பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9
“அடுத்தது எங்கே?” என்ற கலையரசியின் கேள்விக்கு என்னையும் முந்திக் கொண்டு பதில் சொன்னாள் ஸ்வப்னா:

“ஹோட்டலுக்கு. மணி மூன்றாகிறது. இன்னமும் சாப்பிடல்லியே.”
“ஷட் அப். கொலைகாரன் கையில காப்பு ஏறினால்தான் நமக்கு கைநனைக்க நேரம். அதுவரை பேசாதே”. – அதட்டிவிட்டுச் சொன்னேன்: “உன் வக்கீல் வீட்டுக்குப் போகலாம்”.
“புரசைவாக்கம் போங்க” என்றாள்: “சாப்பிட வீட்டுக்கு வந்தால் மூணு மணிக்குத்தான் கோர்ட்டுக்குப் போவார்.”
“ஹ்ஹூம்” என்றாள் ஸ்வப்னா பெருமூச்சாக.
வக்கீல் உள்ளே சாப்பாட்டில் இருந்தார்.
நாங்கள் உள்ளே போனபோது ஹாலில் சோபா ஒன்றில் கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்தாள்.
கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, ”மவளே” என்று ஓடிவந்து கலையரசியைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கவே, கொஞ்சம் திணறித்தான் போனாள் கலை. “யார் இவங்க?” என்று நான் கேட்க, உதட்டைப் பிதுக்கினாள் கலை.
“அதுக்கெப்படி தெரியும்? நானே முதல் தடவையா பார்க்கறேனே! ஆத்தாக்காரி செய்த தப்புக்கு மவ என்ன செய்வா? என் கண்ணாத்தா. மூக்கும் முழியும் அப்படியே எம்புருசனைக் கொண்டிருக்கே.”
“நீங்க யாருன்னு புரியல்லே.”
“உங்க பெரியம்மா.”
“பெரியம்மா ஸாரி, எங்கம்மாவுக்குக் கூடப்பிறந்தவங்க யாருமில்லே.”
“உங்கப்பாவோட முதல் சம்சாரம்மா. என் பேரு தில்லைநாயகி. புள்ளை பெறாத பாவியாயிட்டேன். அதான் உங்கம்மா கிட்ட அவரைப் பறிகொடுத்தேன்.”
“அம்மா…” – அதட்டலாகச் சொன்னாள்: “செத்தவங்களைப்பற்றி குற்றம் சொல்லாதீங்க. அது நல்லாயில்லே.”
“சாகலே! உங்கப்பாரு சாகலே. உசிரோடதான் இருக்காங்க. அந்த விமானத்திலேயே அவுக போகலியாம். சாமியாரா ஊர் ஊரா சுத்தறாகளாம். கடிதாசு போட்டிருக்காக.”
“நான் அவரைப்பத்திச் சொல்லல்லே. செத்துப்போன எங்கம்மாவைப்பற்றிக் குற்றம் சொல்லாதீங்கன்னுதான் சொன்னேன்”.
“ஆங்! உங்க ஆத்தா செத்துருச்சா? எப்படி? எப்போ?”
“இன்னைக்குத்தான். அதுவும், தானாக சாகல்லே. கொலை பண்ணியிருக்காங்க.”
”கொலை!” – விழி பிதுங்க எழுந்து நின்று, “என் ராசாவே! அவசரப்பட்டு நிசமாவே கொலை பண்ணீட்டீங்களா?” என்று அந்தம்மாள் போட்ட கூச்சலுக்கு வக்கீல்கூட கையலம்ப மறந்த நிலையில் ஓடிவந்து விட்டார்.
”என்னம்மா? ஏன் கூச்சல் போடறீங்க? என்ன ஆச்சு?”
“ஐயோ. என் தொரை கடிதாசுல சொன்னமாதிரியே கொலை பண்ணிட்டாகளாமே.”
“இருங்க, இருங்க. என்ன கடிதாசு? எந்த ராசா?” – கேட்டேன்: “பதறாம சொல்லுங்க. என்ன நடந்தது?”
“சொல்றேனுங்க தம்பி. என் ராசாவுக்கு ஒண்ணுமாகாம காப்பாத்துங்கய்யா!”
“அதை அப்புறமா பார்த்துக்கலாம். விஷயத்தைச் சொல்லுங்கம்மா.”
“அது பெரிய கதை. பதினாறு வருசத்துக்கு முந்தைய கதை…” என்று ஆரம்பித்தாள்.
சொல்லி முடிக்கும்போது கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.
”என் ராசா உயிரோட இருக்கிறது தெரியாம, பொட்டு வைக்காம பூவைச் சூடாம விதவையா இருந்தேனே. என் ராசா.”
‘அந்த விமான விபத்தில் நான் இல்லை. போகவே இல்லை. உயிரோட இருக்கிறது தெரிந்தால் நீயோ அந்த ஸ்ரீதுளசியோ என்னைத் தேடுவீங்கன்னுதான் சாமியாராகி, ஊர் ஊராக சுத்திக் கிட்டிருந்தேன். ஆனாலும், அவள் செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியல்லே. தவிர, என் மகள் இப்ப வயசுக்கு வந்திருப்பா. அவளை அந்த ராட்ச்சியோட இருக்க விடக்கூடாது. அது ஆபத்து. அதனால் அவளைத் தேடிப்போய் மகளைக் கேட்கப் போறேன். அனுப்பினால் சரி. இல்லையானா, கொலைகூட செய்யத் தயங்க மாட்டேன்.’
மனதில் வந்தது! “சமையல்காரம்மாள் சொன்ன ஸ்டேட்மெண்ட் ஞாபகமிருக்கா கலை? காலையில் யாரோ ஒரு சாமியார் வந்து சண்டை போட்டதாகச் சொன்னாங்களே?”
“என்ன சொல்றீங்க?”
‘‘வழக்கு முடிஞ்சு போச்சுன்னு சொன்னேன். கிளம்பு.”
“என் ராசாவை ஒண்ணும் பண்ணீடாதீங்க. வக்கீலய்யா நீங்க எழுதினமாதிரி என் சொத்து பூராவையும் இந்தப் பெண்ணுக்கே கொடுத்துடறேன். என் ராசாவை மட்டும் காட்டிக் கொடுத்துடாதீங்கய்யா” என்று புலம்பும் அந்தம்மாளை ஈர்த்தது வாசலில் குரல்.
“அம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க?” – வீரா உள்ளே வந்தான்: “நான் உங்களைத் தேடிட்டு ஊர் பூராவுமில்லே துளாவறேன்!”
”நீ எப்படிய்யா இங்கே வந்தே?”
“வக்கீலய்யாவைத் தேடிட்டு கோர்ட்டுக்குப் போனேன். அங்கேதான் நீங்க அவுகளோட இங்கே வந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடியாறேன். அம்மா..” – உற்சாகத்துக்கு மாறினான்: ”உங்களுக்குச் சேதி தெரியுமுங்களா..?”
“அந்த நடிகை செத்துப்போனதா? இப்பதான் கேள்விவ்பட்டேன்.”
“ஐயோ, அதில்லேம்மா. நம்ம ஐயா சாகல்லே; உசிரோட தான் இருக்காங்க. நான் பார்த்தேன்”.
அந்த அம்மாளுக்கும் முன்பாக, “எங்கே?” என்றேன் கத்தலாக.
“கோர்ட்லே; அவுகதான் நீங்க வக்கீலய்யாவோட வீட்டுக்குப் போனதாகச் சொல்லி இங்கே அம்ச்சாங்க.”
“கோர்ட்டிலேயா?” என்று நாங்கள் அவசரமாகக் கிளம்பும்போது –
“அடப்பாவி! மிரட்டிட்டு வாடான்னா கொலையே பண்ணிட்டு வந்து நிக்கறியேடா, சண்டாளா” என்று அம்மாள் திட்ட-
“ஐயோ. இல்லீங்கம்மா. நீங்க சொன்னதைவச்சு அங்கே போனது என்னவோ நிசம். ஆனா, நான் போறதுக்கு முந்தியே யாரோ தீர்த்துக் கட்டிட்டுத் தொங்க விட்டிருந்தாங்க. நம்புங்கம்மா.”
“இதென்ன புதுக்கதை?” – விழித்தேன்: “என்னம்மா இது?”
”செத்துப் போனவ, இந்த வக்கீலய்யா மூலமா வம்பு – வழக்குன்னு என்னை வம்புக்கிழுத்தா. ஏதோ ஆத்திரத்திலே இவனை அனுப்பி, ‘மிரட்டிட்டு வாடா’ன்னா இப்படி கொலையே செய்துட்டு வந்து நிற்பான்னு நான் நினைக்கல்லே. இவன்தான் கொலைகாரன். இவனை போலீஸ்ல பிடிச்சுக் குடுங்க. என் ராசாவை விட்டுடுங்கய்யா” என்று அம்மாள் கெஞ்ச-
“ஐயோ நானில்லீங்க” என்று அந்த வீரா அலற-
அவர்களை வக்கீலின் பொறுப்பில் விட்டுவிட்டு அவசரமாகக் கலையரசியை இழுத்துக்கொண்டு காருக்கு ஓடினேன்.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.