பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10
காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கடிதத்தைக் கலையரசியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்: “பேர் என்ன போட்டிருக்கிறது, பார்?”

“என்னமோ பகளாபாத்துன்னு போட்டிருக்கு” என்ற ஸ்வப்னாவை முறைத்தேன். வழிந்தாள்: ”அதில் பார், என் எஜமானரே! பசிநேரம். பார்க்கிறதெல்லாம் திங்கிற பண்டமாகவே தெரியுது…”
“வழக்கு முடிஞ்சு போச்சு ஸ்வப்னா. ஆளைப் பிடிக்கத் தான் கோர்ட்டுக்குப் போகிறோம். ஆளை மடக்கிட்டா, உடனே ஹோட்டலுக்குப் போய் உனக்குத் தீனி வாங்கித் தரேன். அதுவரைக்கும் குழப்பாமலிரு. என்ன பேரு கலை?”
“என்னமோ பால்பகவானந்தான்னு போட்டிருக்கு.”
“குழந்தைச் சாமியாரா இருக்கும்.”
பாலபகவானந்தா எங்களுக்கு அதிகம் சிரமம் தராமல், கோர்ட் படிக்கட்டிலேயே நின்றிருந்தார்.இருந்தும், சந்தேகமாக நாங்கள் நெருங்கியபோது –
கலையரசியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டார். “கலை! என் மகளே!”
“கலையரசி, உன்னைத்தான் கூப்பிடறார் போ” என்று ஸ்வப்னாவைத் தள்ளிவிட்டபோது ரசித்து, சிரித்தார்.
“சிறுவனே! என் ரத்தத்தை என்னால் அடையாளம் காணமுடியும்”. பிரியமாக கலையரசியின் தலையை வருடினார்: “அம்மாவைப் பிரிந்த சோகம் தாங்கவில்லையா மகளே? மனித வாழ்க்கையில் மரணங்கள் சகஜம். எதையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்”.
“தத்துவமா? ஐயா, நடந்தது மரணமில்லே. கொலை.”
“தெரியும். சிறுவனே! இது கொலையல்ல. அவளுக்குக் கிடைத்த தண்டனை. காலதாமதமாகக் கிடைத்த தண்டனை!”
“தண்டனையானாலும் அதைக் கொடுக்க நீங்க யாரு?” -அழுத்திச் சொன்னேன்: “நகராதீங்க”.
“நகரமாட்டேன்”.
“போலீஸ் வருகிறவரை நீங்க நகரக்கூடாது.”
“என் மகளை இத்தனைநாள் பிரிந்திருந்ததே போதும். இனியொருமுறை எங்களுக்குப் பிரிவில்லை.”
“போலீஸ்வந்து பிரிக்கிறவரை உங்க ஆசை நிறைவேறும். கலையரசி! ஸ்வப்னா! ஆள் ஓடிடாம பார்த்துக்குங்க. நான் போய் ரெண்டு கான்ஸ்டபிள்களோட வரேன்” என்று கிளம்பி –
”மகனே” என்று அவர் அழைத்ததும் –
நின்று முறைத்தேன்: “நானுமா?”
‘’உலகமே என் வீடு. எல்லோரும் என் மக்கள். மகனே! போலீஸைக் கூப்பிட்டுக் கோமாளியாகாதே. இதைப் படி” என்று பழுப்புக் காகிதத்தை நீட்டினார்.
வாங்கிப் படித்து அதிர்ந்து போனேன்.
“இப்படியொரு பழி வரும், கைது வரும் என்று தெரிந்தேதான் முன்னெச்சரிக்கையாக ‘ஆண்ட்டிசிபெட்டரி பெய்ல்’ வாங்கி இருக்கிறேன். என்னைக் கைது செய்ய முடியாது. வேணுமானால், கண்காணிப்பில் இருக்கச் சொல்லலாம்.”
“இது..இது எப்படி? கொலைக் குற்றச்சாட்டுக்கு இப்படிப்பட்ட பெயில் எல்லாம் தரமாட்டாங்களே?”
“இவ்வளவு நேரம் கோர்ட்டில் என்னதான் பண்ணினேன் என்கிறாய். நீதிபதியின் வீட்டிலேயே தங்கி இருக்கப் போகிறேன் – அவர் நேரடிக் கண்காணிப்பில். எந்த நிமிஷமும் அவர் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்”.
“நீங்க உங்க மனைவிக்கு எழுதின கடிதம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. தவிர, காலையில நீங்கள் ஸ்ரீதுளசியைச் சந்திச்சதுக்கும் சாட்சியமிருக்கு.”
“மறுக்க முடியாத உண்மை. அவளைச் சந்திக்கப் போவதாக எழுதினேன். போனேன். சந்தித்தேன். சண்டை போட்டேன். அப்புறம்-”
“கொலை.”
“அதை மட்டும் செய்யவில்லை. அமைதியாகத் திரும்பி விட்டேன். ஆனால், தெய்வம் அவளைத் தண்டித்துவிட்டது. சிறுவனே!”
“எனக்குக் கோபம் வரும்; அப்படிக் கூப்பிடாதீங்க” என்ற நான்-
அவர், “மகனே” என்று ஆரம்பித்ததும்,
“வேண்டாம். அப்படியே, சிறுவனேன்னே கூப்பிடுங்க. பரவாயில்லே” என்றேன் அவசரமாக.
“சிறுவனே. என்மீது சந்தேகத்தால் என் பின்னால் சுற்றுவதை விடுத்து, உண்மைக் கொலைகாரனைத் தேடு. நான் நீதிபதி வீட்டிலேயே பத்திரமாக இருப்பேன். என் மகளுக்கு உதவியாக கொலைகாரனைக் கண்டுபிடி கண்ணே! உனக்கு வெற்றி கிடைக்க என் பூரண ஆசிகள்.”
கண்ணில் சோர்வு காட்டினேன்.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.