பேராண்மை
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 692

எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ.
அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை எதிர் நோக்கியபடி விவேக் அமர்ந்திருந்தான்.
மனோ, பேசணும்னு சொல்லிட்டு அமைதியாய் இருக்க?
கேட்ட விவேக்கை ஏறிட்டாள் மனோ. பேச ஒண்ணுமில்ல, ஒரே ஒரு கேள்வி தான். என்னை கல்யாணம் பண்ண நினைக்க என்ன காரணம்?
சின்னதாய் முறுவலித்தான் விவேக். ஒரு ஆண் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண என்ன காரணமோ அது தான்.
உங்க பதில் வழக்கமான கல்யாணத்திற்கு. ஆனா நான் விதிவிலக்கு, ஏன்னா என் கையில ஆறு மாதக்குழந்தை இருக்கு, என்று கூறிய மனோவை அமைதியாய் பார்த்தான் விவேக்.
இது என்ன. எனக்கு புதுத்தகவல்னு சொல்றியா? எல்லாம் தெரிஞ்சிதானே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்கிறேன். நீ என்ன எனக்கு புது ஆளா? இதே தெருவில பல ஆண்டுகளா குடி இருக்கோம். இரு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருக்கு. உனக்கு நல்ல கணவனாகவும், உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க விரும்பறேன். ஏன் என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?
அவன் வினாவிற்கு விடை தரும்விதமாக, அவனை கூர்ந்து நோக்கி பேசத்துவங்கினாள் மனோ.
என்னை பத்தின எல்லாமும் உங்களுக்கு தெரிந்தாலும், சிலதை இப்போ ஞாபகப்படுத்தறேன். மணமுடித்து அந்த மகிழ்ச்சியை முழுதாக உணர்வதற்குள், நான் கருத்தரித்த சேதி அவர் காதுக்கு சென்று சேர்வதற்குமுன், ராணுவத்திலிருந்து அவரது உயிர் பிரிந்த சேதி தான் முந்தியது.
கண்களில் அரும்பிய நீரைத் துடைத்தபடி தொடர்ந்தாள்.
வாழ்ந்தது கொஞ்ச காலம்தான், ஆனால் அவரோட அன்பு கொஞ்ச நஞ்சம் இல்ல, என் வாழ்நாள் வரைக்குமே அது போதும். மறுமணம் என்கிற எண்ணமே துளியுமில்லை. அப்பா வந்து என்கிட்ட உங்க விருப்பத்தைச் சொன்னதும் கொஞ்சம் நான் யோசிச்சேன், அதான் உங்ககிட்ட பேசலாம்னு வரச்சொன்னேன். மறுபடியும் கேக்கறேன்னு நினைக்காதீங்க. உண்மையான காரணத்தை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்.
சற்றே மௌனித்த விவேக் பின் பேச ஆரம்பித்தான், உண்மையா சொல்லணும்னா, அதை தியாகம்னு கூட சொல்லலாம். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும், அது உனக்கு மறுவாழ்வு கொடுக்கறதால கிடைக்கும்னு நம்பறேன், இதான் காரணம், போதுமா என்று கேட்டு சிரித்தவனை ஆழமாய்ப் பார்த்தாள் மனோ.
இருங்க ஒரு நிமிஷம் நான் பேசி முடிச்சிடறேன். அதுக்கு பிறகு ஏதாவது சொல்ல வேண்டியது இருந்தா நீங்க சொல்லலாம் என்றவள் பேச்சைத் தொடர்ந்தாள்.
கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நடந்த சாலை விபத்துல எதிர்பாராவிதமா உங்க ஆண்மையை இழந்துட்டீங்க, இந்த காரணத்தை மனசுல வச்சு யார்கிடயும் சொல்லாம, கல்யாணத்தை தட்டிக்கழிச்சிட்டீங்க. உங்க நல்ல மனசு எந்தப் பெண்ணையும் ஏமாத்த விரும்பல.
மனோ பேசிக் கொண்டே போக லேசாக வியர்க்க ஆரம்பித்தான் விவேக்.
அதை கண்ணுற்ற மனோ, பதட்டப்படாதீங்க விவேக், இதை யார்கிட்டயும் சொல்லமாட்டேன் என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.
இந்த உண்மையை என்கிட்ட சொல்லியிருக்கலாம். என்னால ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த முடியாது, ஆனா அவளுக்கு நல்ல துணையா, பக்கபலமா இருக்க முடியும். அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்னு சொல்லியிருந்தீங்கன்னா அதுதான் உங்க பேராண்மை, அந்த பேராண்மைக்கு நான் தலைவணங்கியிருப்பேன், என்னோட மறுமணத்திற்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.
ஆனா உண்மையை மறைச்சி தியாகம் என்கிற சாயம் பூசிக்கிட்டீங்க. வாழ்க்கைக்கு தியாகத்தை விட உண்மை அவசியம். உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்பறேன் என்றவளை எதிர் நோக்க வெட்கி தலை குனிந்து வெளியே சென்றான் விவேக்.