே தோன்றியது.

செங்கோடன் முகத்தில் அவனை அறியாமல் ஒரு மலர்ச்சி, ஒரு புன்னகை தோன்றியது. அதோடு கொஞ்சம் அசடும் வழிந்தது. செம்பா அதைப் பார்த்துப் பொங்கினாள்.

“அடே! அப்பா! சந்தோஷத்தைப் பார்! வாயிலுள்ள அத்தனை பல்லுந் தெரிகிறதே?” என்றாள்.

“அவர்கள் வேறு எங்கேயாவது போகிறார்களோ, என்னமோ? என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று எதனால் சொல்கிறாய்?” என்றான் செங்கோடன்.

“எல்லாம் எனக்குத் தெரியும், கவுண்டா! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பின்னே எதற்காக அந்த அல்லி ராணி இந்தக் காட்டிலும் மேட்டிலும் நடந்து வருகிறாள்? ஒன்று சொல்கிறேன்; அதை மட்டும் மனசில் நன்றாகப் பதித்து வைத்துக்கொள்! நன்றாய்த் தீட்டிக் கூராக்கி ஒரு கத்தி வைத்திருக்கிறேன். சமயம் பார்த்திருக்கிறேன். அந்தக் கத்தியினால் குத்திக் கொன்றும் விடப்போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயர் செம்பா அல்ல; என் பெயரை மாற்றி அழை!”

“செம்பா! எதற்காக இந்த மாதிரி கொடுமையான வார்த்தை சொல்லுகிறாய்? அந்தப் பெண் உன்னை என்ன செய்தாள்? நான் தான் அப்படி என்ன செய்துவிட்டேன்?”

“அவள் என்ன செய்தாளோ? நீ என்ன செய்தாயோ! இரண்டு பேரும் கோவலன்-மாதவி நாடகம் நிஜமாகவே நடத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் கண்ணகியைப் போல் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பாட்டன் ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டு, ‘எல்லாக் கொலைக்கும் ஒரே தூக்கு மேடைதானே’ என்று சொன்னவன்! தெரியும் அல்லவா? அவனுடைய இரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது என்பதை மனசில் வைத்துக்கொள்!”

இப்படிச் சொல்லிவிட்டுச் செம்பா விடுவிடு என்று வேறு பக்கமாக நடந்து போனாள்.

குமாரி பங்கஜாவும் மற்ற இருவரும் கேணியை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். செங்கோடன் கேணிக் கரையில் மடித்து வைத்திருந்த பட்டுச் சட்டையை அவசர அவசரமாக எடுத்துப் போட்டுக் கொண்டான்!

அத்தியாயம் – 8

அவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, “உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா?” என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கை புகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டது. வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை ‘தறார்’ என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்! முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்டதல்லவா?
வந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

வந்தவர்களில் ஒருவன், “கவுண்டர் ஸார்! தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன? நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு?” என்றான்.
அதற்குள் இன்னொருவன், “என்னப்பா, எஸ்ராஜ்! நம்முடைய ஜமீன்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே?” என்றான்.

“அழகாய்த்தான் இருக்கிறது! ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே! இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ?” என்றாள் பங்கஜா.

“அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா? என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்!” என்றான் செங்கோடன்.

“பங்காரு! பார்த்தாயா? நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்!” என்றான் ‘எஸ்ராஜ்’ என்கிற சுந்தரராஜன்.

“கவுண்டர், ஸார்! அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்!” என்றான் பங்காருசாமி.

“எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா? அது எதற்கு?” என்று செங்கோடன் கேட்டான்.

“இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்.”

“அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன்? நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள்! நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது!” என்றான் செங்கோடன்.

“அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர்? நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா?”

“நெருப்புப் பிடித்ததா, என்ன? நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, ‘நெருப்புப் பிடிக்கவே இல்லை’ என்றீர்களே!”

“அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், ‘நெருப்பு ஏன் பிடிச்சுது? என்னமாய்ப் பிடிச்சுது?’ என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை ‘அரெஸ்ட்’ செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா? நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது!…”

“எத்தனை ரூபாய்?” என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.

“ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவின் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது.”

“என்ன ஐயா, அதிசயமாயிருக்கிறது! ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா? நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா?” என்று செங்கோடன் சத்தம் போட்டுக் கேட்டான்.

“அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா! பார்த்துக் கொண்டே இருங்கள்! இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் ஆகும்.”

“அடே அப்பா” என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது!

இந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, “கவுண்டரே! நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்” என்று உருக்கமான குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, “அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது! நீ வருத்தப்பட வேண்டாம்” என்றான்.

“அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும்? என்ன நடந்தது தெரியுமா? இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது” என்றாள் பங்கஜா.

செங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.

“எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான்? அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே!” என்றான் செங்கோடன்.

“இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்” என்றாள் பங்கஜா.

“சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள்! விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன? பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா?”
இதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

“சரி, எஸ்ராஜ்! நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா?” என்று கேட்டான் பங்காரு.

“அதற்குள் என்ன அவசரம்? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்!” என்று செங்கோடன் உபசரித்தான்.

“எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது! சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்?” என்றாள் பங்கஜா.

“அதற்கென்ன? நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்!” என்றான் எஸ்ராஜ்.

“ஆகா! அதோ குயில் கூவுகிறது. பாருங்கள்! அடடா! என்ன இனிமை! என்ன இனிமை!” என்றாள் பங்கஜா.

“இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான்! ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்!” என்றான் செங்கோடன்.

“அப்படியா? இங்கே நிறையக் குயில்கள் உண்டோ?”

“இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே? அவ்வளவு போதுமே?”

“இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ?”

“கூவாவிட்டால் யார் விடுகிறார்கள்? தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா? உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது!” என்றான் செங்கோடன்.

“பார்த்தாயா, எஸ்ராஜ்! கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்!” என்றான் பங்காரு.

“நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது.”

இதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.

“அடாடா தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது? குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்” என்றான் செங்கோடன்.

“கவுண்டரே! குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்!” என்றான் எஸ்ராஜ்.

“குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன?” என்றான் பங்காருசாமி.

“இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே? அங்கே போவானேன்?” என்றாள் பங்கஜா.

“இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள்! உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?”

“சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்!” என்றான் பங்காரு.

எல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, “உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்!” என்றான்.

“வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு? நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.

செங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ?

பங்கஜா உள்ளே நுழையும்போதே “அடாடா! இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது? வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது! இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது! கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது!” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

“அதற்கென்ன சந்தேகம்” என்றார்கள் மற்ற இருவரும்.

செங்கோடன், “எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது” என்றான்.

“அழகாயிருக்கிறது! வேண்டிய இடம் இருக்கிறதே! ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது!” என்றான் பங்காரு.

“மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்!” என்றாள் குமாரி பங்கஜா.

பானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்? மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள்? எதற்காக இப்படி விழிக்கிறார்கள்? ஆ! இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்! இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை!

எல்லாரும் தண்ணீர் குடித்ததும், “வாருங்கள் போகலாம்! வெளியில் காற்றாட உட்காரலாம்!” என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, “இது பிண்ணாக்கு! இது நெல்லு!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“வாருங்கள்! வாருங்கள்! அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு” என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.

“போகலாமா?” என்றான் ஒருவன்.

“கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்” என்றான் இன்னொருவன்.

கயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், “உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்” என்றான்.

“பேஷாய்க் கேளுங்கள், கவுண்டர்வாள்! ஒன்று என்ன? பத்து வேண்டுமானாலும் கேளுங்கள்!” என்றான் எஸ்ராஜ்.

“இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க?” என்று கேட்டான்.

“எனக்கு இந்த அம்மாள் தங்கை!….”

“நிஜமாகவா? முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?” என்றான் செங்கோடன்.

“என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்!”

“என்னங்க? என்னால் நம்பவே முடியவில்லையே! இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது! இவரைப் பார்த்தால்…”

“ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே! காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா?”

“கண் இல்லாமற் போனாற் போகட்டும்! அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்?” என்றான் செங்கோடன்.

அப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, “இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள்! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை! அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்!” என்றாள்.

“அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீபார்ட்டி கொடுக்கப் போகிறோம்.”

“எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது.”

“டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்.”

“வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது!”

“எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலே கூட உட்காரலாம்.”

“அப்படியானால் சரி.”

மூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.

செங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.

அத்தியாயம் – 9

செம்பவளவல்லியின் தகப்பனார் சிவராமலிங்கக் கவுண்டர் மிகவும் கண்டிப்பானவர். செம்பா அவருடைய மூத்தமகளாகையால் அவளுடைய இஷ்டத்துக்காக இத்தனை நாளும் பொறுத்திருந்தார். இனிமேல் கண்டிப்பாகப் பொறுக்க முடியாது என்று அவருடைய மனையாளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

“செங்கோடன் வந்து பெண் கேட்கப் போகிறான் என்று காத்திருந்தால் செம்பா கன்னிப்பெண்ணாகவே இருக்க வேண்டியதுதான்!” என்றார்.

“அவன் கேட்காவிட்டால் என்ன! நீங்கள்தான் கூப்பிட்டுச் சொல்லுங்களேன்? சிறு பிள்ளைதானே? தாயா, தகப்பனா-அவனுக்குப் புத்தி சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்?” என்றாள் செம்பாவின் தாயார்.

“அப்படி என்னத்திற்காகப் போய் அவன் தாவாக்கட்டையைப் பிடிக்க வேணும்? நம்ப செம்பாவுக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?”

“இந்தப் பக்கத்திலேயே செழிப்பான வயல் காடும் வற்றாத கேணியும் செங்கோடனுக்கு இருக்கிறது. பணமும் சேர்த்து வைத்திருக்கிறான்…”

“இன்னும் எத்தனை நாளைக்கு அவன் காடும் பணமும் இருக்குமோ. சந்தேகந்தான். கேட்டாயா சங்கதி; செங்கோடனுக்குத் துர்ச்சகவாசம் ஏற்பட்டிருக்கிறது. சின்னமநாயக்கன்பட்டிக்கு யாரோ இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் வந்திருக்கிறார்கள். அவர்கள் துர்நடத்தைக்காரர்கள். அவர்களில் ஒருவன் எங்கேயோ கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் களவாடிக் கொண்டு வந்துவிட்டானாம். அவன் மேலே வாரண்டு இருக்கிறதாகக் கேள்வி…”

“அதென்ன, கோ-ஆபரேடிவ் என்று என்னமோ சொன்னீங்களே?”

“அதெல்லாம் விளங்கச் சொல்ல இப்போது நேரமில்லை. பொதுப் பணத்தைக் கையாடிவிட்டு வந்திருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷ்யர்களோட செங்கோடன் சேர்ந்து கொண்டு ஏழெட்டு நாளாய்த் திரிகிறானாம்! இங்கே சோளமும் நெல்லும் காய்கிறதாம்! எப்படி இருக்கிறது கதை?”

“கொஞ்சங்கூட நன்றாயில்லை. நம்ம செங்கோடன் அந்த மாதிரி வழிக்கெல்லாம் போவான் என்று யார் நினைத்தது? நீங்கள்தான் கூப்பிட்டுப் புத்தி சொல்கிறதுதானே?”

“இப்போது நாம் சொல்கிற புத்தி ஏறாது! அந்தக் காவாலிப் பயல்கள் செங்கோடனுடைய பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அவன் தலையில் கூழைக் கரைத்து விட்டுப் போன பிறகுதான் புத்தி வரும்.”

“அப்புறம் அவனுக்குப் புத்தி வந்து என்ன லாபம்?”

“அதனால் தான் அவனை விட்டுவிடலாம் என்கிறேன். வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறேன். நீ சம்மதம் கொடுக்க வேண்டியதுதான்.”
“நான் சம்மதம் கொடுத்தால் போதுமா? செம்பாவின் சம்மதம் வேண்டாமா?”

“உன்னை யார் சம்மதம் கேட்கிறார்கள்? செம்பா சம்மதத்தைத்தான் சொன்னேன். அவளுக்கு நீ புத்தி சொல்லித் திருப்பவேணும்.”

“அப்படி யார் வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறீர்கள்?”

“ஒரு போலீஸ்காரர் புதிதாக வந்திருக்கிறார். ரொம்ப நல்ல மனுஷர். முதல் தாரம் செத்துப் போய் விட்டது. பிள்ளைக் குட்டி கிடையாது. இரண்டாந்தாரமாகக் கேட்கிறார். வயது அதிகம் ஆகவில்லை முப்பத்தைந்து, நாற்பதுதான் இருக்கும். முப்பது ரூபாய் சம்பளம். மேல் வருமானம் நூறு இருநூறு கூட வரும்.”

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மகன் முத்துசாமி, “அக்காவைப் போலீஸ்காரருக்குக் கட்டிக் கொடுத்தால் ரொம்ப நல்லது. அவரை அழைத்துக் கொண்டு வந்து இந்த ஊரிலே எனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் பத்து பத்து அடி முதுகிலே வெளுக்கச் சொல்லுவேன்! வாத்தியார் என்னை இனிமேல் தொட்டு அடிச்சால், போலீஸ்காரரைக் கூப்பிட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிடச் சொல்லுவேன். அக்கா! அக்கா! நீ போலீஸ்காரரையே கட்டிக்கொள்” என்றான்.

எல்லாவற்றையும் சமையல் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த செம்பா வேகமாக நடந்து வந்து முத்துசாமியின் முதுகில் நாலு அறை அறைந்துவிட்டுத் திரும்பிப் போனாள்.

“பார்த்தீர்கள் அல்லவா, உங்க மகளுக்கு வருகிற கோபத்தை!”

“யாருக்கு என்ன கோபம் வந்தாலும் சரி, இன்னும் மூன்று நாள் பார்க்கப் போகிறேன்; அதற்குள் செங்கோடன் வந்து ‘செம்பாவைக் கட்டிக்கொடு’ என்று கேட்கவேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிடுவேன். அப்புறம் பிரம்மதேவன் வந்தால் கூட மாற்ற முடியாது!” என்றார் சிவராமலிங்கக் கவுண்டர்.

மழையும் மரங்களும் அதிகமில்லாத புன்செய்க்காடுகளில் மாலை நேரம் எப்போதுமே மனோரம்மியமாயிருக்கும். அதிலும் முன்நேர நிலாக் காலமாயிருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இந்த உலகமே சொர்க்கத்துக்கு ஈடாகிவிடும்.

செங்கோடக் கவுண்டன் தன் குடிசையை அடுத்துப் போட்டிருந்த வைக்கோற் கட்டின் மீது உட்கார்ந்திருந்தான். வானத்து வைரச் சுடர்களுக்கு மத்தியில் வெள்ளிப் படகு மிதந்து கொண்டிருந்தது. பச்சைச் சோளப் பயிரின் மீதும் தென்னங்குருத்துக்களின் மீதும் நிலவின் கிரணங்கள் விழுந்து தகத்தகாமயமாய்ச் செய்தன. குயில்கள் முறை வைத்துப் பல்லவி பாடின. குடிசைக்குள்ளேயிருந்து அடுப்பில் வெந்த வெங்காயக் குழம்பின் மணம் வந்து கொண்டிருந்தது. இதிலெல்லாம் அதிசயமோ அசாதாரணமோ ஒன்றுமில்லை. எப்போதும் போலத்தான். ஆனால் செங்கோடனுடைய மனநிலையில் மட்டும் ஏதோ ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. அது என்ன மாறுதல்? எழெட்டுத் தினங்களாக அவன் அந்தப் பட்டணத்து மனிதர்களிடம் அதிகமாகப் பழகி வருவது உண்மைதான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதர்கள் அல்ல; யோக்கியர்களாகவும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணின் நடத்தையும் பேச்சுங்கூட அவ்வளவாகத் தனக்குப் பிடிக்கவில்லை, ஆயினும் அவர்களைக் காணப் போவதில் அத்தனை ஆவல் ஏன்? அந்தப் பெண்ணின் மோகம் தலைக்கு ஏறிவிட்டதா? மோகம் லாகிரியாக மாறி விட்டதா? அல்லது, அல்லது….செங்கோடனுக்கு ஒரு கேவலமான சந்தேகம் உதித்தது. லாகிரி வஸ்துக்கள் என்று அவன் கேள்விப்பட்டதுண்டு. கஞ்சா என்றும் அபினி என்றும் பேசிக்கொண்டதைக் கேட்டதுண்டு. உண்மையாகவே அத்தகைய லாகிரிப் பொருள் எதையாவது தனக்கு அவர்கள் கொடுத்து விடுகிறார்களோ? இல்லாவிட்டால், தனக்கு ஏன் அவ்வளவு சிரிப்பு வருகிறது! பாட்டுப் பாடக் கூட அல்லவா வருகிறது? வீதியில் நடக்கும்போதே வானத்தில் மிதப்பது போல் ஏன் தோன்றுகின்றது? யாரையாவது பார்த்தால் வாய் சம்பந்தமில்லாத வார்த்தைகளை ஏன் உளறுகிறது? தகாத பேச்சு என்று மனசுக்குத் தெரிந்திருக்கும்போதே வாய் ஏன் அப்படித் தாறுமாறாகப் பிதற்றுகிறது? இது என்ன தனக்கு வந்துவிட்டது? எந்தப் படுகுழியை நோக்கி அவன் போய்க் கொண்டிருக்கிறான்? பொய்மான் கரடு தன்னை வா வா என்று அழைத்து உச்சியில் ஏறச்செய்து கீழே ஒரே தள்ளாய்ப் பிடித்துத் தள்ளிவிடுவதுபோல் ஏன் அடிக்கடி தோன்றுகிறது? ஒருவேளை தன் மூளை தான்… அப்படியொன்றும் பிரமாதமான மூளையில்லை; ஆயினும் இருக்கிற மூளையும் சிதறிக்கொண்டிருக்கிறதோ? தனக்குச் சித்தபிரமை உண்டாகிவிடுமோ? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தன்னை அடைத்து விடுவார்களோ? அப்படியானால் இந்த வயல்களின் கதி என்ன? நெல் பயிர், சோளப் பயிர் என்ன ஆவது? புதைத்து வைத்திருக்கும் பணந்தான் என்ன ஆவது? ஆகா! அந்த மனிதர்கள் தன்னுடைய குடிசைக்குள் புகுந்து ஏன் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்தார்கள்! ஒரு வேளை….
ஏதோ காலடிச் சத்தம் கேட்கவே செங்கோடன் திடுக்கிட்டு அங்குமிங்கும் வளைந்து பார்த்தான். அவனை நோக்கி மிகச் சமீபத்தில் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. அது பெண் உருவம். செம்பவளவல்லிதான்! வேறு யார்? அவளைப் பார்த்த அதே நிமிடத்தில் செங்கோடனுடைய உள்ளத்தில் ஞானோதயம் உண்டாயிற்று. வாழ்க்கை என்பது ஒரு பெரிய அலை மோதும் ஏரி; அல்லது காவேரி வெள்ளம் என்று சொன்னாலும் சரி தான். அந்த ஏரி அல்லது காவேரி வெள்ளத்தில் தான் முழுகிப் போகாமல் தன்னைக் காப்பாற்றக்கூடிய தெப்பம் செம்பா. அவளை உடனே தான் பற்றிக் கொள்ள வேண்டும். கூடிய சீக்கிரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொண்டுவிட வேண்டும். தன்னுடைய பாழுங் குடிசையில் அவள் விளக்கேற்றி வைப்பாள். வாழ்க்கை இருட்டில் அவளே குல தீபமாக விளங்குவாள். அவளால்தான் கடைத்தேறலாம். தன் ஜன்மம் சாபல்யமாகும். தனிமை என்னும் சாபக்கேடு போகும். வீட்டுக்கும் வெள்ளாமைக்கும் அவளால் எவ்வளவோ நன்மையுண்டு.

“வா! செம்பா! வா! ஏது இத்தனை நேரங்கழித்து இருட்டிய பிறகு வந்தாய்? அப்பா அம்மா கோபித்துக் கொள்ளமாட்டார்களா?” என்றான் செங்கோடன்.

அதைக் கேட்ட செம்பா திரும்பிப் பத்து அடி தூரம் நடந்து சென்று தென்னங் கன்றுக்குச் சமீபமாகப் போய் நின்றாள்.

“இது என்ன மாய்மாலம்! இத்தனை தூரம் வந்து விட்டு ஏன் போகிறாய்?” என்றான் செங்கோடன்.

சட்டென்று விம்மல் சத்தம் அவன் காதில் விழுந்தது. உடனே பதைபதைப்புடன் எழுந்து ஓடினான். செம்பாவை அன்புடன் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து தான் உட்கார்ந்திருந்த வைக்கோற் பொதியில் அவளையும் உட்கார வைத்தான்.

“என் கண்மணி! உன் கண்ணில் கண்ணீர் வருவதை நான் பார்த்துச் சகிக்கமாட்டேன்!” என்று சொல்ல அவளுடைய கன்னத்தைத் தூக்கிப் பிடித்துக் கண்ணீரைத் துடைத்தான்.

“என்னதான் சமாசாரம், சொல்! உன்னை உன் அப்பன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டானா?”

செம்பா தேம்பிக்கொண்டே, “அப்படிச் செய்தால் பரவாயில்லையே? என்னைக் கொன்று போட்டுவிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனால்…” என்று தயங்கினாள்.

“ஆனால் வேறு என்ன, உன்னை எந்தப் பயல் கொல்லத் துணிவான்? உன் அப்பனாயிருந்தாலும் முடியாது. நீ எனக்குச் சொந்தமானவள்…”

“இப்படித்தான் நீ ரொம்பா நாளாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாய். பேசி என்ன பிரயோஜனம்?”

“பின்னே என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் தான், ‘இந்த வருஷம் கழியட்டும்; வெள்ளாமை வீட்டுக்கு வரட்டும்; உடனே கலியாணம் வைத்துவிடலாம்’ என்று சொன்னேனே?”

“அதுவரையில் யார் காத்திருப்பார்கள்? இன்னும் மூன்று நாளைக்குள் நீ வந்து கலியாணப் பேச்சை எடுக்கா விட்டால் அப்பா என்னை வேறிடத்தில் கலியாணம் செய்து கொடுத்துவிடப் போகிறார். மாப்பிள்ளை கூடப் பார்த்து விட்டார்!”

“அது யார் அவன்? நான் காதலித்த பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளத் துணிந்து வருகிறவன்! அவனுக்குத் தலையிலே கொம்பா? அவன் என்ன விக்கிரமாதித்ய மகாராஜாவா அல்லது மதனகாமராஜனா?”

“அப்படிப்பட்டவர் யாரும் இல்லை. சின்னமநாயக்கன்பட்டியில் புதிதாகப் போலீஸ்கார ஐயா வந்திருக்கிறாராம். அவர் என்னைக் கலியாணம் செய்து கொள்ளக் கேட்கிறாராம். பரிசத்துக்குப் பணம் கொடுக்கக் கூடத் தயாராயிருக்கிறாராம்!”

செங்கோடன் திடுக்கிட்டுப் போனான். வேறு யாருடைய பெயரையாவது சொல்லியிருந்தால் செங்கோடன், “அவனை விட்டேனா பார்! குத்திவிடுவேன்! கொன்று விடுவேன்!” என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பான். ஆனால் சிவப்புத் தலைப்பாகைக்காரனோடு யார் சண்டை போட முடியும்? அவனுடைய மனத்தில் உடனே ஒரு நிச்சயம் ஏற்பட்டது. அதைச் செம்பாவிடமும் வெளியிட்டான்.

“என் கண்மணியே! என் செல்லக் கிளியே! ஆடும் மயிலே! பாடும் குயிலே! உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா? காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோக நான் பார்த்திருப்பேனா? நாளைக்கே உன் தகப்பனாரிடம் போய்க் கேட்டு விடுகிறேன். கலியாணத்துக்குத் தேதியும் வைத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். நீ இல்லாமல் இனிமேல் ஒரு விநாடி கூட என்னால் உயிர் வாழ முடியாது” என்றான் செங்கோடன்.

இந்த மாதிரி ‘கிளியே! மயிலே!’ என்றெல்லாம் சொல்வதற்கு அவன் சினிமாக்கள் பார்த்தது மட்டும் காரணமில்லை. கஞ்சாவின் போதை இன்னும் சிறிது இருந்ததும் காரணமாகும். ஆனாலும் செம்பவளவல்லிக்கு அவனுடைய பேச்சு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தது. அவளுடைய ஆனந்தத்தைச் செய்கையினால் காட்டினாள். இருவரும் சிறிது நேரம் கரை காணாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தார்கள். ஏதேதோ அர்த்தமில்லாத வார்த்தைகளைப் பேசினார்கள். ஆனால் அந்த அர்த்தமில்லாத வார்த்தைகள் அமுதத்தைப்போல் இனிமையாக இருந்தன. சட்டென்று செம்பா எழுந்து நின்றாள்.

“நான் இனியும் இங்கே இருப்பது நியாயம் இல்லை. வீட்டுக்கு ஓடவேண்டும். அப்பாவும் அம்மாவும் அம்மன் கோயிலுக்குப் போன சமயம் பார்த்து வந்தேன். அவர்கள் திரும்புவதற்குள் நான் திரும்பிவிட வேண்டும்.”

செங்கோடன் தடுத்த போதிலும் அவள் கேட்கவில்லை.

“அப்படியானால் நான் கொஞ்ச தூரம் வந்து உன்னை ஊர் அருகில் கொண்டு விட்டு வருகிறேன்!” என்று செங்கோடனும் எழுந்தான்.

இருவரும் நெல்வயல் வரப்பின் வழியாக நடக்கத் தொடங்கினார்கள். பத்து அடிகூட அவர்கள் நடந்திருக்கமாட்டார்கள்.

“ஐயோ! அதோ பார்!” என்று செம்பா சுட்டிக் காட்டினாள். அந்தத் திசையைச் செங்கோடனும் உற்று நோக்கினான்.

சோளக் கொல்லையில் சலசலவென்று சத்தம் கேட்டது. முதலில் ஒரு நாய் தென்பட்டது. அது ‘லொள்’ என்று குரைத்து ஒரு தடவை பயங்கரமாக உறுமிற்று. அந்த நாயின் பின்னால் சோளப் பயிருக்கு மேலே ஒரு போலீஸ்காரனின் தலைத் தொப்பி தெரிந்தது. அவன் தோளில் சாத்தியிருந்த துப்பாக்கியின் மேல்முனையும் பயங்கரமாய்க் காட்சி அளித்தது.

செம்பவளவல்லியின் உடல் முழுதும் நடுநடுங்கிற்று. செங்கோடனும் மனங் கலங்கினான். ஐயோ! இது என்ன எதிர்பாராத விபரீதம்! இந்தப் போலீஸ்காரன் இங்கே எதற்காக வருகிறான்? ஒரு நொடிப்பொழுதில் செங்கோடக்கவுண்டனுடைய மனத்தில் பலவிதமான பீதிகள் வந்து மோதின. அவனுடைய கால்கள் மிகவும் தடுமாறின.

– தொடரும்…

– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *