பொன் பூச்சு





(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நீண்ட காலத்தின் பின் நானும் விசுவநாதனும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். அவனுடைய மாறுதலைக் கண்டு நான் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனேன்.

ஒரு சிறு குடிசை. அதனுள் ஒரு மேசையும். உடைந்துபோன நாற்காலியும். மேசையின் மேல் அப்போதுதான் வெறுமையாக்கப்பட்ட மதுக்கிண்ணம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. யௌவனத்தின் பொலிவுடன் கம்பீரமாயிருந்த விசுவநாதன்தானா இவன்? தாடி மீசையுடன், ஒட்டியுலர்ந்த முகமுடைய எலும்புக்கூடொன்றல்லவா என்முன் காட்சியளிக்கிறது! ஆச்சரியத்தை மீறித் துக்கந்தான் முதலில் வந்தது. வெறியால் சிவப்பேறிய கண்களுடன். முகத்தில் புன்னகை தவழ அவன் என்னை வரவேற்றான். ஆனால் அந்தச் சிரிப்புக்கூட பலாத்காரமாய் வரவழைக்கப்பட்டது தானென்பதை எனக்கு ஊகிக்க அதிகநேரம் செல்லவில்லை.
“தேவதையை நான் தரிசிக்க விரும்பினேன். அந்தத்தேவதை. பிசாசால் மறைக்கப்படுமென நான் காத்திருக்கவில்லை என்றேன். விசுவநாதன் ‘கலகல’ வென்று சிரித்தான். அவனுடைய சிரிப்பு அசுரச் சிரிப்பாயிருந்தது. ‘துக்கம்’ அளவு மீறிப் போகும்பொழுது மனிதன் தன்மைகளும் மாறி விடுகின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையே? என்றான்.
“இருக்கலாம். ஆனால் உனக்கு அப்படியாகத் துக்கம் வரக் காரணம் இல்லையே?”
‘சற்குணன் பெருந்தன்மையுள்ளவன், செல்வந்தன் என்றெல்லாம் ஒரு காலத்தில் நான் புகழப்பட்டேன். எனது அந்தஸ்தென்னும் பலிபீடத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை பலியாக்கப்பட்டது எதற்காக? அப்பெண்ணின் நன்மைக்காகவா? இல்லை; எனது கௌரவம் காப்பாற்றப்படுவதற்கு! என் சுயநல வெறியில் மணந்தந்த மலரொன்றைக் கசக்கித் தூர எறிந்தேன். நான் செய்த குற்றத்தை இன்று உணர்கிறேன். அந்த உணர்ச்சி என்னை நிம்மதியற்றவனாகச் செய்கிறது. எனது இருதயத்தில் கொழுந்து விட்டெரியும் துக்காக்கினியை அவிக்கும் அருவி இந்த மதுதான்’ என்று சொல்லிப் புட்டியிலிருந்த மதுவைக் கிண்ணத்தில் ஊற்றினான்.
“மதியை மயக்கும் சக்தி மதுவுக்குண்டு; தெளிவாக்கும் சக்தி அதற்கில்லையே” என்றேன்.
“மதி மயங்கியிருப்பதால் எனது சிந்தனைக்கு வேலையற்றுப் போகிறது; நிம்மதியாயிருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை தரம் குடிக்கிறேன் என்பது எனக்கே தெரியாது. நான் நிம்மதியற்றிருக்கும் நேரத்தில், நடந்தவைகளைச் சிந்திக்க நேரிடும் சமயத்தில் மது எனக்குப் பிரயோசனமாகிறது” என்று அவன் சொன்னான்.
“உனது துக்கத்தைக் கிளறும் சம்பவத்தை நானும் அறியலாமா?” என்று கேட்டேன்.
“நீ விரும்பினால் சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினான்.
அவ்வருடம் வைத்திய பரீட்சைக்கு எழுதிவிட்டு எனது கிராமத்துக்குப் போயிருந்தேன். எனது பெற்றோருக்கு அளவு கடந்த சந்தோஷம். பட்டின வாழ்க்கை எனக்குச் சலித்துப் போயிருந்தது. நாள் முழுவதும் பச்சைப் பசிய வயல்களின் வரப்புக்களில் உலாவுவேன். ஆரம்பத்தில் குளத்தில் குளிப்பது எனக்குப் புதுமையாக இருந்தது. நாட்செல்லச்செல்ல ஸ்படிகம் போன்ற அந்த நீரில் குளிப்பதைவிட ஆனந்தம் வேறு ஒன்றும் இல்லையென்று தோற்றியது. காலம் முழுவதும் மோட்டார் சத்தத்தைக் கேட்டுப் புளித்துப் போயிருந்த என் காதுகள். வண்டியில் பூட்டிய மாடுகளின் சலங்கைச் சப்தம் கேட்டு இன்புற்றன. கிராம வாழ்க்கை எனக்கு எவ்வளவோ இன்பமாயிருந்தது.
“ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் வந்தாள். இளமை அவளுக்கு மெருகு பூசியிருந்தது. கட்டான தேகம். நெஞ்சுவரை சேலையால் மறைத்திருந்தாள். அதற்குமேல் மறைப்பதற்கு அவளுக்குத் தகுதியில்லை. ஏனென்றால் அவள் தீண்டாச் சாதியைச் சேர்ந்தவள்.”
நெல் குத்துவதும், வயலிலிருந்து புல்லுச் சுமப்பதுந்தான் அவளுக்கிடப்பட்ட வேலைகள். அவள் வந்த நாள்தொடக்கம் என்மனம் ஒருநிலையிலில்லை. அவள் அழகொழுகும் முகத்தைப் பார்த்து மெய்மறந்து நிற்பேன். நாட் செல்லச் செல்ல அவளும் கடைக்கணித்தாள். சொல்ல வேண்டுமா? இருவரும் அன்பால் பிணைப்புண்டோம். எத்தனை நாள் அவள் முகம் சிவக்கச் சிவக்க இரக்கமின்றி பின்னும் பின்னும் முத்தமிட்டிருப்பேன்! நிலாமலர்ந்த எத்தனையோ இரவுகளில் எங்கள் வருங்காலத்தைப் பற்றிச் சிந்தித்திருப்போம். அவையெல்லாம் இன்று கனவுகளாகிவிட்டன” என்று சொல்லி கிண்ணத்திலிருந்த மதுவை ஒரு முறை சுவைத்தான். பின்னும் கூறினான்.
“அவள் கர்ப்பவதியானாள். கன்னியாயிருந்த அவள் கர்ப்பவதியானது எவ்வாறு? என்று வீட்டிலுள்ளவர்கள் முணுமுணுத்தார்கள். நான் மெதுவாய் விஷயத்தை வெளியிட்டேன். அப்பாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! என்னையும் அவளையும் தாறுமாறாகப் பேசினார். அத்துடன் விட்டாரா? அவளை எங்கேயோ துரத்திவிட்டார்! நான் பெலவீனனாய் விட்டேன். என்னுடைய அந்தஸ்தைக் கருதியபோது அவள் நாடு கடத்தப் பட்டதையிட்டுச் சந்தோஷமுற்றேன். ‘கடைசிவரை உன்னைக் கைவிட மாட்டேன் என்று எந்தச் சந்திரனைப் பார்த்து அவளுக்குச் சத்தியம் பண்ணிக்கொடுத்தேனோ, அதே சந்திரன் தன் பூரணப் பொலிவுடன் என்னை ஏளனம் பண்ணிக்கொண்டிருந்தான்.”
இதைச் சொல்லியதும் சூனியதிருஷ்டியுடன் ஆகாயத்தை ஒருமுறை அவன் பார்த்தான்; மீதியிருந்த மதுவை உட்செலுத்தினான். கதை தொடர்ந்தது.
“இரண்டு வருடங்கட்குப் பின்… நான் யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலையில் வைத்தியராக இருந்தேன். ஒரு நாள் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டுவரும் பொழுது…. திகைப்பூண்டை மிதித்தவன் போலிருந்தது, என் நிலைமை! மயக்கம் வரும்போலிருந்தது. அவள்- என்னால் பாழாக்கப்பட்ட அதே பெண்தான் எலும்பாய்க்கிடந்தாள். மதியை மயக்கும் அந்த மலர் முகம், இன்று காய்ந்து கருகிக் குழிவிழுந்திருந்தது. பார்க்கச் சகிக்கவில்லை. கிட்டப் போனேன். என்னைக் கண்டதும் அவள் மறுபக்கம் திரும்பிவிட்டாள். ஏன் பார்க்கிறாள்? தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் காலமெல்லாம் உழன்று திரியச் செய்த துரோகியைப் பார்த்துக் கடைசிச் சமயத்தில் பாவமூட்டையைச் சுமப்பதா? நான்…. வந்துவிட்டேன்.
“வீடு வந்தேன். எதைக் கண்டாலும் அவள்தான்” என்று பயந்தேன். அன்று தொடக்கம் நிம்மதி என்பக்கம் தலைகாட்டவில்லை. மறுநாள் நோயாளரைப் பார்க்கப்போன பொழுது அவள் இருந்த இடம் வெறுமையாயிருந்தது. விசாரித்ததில் அவள் அன்றிரவே இறந்து விட்டாளென்றும். பிரேதத்தை அப்புறப்படுத்தியாயிற்றென்றும் சொன்னார்கள். வைத்தியசாலையே இடிந்து என்மேல் விழுந்தது போலிருந்தது. என்னுடைய பாதகத்தன்மை கூரிய அம்புபோல் என் உள்ளத்தில் தைத்தது. மலருடன் சேர்ந்து மணம் பிறக்கிறது; மலர் காய்ந்து கருகி உதிரும்போது மணமும் அற்று விடுகிறது. ஆனால் வண்டு மலரில் இருப்பது தேன் பெறும் வரையில்தானே?
வைத்தியப் பதவியை அன்றைக்கே துறந்தேன். இப்படி ஏகாந்தத்தில் வந்துவிட்டேன். உலகம் என்னை மாற்றுயர்ந்த பசும்பொன்னென்று நினைத்தது. ஆனால் ‘மின்னுவதெல்லாம் பசும் பொன்னல்ல, பொன் பூச்சிட்ட பித்தளையுந்தான் மின்னுகிறது’ என்பதை உணரவில்லை”
போத்தலிலிருந்த மதுவை கிண்ணத்தில் பின்னும் ஊற்றினான் விசுவநாதன்.நான் மௌனியானேன்.
நான் வெளியே வந்தபொழுது அவன் கிண்ணத்திலுள்ள மதுவை மடமடவென்று குடிக்கும் சத்தம் கேட்டது.
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு.குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.