பொம்பளைங்க முன்னாடி ஏறுங்க…




நாகப்பட்டினம் – திருச்சி பேருந்து.
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் உறுமிக்கொண்டே நின்று…. பயணிகளை ஏறிக்கொண்டிருந்தது.
ஓட்டுநர் இளைஞன் , அழகன். வண்டியை கொஞ்சம் உருட்டுவதும் நிறுத்துவதுமாக பயணிகளை ஈர்த்தான்.
நடத்துனருக்கும் இளைஞன் மாதிரி தெரிந்தாலும் கொஞ்சம் கூடுதல் வயசு.
“திருச்சி ! திருச்சி…!” கூவி…. பயணிகளை அழைத்தான்.
ஏறக்குறைய பேருந்தின் எல்லா இருக்கைகளும் நிரம்பல். இருந்தாலும் ஆசை விடாமல் அவர்கள் பயணிகளை ஏற்றுவதில் குறியாய் இருந்தார்கள்.
போட்டி உலகில் அள்ளுவது வரை ஆதாயம் ! என்கிற நினைப்பில் பயணிகள் எல்லோரும் பொறுத்தார்கள், அமர்ந்திருந்தார்கள்.
அவன், சல்வார்கமீஸ் உடுத்தி , எடுப்பான அழகுடன் வரும் மனைவியோடு பேருந்து ஏறினான்.
“இங்க உட்காருங்க சார். !”
ஓட்டுநர், அவர்கள் ஏறும்போதே…தன் இருக்கையில் அமர்ந்தபடி…அந்தக் காலியான இடத்தைக் காட்டினான்.
பேருந்தின் முதல் இருக்கையான நடத்துநர் ஒற்றை இருக்கைக்கும் அடுத்துள்ள இருவர் இருக்கை.
அவன் மனைவியை ஜன்னலோரம் அனுப்ப…
“மாறி உட்காருங்க சார் “ஓட்டுநர் சொன்னான்.
‘அவளின் எடுப்பு , வாளிப்பான மார்பை, அழகை ரசித்துக் கொண்டு வண்டி ஒட்ட இந்த ஐடியா.! ‘- எனக்குப் புரிந்து விட்டது.
‘பொறுக்கி ராஸ்கல் !’எனக்குள் சுருசுரு.
அவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.!
அமர்ந்த மனைவியை….
“எழுந்திரிடி..! “அதட்டினான்.
“ஏங்க…. ?”
“எழுந்திரிடின்னா…? “இன்னொரு அதட்டல் போட்டான்.
அவள் எழ…நடந்தான்.
இறங்குவார்கள் என்று எதிர் பார்த்தேன். இறங்கவில்லை.
பேருந்து நடுவில் உள்ள காலி இருக்கை ஒன்றில் அமர்ந்தார்கள்.
என் இடம் முதல் வாசலின் முதல் இருக்கை.
கைப்பிடி பிடித்துக்கொண்டு ஏறும் பயணிகளைப் பார்க்கலாம், ரசிக்கலாம். அப்படியே…ஓட்டுநர், சாலையைக் கவனிக்கலாம். ஏறக்குறைய ஏறுபவர்களெல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி முன்னாலேயே நிற்பதால்… எல்லாத்துக்கும் வசதி.
எல்லாத்துக்கும் வசதி என்பது என் இடம் வந்ததும் சிரமமில்லாமல் இறங்குவதற்கு வசதி என்பது என் எண்ணம். நீங்கள் தவறாக நினைத்தால் பாதகமில்லை.
அடுத்து… இரண்டு இளசு. நான்கைந்து பெண்கள் ஏறினார்கள்.
ஓட்டுநர் முகத்தில் பிரகாசம்.
“இப்படி வாங்கம்மா. வண்டி நிறைஞ்சுடுச்சு . இங்கே நில்லுங்க. உட்காருங்க…”- அவன் அக்கறையாய் பானெட் காட்டினான்.
இரண்டு இளசுகளுக்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த காலி இருக்ககையில் அமர்ந்தார்கள்.
மற்றவர்கள் ஏமாற…
“பரவாயில்லே. இதுல உட்காருங்க. எதிர்ல உட்காருங்க. முழிக்காதீங்க. கண்ணாடிக்குப் பின்னாடி உட்காருங்க…”சொல்லி இடத்தைக் காட்டினான்.
இருவர் பானெட்டிலிலும், ஒருவர் நடத்துனர் இருக்கையிலும், மற்ற இருவர்…முன்புற கண்ணாடிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு இவனுக்கு வசதியாக அமர்ந்து விட்டார்கள்.
அடுத்து கல்லூரி சிட்டுகள் , ஆண்கள் பெண்கள் என்று சிறு கூட்டம் வந்தது.
பின் வாசலில் இருந்த நடத்துனர் சிட்டாக வந்து …
”பொம்பளைங்களெல்லாம் முன்னாடி நில்லுங்க. ஆம்பளைங்க எல்லாம் நடுவுல போங்க….”பிரித்தான்.
இந்த சூட்சமத்தைச் சொல்லிக் கொடுத்தவன் என் நண்பன்தான். ஒரு தனியார் பேருந்தில் அவன் ஓட்டுநர்.
“சிவா..! அக்கா, தங்கச்சி, பொண்டாட்டி புள்ளையோடு வந்தால் சாலைப் பார்க்க வசதியாய் பேருந்து முன் பக்கம் உட்கார்ந்துடாதே.!”
“ஏன்டா…?”
“அதே மாதிரி…. அதிக பயணிகளை ஏத்திவர்ற பேருந்துகளிலும் ஏற வேணாம்.! ”
“ஏன்..?”
“காரணம் இருக்கு….”
“சொல்லித் தொலை !”
“நடத்துநர் அதிக பயணிகளைப் பேருந்து நிறைய ஏத்திக்கிட்டு டிக்கெட் கொடுக்கிற சாக்குல பொம்பளைங்க முன் பக்கம், பின் பக்கம்ன்னு கண்ட கண்ட இடத்துல உரசி, இடிச்சி அனுபவிப்பான். ஓட்டுநர்… பொம்பளைங்களை முன்னாடி நிக்க வச்சி, உட்காரவைச்சி… ஜொள்ளு விட்டுகிட்டு ஓட்டுவான். கியர் போடுற சாக்குல தடவுவான். நம்ம… புள்ள, பொம்மனாட்டிங்களை அவனுங்க இப்படி அனுபவிக்கக் கூடாது பாரு. அதுக்காகச் சொல்றேன். ! “சொன்னான்.
அதிலிருந்து நான் அவர்களோடு வந்தால் அப்படி ஏற மாட்டேன்.! சமயத்துல வழியே இல்லே. இதுக்கு அடுத்து வேற பேருந்து இல்லேன்னா… விதி ! ன்னு நெனைச்சி ஏறுவேன். வழி..? முடியாத பட்சம் நம்மால அதுமேலதானே பாரத்தைப் போட முடியும்..?
வண்டியில் ஏறியதும் உடனே செல்கிற மாதிரி… பேருந்தை உயிர்ப்பித்துக் கொண்டு நகர்த்தி, நிறுத்தி, உருட்டிக்கொண்டு ….இதோ அதோ என்று பயணிகளுக்குப் பாவலாக்காட்டி…. இந்த ஓட்டுநர், நடத்துனர்கள் பயணிகளை ஏமாற்றி ஏற்றும் வித்தை இருக்கிறதே…!
அடடே..! இதெல்லாம் சொல்லி மாளாது.
இப்படித்தான் இந்த வண்டியையும் கிளப்பினார்கள். நிறைமாத கர்ப்பிணியாய். பயணிகளைப் புளி மாதிரி அடைத்து, ஒருவரோடு ஒருவர் ஒட்டி, ஒருவர் மூச்சை ஒருவர் பிடித்துக்கொண்டு…..
“ரைட் ! ரைட் ! “- நடத்துனர் திருப்தியாய் விசிலடிக்க…
பேருந்து புறப்பட்டது.
நடத்துனர் இஷ்டத்துக்குத் தன் வேலையைத் தொடர… ஓட்டுநர் தன் பங்கிற்குக் காரியங்கள் நடத்த…
“பார்த்தீங்களா சார் அநியாயத்தை…? ! ” என் அருகில் அமர்ந்திருந்த முகம் தெரியாத ஆள் என் காதைக் கடித்து பல்லைக்கடித்தான்.
பாம்பின் கால் பாம்பறியும் போல..!!
ஆயிற்று… பேருந்து தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் நின்றது.
எல்லோரும் இறங்கினார்கள்.
ஓட்டுநரும் பேருந்தை அணைத்து விட்டு இறங்குபவர்களை ஏக்கத்தோடு பார்த்தான்.
நானும் இவன் அநியாயத்தைக் கடைசிவரைப் பார்க்க வேண்டுமென்று பல்கலைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தேன்.
பின்னால் அமர்ந்திருந்த ஜோடியும் கூட்டம் காரணமாகவோ வேறு காரணமாகவோ இறங்கவில்லை.
எல்லோரும் இறங்கிவிட ஓட்டுநர் எழுந்து படிக்கு வர….
“பொறுக்கி ராஸ்கல் ! “பின்னால் இருந்தவன் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான்.
பாதிக்கப்பட இருந்தவன் ஆத்திரம். !
ஓட்டுநர் முகம் வெளிறி சுதாரிப்பதற்குள்…
“கயவாளித்தனமாய் பண்றே..? “முகத்தில் ஓங்கி ஒரு குத்து.
எனக்குள் இருந்த ஆத்திரம் ஒருவன் தட்டிக் கேட்க விழித்தது.
அதற்குள் நடத்துனர்…
“ஏய்….! “பதறிக் கொண்டே ஓடி வர…
“வாய்யா..! உன்னையும்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். ! “பாய்ந்து அவனைப் பிடித்தேன்.
“சார் ! ஆத்திரப்படாதீங்க. என்ன விஷயம் சொல்லுங்க..?”
“பொண்ணுங்களை முன்னால ஏத்திக்கிட்டு கூத்தா அடிக்கிறீங்க…? ”
வெடித்தேன்.
“சார் ! தப்பா எடுத்துக்கிட்டிங்களா..? எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் இந்த ஏற்பாடு..”
“என்னடா பாதுகாப்பு..?”
“அண்ணே ! பொம்பளைங்க என் கண்பட இருந்தாதான் என் மனைவி ,மக்கள், குடும்ப ஞாபகம் வந்து உயிர் மேல் வேகமா ஒட்டாம நிதானமா ஓட்ட மனசு வருது. அதனால பொம்பளை பயணிகளை எல்லாம் என் பக்கமா அனுப்பி வையுங்க…சொன்னான். நியாயம்தானே..! மத்தபடி தப்பான பார்வை நோக்கம் கிடையாது.”
“நீ…யோக்கியமா ?”
“இடையில புகுந்து நெளிஞ்சி… நான் படுறபாடு நாய் படாத பாடு !”
“என்ன சமாளிக்கிறீயா..?”
ஓட்டுநர் சட்டையை விடாமல் அடித்தவன் அவனை முறைக்க..
“சத்தியமா இந்தக் காரணம்தான் சார்”
நடத்துனர் அவன் தலையிலடித்தான்.
ஓட்டுநர் பேசாமல் நின்றான்.
“சார் ! எதையும் தப்பாப் பார்க்காதீங்க. எதையும் சரியாய் புரிஞ்சிக்க்கோங்க.பிரச்சனை இல்லே “சொன்னான்.
ஒருவேளை இதுதான் சரியோ..! நம் பார்வை புரிதல் தவறோ…?! – அவனும் நானும் சேர்ந்து பிடித்திருந்தவர்களின் சட்டைகளை விட்டோம்.
பாவம் ஓட்டுநர்…தலை தாழ்த்திக்கொண்டு தன் உதட்டில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தான்.