கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 17, 2025
பார்வையிட்டோர்: 2,898 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50

41. ஆள் மயக்குப் பாறை

ஒற்றன் பணி ஒழுங்காக நடைபெறுகிறதா? என்று பார்ப்பதற்கு அவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஒற்றனை அனுப்பிவைப்பது ராஜதந்திரங்களில் ஒன்று என்பதை நான் படித்திருக்கிற காரணத்தால்தான் எனக்குத் தலைமைத் தளபதியாகவும் அந்த ரங்க ஒற்றனாகவும் உள்ள உன்னையும் கண்காணிக்க மற் றொரு ஒற்றனை அனுப்பியிருந்தேன். உன்னை முழுமையாக நான் நம்பியிருக்க வேண்டும். நம்பியிருக்க முடியும். ஆனால், உனது சமீபகால நடவடிக்கைகள் – நீ நடத்தும் கேளிக்கைகள் பற்றியெல்லாம் கேள்விப்பட்ட போது; கடமையென்பது உன் னைப் பொறுத்தவரையில் இரண்டாவது மூன்றாவது இடத் தைத் தாண்டி, கடைசி இடத்திற்கே போய் விட்டது என்பதை உணர முடிந்தது. அதனால்தான் வளநாட்டு அரண்மனைக்குச் சென்ற உன்னை எனது முக்கிய ஒற்றன் ஒருவன் பின்தொடர்ந் தான். போகும் போதே நீயும் உன் ஆசைநாயகியும் இங்கே வீரப்பூர் காட்டுக்கு விஜயம் செய்து விட்டு, இந்த மண்டபத் திலும் தங்கிப் போயிருக்கிறீர்கள். அருக்காணியைக் கடத்தி வந்து இந்த மண்டபத்திலே தங்க வைத்து, அவளிடம் இருக் கும் மரகதப் பச்சை மாணிக்கக்கிளி பற்றிய ரகசியத்தைப் பெற்று அந்த விலை மதிப்பில்லா கிளியை நீங்களிருவரும் திருடிக் கொள்வது என்று திட்டம் தீட்டினீர்கள். உங்கள் தீய திட்டத்தைத் தெரிந்து கொண்ட ஒற்றன் உடனடியாக எனக்குத் தகவல் தந்து விட்டான். கையும் களவுமாக உன்னைப் பிடிக்க வேண்டுமென்றுதான் வீரப்பூர் காட்டில் மாறு வேடத்தில் நான் ஒளிந்திருந்தேன். அற்பனே, அழைத்து வரப்பட்டவள் அருக் காணி அல்ல என்று தெரிந்ததும் – உன் திட்டம் தூளாயிற்றே யென்று கூட நீ கவலைப்படவில்லை! தித்திப்புப் பண்டம் ஒன்று கிடைத்ததேயென்று அதைத் தின்பதற்குவாயைப் பிளந்து கொண்டு கிளம்பி விட்டாய்! அருக்காணியைக் கடத்த முடியா மல் இடையில் இவள் குறுக்கிட்டு விட்டாளேயென்ற ஏமாற்றத் தில் இவளை நீ குத்திக் கொலை செய்திருந்தால் கூட நான் உன்னை மன்னித்திருப்பேன். எனக்காக ஒருத்தியைக் கடத்தப் போனாய் – வேறொருத்தி கிடைத்தாள் – அவளும் எனக்குச் சேர வேண்டியவள்தான் என்று கூட நினைத்துப் பார்க்காமல்; அவள் கற்பையே சூறையாடத் துணிந்த உனக்கு இதைவிட நான் வேறு என்ன தண்டனை அளிக்க முடியும்?” 

அக்கினியில் போட்டெடுத்த வார்த்தைகளைக் கொண்டு, தலையூர்க்காளி – தனது செயலுக்கு விளக்கமளித்ததைக் கேட்ட வாறு; கண்களிலே ஒளி மங்கிடும் நிலையில் பராக்கிரமன் சாவின் கரங்களில் மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தான். 

அவனது மங்கிய பார்வை அந்த அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் விழுந்தபோது; தலையூர்வீரர்கள் சூழ விலங் கிடப்பட்டு வடிவழகி தலைகுனிந்து நிற்பதைப் பராக்கிரம னால் காண முடிந்தது. 

அவனுடைய முடிவுக்காக அழவேண்டிய சமயத்தில் அவளுக் காக அவனால் அழ முடியுமா? 

“அரசே! அந்த மரகதப் பச்சை மாணிக்கக் கிளியை நான் திருடிக் கொள்ள திட்டமிட்டதாக ஒற்றன் உங்களிடம் உரைத் திருந்தால் அது பொய்!” 

பராக்கிரமன் தள்ளாடியபடியே – நொறுங்கிப் போன இந்த வாசகத்தைத் தணிந்த குரலில் தலையூர் மன்னனுக்கு முன்னே உதிர்த்தான். 

“தலையூர் காளியம்மன் மீது சத்தியமாகச் சொல்! சாகும் தருவாயிலாவது உன்னை நம்பியிருந்த என்னிடம் உண்மை யைச் சொன்னால், உன் ஆத்மாவுக்கும் சிறிது அமைதி கிடைக் கும்! எங்கே சத்தியமாகச் சொல்!’ என்று உரத்த குரலெடுத் துக் கேட்டான் மன்னன். பராக்கிரமன் மேலும் மேலும் பூமி யில் சாய்ந்து கொண்டிருந்தவன்; விழுந்தே விட்டான். 

என்ன இருந்தாலும் தன்னிடம் பணியாற்றிய தளபதியல் லவா? ஏதோ ஒரு சபலம் அவனையுமறியாமல் அவனை ராஜத் துரோகியாக நினைக்கிற அளவுக்கு ஆக்கி விட்டாலும் செத்துக்கொண்டிருக்கிறவனை அலட்சியப்படுத்தி விட முடியவில்லை தலையூர் மன்னனுக்கு! அதனால் அவசரமாகப் பாய்ந்து, தரையில் விழுந்த பராக்கிரமனின் தலையைத் தூக் கித் தனது மடியில் வைத்துக்கொண்டான். காட்டாற்று வெள் ளத்தில் மிதந்து வரும் மலர்களைப் போல தலையூர்க் காளியின் உள்ளத்திலும் இப்படிச் சில நேரங்களில் கருணையும் இரக்கமும் சுரப்பதுண்டு. தனது மன்னனின் மடியில் தன் தலையிருப்பதை ஒரு பாக்கியமாகக் கருதிக் கொண்ட பராக் கிரமன்; தான் செய்த தவறுக்கு மன்னன் கொடுத்த தண்டனை மிக அதிகம் என்பதைத் தனது கண்ணீர் அருவியின் வாயிலாக வெளிப்படித்தினான். 

“அரசே!” என்றான். நா அசைய மறுத்தது. அரசன், பராக் கிரமனின் விழிநீரைத் தனது கரங் கொண்டு துடைத்து விட் டான். மெத்த சிரமத்துடன் பராக்கிரமன் மீண்டும் பேச முயற் சித்தான்… 

“அரசே! அந்தக் கிளியிருக்கும் இடத்தைப் பற்றிய ரகசியம் அருக்காணியிடமிருந்து கிடைத்தால் அதை நானே தேடியெடுத் துத் தங்களிடம் கொண்டு வந்து அத்துடன் பேச்சு நின் றது! மூச்சும் அடங்கியது! அதிகப்படியான தண்டனை தான் கொடுத்து விட்டோமோ என்ற சஞ்சலத்துடன் தனது தளபதி யின் முகத்தையே காளி மன்னன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். 

வடிவழகியைக் கைது செய்து அவளைச் சூழ்ந்து நின்ற வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பராக்கிரமனின் உடலை சூழ்ந்து வந்து நின்று, தங்களின் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினர். அந்த வீரர் கூட்டத்திலிருந்த துணைத் தளபதிகளில் ஒருவனிடம் தலையூர் மன்னன்; பராக்கிரமனின் உடலை சகல மரியாதைகளுடன் வீரப்பூர் காட்டிலேயே அடக் கம் செய்து விடுமாறு ஆணையிட்டான். பின்னர் தாழ்வாரத் திற்கு வந்து வடிவழகியை இழுத்துச் சென்று அவளது வீட்டி லேயே விட்டுவிடுமாறு பணித்தான். அப்போது வடிவழகி கதறியழுது கொண்டே ஓடிவந்து, காளிமன்னனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ‘பிரபு! எனக்கு ஒன்றுமே தெரி யாது! எல்லாம் தளபதியாரின் சொற்படிதான் நடந்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சினாள். 

“உன்னை மன்னித்திருப்பதால்தான் உன் வீட்டில் கொண்டு போய் விடச் சொல்கிறேன்” என்று அவளிடம் கூறிய காளி மன்னன்; உள்ளே அறைப்பக்கம் திரும்பிப் பார்த்து, “அந்தப் பெண் எங்கே?” என்று கேட்டான். உடனே வீரர்கள் ஆளுக் கொரு பக்கம் அந்த அறைக்குள்ளும் மண்டபத்திற்குள்ளும் ஓடிப்போய் குப்பாயியைத் தேடினார்கள். அந்த மண்டபத்தில் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு குப்பாயி, அப்போதே அங்கிருந்து தப்பியோடி விட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட காளிமன்னன்; சில வீரர்களை அனுப்பி அவள் என்ன ஆனாள் என்பதைப் பார்த்து வருமாறு கட் டளை பிறப்பித்தான். தனது ஆணைப்படி அனைத்தும் நடக் கட்டும் என உறுமி விட்டு, மண்டபத்து வாசலில் தனக்கெனக் கொண்டு வரப்பட்டிருந்த ரதத்திலேறி, தலையூருக்குப் புறப் பட்டான் காளி! 

அந்த இருளில் குப்பாயி, காட்டுப் பாதையில் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தாள். காளி மன்னன் உத்திர வுப்படி தலையூர் வீரர்கள் நாலாபக்கமும் அவளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர். தன்னைப் பின் தொடர்ந்து தலையூர் வீரர்கள் வருவதைத் தெரிந்து கொண்ட குப்பாயி, அவர்கள் கையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவும் – அடர்ந்த புதர் ஒன்றில் நுழைந்து தன்னை மறைத்துக் கொண்டாள். அந்தப் புதரின் அருகாமை யிலேயே மூன்று நான்கு தலையூர் வீரர்கள் வந்து நின்று பேசுவது அவள் காதில் விழுந்தது. 

“ஏதாவது ஒரு புதரில் ஒளிந்திருப்பாளா?” 

எத்தனை பெரிய புதர் இருக்கிறது. 

இதில் எந்தப் புதர் என்று நாம் தேடிப்பார்ப்பது?”

“ஒரு வேலை செய்யலாம் காய்ந்து கிடக்கும் சருகுகளை யெல்லாம் குவித்துக் கொளுத்தி விடலாம். எந்தப் புதரில் ஒளிந்திருந்தாலும் அவள் வெளியே வரத்தானே வேண்டும்!” 

”சே! சே! வேண்டாம் வேண்டாம்! ஒரு வேளை அவள் வெளியே வராமல் புதருக்குள்ளேயே இருந்து, நெருப்பில் பொசுங்கிப் போய் விட்டால், பிறகு மன்னருக்கு யார் பதில் சொல்வது?” 

புதர்களுக்குத் தீ மூட்டும் திட்டம் கைவிடப்பட்டதும்; ஒரு வீரன் ஏதோ யோசித்து விட்டு மற்ற வீரர்கள் காதில் ரகசிய மாகக் கிசுகிசுத்தான். அவன் சொன்னதை ஒப்புக் கொள்வது போல மற்ற வீரர்கள் தலையசைத்தார்கள். உடனே அந்த வீரன் உரத்த தொனியில் பேசினான்.. 

“பாவம் அந்தப் பெண் எந்தப் புதருக்குள் ஒளிந்து கிடக்கி றாளோ? எல்லாப் புதரிலும் விஷப் பாம்புகள் நிறைய இருக் கின்றன!’ இப்படிச்சொன்னால், குப்பாயி பயந்து கொண்டு ஓடி வருவாள் – அப்போது பிடித்துக் கொள்ளலாம் என்பது அவர்கள் திட்டம்! 

ஆனால் அஞ்சி நடுங்கி அவள் வெளியே ஓடுவதற்குப் பதிலாக – ஒரு வேளை பாம்புகள் வந்தால் அவற்றை அடிக்க ஏதாவது கம்பு கிடைக்குமா என்று புதருக்குள்ளேயே உற்று உற்றுப் பார்த்தாள். அந்த இருட்டில் ஒரு நீண்டு வளைந்த கம்பு கிடப்பது அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அதை மெது வாக எடுத்தாள். எடுத்த கம்பு அவள் கைகளில் வழவழ வென்று நெளிந்து வளைந்தது. அவளுக்குப் புரிந்து விட்டது; அவள் கம்பு என்று எடுத்தது ஒரு பாம்பு என்பது! 

அலறியடித்து அதைக் கீழே எறிந்தால் இரண்டு ஆபத்து! எறிந்த வேகத்தில் கோபங் கொண்ட பாம்பு சீறிக் கடிக்கும்! அலறல் சப்தம் கேட்டால் புதரின் அருகே நிற்கும் தலையூர் வீரர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டும். அதனால் அவள் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தப் பாம்பைத் தொந் தரவு செய்யாமல் மெதுவாகக் கீழே விட்டாள். தரையில் விடப்பட்ட பாம்பு, புதரில் ஏதோ தனக்கு எதிராக இருப்ப தாக உணர்ந்தோ என்னவோ அங்கிருந்து வேகமாக ஊர்ந்து புதருக்கு வெளியே வந்தது. வந்த வேகத்தில் அருகாமையில் நின்று கொண்டிருந்த தலையூர் வீரர்களின் காலின் பக்கம் சென்றது. ஒரு வீரன் அதை நன்றாக மிதித்து விடவே; அது வெகுண்டெழுந்து சீறிக் கிளம்பிற்று! அவ்வளவுதான், அந்த வீரர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

புதருக்குள்ளிருந்த குப்பாயி,ஆறுதலாகப் பெருமூச்சு விட் டுக் கொண்டு – புதரை விலக்கியவாறு வெளியே பார்த்தாள். விடியத் தொடங்கியிருந்தது. வீரர்கள் வெகு தொலைவில் போய்க் கொண்டிருந்தனர். புதரிலிருந்து வெளிப்பட்ட குப் பாயி, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அந்தக் காட்டின் கல்லிலும் முள்ளிலும் கால் நோக நடந்தாள். அருக்காணியை தப்ப வைப்பதற்காக; தான் செய்த தியாகத்தை அவள் அப்படி யொரு பெருமையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு தந்தி ரம் செய்து தனது தோழியைக் காப்பாற்றி விட்டதாகவே அவள் மகிழ்ந்திருந்தாள். அந்த இரவில் வளநாட்டு அரண் மனையில் அவளுக்குத் திடீர் என்று தோன்றிய திட்டம் அது ஒன்றுதான். சதிகாரக்கும்பல் ஒன்று உறையூர்ச் சோழர் பெயரைச் சொல்லிக் கொண்டு வளநாட்டு அரண்மனைக்குள் நுழைந்திருக்கும்போது குப்பாயிக்குத் தேவையானதெல்லாம் அவர்களை ஏமாற்றி உடனடியாக வெளியேற்றிட வேண்டும் என்பது மட்டுமே! அதற்காகவே அருக்காணியெனத் தன்னை எண்ணிக் கொள்ளட்டுமென்று அவள் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்ளாமலே அந்த அவசரமான சூழ்ச்சியில் இறங்கினாள்.இப்போதும் பராக்கிரமனிடம் தனது தூய வாழ்வு பறிபோகப் போகிறதே என்ற துடிப்புடன் தவித் தாளே; அந்தக் கொடுமையான நிகழ்ச்சியை அவள் நினைத் துப் பார்த்தபோது அருக்காணியைக் காப்பாற்றப் போய் தானே இவ்வளவு கஷ்டம்; என்று அவள் இதயம் முணு முணுக்கவில்லை, கல்லிலும் முள்ளிலும் காட்டுப்பாதையில் கால் கடுக்க நடந்திடும் துன்பத்தைக் கூட அவள் ஒரு வீர சாகசமாகவே எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தாள். 

அவள் பாதையில் மலைப்பாறையொன்று குறுக்கிட்டது. சற்று நீண்டுயர்ந்த பாறை – பாறையின் அடித்தளத்தில் சுற்றி லும் மரங்கள் அடர்ந்து வளர்ந்தோங்கியிருந்தன. பாறையின் ஓரமாக மிகக் குறுகலான வழியமைத்துக் கொண்டு மெல்ல ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தெளிந்த நீரோடை. அதைப் பார்த்த வுடன் குப்பாயிக்குக் கொஞ்சம் உற்சாகம். நீரோடையில் போய் நின்று தனது அழகிய இளங்கரங்களால் தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டாள். தேவையான அள வுக்கு தண்ணீரை அள்ளி அருந்தினாள். என்ன நடக்குமோ என்ற அச்சம் – உயிருக்கல்ல; உயிரை விட மேலான கற்புக்கு என்று படபடத்துக் கொண்டிருந்த நெஞ்சுக்கு அந்தத் தௌ ளிய நீரை அருந்தியது மிகவும் இதமாக இருந்தது. அந்த நீரோ டைக் கரையில் கிடந்த ஒரு கல்லின் மீது அமர்ந்து இளைப் பாறினாள். எப்படியும் பொழுது போவதற்குள் வீரப்பூர் காட்டைக் கடந்து வளநாட்டுக்குச் சென்று விடலாம் என்று ஒரு நம்பிக்கை அவளுக்கு ஒளிவிட்டது. 

அப்போது, சிறிது தொலைவில் ஆட்கள் வரும் ஒலி கேட் டது. குப்பாயி, கவனித்தாள். அந்த ஒலி ஒரு திக்கிலிருந்து மட்டுமல்ல நாலு திசையிலிருந்தும் கேட்டது. உடன் அவள் எழுந்து பாறையோடு பாறையாக ஒட்டிக் கொண்டு – மரங் கள் அடர்ந்திருந்த காரணத்தால் தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மறைத்துக் கொண்டு; ஒலிகள் வரும் திசைகள் நோக்கி விழிகளை அலைய விட்டாள். சந்தேகமில்லை; தலை யூர் வீரர்கள்தான்! இரவு, அவர்களது மன்னனின் ஆணைப்படி நாலாபுறமும் சென்று அவளைத் தேடப் புறப்பட்ட அதே வீரர்கள்தான் அந்தப் பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

“எந்தப் பக்கம் பறந்து போயிருப்பாள் அந்தப் பெண்? இவ்வளவு பேர் தேடியும் யார் கையிலும் கிடைக்கவில்லையே!” 

“இந்தக் காட்டை விட்டு அவள் வெளியில் போயிருக்கவே முடியாது. பகலில் அவள் நம் கண்ணில் படாமலா போய் விடுவாள்! 

உரையாடிக் கொண்டே பாறையோரமாக உட்கார்ந்த தலை யூர் வீரர்கள், இருபதுக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். இந்த இருபது பேரையும் ஏமாற்றிவிட்டு எப்படித் தப்பிட முடியும்? குப்பாயி மீண்டும் பரபரப்புக்கு ஆளானாள். இருந்தாலும் உயிரைப் பற்றிக் கவலைப்படாத ஓர் உறுதி அழுத்தமாக இருந்த காரணத்தால் அவள் சோர்ந்து போய் விடவில்லை. தனது அசைவின் ஓசை கூட எழாத அளவுக்கு மெல்ல மெல்ல அந்தப் பாறையை முட்டினாற் போலவே நகர்ந்து சென்ற வளின் கண்ணில் பாறை இடுக்கில் குகை போன்ற ஒரு வழி தெரிந்தது. குகைக்குள் எத்தகைய பயங்கரமான விஷப்பிராணி கள் இருந்தாலும் பயமில்லை அவைகள் எதுவும் வெளியே உள்ள தலையூர் வீரர்களை விடக் கொடுமையானவைகள் அல்ல – என்ற திடமான முடிவுடன் குப்பாயி அந்தக் குகைக் குள் நுழைந்தாள். 

நுழையும் பொழுதே அவள் தலை கிறுகிறுப்பது போல் ஓர் உணர்வு! சிறுகச் சிறுக, தான் மயக்கமுறுவதை அவள் புரிந்து கொண்டாள். குகைக்குள் ஏதாவது விஷ மூலிகைகள் இருந்து அதனால் ஏற்படும் விளைவோ என்று எண்ணிப்பார்ப்பதற் குள் அவளை அந்தக் கடுமையான மயக்கம் வீழ்த்திவிட்டது. எங்கே படுக்கிறோம் என்று தெரியாமலேயே குகையின் வாயிற் புறத்தில் கரடுமுரடான அந்தப் பாறையில் படுத்து விட்டாள். 

தாங்கள் தேடி வந்த குப்பாயி, தங்களுக்கு அருகாமையி லேயே மயக்கமுற்றுக் கிடக்கிறாள் என்பதை அறியாத தலை யூர் வீரர்கள், இரவெல்லாம் அலைந்து திரிந்த களைப்பில் தாக சாந்தி செய்து கொள்வதற்காக அந்த நீரோடையில் வேண்டிய மட்டும் தண்ணீர் பருகிக் களைப்பைப் போக்கிக் கொண்டனர். 

ஒரு வீரன் தனது கழுத்தை வளைத்தும் நிமிர்த்தியும் விட்டுக் கொண்டு மற்றவர்களைப் பார்த்து. என்னப்பா ஒரு மாதிரி மயக்கமாக இருக்கிறது; உங்களுக்கு எப்படியிருக்கிறது?” என்று கேட்டான். அங்கிருந்த தலையூர் வீரர்கள் அனைவரும் இதே கேள்வியை ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்டுக் கொண் டனர். பிறகு அவர்களால் பேச முடியவில்லை. எல்லோருமே மயக்கமுற்றனர். எழுந்திட முயன்றனர் முடியவில்லை. ஆளுக்கொரு மரத்து நிழலை நாடி நகர்ந்தனர். அதற்குள் உணர்விழந்து ஆங்காங்கு வீழ்ந்து விட்டனர். 

அந்தப் பாறையின் நீரோடை ஒரு விஷ ஊற்று என்பதை குப்பாயியும் அறியவில்லை தலையூர் வீரர்களும் அறிய வில்லை பளிங்கு போல் தெளிந்த நீரோடையாகக் காட்சி யளிக்கும் அது; பயங்கரமான நச்சு கலந்தது என்பதை ஒரு சிலரே அறிவர். அந்த நீரை அருந்துவோர் ஒரு நாள் இரு நாள்கூட எழ முடியாத அளவுக்கு மயக்கமுற்று கிடப்பார்கள் 

பலவீனமான உடலமைப்பு கொண்டவர்கள் அந்த விஷ நீரின் சக்தியைத் தாங்கமாட்டாமல் உயிரையும் விட்டிருக்கிறார் கள். அந்த பாறையைச் சுற்றிலும், குகைக்குள்ளும் வளர்ந் துள்ள விஷ மூலிகைகள் அந்தத் தண்ணீரில் கலந்து கரைந்து நீரோடையையே நச்சுப் பொய்கையாக மாற்றி விட்டிருந்தன. 

கண் கவரும் இயற்கைக் காட்சியும் காலை மாலை வெயிலின் ஒளியில் அந்தப் பாறையின் பளபளப்பான மஞ்சள் வண்ணமும் அடர்ந்த மரஞ்செடிகளுக்கிடையே வெள்ளி உருக்கினாற் போன்ற நீரோடையும் ஆகா; என்ன கவர்ச்சி! என்ன கவர்ச்சி! என்று எவரையும் அருகே இழுக்கும் தன்மை யும் கொண்டவைகள்தான் எனினும் ஏமாந்தால் மயங்கி விழநேரிடும்; மயங்கி வீழ்ந்தோரில் சிலர் மாய்ந்திடவும் நேரி டும் அதனால் தான் அதற்கு “ஆள் மயக்கிப் பாறை” என்று; வீரப்பூர் காட்டில் ராக்கியண்ணனின் மூதாதையர் பாசறை நடத்திக் கொண்டிருந்த போது, பெயர் எழுதி வைத்து அதனருகே யாரும் செல்லக் கூடாது என்று எச்சரிக்கைப் பலகையும் நட்டு வைத்திருந்தனர். 

கால ஓட்டத்தில் தலையூர் ஆதிக்கத்தில் அந்தக் காடு வந்து விட்டதால் நல்லது எது? கெட்டது எது? என ஆய்ந்து பார்க்க வும் -ஆய்ந்து சொல்லவும் தகுதி படைத்த நிர்வாக அமைப்பு கள் எதுவுமின்றிப் போனதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த ஆள் மயக்கிப் பாறை பற்றிய எச்சரிக்கைக் குறிப்புகள் அனைத் தும் அழிந்து போய் விட்டன. 

குகையின் நுழைவு வாயிலில் குப்பாயி மயங்கி விழுந்தவள், விழுந்தவளேதான்! 

அதைப் போலவே பாறையைச் சுற்றிலும் மயங்கி விழுந்த தலையூர் வீரர்கள் அனைவரும் அசைவற்றுக் கிடந்தனர்! 

42. களங்கமா? கற்பனையா? 

பொழுது விடிந்து சிறிது நேரத்திற்கெல்லாம் மயங்கிவிழுந்த குப்பாயியும் தலையூர் வீரர்களும் மறுநாள் மாலைப்பொழுது வரும் வரையில் மயக்கம் தெளிந்து எழுந்திடவில்லை. ஆள் மயக்கிப் பாறையின் நச்சுத் தண்ணீர், அந்த அளவுக்கு அவர் களை உணர்விழக்கச் செய்திருந்தது. மாலை நேரத்துக் கதிரவ னின் ஒளிக்கதிர்கள் மரக்கிளைகளினூடேயும் அடர்ந்த தழை களினூடேயும் எட்டிப் பார்த்து, இரண்டு பகல்கள் குப்பாயி யெனும் அந்த இளந்தளிரைக் கடுமையாக சுட்டெரித்து விட்ட தற்கு மன்னிப்புக் கோருவது போலக் காட்சியளித்தன. 

முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் குஞ்சுகளைப் போல அவளது விழிகள் இமைகளைத் திறந்து கொண்டு வெளி யுலகைப் பார்க்கத் தொடங்கின. பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்த உலகுதான் என்றாலும் – கொடிய மயக்கத் திலிருந்து மீண்ட காரணத்தினால் அவளுக்குத் தன்னைப் பற்றியே நம்பிக்கையில்லை! தான் யார்? என்று தனக்குத் தானே பலமுறை கேட்டுக்கொண்டபிறகே குப்பாயி என்ற முடிவுக்கு அவளால் வர முடிந்தது. தனக்கு உயிர் இருக்கிறதா என்பதையும் அவள் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ஒரு முறைக்கு இரு முறை தன்னுடலைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் சரியாக இருக்கிறது. உயி ரோடுதானிருக்கிறோம், என்ற நம்பிக்கையும் வந்தாகி விட்டது. 

எதற்காக இந்த இடத்தில் படுத்துக் கிடக்கிறோம் – இல்லை! இல்லை! விழுந்து கிடக்கிறோம்? அதையும் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தபிறகே அவளால் தெரிந்துகொள்ள முடிந்தது. 

வழக்கமாகப் படுத்துறங்கும் இடத்தை விட்டு வேறு இடத் தில் படுத்துறங்கி, பாதித் தூக்கத்தில் கண் விழித்தாலே இருக்குமிடத்தை நன்றாக நினைவுபடுத்திப்பார்த்துத்தான் புரிந்து கொள்ள முடியும் என்கிறபோது இரண்டு பகல் – இடையிலே ஒரு இரவு; பிரக்ஞையற்ற மயக்கநிலையில் இருந்து எழுந்தால், மனதில் எவ்வளவு குழப்பம் முற்றுகையிட்டிருக்கும்! நினைவு கள் மெல்ல மெல்ல ஆனால் அடுக்கடுக்காக வந்தன. வள நாட்டு அரண்மனையில் அருக்காணி தங்கத்தைக் காப்பாற்ற எடுத்த முயற்சி வகுத்த தந்திரம் பராக்கிரமன் கையில் சிக்கிப் பறிகொடுக்க இருந்த கற்பு – தலையூர்க் காளியின் திடீர் வருகை – வீரப்பூர் காட்டில் தலையூர் வீரர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கப்பட்ட கஷ்டங்கள் இறுதியாக ஆள் மயக் கிப் பாறையில் நீர் அருந்தியது வரையிலே எல்லாமே ஞாபகத்திற்கு வந்துவிடவே ; குப்பாயி, மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். 

உட்கார்ந்தவளுக்கு ஏதோ ஒரு உணர்வு! தன் கன்னத்தின் ஒரு பக்கம் ஈரமாக இருப்பது போல! கைவிரல்களைச் சேர்த் துக் கன்னத்தைத் தடவிப் பார்த்தாள். பிசுபிசுவென ஒட்டியது போன்ற ஈரம்! உடன், தனது கையைப் பார்த்தாள். ரத்தம்! மீண்டும் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தாள். சிறு காயத்தி லிருந்து ரத்தம் கசிந்து காய்ந்து போன நிலையில் இருந்தாலும் ஈரம் அறவே வற்றிப் போய்விடவில்லை. அதனால்தான் அவளது கைவிரல்களில் அந்த ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தது. 

மயங்கி விழுந்தபோது, பாறையின் கூரான கல் ஒன்றில் குத்திக் கன்னம் காயப்பட்டிருந்ததை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னைத் துரத்திக் கொண்டு வந்த தலையூர் வீரர்களில் எவனோ ஒருவன் தனது கன்னத்தைக் கடித்திருக் கக் கூடும் என்ற சந்தேகம்! அந்த நேரம் மயங்கியிருந்ததால் அது அவனுக்குச் சாத்தியமாகியிருக்கலாம் என்ற நினைவு! 

பதைத்தாள்! ஆனால் முழுவதுமாக அழிந்து விடவில்லை என்று தெளிந்தாள்! இருப்பினும் பெண்மையின் மாண்பு மூளியாகிவிட்டதே என்று துடித்தாள்! அவளது தவறான சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல, அப்போதுதான் தலை யூர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கத்திலிருந்து விடு பட்டு எழுந்துகொண்டிருந்தனர். அவர்கள் பேசியது குப்பா யிக்குக் கேட்டது. 

”நான் அப்பொழுதே நினைத்தேன்! என்னடா இது; தண் ணீர் இவ்வளவு ருசியாக இருக்கிறதே என்று! இப்போதுதான் உண்மை தெரிகிறது ஒருமாதிரியான விஷத்தண்ணீர் என்று” 

“விஷத்தண்ணீர் என்று ஏன் சொல்லுகிறாய்? நாமும் எத்தனையோ மது வகைகளைக் குடித்திருக்கிறோம். எதிலும் இல்லாத போதை இதில் அல்லவா கிடைத்திருக்கிறது. அத னால் இதை உலகத்திலேயே சிறந்த மது என்று ஏன் சொல்லக் கூடாது?” 

“ஆமாம்! ஆமாம்! குடங்கள் மட்டும் இருந்தால் ஆளுக்கொரு குடம் இதை மொண்டுகொண்டு தலையூருக்கே போகலாம்” 

“அதைவிட எனக்கு ஒரு யோசனை உதிக்கிறது! இந்த நீரோ டையை இப்படியே வாய்க்கால் வெட்டி நீட்டிக்கொண்டு போய் – நமது தலையூர்ப் படை முகாம் வரையில் தண்ணீர் பாய்ச்சினால், தினந்தோறும் இதிலேயே நாம் நீச்சல் அடிக்கலாம்!” 

“ஏனப்பா பேசமாட்டீர்கள்? மயக்கம் தெளிந்து உயிரோடு எழுந்துவிட்டோம் அல்லவா; அதனால் பேசுகிறீர்கள்! நல்ல வேளை இன்னும் இரண்டு வாய் தண்ணீர் அதிகம் குடித்திருந்தால் இந்நேரம் எல்லோரும் மேல் உலகத்தில் இருந்திருப்போம். அதை மறந்து விடாதீர்கள்!” 

“ஏய் தெரியுமா சேதி! நான் இந்தத் தண்ணீரைக் குடித்த தும் ஒருமாதிரியான போதை! சொர்க்கலோகத்திலே இருக்கிற மாதிரி! ஒரு பெண்ணுடைய கன்னத்தைக் கடித்து அப்படியே தின்ன வேண்டும் போலிருந்தது!” 

“நல்ல வேளை! நாம் தேடியலைந்த பெண் அகப்பட்டிருந் தால் அவள் கன்னத்தைக் கடித்திருப்பாய்!” 

”உம்! அவள்தான் கிடைக்கவில்லையே! அதனால் என்ன செய்தேன் தெரியுமா? அதோ அந்த மாமரத்தில் ஏறினேன். ஒரு மாங்காயைப் பறித்துக் கடித்தேன். அதற்குள்ளே மயக்கம் தலை சுற்றியது. அப்படியே கீழே விழுந்தேன். அப்புறம் இது போது தான் கண் விழிக்கிறேன்.” 

தலையூர் வீரர்களின் உரையாடலைக் கேட்டு, குப்பாயி மீண்டும் மீண்டும் தனது கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண் டாள். பாறையின் அருகே ஒரு மாமரம் இருப்பதையும் அதில் மாங்காய்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்குவதையும் கண் டாள். ஆனாலும் அவள் சமாதானமடையவில்லை. அந்தச் சண்டாளன் பெண்ணின் கன்னமென எண்ணி,மாங்காயைக் கடித்தானோ? அல்லது மாங்காய் என்று கருதித் தனது கன் னத்தைக் கடித்துவிட்டானோ? மயக்கத்தில் என்ன செய்து தொலைத்தானோ? குப்பாயிக்குப் பதற்றம் அதிகமாயிற்று? 

மறுபடியும் தலையூர் வீரர்களின் பேச்சு. அவள் கவனத்தை ஈர்த்தது! 

“என்னடா வாயெல்லாம் ரத்தம் உறைந்திருக்கிறது! மரத்தி லிருந்து விழுந்ததில் பல் உடைந்துவிட்டதா? அல்லது மாங்காய் கடித்ததில் ஏற்பட்ட காயமா?” 

குப்பாயி இப்போது தன்னையறியாமல் நடுங்கினாள். அவள் கன்னத்தில் காயம்! தலையூர் வீரர்களில் ஒருவனது வாயிலே ரத்தம்! இரண்டுக்கும் காரணங்கள் தனித்தனியான நிகழ்ச்சிகள் என்றாலும், அவள் அந்தக் குழப்பத்திலிருந்து மீளவே இல்லை! 

புதரில் ஒளிந்திருந்தபோதும் பாம்பைக் கையில் பிடித்த போதும் அலறி அழாத அவள், இப்போது தனது உயிருக்கும் மேலான மானம் களங்கப்பட்டு விட்டது என்ற தவறான சந்தேகத்தில் தன்னை மறந்து ஓவென அலறி அழுது விட் டாள்! அந்த ஒலி, அந்தப் பகுதியையே ஒரு கலக்கு கலக்கி விட்டது! தலையூர் வீரர்கள் விசை முடுக்கிய பொம்மைகளைப் போல வீறிட்டுக் கிளம்பினார்: ”ஏ! விடாதே பிடி! அந்தப் பெண்தான்!’ என்று கூச்சல் போட்டுக்கொண்டு! 

வீரர்கள் பாய்ந்தெழுந்து வருதல் கண்டு, குப்பாயி அந்தப் பாறையைச் சுற்றி வந்து – அவர்கள் கையில் சிக்காமல் ஓடத் தொடங்கினாள். தப்பித்துக் கொள்ள வேண்டும் என ஓடுகிற ஓட்டத்தில் உள்ள வேகத்தை விட, எப்படியும் பிடித்துவிட வேண்டுமென துரத்துகிறவர்களின் ஓட்டத்தில் வேகம் குறை வாகத்தானிருக்க முடியும். குப்பாயி மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். தலையூர் வீரர்களோ அவள் ஓடும் திசை யில் தொடர்ந்து ஓடி; அவள் எந்தப்பக்கம் திரும்பி ஓட முயன்றாலும் வளைத்து விடக்கூடிய அளவுக்கு நெருங்கிக் கொண்டிருந்தனர். முட்செடிகளில் குப்பாயியின் பாதம் அழுந்தி, புல்லின் நுனியில் தொங்கும் பனித்துளிகளைப் போல இரத்தத்துளிகள் கொப்பளித்தன! இருபதுக்கு மேற் பட்ட ஓநாய்கள்! அவற்றுக்கு நடுவே ஒரு மான்குட்டி! எவ் வளவு வேகமாக ஓடினாலும், எவ்வளவு நேரம் ஓட முடியும்? 

தான் ஓடும் திசையில் ஒரு பாழடைந்த கிணறு இருப்பது குப்பாயியின் கண்களில் பட்டது. அந்தக் கிணற்றை நோக்கி ஒரு ஒற்றையடிப்பாதை நேராகச் சென்றதையும் அவள் கவ னித்தாள். அந்தப் பாதையில் சென்று பாழுங்கிணற்றில் விழுந்து விடுவது என்ற தீர்மானத்துடன் இறுதியாக ஒரு தடவை தனது ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டாள். அந்தக் கிணற்றை அவள் சென்றடைவதற்குள் பிடித்துவிடுவதெனத் தலையூர் வீரர்கள் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல் குப்பாயி, அந்தப் பாழுங்கிணற்றின் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து விட்டாள். ஆனால் அவள் எண்ணம் அப்போது ஈடேற முடியாமல் குதிரையொன்று நாலு கால் பாய்ச்சலில் அங்கே பாய்ந்தது. அந்தக் குதிரையிலிருந்த சங் கர், ‘குப்பாயீ!’ என்று உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டே அவ ளைத் தூக்கிக் குதிரையில் தனக்கு முன்பாகப் போட்டுக் கொண்டான். 

தலையூர் வீரர்கள் சங்கரின் குதிரையைச் சூழ்ந்து கொண்ட னர். சங்கர், கையில் ஓங்கிய வாளுடன் குதிரையிலிருந்து குதித்துத் தலையூர் வீரர்களை எதிர்த்துத் தாக்கினான். இருபது பேரின் படைக்கலன்கள் சங்கரின் வாள்முனைப் பட்டு நொறுங் கிப் பொடிப்பொடியாகச் சிதறின. ஒரு பத்து பேரையாவது உயிருடன் அங்கிருந்த பாழுங் கிணற்றுக்குள் தள்ளி சங்கர் வேடிக்கைப் பார்த்தான். எஞ்சிய பத்து வீரர்கள் தப்பித்தோம் பிழைத்தோமென்று தலையூர்ப் பாதை நோக்கி ஓடத் தொடங் கினர். மிகவும் இலகுவாகத் தலையூர் வீரர்களை வெற்றி கண்ட சங்கரிடம் குப்பாயி ஓடி ‘அண்ணா!” என்று கால் களைப் பற்றிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். சங்கர், அவளது கூந்தலைக் கோதிவிட்டு அமைதிப்படுத்திக்கொண்டே, கலனாகிக் கிடந்த ஒரு நாலுகால் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். 

‘அவர்கள் உன்னை மிகவும் கொடுமையாக நடத்தினார் களா?’ என்று அவன் கேட்ட கேள்விக்கு குப்பாயி பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். கண்ணீர் அருவியாகக் கொட்டியது. தனது கரங்கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சங்கர், தன்னிட மிருந்த சில பழங்களைக் கொடுத்துப் பசியாறுமாறு அவளை வற்புறுத்தினான். அவளும் வேண்டாவெறுப்பாக அவற்றை வாங்கிக் கொண்டு சங்கரைப் பார்த்து ஆவலுடன் வள நாட்டில் எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா? என்று கேட் டாள். அவளது சோகத்தை அதிகப்படுத்த விரும்பாத சங்கர் – ‘எல்லோரும் சுகந்தான்’ என்று முகத்தை வேறு பக்கம் திருப் பிக்கொண்டு பதிலளித்தான். அருக்காணி எப்படியிருக்கி றாள் அண்ணா?’ என்று கேட்ட குப்பாயியின் முகத்தில் அந் தப் பாச உணர்வு பொழியும் காட்சியைக் கண்டு சங்கர் வியந்து போனான். 

‘அருக்காணி; உன்னை மீட்டு வருவதாகச் சூளுரைத்து வாளேந்திப் புறப்பட்டு விட்டாள்! நான்தான் அவளைத் தடுத்து அவள் ஏந்திய இந்த வாளையே வாங்கிக் கொண்டு உன்னைத் தேடிக் கிளம்பினேன்!’ 

சங்கர் இவ்வாறு கூறியதும், குப்பாயியின் மேனி சிலிர்த்துப் போயிற்று! அந்த வாளை வெடுக்கென வாங்கி, “என் அருக்காணி, அருக்காணிதான்! அடுத்த பிறவியென ஒன்று இருந்தால் அப்போதும் அவளுக்கு நான் தோழியாகவே பிறக்க வேண்டும்!’ என்றவாறு வாளுக்கு முத்தமீந்தாள் 

‘சரி! சரி! வாளை முத்தமிட்டு வாயைக் கிழித்துக் கொள் ளாதே! ஏற்கனவே கன்னத்தில் வேறு காயம்!’ என்றான் பரிவுடன் சங்கர்! 

ஆனால் குப்பாயி அதிர்ந்து போனாள்! அந்தக் காயம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பதில் ஏற்கனவே அவள் மனமொடிந்து நிலைகுலைந்து போயிருக்கிறாள்! அதனால் சங்கர், அந்தக் காயத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும் அவள் உள்ளத்தில் சூறாவளி வீசத் தொடங்கிவிட்டது. எங்கேயோ கல்லில் இடித்துக் கொண்டதால் ஏற்பட்ட காயம் என்றுதான் சங்கர் கருதியிருந்தான். ஆனால் அவளோ, அந்தக் காயம், தனது மானத்துக்குற்ற களங்கத்திற்கு நிரந்தரமான அடையாள வடுவாக் இருக்கப் போகிறது என எண்ணிக் குமுறினாள். 

‘உம்! குப்பாயி! புறப்படு!’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் சங்கர்! அவளைத் தூக்கி குதிரையின் மீது – அவன் உட்காருமிடத்திற்கு முன்னால் அமர வைத்து அவனும் குதிரை யில் ஏறிக் கொண்டான். அந்தி சாய்ந்த அந்த நேரத்தில் காட்டு மரத்தழைகளையசைத்து வீசிய குளிர்ந்த காற்றில் சங்க ரின் குதிரை பரபரப்பின்றி வளநாடு நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. 

தலைநகருக்குள் சங்கரும் குப்பாயியும் வந்து சேர்ந்தபோது. ஆங்காங்கு மிக மங்கலாகத் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிகமில்லை. திரும்ப ஊருக்கு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியெதுவும் குப்பாயியின் உள்ளத்தில் அரும்பியதாகக் கூறமுடியாதபடி அவள் தலை குனிந்தவாறே காணப்பட்டாள். 

சங்கர், குதிரையை கோட்டை முகப்பின் பக்கமாகத் திருப்பி னான். அப்போது குப்பாயி, அவனைப் பார்த்து, ‘அண்ணா! முதலில் வீட்டுக்குப் போய் அப்பாவைப் பார்த்துவிட்டுப் பிறகு அரண்மனைக்குச் செல்லலாம் என்று கேட்டுக் கொண்டாள். 

“என்னம்மா திடீரென்று அப்பா ஆசை வந்துவிட்டது! அருக்காணியைத்தான் முதலில் பார்ப்பாய்! அவளும் ஓடிவந்து கட்டித் தழுவிக் கொள்வாள்! இரண்டு தோழிகளும் ஒருவர் கண்ணீரால் ஒருவரைக் குளிப்பாட்டுவீர்கள்; என்றல்லவா நினைத்தேன். நீ அதையெல்லாம் விடுத்து முதலில் அப்பா வைப் பார்க்க வீட்டுக்குப் போக வேண்டுமென்கிறாயே; எனக்கே ஆச்சரியமாக இருக்கிறதே!” எனக் கேலி பேசினான் சங்கர்! 

“இல்லையண்ணா! அப்பாவுக்கு உடல் நலமில்லையென்று தான் உங்களுக்குத் தெரியுமே! நான் கடத்தப்பட்ட செய்தி வேறு, அவருக்குத் தெரிந்திருக்கும்! அதை நினைத்து உடலை மிகவும் கெடுத்துக் கொண்டிருப்பார்! என்னைப் பார்த்து விட்டால் அவருக்கு நிம்மதியாக இருக்கும்!’ 

”என்னம்மா… உன் அப்பா படுத்த படுக்கையாகவா இருக்கிறார்- அப்படியொன்றுமில்லையே! இரண்டு நாளைக்கு முன்புகூட அரண்மனைக்கு வந்திருந்தாரே… என்று மேலும் சொல்ல வந்தவன், தனது தவறை உணர்ந்து கொண்டு அத் துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு மௌனமானான். 

“அப்பா அரண்மனைக்கு வந்திருந்தாரா? எதற்காக அண்ணா?” 

சங்கர் அவளிடம் உண்மையைச் சொல்வதென்றால் குன் றுடையான், தாமரை நாச்சியார் இருவரின் மரணத்தைப் பற்றி யும் அதற்காகத்தான் அவளது தந்தை பச்சனா முதலியார் அரண்மனைக்குத் துக்கம் விசாரிக்க வந்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் அவன் சமாளித்துக் கொண்டு, ‘அதுதான்! நீ கடத்தப்பட்ட செய்தியறிந்து அதுகுறித்து விசா ரிக்கத்தான் வந்திருந்தார். நான் அவருக்குத் தைரியம் கூறி விட்டு உன்னைத் தேடிப் புறப்பட்டேன்’ என்று பதில் அளித்தான். 

குதிரையும் கோட்டை முகப்பின் பக்கம் திரும்பாமல் சங்கரால் வேறு பக்கம் திருப்பிச் செலுத்தப்பட்டது. 

வளநாட்டைப் பொன்னர் சங்கர் மீட்டவுடனேயே குப்பாயியையும் அவள் தந்தை பச்சனா முதலியாரையும் அரண் மனைக்கே வந்து விடுமாறு அருக்காணி வற்புறுத்தினாள். பச்சனா முதலியார் அரண்மனைக்குள் குடியேற மறுத்து விட் டார். இருந்த போதிலும் அவருக்கு வள நாட்டில் ஒரு அழ கிய வீடு ஏற்பாடு செய்து தரப்பட்டது. அவரை கவனித்துக் கொள்ள அரண்மனையிலிருந்து ஒரிரு ஆட்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அருக்காணியிடம் கொண்டிருந்த அளவற்ற நேசத்தின் காரணமாகக் குப்பாயி அரண்மனையில் அவளுடன் தங்கியிருந்தாள். பச்சனா முதலியாருக்கு இரண்டொரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதிக நடமாட்டமில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வள நாட்டுக்கு வந்து தனக்கு அருகாமையிலேயிருக்கவேண்டுமென்று அவரது மகள் குப் பாயியின் வேண்டுகோளை முழுதும் ஏற்றுக் கொள்ளாவிட் டாலும் அறவே புறக்கணித்து விடாமல் அரண்மனைக்கு வெளியே ஒரு வீட்டில் தங்கிக் கொள்ள மட்டும் சம்மதித்தார். 

அந்த வீட்டு வாசலில் சங்கரின் குதிரை போய் நின்றது. சங்கரும், குப்பாயியும் இறங்கி உள்ளே சென்றார்கள். 

தீப்பந்த வெளிச்சத்தில் முன் கூடப் பகுதியில் ஒரு கட்டி லில் சாய்ந்து கொண்டிருந்த பச்சனா முதலியாரின் காதுகளில் ”அப்பா!” என்ற குப்பாயியின் குரல் கேட்டவுடன் அம்மா! அம்மா! வந்து விட்டாயா?” என்று கண் கலங்க எழுந்த அவரை அப்படியே தழுவிக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் குப் பாயி! இருவரும் உணர்ச்சி வயப்படுவது கண்ட சங்கர், அவளை அவரிடமிருந்து மெதுவாக விலக்கி வந்த துன்பம் நீங்கியபிறகு; போய்விட்ட துன்பத்திற்காக யாராவது வருத்தப் படுவார்களா?” என்றுகூறி இருவரையும் அமைதிப்படுத்திட முனைந்தான். அந்தக்கூடத்தின் மங்கலான ஒளியில்கூட, பச் சனா முதலியாருக்குக் குப்பாயியின் கன்னத்திலிருந்த காயம், அவர் கண்ணில் பட்டு விட்டது. 

‘என்னம்மா இது?’ என்று அவர் கேட்டபோது அவரது குரல் மட்டுமல்ல; அவரது உடலே நடுங்கிற்று! 

‘அம்மா குப்பாயி! பரம்பரை பரம்பரையாக மானத்தோடு வாழ்ந்த குடும்பம் ஒரு குறை எவனும் சொன்னது கிடை யாது. இந்தக் குடும்பத்தைப் பற்றி – அப்படிப்பட்ட மரியாதை யுள்ள குடும்பத்துக்கு இப்படியொரு மானக்கேடு வந்ததே யம்மா!, 

தந்தை சந்தேகப்படுவது சரிதான் என்று அவளுக்குத் தோன் றியது. தன் கன்னத்தில் ஏற்பட்ட காயத்தைப் பற்றி அவள் என்ன கற்பனை செய்துகொண்டாளோ அதையேதான் அவ ளது தந்தையும் எண்ணுகிறார் என்கிறபோது அவள் இதயம்; கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் விழுந்து துடிப்பது போலாயிற்று.”அப்பா!’ எனக் கதறி, அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு விழுந்தாள். சங்கர் அவளைத் தூக்கி நிறுத்தினான். 

உணர்ச்சிவயப்பட்ட பச்சனா முதலியாருக்கு சங்கர் ஆறுதல் கூறி அமைதியாக இருக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். 

“குப்பாயிக்கு நமது குடும்ப கௌரவம் கெடுவது போல எதுவும் நடந்து விடவில்லை, வீணாகக் குழப்பிக் கொள்ளா தீர்கள்” என்று அவரை சமாதானப்படுத்தினான். பச்சனா முதலியாரும் அவசரத்தில் தனது மகளின் மனதைப் புண் படுத்திவிட்டோமோ எனப் பயந்து பேச்சின் போக்கை மாற்றுவதற்காக குன்றுடையான், தாமரை நாச்சியாரின் திடீர் மறைவு பற்றித் தன் மகளிடம் கூறிடலாமெனக் கருதினார். எனவே, அவளது தோள்பட்டையில் தனது கையை வைத்து. அவளை அரவணைத்தவாறு, “ஏனம்மா உனக்கு வளநாட்டில் நடந்ததெல்லாம் தெரியுமா?” என்று ஆரம்பித்தார். 

அதற்குள் அந்தத் துயர நிகழ்ச்சிகளை அவளிடம் சொல்லத் தேவையில்லையென்று நினைத்த சங்கர், “அதெல்லாம் பெரிய கதை! ஒரு வார்த்தையில் சொல்லக் கூடியதா? குப்பாயி! நீ முதலில் போய் உடைகளை மாற்றிக் கொண்டு வா! பிறகு சாவகாசமாகப் பேசலாம்!” என்று அவளை அவரிடமிருந்து பிரித்து உள்ளே அனுப்பி வைத்தான். அவள் உள்ளே போன தும் சங்கர் பச்சனா முதலியாரைப் பார்த்து, ‘அய்யா! இரண்டு நாட்களுக்கு மேலாக குப்பாயி பெரும் ஆபத்தில் சிக்கி விடுபட்டிருக்கிறாள். அவள் உள்ளம் ஏற்கனவே துன்பத் தின் சுமை தாங்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அவளிடம் எங்கள் தாய் தந்தைக்கு ஏற்பட்ட முடிவைச் சொன்னால், அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.! தயவுசெய்து இப்போது சொல்லவேண்டாம்! என்று கூறினான். முதலியாரும் சங்கர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போலத் தலையசைத்தார் என்றாலும் அடக்க முடியாத வேதனையுடன் தனது கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

‘உடை மாற்றிக் கொள்ளப் போன குப்பாயியை இன்னும் காணவில்லையே! என்னுடன் இப்போதே அரண்மனைக்கு வருகிறாளா? பிறகு வருகிறாளா? தெரியவில்லையே!’ என்று சங்கர், முதலியாரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே வீட்டின் உட்புறமாகத் திரும்பிப் பார்த்தான். அப்போது வீட்டுக் குள்ளிருந்து ஒரு வேலைக்காரி தலைவிரிகோலமாக முன் கூடத்தை நோக்கி ஓடி வந்தாள் ! அய்யோ! அய்யோ!’ என்று ஒரே கூச்சல்! 

“என்ன? என்ன நடந்தது?” என்று கேட்டுக்கொண்டே பத றிப்போன சங்கர் வீட்டின் உட்புறம் ஓடினான். கூடத்தை யொட்டிய அறைக்குள் ஒரு உத்தரத்தில் குப்பாயி தொங்கிக் கொண்டிருந்தாள். சங்கர், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கயி றைத் துண்டித்து அவளைத் தூக்கிக் கொண்டான். ஆனால் பயனில்லை! குப்பாயி, தன் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது என்ற கற்பனையை மாற்றிக்கொள்ளாமல் அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டு விட்டாள்! 

43. மாயவரை இழந்தது மாபெரும் குற்றம்! 

தலையூர் உப்பரிகையின் உச்சியில் உள்ள கூடத்துக் கட்டி லில், காளி மன்னன் கவலைகளை முகத்தில் தேக்கிக்கொண்டு சாய்ந்திருந்தான். உறையூர்ச் சோழன் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தனது மன்னனிடம் விவரித்த அதே ஒற்றன் இப்போதும் காளிமன்ன னின் கால்பக்கமாக மரியாதையுடன் நின்று கொண்டிருந்தான். அந்த ஒற்றனிடம் தலையூர்க் காளிக்கு எப்போதுமே ஒரு நம் பிக்கையும் விசுவாசமுள்ள ராஜப் பிரதானியென்ற எண்ண மும் உண்டு என்பதால் அவன் சொல்வதை உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இடையிடையே தனக் கேற்பட்ட சந்தேகங்களையும் போக்கிக் கொண்டான். 

”அரசே! குலப்பெருமை குடும்பப் பெருமை காத்திட குப் பாயி தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள் என்ற செய்தி கேட்டவுடன் அருக்காணி தங்கம் தனது தோழியின் பிரிவைத் தாங்காமல் மனமுடைந்து போனாள் என்றாலும் – உடனடியா கத் தலையூர் மீது படையெடுத்துப் பழிதீர்த்துக் கொள்ள வேண்டுமென்று துடித்தெழுந்த தனது அண்ணன் சங்கரை அமைதிப்படுத்தவே செய்தாள்!” 

‘ஏன்? என்ன காரணம்? உயிருக்கு நிகரான தோழி என்கி றாய்! அவள் கதி இப்படி ஆகிவிட்டது என்றதும் எந்தப் பெண்ணுக்கும் ஆத்திரம் வரத்தானே செய்யும். அதற்கு மாறாக அமைதி உபதேசம் செய்தது எதனால்? 

‘அரசே! தலையூர் கோட்டையை முற்றுகையிட்டுப் பிடிப்பது என்பதும் நமது படைகளை நமது நாட்டில் வந்து வெல்வது என்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை மாய வர் மூலம் அருக்காணி உணர்ந்திருக்கிறாள். நமது வலிமை பற்றி பொன்னருக்கும் சங்கருக்கும் தெரியப்படுத்தி யுள்ளார் என்றாலும் சங்கர் எப்போதுமே மிகுந்த துடிப்பான இளைஞன் அல்லவா, அதனால் சங்கர் வெகுண்டெழுந்த போது மாயவருடனும் பொன்னருடனும் சேர்ந்து அருக்காணி யும் அமைதிப்படுத்தியிருக்கிறாள். 

‘நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை! ஆரிச்சம் பட்டிக் கோட்டையிலே நமது தளபதியை இழந்தோம்! அங்கே பொன்னர் சங்கருக்குத்தான் வெற்றி! சங்கரமலைக்கோட்டை யில் பராக்கிரமன் தலைமையில் சென்ற படையே தோற்றோடி வந்தது! வளநாட்டைப் பொன்னரும் சங்கரும் வளைத்துக் கொண்டபோதும் நமது படைகளால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. செல்லாத்தாக் கவுண்டர் ஆட்சியை நிலைநாட்ட முடியாமல் நிலைகுலைந்தோம்! 

நிலைகுலைந்தோம்! இப்படி அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்தித்துள்ள தலையூரைப் பார்த்து அவர்கள் தயங்குகிறார்கள் என்றால் எப்படி நம்ப முடியும்! 

‘அரசே! அந்தத் தோல்விகள் எல்லாம் நமது துணைப்படை களுக்கு ஏற்பட்டவை! எந்தவொரு எதிரியும் தலையூர் நாட் டின் தலை நகருக்குள் புகுந்து நமது படையை முறியடிப்பது என்பது எளிதான காரியமல்லவே! அது மட்டு மல்ல, நம்மைச் சார்ந்த பதினெட்டு நாட்டுப் படைகளும் நமக்குத் துணையாக வந்து விட்டால் பகைவர்களால் சமா ளிக்க முடியாதல்லவா?’ 

‘நமக்குப் பதினெட்டு நாட்டுப் படைகள் வந்தால் பொன்னர் சங்கருக்குத் துணையாக சோழ நாட்டுப் படைகள் வரக்கூடு மல்லவா?’ 

‘வளநாட்டுக்கு ஏதேனும் ஆபத்து எதிரிகளின் படை யெடுப்பு என்றால்தான் சோழநாடு உதவிக்கு வரும்! அதை விடுத்து, வளநாடு பிற நாட்டின் மீது வலுவில் சென்று முற் றுகையிட்டால் சோழ நாட்டுப் படை உதவி, வளநாட்டுக்குக் கிடைப்பது சந்தேகமே! இதையெல்லாம் எண்ணித்தான் நம்மீது பாய்வதற்கு பொன்னர் சங்கர் அவசரப்படக்கூடாது என்று மாயவர் அறிவுரை கூறியுள்ளார். தாய் தந்தையை இழந்த துயரமும் தன் தோழியை இழந்த துயரமும் போதும், தமையன் மாரையும் இழந்துவிடத் தன்னால் முடியாது என்று அருக் காணி தங்கம் குறுக்கே நிற்கிறாள்.’ 

‘அந்த அருக்காணிதான் இப்போது பெரிய காண்டியம்மன் ஆலயத்திலேயே இருப்பதாகச் சொன்னாயே. அவள் எப்படி அரண்மனை விவகாரங்களில் கலந்து கொள்ள முடிகிறது?’ 

‘அவள் பெரிய காண்டியம்மன் கோயிலில் இருப்பதாக மட்டுமே சொன்னேன். மற்ற விபரங்களைச் சொல்லவில் லையே. இப்போது அதையும் சொல்லிவிடுகிறேன் அரசே! வையம்பெருமானுக்கும் அருக்காணிக்கும் திருமணம் செய்து வைப்பது என்ற ஒரு எண்ணம் அருக்காணியின் பெற்றோருக் கும் இருந்தது. அண்ணன்மாருக்கும் இருந்தது! ஆனால் குப்பாயி மரணத்திற்குப் பிறகு தனக்குத் திருமணமே வேண்டா மென்று அருக்காணி உறுதியாகக் கூறிவிட்டாள். அவளது லட்சியம் திருமணம் அல்ல என்றும் – தலையூரைத் தரைமட்ட மாக்கி நம்மைப் பழிவாங்குவது-செல்லாத்தாக்கவுண்டர் குடும் பத்தைப் பழிவாங்குவது – அதாவது ராக்கியண்ணன் சபதத்தை நிறைவேற்றுவது மட்டுமல்ல, அத்துடன் குன்றுடையான் தாமரை நாச்சியார் சாவுக்கும், குப்பாயி சாவுக்கும் நாமே காரண மென்பதால் நம்மைத் தீர்த்துக் கட்டுவது என்று பொன்னர் சங்கர் பூண்டுள்ள விரதம் வெற்றி பெற அருக்காணியும் துணை நிற்கப் போகிறாள்.’ 

‘அதற்காக பெரிய காண்டியம்மன் கோயிலில் என்ன செய் கிறாள்?’ 

‘அவள் மட்டுமல்ல, அவளுடன் ஏழு கன்னிப் பெண்கள் பெரிய காண்டி கோயிலில் அம்மனை வழிபட்டுக்கொண்டிருக் கிறார்கள். அம்மன் சந்நிதானத்தில் அந்த ஏழு கன்னிகளும் அருக்காணியும் சத்தியமே செய்திருக்கிறார்கள், தாங்கள் திரு மணமே செய்து கொள்ளப் போவதில்லையென்று! அந்த ஆலயத்துக்குள் அவர்கள் வாள்வித்தை, வில்வித்தை, போன்ற போர்ப்பயிற்சிகளைச் செய்கிறார்கள்! எப்போதாவது ஒரு முறை அருக்காணி அரண்மனைக்கு வந்தால் உண்டு! மற்ற நேரமெல்லாம் பெரிய காண்டி கோயில்தான் கதியென்று கிடக்கிறாள். பொன்னர் சங்கர் இருவர் தவிர, வேறு எவ ரும் ஆண்கள் அந்த ஆலயத்துக்குள் இப்போது அனுமதிக்கப் படுவதில்லை!’ 

‘ஓ! என் நாட்டின் மீது கொங்கு நாட்டுக் கோதையரும் படையெடுக்கப் போகிறார்களா? அந்த அருக்காணியுடன் இருக்கும் ஏழு கன்னிப் பெண்கள் யார்?’ 

‘பச்சனா முதலியார் மகள் குப்பாயியைப் போல பல வகுப் புக்களைச் சேர்ந்த பெண்கள் அந்த ஏழு பெண்களும் அருக் காணியை உயிராக நேசிக்கிறார்கள்! பெரியகாண்டி ஆலயத் தில் அருக்காணி நிகழ்த்தும் வீர உரைகள் கேட்டு அந்தக் கன்னிகள் வீராங்கனைகளாக விளங்குகிறார்கள். அவர்களது இடையில் அருக்காணியைப் போலவே உடைவாட்கள் காட்சியளிக்கின்றன.’ 

‘அப்படியானால் வளநாட்டுப் படைகள் விரைவில் நமது தலையூரை முற்றுகையிடும் என்று சொல்!’ 

‘அதற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! ஆனாலும் தலையூர் முற்றுகையைத் தள்ளித்தான் போடுவார்கள்! என் யூகம். என்றோ ஒருநாள் திடீரெனத் தலையூர் நோக்கிப் பொன்னர் சங்கர் படை வரும்!’ 

‘உன் பேச்சே ஒரே குழப்பமாக இருக்கிறது! தலையூர் பலம் கண்டு தயங்குகிறார்கள் என்கிறாய்! சோழர் உதவிக்குப் போக மாட்டார் என்கிறாய்! அருக்காணியும் மாயவரும் அமைதிப் படுத்தியிருக்கிறார்கள் என்கிறாய்! எப்படியும் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்கிறாய்! ஒற்றர் வேலை மிகத் திறமையாகத்தான் பார்த்திருக்கிறாய். உன்னையும் குழப்பிக் கொண்டு என்னையும் குழப்பிவிட்டு!’ 

‘மன்னிக்க வேண்டும் அரசே! அவர்களின் நிதானம் நமக் குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது! வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்காமலே நம்முடன் மோதுவதற்கு சங்கர் தயார்! ஆனால் மாயவர் தலைசிறந்த ராஜதந்திரியல்லவா?’ 

‘அந்த ராஜதந்திரம் நமது குலத்துக்குப் பயன்படவில்லையே யாருக்கோ அல்லவா பயன்படுகிறது?’ 

“நடந்துபோனதை எண்ணிப் பயனில்லை. நடப்பதையும் நடக்கப் போவதையும் எண்ணிப் பார்த்துச் செயல்படுவோம்!’ 

‘உபதேசம் செய்ய உனக்கு ஒரு இடுக்கு கிடைத்தால் போதுமே. உம்! என்ன சொல்லப் போகிறாய்? சொல்!’

‘தலையூரை முற்றுகையிட ஒரு புறம் படையைப் பலப்படுத்து கிற காரியம் கடந்த மூன்றாண்டுகளாக வளநாட்டில் நடை பெற்று வருகிறது! அதே சமயம் பொன்னரும் சங்கரும் போர் நினைவிலேயே இருக்கிறார்கள் என்றும் பொதுமக்களின் நல் வாழ்வில் அக்கறை காட்டவில்லையென்றும் பொல்லாத பெயர் வந்து விடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். கொங்குச் சீமையின் கோபுரக் கலசங்களாகப் பொன்னரும் சங்கரும் வரலாறு படைப்பார்கள் என்று சோழ மன்னர் அக்களதேவன் கூறியதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டுமென்று மாயவர் கூறியதை அந்த வீரர்கள் ஏற்றுக் கொண்டு கடந்த மூன்றாண்டுக் காலமாக வள நாட்டில் நல் லாட்சி நடத்துவதிலும் மெத்த ஆர்வமுடன் இருக்கிறார்கள்!’ 

‘அப்படியென்ன நல்லாட்சி நடத்துகிறார்கள்? வானம் பொழிந்தால், பூமி விளைந்தால் எல்லோருந்தான் நல்லாட்சி நடத்தலாம்!’ 

‘மன்னித்துக் கொள்ளுங்கள் அரசே! உண்மைகளைச் சொன் னால் ஒற்றன் வரம்பு மீறிப் போகிறானோ எனத் தவறாக எண்ணி விடாதீர்கள்! கடந்த மூன்றாண்டுகளில் வளநாட்டில் கூட தொடர்ந்த மழையில்லை ஆனால் அதற்காக அங்கே வேளாண்மை பாழாகி விடவில்லை! ஆழமான கிணறுகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுக் கிணற்றுப் பாசனத்தைக் கொண்டு வேளாண்மையைப் பெருக்குகிறார்கள் – அரச குடும்பத்திலே உள்ளவர்களே உழவர் பெருங்குடி மக்களைப் போல உழைக்கிறார்கள். அருக்காணி தங்கத்திற்குத் தனியாக ஒரு பெரிய தோட்டமே இருக்கிறது. – பெரிய காண்டி கோயி லில் கவனிக்க வேண்டிய வேலைகளை கவனித்துவிட்டு, அருக் காணியும் ஏழு கன்னிகளும் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றை இறைத்துத் தண்ணீர் பாய்ச்சி உணவுப் பொருள் களை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். அரண்மனையில் உள்ள பெண்களே வேளாண்மையில் நாட்டம் செலுத்துவதைக் கண்டு அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருமே அர சின் உதவிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு உற்சாக மாக உழைக்கிறார்கள்.’ 

‘உனக்கு இக்கரைக்கு அக்கரை பச்சையாகத் தெரிகிறது போலும்! நாமுந்தான் குடிமக்களுக்குத் தான தருமங்கள் செய் கிறோம். அந்தக் குடிமக்கள் நம்மை வாழ்த்தவில்லையா?’ 

‘உண்மை நிலையை உரைக்க வேண்டியது ஒற்றன் கடமை! அரசரின் மனங்குளிர வேண்டுமென்பதற்காக முகஸ்துதி செய் வது ஒற்றனுக்கு அழகுமல்ல. இலக்கணமும் அல்ல! ஏதோ ஒரு நாள் அன்றைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகச் செய்யப் படும் தானதர்மங்களை நான் தடுக்கவில்லையென்றாலும், அது நமது குடிமக்களுக்கு நீண்ட காலத்துக்குத் தேவையான நிலை யான நல்ல வளமான வாழ்க்கையை அளிக்காது என்பது என்னைப் போன்ற பலருடைய தாழ்மையான கருத்து! வள நாட்டில் எல்லாமே திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது குடிமக்களின் குறைகள் பொன்னர் சங்கரால் நேரடியாகவே கேட்கப்படுகின்றன. உடனுக்குடன் அந்தக் குறைகளைத் தீர்க் கும் நிர்வாக அமைப்புகள் நேர்த்தியாகப் பணியாற்றுகின்றன. சிற்றூர்களை இணைத்திடும் சாலைகள் தூய்மையான குடி நீர் வழங்கும் நிலையங்கள் அறிவு வளர்க்கும் பயிற்சிக் கூடங்கள் – நாடு காக்கக் குறைந்தபட்சம் வீட்டுக்கொருவர் போர்ப்பயிற்சி பெறவேண்டுமென்ற முனைப்போடு பாசறைகள் – இப்படிப் பலப்பல காரியங்களை மூன்றே ஆண்டு களில் பொன்னர் சங்கர் ஆட்சி நிறைவேற்றி வருவதைக் கண்டு பூரிப்படையாதவர்கள் யாருமே இல்லை!’ 

“உனக்கே பூரிப்பு தாங்க முடியாமல் பொங்கி வழிகிறாயே! அதிசயமான நிர்வாக அமைப்பை அங்கேதான் கண்டுவிட் டாயா? நம்மிடம் அமைச்சராக இருந்த மாயவர் அங்கே போய் திட்டங்களை வகுத்துக் கொடுக்கிறார். அவற்றைப் பொன்னர் சங்கர் நிறைவேற்றுகிறார்கள். இங்கேயும் செல்லாத்தாக் கவுண்டர் சிறப்பான திட்டங்களை நமக்கு வகுத்தளிக்கவில் லையா? அவருடைய யோசனைப்படிதானே, தலையூர் அரசில் பல துறைகள் பிரிக்கப்பட்டு, சாலைத்துறை, குடிநீர்த் துறை, வனத் துறை, பாசனத் துறை என்று பலருடைய பொறுப்பில் செயல்படுகின்றன என்பதை நீ அறியமாட்டாயா?” 

”அரசே! நான் சொல்வது கேட்டு என் மீது எவ்வாறு சினந்து சீறுவீர்களோ, எனக்குத் தெரியாது. இருந்தாலும் உங்களிடம் எல்லையற்ற விசுவாசமுள்ள ஊழியன் என்ற முறையில் சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது என் கடமை! தாங்கள் கூறியது போல பணிகளுக்குப் பல துறைகள் இருப்பது உண்மைதான். அந்தப் பல துறைப் பொறுப்பிலே உள்ள பிரதானியர் அனைவரும் நமது செல்லாத்தாக் கவுண்டர் மேற்பார்வையில் இயங்குகிறார்கள் என்பதும் உண்மைதானே?” 

“ஆமாம்! நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? சுற்றி வளைக் காமல் சுருக்கமாகச் சொல்!” 

“சாலைத் துறையைப் பொறுப்பேற்றிருப்பவர் சாலைகள் போட்டு விட்டதாகக் கணக்கெழுதி, கஜானாவிலே பணம் பெற்று போடாத சாலைக்குப் பெருந்தொகையைச் சுருட்டிக் கொள்கிறார். குடிநீர்த் துறையோ, சொல்லத் தேவையில்லை – அந்தப் பொறுப்பாளர் வீட்டுக்குள்ளே அரசாங்கப் பணம், தண்ணீராக ஓடுகிறது. குடிமக்களுக்கு ஒரு துளி நீர் கிடைப்பதில்லை! வனத்துறை நிர்வாகமோ, தலையில் உள்ள ரோமத் தைச் சிரைத்து தலையை மொழுமொழுவென்று காட்டுவது போல மலையில் உள்ள மரங்களை அழித்து மலையை மொழுமொழுவென்று காட்டுகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது…” 

“போதும் நிறுத்து!”என்று தலையூர்க்காளி, ஒற்றனைப் பார்த்து ஆத்திரத்தோடு அல்ல, அமைதியாக ஆழ்ந்த வருத்தத்தோடு சொன்னான். 

“நாடு இவ்வளவு சீர்கெட்டுப் போனதை இத்தனை நாள் என்னிடம் நீ தெரிவிக்காமல் இருந்தது மாபெரும் குற்றமில்லையா?” 

ஒற்றன் சிறது தயங்கி நின்றான். நாட்டை ஆள்பவனுக்காக அல்ல. நாட்டுக்காக, தான் ஆற்றவேண்டிய கடமையைத் தைரி யமாக ஆற்ற வேண்டியதுதான் என்ற உறுதியுடன் காளி மன்னனுக்கு பதில் அளித்தான். 

“அரசே! ஆற்று மணலைத் தோண்டினால் நீர் ஊற்றெடுக் கிறது! ஆனால் அதே ஆற்று மணல் மீது ஒரு குவளைத் தண் ணீரை ஊற்றினால் அந்த நீரை அப்படியே உறிஞ்சிக் கொண்டு உடனடியாகக் காய்ந்தும் போகிறது! ஆற்றின் ஊற்றுப் பெருக் கைப் போன்று உங்கள் உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் உண்டு என்பதை நானறிவேன்! ஆனால் அதே நேரத்தில் என்னைப் போன்றவர்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டும் கருத்துக் களைச் சொன்னால் ஆற்று மணலில் ஊற்றப்பட்ட குவ ளைத் தண்ணீராக அவைகள் உறிஞ்சப்பட்டு உலர்ந்தும் போவ தையும் நானறிவேன்!” 

“தண்ணீரை உட்கொள்வதால்தான் ஆற்று மணலைத் தோண்டும் போது ஊற்று நீரே கிடைக்கிறது என்பதை உண ராமல் பேசுகிறாய்! பரவாயில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் ஒரு சூழ்நிலைக் கைதியாகிப் பல ஆண்டு களாகின்றன! தனக்கென்று சில நலன்கள் வேண்டுமெனக் கரு தும் சுயநல எண்ணங்கொண்டவராகச் செல்லாத்தாக் கவுண் டர் இருந்தாலுங்கூட, என்னுடைய புகழும் பெருமையும் கொடி கட்டிப் பறக்க வேண்டுமென்பதிலும் – எனது ஆரோக் கியத்திலும், மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் என் பதை அடுத்த பிறவியிலும் என்னால் மறக்க முடியாது. அத னால்தான் தீமைகளேதான் விளைவுகளாக இருக்குமெனத் தெரிந்தாலுங்கூட அவர் வார்த்தையை மீறி நடக்க நான் விரும்புவதில்லை!” 

“அரசே! இனியும் தாங்கள் அப்படி நடக்க விரும்பினால், பொன்னர் சங்கர் எனும் இரண்டு இளைஞர்களை எதிர் நிற்க முடியாமல் தலையூர் ஆட்சி தலை குப்புறக் கவிழ்ந்து விடும் என்பதே எனது எச்சரிக்கை!” 

“இல்லை! நான் என்னை மாற்றிக்கொள்வதென்று முடி வெடுத்துவிட்டேன். இனி எனது வழியில் செல்லாத்தாக் கவுண்டரோ மாந்தியப்பனோ குறுக்கே நிற்க முடியாது!” 

தலையூரான் திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டு எழுந்து நின்றான். உப்பரிகைக் கூடத்திற்கு அவனைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருந்த செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்ப னும் ஒற்றனிடம் மன்னன் பேசியது முழுவதையும் கதவோரத் தில் நின்று கேட்டனர். இனியும் ஒளிந்திருப்பது சரியல்ல எனக் கருதி இருவரும் கதவோரத்திலிருந்து விடுபட்டு அப் போதுதான் வருபவர்களைப் போல் அந்தக் கூடத்திற்குள் நுழைந்தனர். 

“என்ன, சந்தர்ப்பம் தெரியாமல் வந்துவிட்டோமோ?” 

எனக் கேட்ட கவுண்டரை நோக்கி, தலையூர்க்காளி, “அப்படி யொன்றுமில்லை! நீங்களும் இருந்து பேசவேண்டிய விஷயந் தான்! நமது நாடு, நல்ல பரிபாலனமின்றிக் காடாகிக் கொண் டுள்ளது! வளநாட்டிலோ பொன்னர் சங்கர் ஆட்சி போற் றத்தக்க வகையில் நடத்தப்படுகிறது! அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளையும் பிரதானமாகக் கருதி நல்லாட்சி நடத்து கிறார்கள் அதே வேளையில் நம்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப் படைவரிசைகளையும் பலப்படுத்திக் கொண்டிருக்கி றார்கள்! நாட்டு மக்களின் வாழ்வு பற்றிக் கவலைப்படாமல், போர்! போர்! என்று அதை மட்டுமே கவனித்துக் கொண்டி ருந்தால் மக்களின் ஆதரவு அந்த ஆட்சிக்கு இருக்க முடி யாது! அதை நாம் உணரவில்லை! ஆனால் பொன்னர் – சங்கர் அதை உணர்ந்து முதலில் மக்கள் பிறகு போர் என்று நினைத்து ஆட்சி நடத்துகிறார்கள்! இனிமேல் நாம் யோசித்து என்ன செய்யப் போகிறோம்? பொன்னர் சங்கர் இன்னும் சிறிது காலத்தில் போதுமான படைபலத்தோடு நம் மீது படை யெடுத்து வந்து நம்மை வென்றிடத்தான் போகிறார்கள்!” என்றான் வேதனைக் குரலில்! உடனே செல்லாத்தாக் கவுண்டர் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு, “பயப்படத் தேவை யில்லை! நானும் என்னுடைய தவறுகளை எண்ணிப் பார்க் கிறேன். என்னுடைய அறிவுரைகள்தான் இவ்வளவு விபரீதங் களுக்கும் காரணம்! இப்போது இந்தப் போரை எப்படியும் தடுத்தாக வேண்டும் அதற்கு ஒரே ஒரு வழிதான் எனக்குத் தெரிகிறது!” என்றார் மிகவும் பரிவுடன்! 

‘என்ன வழி?’ என்று தலையூர்க்காளி பரபரப்புடன் கேட் டான். செல்லாத்தாக் கவுண்டர் தனது கட்டை விரலையும் ஆட் காட்டி விரலையும் கொண்டு நெற்றியை அழுத்தித் தடவிக் கொண்டு, அவனைப் பார்த்துச் சொன்னார். 

“மாயவரை நாம் இழந்தது மாபெருங்குற்றம்! அவரது அரிய மூளைத் திறனால்தான் வளநாடு வாழ்கிறது தலையூர் தாழ்ந்து விட்டது! அந்தப் பேருண்மையை நானும் உணர்கிறேன். பொன்னர் சங்கரின் எதிர்ப்பைத் தவிர்க்கவும் தலையூர் நாட்டை தழைக்கச் செய்யவும் மாயவர் ஒருவர் மனம் வைத் தால்தான் முடியும்! தலையூரைப் பொன்னர் சங்கர் தாக்கா மல் தடுக்கவும் – தலையூர் மன்னன் தலை தப்பச் செய்யவும் மாயவர் ஒருவரால்தான் இயலும்!” 

செல்லாத்தாக் கவுண்டரின் இந்த வார்த்தைகளை எதிர் பார்க்காத தலையூர்க்காளி வியப்புற்று அவரையே கூர்மை யாலப் பார்த்தவாறு, ‘மாயவரா? அவரை யார் அணுகுவது? எப்படி அணுகுவது?’ எனக் கேட்டான். செல்லாத்தாக் கவுண் டர் சிறு கனைப்புக் கனைத்தவராக அங்குள்ள கட்டிலில் அமர்ந்தார். ஒற்றன் உட்பட அனைவரும் அவர் என்ன சொல் லப் போகிறார் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

“தலையூரிலிருந்து ஒரு தூதனை வளநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.இருநாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் பகையைத் தவிர்த்துக் கொள்ள தலையூர் விரும்புகிறது என அந்தத் தூதன் தெரிவித்து, மேற்கொண்டு சமாதான உடன்படிக்கை பற்றிப் பேசி விவாதித்து சமரச முடிவு காண மாயவருக்கு தலையூர் வருமாறு அழைப்பு அனுப்ப வேண்டும்.” 

கவுண்டர் இதைச் சொன்னதும் தலையூர்க்காளி அவரை நோக்கி, ‘மாயவரை நாம் அழைத்தால் வருவாரா? சமரசத்துக்கு உடன்படுவாரா?’ என வினவினான். 

“சமரசமே மாயவரின் நோக்கம்! போர் புரிந்து மக்கள் மடி வதை அவர் விரும்பமாட்டார். நாம் மனந்திருந்தி விட்டோம் எனக் கேள்வியுற்றாலே அவர் மகிழ்ச்சி அடைவார்!’ 

அதற்குள் ஒற்றன் குறுக்கிட்டு, ‘உண்மையிலேயே நாம் மனம் திருந்திவிட்டோமா?’ எனக் கேட்டான். 

“போரைத் தவிர்ப்பதே நல்லது! அதற்கு மாயவருடன் விவாதிப்பதே சிறந்தது! இந்த சுமுகமான முடிவுக்கு செல்லாத் தாக் கவுண்டரே வந்திருப்பது பாராட்டத்தக்கது! கவுண்டர் அவர்களின் ஆலோசனையின்படியே முதலில் வள நாட்டுக்குத் தூதரை அனுப்புவோம்!, அதைத் தொடர்ந்து மாயவரை அழைத்துப் பேசுவோம்!” 

என்று தீர்க்கமாகச் சொன்னான் தலையூர்க்காளி! அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக செல்லாத்தாக் கவுண்டர், மாந்தி யப்பனைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் விஷமத்தன மாகக் கண் சிமிட்டிக் காட்டிப் புன்னகை புரிந்தார். 

44. வகுத்த திட்டம் வாகை கை சூடுமா? 

தலையூர்த் தூதன் மூலம் அனுப்பப்பட்ட தலையூர்க் காளி யின் நீண்ட கடிதத்தை வீரமலை உரக்கப் படித்திட அதனை ஆலோசனை மண்டபத்தில் குழுமியிருந்த பொன்னர், சங்கர், மாயவர், சின்னமலைக்கொழுந்து, வையம்பெருமான் ஆகி யோர் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தனர். மண்டபத்தின் ஓரப் பகுதியில் திரைச்சீலைக்கருகில் அருக்காணித் தங்கம், அவளது தோழிகளான கன்னிப்பெண்கள், முத்தாயி, பவளாயி ஆகி யோர் அமர்ந்து தலையூர்க் கடிதத்தில் தங்களின் முழுக் கவனத் தையும் செலுத்தியவாறு இருந்தனர். கடிதம், தலையூர்க் காளி யின் கையொப்பமிட்டு மாயவருக்கு எழுதப்பட்டிருந்தது. 

“நடைமுறையில் தங்களுக்கும் எனக்குமிடையே கருத்து வேறு பாடுகள் பல நேரங்களில் ஏற்பட்டிருந்தாலுங்கூட, தலையூர் நாடு வளமாக இருக்க வேண்டும் – தலையூர் மக்கள் நிம்மதி யாக வாழ வேண்டும் -என்ற பொதுவான நல்ல எண்ணத் திற்கு எப்போதுமே நம்மிடையே குந்தகம் வந்தது கிடையாது. வேட்டுவர்களாகிய நமது மக்களும் கொங்கு வேளாளர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து மோதிக்கொண்டு அழிவதற் காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக யாராவது கருதினால் அது மலையளவு தவறு என்பதை நான் உணர்ந்தே இந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறேன். வளநாட்டின் மீதோ, அதனை ஆளுகின்ற பொன்னர் சங்கர் மீதோ காழ்ப்பு கொண்டு பழி தீர்க்கும் வரையில் ஓய்வதில்லையெனத் தலை யூர் அரசு சபதம் செய்து கொண்டு செயல்படுவதாகத் தாங்கள் நினைக்கத் தேவையில்லை. பல்வேறு சூழல்கள் – பல்வேறு காரணங்கள் இருநாடுகளுக்கிடையே பகையை அதிகமாக வளர்த்து விட்டன என்பதை நான் மறுப்பதற்கில்லை. குன்று டையார் செல்லாத்தாக்கவுண்டர் இருவரது குடும்பப் பகை யால் ஏதேதோ நடந்து விட்டது! எனது நிலையோ எனது புர வலராக என் தந்தை பெரியகாளி மன்னரால் நியமிக்கப்பட்ட செல்லாத்தாக் கவுண்டருக்குப் பரிவு காட்டுகிற கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டதாகும் என்பதைத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். என்னிடம் பெரும் படையுண்டு என்பதை நான் சொல்லித் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆரிச் சம்பட்டிப் போரைத் தொடர்ந்தோ சங்கரமலைக் கோட் டைப் போரைத் தொடர்ந்தோ வீரப்பூர் காட்டில் எமது வீரர்கள் சங்கரால் விரட்டியடிக்கப்பட்டதையும் வீழ்த்தப்பட்ட தையும் தொடர்ந்தோ அல்லது நான் துணை நின்றே தீர வேண்டிய செல்லாத்தாக்கவுண்டரின் மணிமுடி வளநாட்டில் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்தோ – தலையூர்ப் பெரும்படையை; சாவா? வாழ்வா? என்ற கேள்விக்குப் பதில் காணும் வகை யில் பயன்படுத்தியிருக்க முடியும்! அப்படியொரு ஆத்திரம் என் நெஞ்சில் அனலாகக் கிளம்பியபோது நீங்கள்தான் என் எதிரே அரூபமாக வந்து நின்று, “அவசரப்படாதே காளி மன்னா!* என்று அமைதிப்படுத்தியது போல் தெரிந்தது. இருநாட்டுப் படைகளும் முழுமையாக மோதிக் கொள்கிற இறுதிப் போர் நிகழுமேயானால் மிகப் பெரும் இழப்பு இருதரப்பிலும் ஏற் படும். இருநாட்டு மக்கள் மட்டுமின்றி இடையேயுள்ள பல நாட்டு மக்களும் அவதிக்கு ஆளாவார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் தங்களிடம் தனித்துப் பேசி நல்ல முடிவு ஒன்றை எடுக்கலாமென்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்; இந்த என் முடிவுக்கு செல் லாத்தாக்கவுண்டர் அவர்களும் ஆர்வத்துடன் உடன் பட்டிருக் கிறார். தங்களையும் தங்களது தீர்க்கதரிசனமிக்க அறிவாற்ற லையும் நான் இழந்தது மட்டுமல்ல; தங்களை ஈன்றெடுத்த தலையூர் நாடு இழப்பதற்கும் நானே காரணமாக இருந்து விட்டேன். 

திருந்துவது பின்னர் பிறிதொரு தவறு செய்வது; இது தானே தலையூர்க்காளியின் இயல்பு என எள்ளி நகையாடி என் கோரிக்கையையே அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அதே சமயம் இந்தக் கடிதம் போர் முனையில் சந்திக்கப் பயப்படுகிற ஒரு கோழையின் கூக்குரல் என்றும் எண்ணி விடாதீர்கள்! என்னையுணர்ந்த தாங்கள் அப்படி எண்ண மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். வீண்பகையை வளர்த்துக்கொண்டு இரு நாடுகளும் தத்தமது மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய் வதால் யாருக்குப் பலன் ஏற்படப் போகிறது என்ற கவலை யின் விளைவே இந்தக் கடிதம். எனவே என் வேண்டுகோளை யேற்றுத் தாங்கள் தலையூர் மாளிகைக்கு ஒரு முறை வருகைதர கேட்டுக்கொள்கிறேன். போரைத் தவிர்த்துக்கொண்டு எதிர் பார்ப்புப் பரபரப்புகள் எதுவுமின்றி அமைதியான சூழலில் தலையூராயினும் வளநாடாயினும் மக்களின் நல்வாழ்வை மட்டும் முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துவதற்கேற்ப இனிய முடிவுகள் உருவாகிட பூர்வாங்கமாக நாமிருவரும் பேசுவதற் காகவே தங்களுக்கு இந்த அன்பழைப்பை விடுத்துள்ளேன். எனது தூதன் வாயிலாகத் தங்கள் வருகை குறித்த விபரம் தெரிவிப்பீர்களென நம்புகிறேன். 

வீரமலை முகஞ்சுளித்தவாறு கடிதத்தைப் படித்து முடித்த வுடன் “முடியவே முடியாது! பழிவாங்கப்பட வேண்டிய பகை யுடன் உறவா? தலையூர்க்காளி, செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பன் இவர்களுக்காக நான் ஓங்கிய வாள்; அந்த அரும்பணியை முடிக்கும் வரையில் உறைக்குள் புகாது! கிழித் தெறியுங்கள் தலையூரான் கடிதத்தை! HLLII….. எப்படி இதோபதேசம் செய்திருக்கிறான்! வேங்கை, ரத்தங்கசியும் நாக் குடன் வேதாந்தம் பேசுவது போல!” என ஆர்ப்பரித்தெழுந் தான் சங்கர்! 

பொன்னர், அவனை அமைதிப்படுத்தி,”பொறுமையாக இரு சங்கர்! இந்தக் கடிதத்தின் உண்மையான நோக்கம் என்ன? திடீரென்று தலையூர்க்காளிக்கு அறிவோதயம் ஏற்பட்டது ஏன்? சூதுமதி கொண்டு தீட்டப்பட்ட மடலா? அல்லது நிலையுணர்ந்து எழுதப்பட்ட நேர்மை மிக்க வாசகங்களா? இதனை நம்மை விடச் சரியாக உணர்ந்து சொல்லக்கூடியவர் மாயவர்; அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்!” என்றான். 

“நான் குறுக்கிடுவதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா!” எனக் கூறியவாறு மெல்லிய திரைச்சீலையை சிறி தளவு விலக்கிக்கொண்டு எட்டிப் பார்த்தாள் அருக்காணித் தங்கம்! 

அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அண்ணன் மார்களும் மாயவரும் மற்றவர்களும் ஆவலுடன் எதிர் நோக்கினர். 

“மாயவருக்கு வந்துள்ள கடிதம் ஒரு மாயக்கடிதம்! இதில் ஏதோ சூழ்ச்சி, நிச்சயமாக இருக்க வேண்டும்! என்னையே அபகரிக்கத் திட்டமிட்டு என் தோழி குப்பாயி உயிருக்கே உலைவைத்த தலையூரான்தானே எவளோ ஒரு வேசியை சோழநாட்டு இளவரசி போல ஜோடித்து இங்கே அனுப்பிய வன்! இன்று சமாதான விரும்பி போல நடிக்கும் அந்தச் சண்டாளன்தானே எனது அண்ணன்மார் இருவரையும் குழந்தைப் பருவத்திலேயே கொல்லத் திட்டமிட்டவன்! குலகுருவாம் ராக்கியண்ணரின் தியாகத்தை மறந்துவிடப் போகிறோமா? அவர் செய்துள்ள சபதத்தைக் குப்பையில் போட்டுவிட போகி றோமா? இன்னும் பல ஆண்டு காலம் வாழவேண்டிய நமது தாய் தந்தையரை யாரால் இழந்தோம்? தலையூர்த் தளபதியி னால் அல்லவா? இன்றைக்கு அவன் இச்சகம் பேசுகிறான் நாடு என்கிறான் – நாட்டு மக்கள் என்கிறான் அந்தச் சகுனி மனிதர் செல்லாத்தாக் கவுண்டரையும் மனிதப் பிறவியே அல்லாத மாந்தியப்பனையும் தன்னருகே வைத்துக்கொண்டு தலையூரான் பேசும் அமைதி வழியில் ஏமாந்தால் அது நம்மை ஆபத்தான வழியில் கொண்டுபோய்த் தள்ளி விடும்!” 

அருக்காணித் தங்கம் படபடவெனப் பொறிந்து தள்ளி னாள். தங்கையின் வீர உணர்வு கண்டு, பொன்னர் புன்னகை புரிந்தான். சங்கர் கண்களில் கனலும் புனலும் சேர்ந்து எழுந்தன!. 

“தங்கம்!’’ என அன்பு ததும்பத் தங்கையை அழைத்துக் கொண்டே அவளருகே சென்றான் பொன்னர்! அண்ணன் தன்னருகே வந்ததால் ஆத்திரம் தணிந்து விடவில்லை, அருக் காணிக்கு! தலையூரான் சூதாக கடிதம் எழுதியிருந்தால் அதில் போய் சிக்கிக்கொள்வது தீது என்பதுதான் அவள் முடிவான கருத்து!. 

“தங்கம்! நடந்தவைகள் எதையும் நான் மறந்துவிடவில்லை! தலையூர்க் காளி மன்னன் நேற்று வரையில் துரியோதனனாக இருந்தவன் இன்றைக்குத் திடுமெனத் தர்மராக மாறிவிட்டான் என்றும் நம்பவில்லை! ஆனால் ஒன்று; இப்போது எழுதப் பட்டுள்ள கடிதம் – தலையூர்க்காளி என்ற தனிப்பட்ட ஒருவன், மாயவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதியதல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!’ 

“ஆம் அண்ணா! அவன் மாயவருக்குத்தான் எழுதியிருக்கிறான்!” 

“உண்மைதான்! ஆனால் அதில் எழுதப்பட்டிருப்பது இரு நாடுகளுக்குரிய பிரச்சினை!” 

“அதனால்?” 

“அதனால் அமைதியாகச் சிந்திக்க வேண்டும் தங்கம்! நமது வளநாடு பொன்னர் சங்கரின் ஆட்சியைப் பெற்றுள்ளது என்றாலும் இந்த ஆட்சியின் மூளையாகவே இருப்பவர் நமது மாயவர்தானே! ஆகையால் அவருக்குத் தலையூரான் எழுதிய கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்பட வேண்டும்” 

“முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் நானும் கருதுகிறேன் அண்ணா! அந்த முக்கியத்துவம்; ஒரு மூர்க்கனை அபாயத்தி லிருந்து காப்பாற்றுவதாகவும் அவனைப் பழிவாங்கச் சபத மேற்றுள்ள நம்மை நாசத்தில் வீழ்த்துவதாகவும் இருக்குமென் பதுதான் என்கணிப்பு!” 

அருக்காணியின் கருத்தை எழுத்துக்கு எழுத்து ஆமோதிப்ப வனைப் போல சங்கர், அவர்களிருவரின் அருகே விரைந்து நடந்து; ‘தங்கம் சொல்வதுதான் சரி! பழிதீர்க்கப்படவேண் டிய பகைவனிடத்தில் என்ன பூர்வாங்கப்பேச்சு வேண்டிக் கிடக்கிறது? மாயவரை நாம் அனுப்பி வைப்பதாகவே எண் ணிப் பார்ப்போம்! என்ன நடக்கும்? அவருக்கு ஏதாவது விபரீதம் நடக்கும் அல்லது செல்லாத்தாக் கவுண்டரிடம் வளநாட்டைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று சமா தானப் பேச்சு நடக்கும்! ஆரிச்சம்பட்டி, சங்கரன்மலைக் கோட்டை, குடையூர் ஆகிய இடங்களில் தலையூர் தலையிடாது என்று உறுதியளித்து, வளநாட்டை அவர்கள் பெற்றுக் கொள் வார்கள்! இப்படியொரு கேவலமான ஒப்பந்தப் பேச்சு தேவையா?” என்று முழக்கமிட்டான். 

“நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதையே நீயும் நல்ல தங்கம் அருக்காணியும் யோசித்ததாகத் தெரியவில்லை! இரு நாடுகளுக்குமுள்ள பகையுணர்வினால் பாதிக்கப்படப் போகிற வர்கள் இருநாட்டுக் குடிமக்கள்! அவர்கள் நம்மைத் தவறாகக் கருதக்கூடாது என்பதே என் அக்கறை! சமாதானப் பேச்சுக்குத் தயார் என்று தலையூர் மன்னன் கடிதம் அனுப்பினானாம் ஆனால் அந்தப் பொன்னர் சங்கர் இருவரும் போரையே விரும்பினார்களாம்; என்ற பொல்லாத விமர்சனங்கள் நம்மைப் பற்றிப் புற்றீசல் போலப் புறப்படுவதற்கு எதற்காக நாம் வழி திறக்க வேண்டும்? மாயவரை அழைத்திருக்கிறான் அதை மதித்து மாயவர் போகட்டும் – என்னதான் தலையூர் மன்னன் சொல்கிறான் என்பதைக் கேட்டு வந்து சொல்லட்டும் – அதற் குள் எதற்காக நாம் தேவையற்ற கற்பனைகளைச் செய்து கொள்ள வேண்டும்?” 

“அழைக்கப்பட்ட மாயவருக்கு தலையூர் அரண்மனையில் ஏதாவது ஆபத்து விளைவிக்கப்பட்டால்?” 

வீரமலை பொன்னரைப் பார்த்துக் கேட்டான். “தலையூர்க் காளியை அவ்வளவு பண்பற்றவனாக நான் கருதவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தனது நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள அவன் ஒருக்காலும் விரும்பமாட்டான்! எதற்கும் இந்த சிக்கலான விஷயத்தில் மாயவர் அவர்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்றான் பொன்னர்! அருக் காணித் தங்கம் மெல்லச் சிரித்தாள்; அந்தக் கோபத்திலும்! 

”என்னம்மா சிரிக்கிறாய்?” என்றான் பொன்னர்! 

“ஒன்றுமில்லையண்ணா! தந்தை குன்றுடையாரைத்தான் எல்லோரும் அவரது வெகுளித்தனத்துக்காக மசச்சாமி என அழைப்பார்கள் அப்படியே இல்லாவிட்டாலும் அதில் பாதி யளவு என் பெரியண்ணா இருக்கிறாரே என எண்ணினேன்! சிரிப்பு வந்தது!” என்றாள் அருக்காணித் தங்கம். 

வீரமலையின் கையிலிருந்த கடிதத்தை மாயவர் வாங்கி, அதை ஒருமுறைக்கு இருமுறை தனது மனதிற்குள்ளாகவே படித்துப் பார்த்தார். அங்கு நடைபெற்ற சூடான விவாதத் தில் அவர் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார் எனினும் அவரது இதய அலைகள் ஓயவே இல்லை! கடிதம் எழுதப் பட்ட மர்மம் என்னவாக இருக்கும்? அவரால் அதற்கு விடை கண்டு பிடிக்கப்பட்டு விட்டது! தலையூரான் தனது தவறுகளை உணர்ந்திருக்கிறான் – தலையூர் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க விரும்புகிறான் 

அவனால் ஒரு பெரிய போர்க்களத்தை சந்திக்க முடிகிறதோ இல்லையோ, இப்போது அதை அவன் விரும்பவில்லையென்று தெரிகிறது! சந்தர்ப்பம் அவனைத் திருந் தச் செய்திருக்கிறது என்றாலும் அவன் செய்துள்ள பழைய பாபங்களுக்கு எளிதில் யார்தான் மன்னிப்பு வழங்கமுடியும்? ஒருவேளை அவன் நல்ல எண்ணத்துடன் செயல்பட முனைந்து அதையும் தன் சூழ்ச்சிக்குச் சாதகமாகச் செல்லாத்தாக்கவுண் டர் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் தீட்டியிருந்தால்? இப் படியெல்லாம் மாயவரின் சிந்தனையோட்டம் பெருகியது. 

பொன்னர் சங்கரால் மக்களுக்கு நல்லாட்சி தரமுடியும் என்ற உண்மை; நிலைநாட்டப்பட்டு விட்டது. கொங்குக் குல மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் அவர்கள் என்ற நற் பெயரும் வளநாட்டுப் பகுதிகள் அனைத்திலும் பரவிவிட்டது. இனி அவர்கள், தாங்கள் எடுத்த சபதத்தை நிறைவேற்றக் களம் புகுவதால் மக்கள் சலிப்படைய மாட்டார்கள். தன்னை அழைத்துள்ள தலையூர்க்காளிக்கும் தெரியாமல் செல்லாத்தாக் கவுண்டரால் ஏதாவது தனக்கு அபாயம் நேருமென்றால் அதுவே தலையூரின் மீது பொன்னர் சங்கர் படையெடுத்துப் பழி முடிக்கச் சரியான காரணமாக அமைந்துவிடும் என்றும் மாயவர் கருதினார். 

அவரது மௌனம் கலைந்தது! ஆனால் அவர் எண்ணியதை அப்படியே சொல்லவில்லை தனக்குத் தலையூரில் ஆபத்து விளையக் கூடும்; அதுவே தலையூர் மீது படையெடுக்கக் கார ணமாக அமையும் என்பதை அவர் சொன்னால் அவர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்ட பொன் னரும் சங்கரும் மற்றவர்களும் அவர் தலையூர் போவதைத் தடுத்துவிடக்கூடும். எனவே அதைச் சொல்வதை அவர் தவிர்த் துக்கொண்டு ஒரு சிறு கனைப்புடன் பேச்சைத் தொடங்கினார். 

“‘தலையூர்க்காளியை அவ்வளவு மோசமான மனிதனாக முடிவு கட்டாதீர்கள்! பெருகியுள்ள வளநாட்டுப் படைபலம் கண்டும் கேட்டும் அவன் பயந்து போயிருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் இப்போது இறங்கி வரு கிறான். என்னை அழைத்திருப்பதை ஒரு சதியென்று நான் கூறமாட்டேன். தலையூரின் பழைய அமைச்சர் என்ற மரி யாதையும் அன்பும் என்றுமே அவனுக்கு என்பால் உண்டு! அழைப்பை ஏற்று அவனைச் சந்தித்துப் பேசித்தான் பார்ப் போமே! பேசுவதின் காரணமாக எல்லாமே முடிந்து விட்டது என்று ஏன் முதலிலேயே கணிக்க வேண்டும்?” 

மாயவர் சொன்னதை ஏற்றுக் கொண்டவர்கள் போல ஆலோசனை மண்டபத்தில் இருந்தவர்கள் மௌனமாகக் காணப்பட்டனர். மாயவர், பொன்னரைப் பார்த்து – “உம்! ஆகட்டும்! தலையூருக்கு ஒப்புதல் பதில் அனுப்புக!” என்றார். உடனே பொன்னர், வீரமலையிடம் சொல்லி – தலையூர்த் தூதனை உள்ளே அழைத்து வருமாறு கூறினான். மாயவருடன் வீரமலையும் தலையூர் செல்வதென முடிவாயிற்து! 


ஒப்புதல் கடிதத்துடன் வந்த தூதனைப் பாராட்டி, அவ னுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான் தலையூர்க் காளி! மாயவர் வந்தால்; கடந்தகாலக் கசப்புகள் எல்லாம் மறைந்து மறுமலர்ச்சி தோன்றுமென அவன் மகிழ்ந்தான்! செல்லாத்தாக் கவுண்டரையும் மாந்தியப்பனையும் நோக்கி, ‘இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்!” என்று கூறிப் பூரித் துப் போனான். அவர்களிருவரும், “ஆமாம்! ஆமாம்!’ என்று தலையாட்டிக் கொண்டே மிக அற்புதமாக நடித்தபடி பற் களை நறநறவென்று கடித்துக் கொண்டனர். அவர்கள் வகுத்த திட்டம் வாகைசூடப் போகிறது என்ற களிப்பு இருவர் முகத் திலும் பிரவாகமாகப் பொங்கியது. 

45. பன்றியுடன் பண்பாளர் நடத்திய போர் 

செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் சேர்ந்தமர்ந்து சிந்தித்து வகுத்த திட்டம்தான் என்ன? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்” என்ற குறள் மொழிப்படி குறை கண்ட இடத்து இடித்துச் சொல்லி குற் றம் நிகழாதவாறு தடுத்திடுகிற சான்றோர் அமையப் பெறாத ஒரு அரசனோ அல்லது அரசோ, அழிப்பதற்கு யாரும் இல் லாமலேகூடத் தானாகவே அழிந்து விடும் என்கிறபோது. குறையேற்படுமளவுக்கு நடந்து கொண்டோமே என்று கோலேந் திய மன்னன் உணர்ந்திடும்போது அந்தக் குறையை மலைகளா கக் குவித்துக் குற்றங்கள் மலிந்த ‘கொற்றம்” என்ற நிலையை ஏற்படுத்தித் தங்கள் தன்னலத்திற்காகக் குளிர் காய்வதற்குத் திட்டம் தீட்டுகிற தீயவர்கள் எந்தக் காலத்திலும் இருப்பா ரன்றோ! குறைபாடுகளிலிருந்து மீள எண்ணுகிறவனைச் சுற் றிக் கொண்டு அவனை அதிலிருந்து எழவொட்டாமல் கனிவா கப் பேசியும் கசிந்துருகிப் பணிவிடை செய்தும் கழுத்தைப் பிடித்து அழுத்தி விடும் அந்தக் கயமைத்தனங்கொண்டோர் மனித குலத்தின் கரும்புள்ளிகளாகக் காட்சியளித்துக் கொண்டு தானேயிருக்கின்றனர்! 

அந்த மனிதர்களுக்கு வேண்டியது தங்களின் சுகபோகம் தமது சுற்றத்தார் இன்ப வாழ்வு அதற்கு ஏணியாகப் பயன் படுகின்றவர் எவரோ, அவரை ஏற்றிப் போற்றித் துதித்துத் தொழுவது போல பாசாங்கு செய்துகொண்டே – எப்போது ஏறிய அந்த ஏணியினை எட்டி உதைத்துத் தள்ளலாம் என்ற சூதுமதியைக் கூர்மையாக்கிக் கொள்கிற சாதகச் சூழ்நிலைகளே தான்! 

அத்தகைய ஒரு சாதகச் சூழ்நிலை இப்போது செல்லாத்தாக் கவுண்டருக்கும் அவர் மகன் மாந்தியப்பனுக்கும் வாய்த்துள்ள போது – அவர்களால் பேசாமல் இருக்க முடியுமா? தூசி எதுவும் படாமலே பூச்சி பொட்டு எதுவும் கடிக்காமலே தோல் பகுதியில் நமைச்சல் எடுப்பது போல-அவர்களின் நெஞ்சில் வஞ்சகம் வளைந்து நெளிந்தது! தீயோரின் இயல்பு அதுதானே! 

மாயவர் தலையூருக்கு வந்து தன்னுடன் பேசுவதற்கு ஒப்பு தல் அளித்துவிட்டார். அதனால் மகிழ்ச்சியுற்றிருந்த காளி மன்னன், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிப் பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தான். தனது ராஜப் பிர தானியரையெல்லாம் அழைத்து ஆலோசனை நடத்தினான். தலையூர் நாடும் அதன் துணைப் பகுதிகளாக விளங்கும் பதி னெட்டு வேட்டுவர் குல நாடுகளும் பெரிதும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தலையூர் நாடு, போர் வெறியை அறவே விடுத்து அமைதி உருவாகச் செயல்படுவது தான் அறிவுடைமையாகும் எனத் தனது மனசாட்சி இடித் துரைத்ததாகவும் அதனால்தான் வளநாட்டுடன் சமரசம் செய்து கொள்ள மாயவரை அழைத்திருப்பதாகவும் ராஜப் பிரதானி யிடம் விளக்கமளித்தான். மாயவர் வந்தவுடன் முதற்கட்டமாக அவருடன் காளி மன்னன் மட்டுமே தனித்து உரையாடுவ தென்றும் – அடுத்த கட்டமாக ராஜப் பிரதானியர் கூட்டத்தில் விவாதிப்பதென்றும் முடிவாகியது. நாள் முழுவதும் போர் முரசத்தின் சப்தமே கேட்டுக் கொண்டிருக்கும் தலையூர் வீதி களில் இனிமேலாவது குடிமக்களின் வாழ்வுப் பிரச்சினை யில் அக்கறை காட்டப்படுவதற்கான அறிகுறி தோன்றியுள்ளதே எனக் கூறி ராஜப் பிரதானியர் பெரும்பாலோர் களிப்படைந் தனர். காளி மன்னன், கோயில் பூசாரி செம்பகுலனை உடனே அழைத்து வரச் சொல்லி, மாயவர் வந்தவுடன் முதலில் காளி கோயில் பூஜைதான் நடைபெற வேண்டுமென்றும் ஆலயத் தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் வைப்பதோடு. அம்மனுக்கும் வளநாடு, தலையூர் நாடு ஆகிய இருநாடுகளின் நன்மை கோரி லட்சார்ச்சனை தொடங்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தான். 

அவன் மனத்திற்குள்ளேயே ஒரு கற்பனை விட்டது போலவும் போலவும் – மாயவர் வந்து அவருடன் மனம் விட்டுப் பேசியது அவரும் கடந்த காலத்து வேம்பனைய நிகழ்ச்சி களையெல்லாம் மறந்துவிட்டு இனிய முடிவுகள் உதயமாக உதவியது போலவும்! 

“என் அழைப்பு கண்டு ஒரு சிறிதும் சலனமடையாமல் தாங்கள் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி!” 

“தலையூர் மன்னனுக்கும் புதிய தெளிவு ஏற்பட்டுள்ளது கண்டு நானும் பேருவகை அடைகிறேன். படைக்கலன்கள் மூலம் மட்டுமே தீர்வுகாணமுடியும் என்ற பிரச்சினைகளை இணக்கமாகக் கலந்துரையாடுவதின் மூலமும் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்துள்ளதே வரவேற்கத் தக்க தல்லவா?” 

“தனிப்பட்ட முறையில் எனக்கும் பொன்னர் சங்கருக்கு மிடையே மூண்டுள்ள பகை பற்றி நான் கவலைப்படவுமில்லை. அதற்காக அஞ்சிடவுமில்லை. ஆனால் நான் பயப்படுவதெல் லாம், இந்தப் பகை வேட்டுவர்,வேளாளர் எனும் இரு குலத் தாருக்கிடையே ஒரு நோய் போலப் பரவிடக்கூடுமோ என் பதற்காகத்தான்! அதை எப்படியும் தவிர்க்கவேண்டுமென்பதற் காகவே தங்களைச் சந்திக்க விரும்பினேன்! 

“எனக்கும் அப்படி ஒரு பொதுவான கவலை உண்டு என்ப தால்தான் பொன்னர் சங்கருக்கு நிலைமையை எடுத்துக் கூறி, இங்கே வந்துள்ளேன். ஆனால் எனக்கொரு சந்தேகம்! இந்த சமரச ஏற்பாட்டுக்கு செல்லாத்தாக் கவுண்டர் குறுக்கே நிற்பாரல்லவா?” 

“அது தவறான சந்தேகம்! தங்களை அழைத்துப் பேசி இரு நாடுகளுக்கும் நட்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் தணியாத ஆசை கொண்டவராக இருக்கிறார்.” 

“அப்படி அவர் சொல்லக் கூடும். என்ன இருந்தாலும் வளநாட்டின் அதிபராக வாழ்ந்தவர் எத்தனை நாளைக்குத் தலையூரின் அரண்மனை விருந்தினராகத் தங்கியிருக்க, அவரது மனம் இடந்தரும்?” 

“அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் கண்டு பிடிக் கும் ஆற்றலுடையவர் மாயவர் என்பது எனக்குத் தெரியாதா? சரியாகவோ தவறாகவோ நாடாண்டவர் அவர் என்பதை நாமும் எண்ணிப்பார்த்து, அவர் மூலம் சலசலப்பு எழாமல் ஒரு சமரசத்துக்கு வருவது நலம்.” 

“இரண்டு சிங்கங்கள் இரையைப் பங்கிட்டுக் கொள்ளும் போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தொலைவில் உட்கார்ந்திருக்கும் நரிக்கும் ஒரு எலும்புத் துண்டு தேவைப் படுகிறதோ?” 

“அடடா! சரியாகச் சொன்னீர்கள்! அறிவுக் கருவூலமாயிற்றே தங்கள் மூளை! வள நாட்டுடன் தலையூர் இனி எந்த வம்புக் கும் வருவதில்லை. அதேபோலத் தலையூர் மீது பழைய பகை பாராட்டி வள நாடும் செயல்படுதல் கூடாது! வள நாட்டை செல்லாத்தாக் கவுண்டரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதற்கு ஈடாக சங்கர மலைக்கோட்டையையோ அல் லது குடையூரையோ அவருக்கு வழங்கி, அவரை வள நாட்டுக் கும் தலையூருக்கும் நண்பராக என்றென்றும் இருத்தல் வேண்டு மென நிபந்தனை விதிப்பது! இதுபோல ஒரு சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளலாமென்பதே என் கருத்து!” 

“பங்காளிக் காய்ச்சலால் ஏற்பட்டதே இத்துணைப் பெரும் பகை என்பதை நானும் அறிவேன்! குன்றுடையானுடன் அப் போதே ஒத்துப் போயிருந்தால் செல்லாத்தாக் கவுண்டர் இப் போது தலையூர் வாசலில் தவம் கிடக்கத் தேவையில்லை! தற்காலிகமாகக் கிடைத்த வெற்றிகள் அவரைத் தலைகால் தெரியாத மனிதராக மாற்றி விட்டன! பரவாயில்லை – குடை யூர் மாளிகையா? அல்லது சங்கரமலைக்கோட்டையா? இரண் டில் எதை அவருக்குத் தருவதற்குப் பொன்னர் – சங்கர் சம்ம திப்பார்கள் என்பதை அவர்களுடன் பேசித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!” 

“இந்த ஒரு சந்திப்பில் எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து விட்டன என்று நான் கருதவில்லையெனினும் – நல்ல முடிவு களுக்கு இருநாடுகளையும் அழைத்துச் செல்ல ஒரு பாதை போடப்பட்டு விட்டதாகவே நம்புகிறேன்.” 

“நம்பிக்கை வீண் போகாது! அடுத்த சந்திப்பு தலையூர் வளநாடு ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் கையொப்ப மிடும் சந்திப்பாகவே இருக்குமென எதிர்பார்க்கிறேன்.” 

“எல்லாம் மாயவரின் கையில் தானிருக்கிறது.!” 

தலையூர்க் காளி மன்னன், மாயவரைப் பரிவோடு தழுவிக் கொண்டு, அவரது கரங்களை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொள்கிறான். 

தனது கற்பனை, வெறும் கற்பனையாகவே போய்விடாமல் விரைவில் நடக்க வேண்டுமேயென்று கவலையுடன் எண்ணிய அவன், தலையூர் காளியம்மன் கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கை கூப்பித் தொழுது, “தேவீ! எல்லாம் நன்றாக நடக்கக் கிருபை செய்யம்மா!” என்று பிரார்த்தனை செய்து கொண்டான். 

செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பன் இருவரின் பிரார்த் தனை வேறாக இருந்தது! மாயவர் தலையூர்க் காளியை சந் திக்க முடியாமலே போய் விட வேண்டும்! வரும் வழியிலேயே மாயவருக்குப் பெரும் அபாயம் ஏற்பட வேண்டும்! அதன் காரணமாகப் பொன்னர் சங்கருக்குத் தலையூர்க் காளியின் மீது கடுங்கோபம் விளைய வேண்டும்! அதனால்தான் தலை யூர் மீது அவர்கள் போர் தொடுக்க வேண்டும்! அந்த யுத்தத் தில் பொன்னர் சங்கர் களத்திலேயே மாண்டுபோக வேண் டும்! வள நாட்டு ஆட்சியில் மீண்டும் செல்லாத்தாக் கவுண்டர் அமர வேண்டும். கொங்கு மக்களின் ஒரே அரசாக அவரது அரசு இருக்க வேண்டும்! இந்தப் பிரார்த்தனை நிறைவேற என்ன வழி? சதி முளைத்தாகி விட்டது – இனி அந்தத் திட் டம் செயல்படுவதற்கு முறைகளைச் சிந்தித்தாக வேண்டுமே! 

தங்களின் துரோக மூளைகளுக்கு மற்றொரு துணை மூளை யாக உதவிடக் கூடிய அம்மன் கோயில் பூசாரி செம்பகுலனை அழைத்துப் பேசினார்கள். 

பேச்சு நடத்துவதற்காக மாயவரை அழைத்து, திட்டமிட்டு அவரை வழியிலேயே தலையூர்க்காளி தீர்த்துக் கட்டிவிட்டான் என்ற செய்தி பரவினால்தான் பொன்னர் சங்கர் எரிமலை யெனப் பொங்கிக் கிளம்புவர் போர் மூளும் – போன ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்! 

தலையூர்க் காளி ஒரு காட்டுப் பன்றியை வளர்த்து வரு வதும் அது செம்பகுலன் மேற்பார்வையில் வளர்வதும் அவர் களுக்கு ஞாபகம் வந்ததால்தான் அவன் உதவி முக்கியமாகத் தேவைப்பட்டது. செம்பகுலனுக்குப் பை நிறையப் பொன் கொடுத்தால் போதும், அம்மன் மீது பாரத்தைப் போட்டு விட்டு எந்த அநியாயமும் செய்வதற்குத் தயாராக இருப்பவன்! அவனுடைய உதவியினால்தான் குழந்தைகளாக இருக்கும் போதே பொன்னர் சங்கரைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டு மென்று ‘அம்மன் அருள் வாக்கு’ என்று கதை கட்டி தலையூர்க் காளியையே ஏமாற்றியவர்கள் அல்லவா அதனால் இப்போதும் அந்த லஞ்சப் பேயைச் சுலபமாகத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து செம்பகுலனை வசப்படுத்திக்கொண்டு தங்களது சதித்திட்டத்திற்கு அவனிடமுள்ள தலையூர்க் காளியின் வளர்ப் புப் பன்றியைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்தார்கள். 

அந்தக் காட்டுப் பன்றியுடன் நூறு பன்றிகள் எப்போதும் இருக்கும். எல்லாப் பன்றிகளுக்கும் காளி மன்னனின் வளர்ப் புப் பன்றிதான் ராஜா. அந்தப் பன்றி எங்கே சென்றாலும் மற்ற நூறு பன்றிகளும் பின்தொடரும். ராஜ விசுவாசமில் லாத விவசாயி என்று யாராவது குற்றம் சாட்டப்பட்டால் உடனே அந்தப் பன்றிகளைச் செம்பகுலன் அந்த விவசாயி வளர்க்கும் பயிர்களின் மீது ஏவி விடுவான் – ராஜா பன்றி யின் தலைமையில் நூறு பன்றிகளும் அந்தப் பயிர் பச்சை களை நொடியில் அழித்து நாசம் செய்து விட்டுத் திரும்புவது வாடிக்கை! இது அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு வேடிக்கை! 

செல்லாத்தாக் கவுண்டர் செம்பகுலனைத் தயார் செய்து அவனது மேற்பார்வையில் பன்றிகளை மாயவர் வரும் வழி யில் தனது திட்டத்தை நிறைவேற்ற அனுப்பி வைத்தார். செம்பகுலன் இரவோடு இரவாக பன்றிப் படையை தலை யூருக்கும் வளநாட்டுக்குமிடையே மதுக்கரை பகுதிக்குக்கொண்டு சென்றான். 

மறுநாள் காலையில் தலையூர் வந்து சேர்வதாக இருந்த மாயவரை வரவேற்று உபசரிக்கக் காளி மன்னன் விரைவாக எழுந்து, தயாராகிக் கொண்டிருந்தான். மாயவர் வந்ததும் காளி கோயில் பூஜைக்குப் போக வேண்டுமே என்பதற்காக – எல்லாம் தயாராக இருக்கிறதா எனக் கேட்டறிவதற்கு செம்ப குலனை அழைத்து வரச் சொன்னான். அழைக்கச் சென்ற வீரன், திரும்பி வந்து அரசனின் வளர்ப்புப் பன்றியும் அத னுடன் இருந்த பன்றிகளும் இரவு கொட்டடியிலிருந்து ஓடி விட்டதாகவும் அவைகளைத் தேடி செம்பகுலன் போயிருப்ப தாகவும் செய்தி சொன்னான். வியப்புற்ற காளி மன்னனைப் பார்த்து, செல்லாத்தாக் கவுண்டர் நமது நாட்டுப் பஞ்சம், பன்றிகளுக்குக் கூடச் சரியான தீனி இல்லை. அதனால் அவைகள் கட்டுமீறிப் புறப்பட்டு எங்கேயாவது பயிர்ப்பச்சை களை நாடிச் சென்றிருக்கும் என்று சமாளித்தார். 

அவர் சொன்னபடி அந்தப் பன்றிக் கூட்டம் மதுக்கரைக் கருகில் உள்ள பயிர்களை நாசம் செய்து கொண்டுதான் இருந் தது. அமராவதி நதியின் கிழக்குக் கரைக்கும் மதுக்கரைக்கும் இடையில் உள்ள பகுதிகளில் ஓரளவு வளர்ந்திருந்த பயிர் நிலங்களில் பன்றிகள் புகுந்து வெறியாட்டம் நடத்திக் கொண் டிருக்கும் பொழுதுதான் அந்த வழியாக மாயவர் இருந்த ரத வண்டியும் வந்தது. அதை வீரமலைதான் ஓட்டிக் கொண்டு வந்தான். ரத வண்டிக்கு இருபுறமும் இரு குதிரை வீரர்கள் ஈட்டிகள் தாங்கிப் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தனர். ஒரு புறத்தில் பஞ்சம் மிரட்டிக் கொண்டிருக்கும் போது இன்னொரு புறத்தில் இருக்கின்ற விளைச்சலையும் பன்றிக் கூட்டம் பாழ்படுத்துவதைக் கண்டு மாயவர் துடித்துப் போனார்! 

“அடப் பாவமே! என்ன அநியாயம்? தலையூர் நாட்டில் இந்தப் பயிர்களைப் பாதுகாக்கக் கூட ஆள் இல்லையா?” 

மாயவர், அங்கலாய்த்தது கண்ட வீரமலை, அவரைப் பார்த்து, 

“எதிரியின் நாடுதானே… எக்கேடு கெட்டால் என்ன?” என்றான். 

“அப்படிச் சொல்லாதே வீரமலை! அரசு நமக்கு எதிரியாக இருக்கலாம் -எல்லா மக்களும் நம் மக்களே! அவர்களின் உயிர்வாழ்வுக்கான ஒளடதமல்லவா இந்தப் பயிர் பன்றிகள் அழிக்கின்றன. இதனைப் இந்தக் கொடுமையை வேடிக்கை பார்ப்பதா? உடனே அந்தப் பன்றிகளை விரட்டுங்கள்!” 

மாயவர் ஓங்கிச் சப்தம் போட்டார்! ரத வண்டியை நிறுத்தச் சொல்லி. அவரும் கீழே இறங்கி – பன்றிகளை விரட்டினார். பன்றிகள் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கவே ஆத்திரப் பட்ட மாயவர் அவைகளை நெருங்கிச் சென்றார். அப்போதும் பன்றிகள் பயந்தோடவில்லை. அந்தச் சமயம் அங்குள்ள ஒரு பெரிய புதரிலிருந்து பயங்கரமான ஒரு ஒலி கேட்டது. பூசாரி செம்பகுலனின் ஒலிதான் அது. அந்தப் பன்றிகளை வெறி கொள்ளச் செய்வதற்கு அவன் வழக்கமாக எழுப்பும் ஒலி! அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று மாயவர் ஆச்சரியத் துடன் திரும்பிப் பார்ப்பதற்குள் பன்றிக் கூட்டம் அவர்மீது ஒருசேரப் பாய்ந்துவிட்டது. காளி மன்னனின் வளர்ப்புப் பன்றி மாயவரை ஒரு முட்டு முட்டிக் கீழே தள்ளியது. சற்றும் எதிர்பாராத நிலையில் மாயவரின் வாள் கீழே விழுந்து விடவே, அவர் தனது கரங்கள் கொண்டே அந்தப் பன்றி களோடு போரிட்டார்.மாயவருக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ட வீரமலை பன்றிக் கூட்டத்தில் பாய்ந்து தனது வாளால் பல பன்றிகளின் குடலைக் கிழித்தும் – தலையைப் பிளந்தும் மாய வரைக் காப்பாற்றுவதற்காக அவர் அருகே சென்று விடத் துடித்தான். அவனைப் பின்பற்றி அவர்களுடன் வந்த இரண்டு வீரர்களும் குதிரை மீதமர்ந்தவாறே பன்றிகள் சிலவற்றின் மீது ஈட்டிகளைப் பாய்ச்சிக் கொன்றனர். ஆனால் தொடர்ந்து செம்பகுலன் புதர் மறைவில் இருந்து உசுப்பல் ஒலியை எழுப்பிக் கொண்டேயிருந்ததால் நூறு பன்றிகளையும் வீழ்த்துவது என்பது வீரமலைக்கும் அந்த வீரர்களுக்கும் இயலாத ஒன்றா கவே இருந்தது. ஐம்பதுக்கு மேற்பட்ட பன்றிகள் பயிர்களுக்கு நடுவே உயிர்களை விடுத்துப் பாறைகளோடு பாறைகளாகக் கிடந்தன என்றாலும் அந்த பயங்கரமான ராஜாப் பன்றி மாயவரை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் மாயவர் தரை யில் மல்லாந்து சாய்ந்துவிட, அந்த முரட்டுப் பன்றி அவர் மீது ஒரு சிறிய மலையைப் போல் உருண்டு கொண்டிருந்தது. அதைப்பார்த்து வெகுண்ட வீரமலை ஒரு வீரன் கையி லிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அந்த ராஜாப் பன்றியின் விலா வுக்குக் குறி பார்த்து வீசினான். ஈட்டி பாய்ந்த பன்றி அந்தப் பகுதியே நடுங்கும்படி சப்தமிட்டது என்றாலும், ரத்தம் சொட்டச் சொட்ட – ஒரே பாய்ச்சலாக மாயவர் மீது பாய்ந்து அவரது நெஞ்சில் பலங்கொண்ட மட்டும் முட்டித் தானும் கீழே விழுந்தது. 

வீரமலையும், வீரர்களும் மாயவரிடம் ஓடினர். அய்யா!” என்று கதறினர். மாயவர், அவர்களைத் தனது அருள் சிந்தும் விழிகளால் நோக்கினார்! அவரது இதழ்கள் பொன்னர் சங்கர் வாழ்க!’ என மெல்ல உச்சரித்தன! பின்னர் அந்த இதழ்களுக்குத் துணையாக அவரது இமைகளும் மூடிக்கொண்டன! 

– தொடரும்…

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *