பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8
கார் நகர்ந்ததும் கலை சொன்னாள்: “அம்மாவை எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருப்பாங்க, மிஸ்டர் ராஜா?”

”பக்கத்திலிருக்கிற கவர்மெண்ட் ஆஸ்பிடல் ஜி.எச். அங்கேதான் போயிருப்பாங்க. ஏம்மா?”
‘‘எனக்கு கடைசியா என் அம்மா முகத்தை முழுசா பார்த்து மன்னிப்புக் கேட்கணும். நாளைக்கு நிறைய சிதைச்சிருப்பாங்க, இல்லே?”
“சரி. இப்பவே போய் பார்த்துடலாம். வா. பிணக் கிடங்குலதான் வச்சிருப்பாங்க.”
“பிணக்கிடங்கு? யூ மீன், மார்ச்சுவரிக்கா போகிறோம்?” என்று பதறும் ஸ்வப்னாவை முறைத்தேன்:
“இல்லே, வரேன்” என்றாள் துணிச்சலாக: “என்னைவிட சின்னப் பெண். அவளே தைரியமா போகிறச்சே எனக்கென்ன பயம்?”
நாங்கள் உள்ளே போனபோது; மேஜைமீது படுக்க வைத்திருந்த ஏதோ ஒரு பிணத்தின் மண்டையோட்டைச் சுத்தியல் – உளியுடன் திறக்க முயன்று கொண்டிருந்தார் ஒரு டாக்டர். ‘இதெல்லாம் எனக்கு சகஜம்’ என்ற சேதி தங்கிய அலட்சியப் பார்வையுடன், நர்ஸ் புகட்டி விட்ட காப்பியை அருவருப்பில்லாமல் மிக சாதாரணமாகக் குடித்தார்.
நர்ஸ் துவாலையால் அவர் உதட்டை ஒற்றி விட்டதும்-
திரும்பி எங்களைப் பார்த்தார். “எஸ்.”
“நடிகை ஸ்ரீதுளசியின் சவம் பரிசோதனைக்கு…”
“இங்கேதான் வந்திருக்கு.”
“இவள் அவர்களின் மகள்.”
“ஸாரி பேபி! என் அனுதாபங்களை ஏற்றுக் கொள்.” கேட்டார்: “பார்க்கணுமா?”
தலையசைத்தாள்.
“பூவர் கேர்ள். நர்ஸ் கூட்டிட்டுப்போய் காட்டிட்டு வா.” எச்சரித்தார். ”நாக்கு கொஞ்சம் வெளியே நீட்டிட்டிருக்கும். பயந்துடாதே” என்ற அவர் எச்சரிக்கைக்கு,
ஸ்வப்னா, “நான் காரில் இருக்கேன் பாஸ்” என்று காணாமல் போய் விட்டாள்.
நர்ஸுடன் போய் பெட்டியை உருவித் திறந்து அம்மாவின் முகம் காட்டவே. சற்றே குனிந்து பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தவள்-நான்-
“போகலாமா கலை?” என்றதும், எந்தப் பாதிப்பும் இல்லாதவள் போல, மிகவும் எளிதாக நடந்து வந்து விட்டாள்.
“எப்போது கையெழுத்துப் போட்டு வாங்க வர வேண்டும்?” என்று நான் கேட்க முயன்றதைக்கூடத் தடுத்துவிட்டு நடந்தாள் – அலட்சியமாக.
ஆஸ்பத்திரி வராண்டாவில் நடக்கும்போதே கேட்டாள்: “எதிலிருந்து ஆரம்பம்? எங்கேயிருந்து ஆரம்பிக்கப் போறீங்க?” என்று கேட்டவள்.
“முதலில் உன் அம்மாவின் எதிரிகளைப் பற்றி ஆராயணும். உனக்கு ஏதாவது தெரியுமா?”
“அம்மாவுக்கு எதிரிகள் அதிகம். மகளில் ஆரம்பிச்சு மகான்கள் வரை பல பேருண்டு. யாரைன்னு தேடிப் பிடிக்கப் போறீங்க?”
“மகள்லேர்ந்தே ஆரம்பிப்போமே…”
பின்னாலிருந்து தோளைத் தொட்டாள்: “இன்னுமா என்னை சந்தேகப்படறீங்க?”
“உன்னை இல்லே. உன் காதலனை. அவனுக்கு உன் அம்மாவின் பேரில் ஆத்திரம் இருக்கலாமில்லையா?”
“அவனை விசாரிக்கணுமா?”
‘உம்’ என்றவன், ஸ்வப்னாவைத் தேடினேன்: ”ஸ்வப்னா?”
“இ..இங்கேதான் இருக்கேன்” என்று பின் சீட்டின் கீழேயிருந்து எழுந்தாள். “பா ஆஆஆஸ்…”
”சே! பயந்தாங்கொள்ளி. பிணத்தைப் பார்க்கப் பயப்படுகிற நீயெல்லாம் எதுக்கு இந்த வேலைக்கு வரே? வீட்டுக்குப் போய் அம்மாவை நகர்த்திட்டு ரசம் வைச்சிட்டுரு. போ.”
“இல்லே. நான் பிணத்துக்குப் பயப்படல்லே. உங்க கிட்டே சொல்லிட்டு காருக்கு ஓடியே வந்தேனா, அப்ப ஒரு ஆள் வந்து கத்தியைக் காட்டி மிரட்டினான். பாஸ்… நடுங்கியே போயிட்டேன்.”
“என்ன கேட்டான்?”
“உடனடியா உன் பாஸை இந்த கேஸை விட்டுட்டு வேற வேலை பார்க்கச் சொல்லு. இல்லே, நாளைக்கு போஸ்ட்மார்ட்டத்துக்கு உங்க பாஸும் அந்தப் பெண்ணும் நீயும் வருவீங்கன்னான்.”
“யாரவன்?”
“அவன் ஓடிப்போய் அரை மணியாச்சு.”
“எப்படியிருந்தான்?”
“முரட்டுத்தனமா- உசரமா இருந்தான். ‘வீரய்யா வாடா’ன்னு யாரோ பொம்பளை கூப்பிட்டதும் ஓடியே போயிட்டான்”.
“வீரய்யா? அப்படி யாரவது உனக்குத் தெரியுமா கலை?” – சொன்னாள்: “ஒரு வேளை எங்க வக்கீலுக்குத் தெரிஞ்சிருக்கலாம்.”
“விசாரிப்போம். முதல்லே உன் காதலன் வீட்டுக்கு வழி காட்டு.”
தெருமுனையிலேயே என் தோளைத் தொட்டு காரை நிறுத்தி விட்டாள்.
“என்ன?”
பின்னோக்கி கண்ணாடிவழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், காரைக் கடந்து போகும் ஸ்கூட்டரைப் பார்த்து வியந்தாள்.
“என்ன?”
“இரண்டு அதிசயங்கள். ஒன்று, ஸ்கூட்டர் வாங்குமளவு எதுவுமில்லாத ஆள் ஆச்சே!”
“இரண்டாவது?”
“ஸ்கூட்டரில் தொற்றிக்கொண்டு உற்சாகமாகப்போகும் பெண்! ஆண்மையிழந்த ஒருத்தனுக்கு இவ்வளவு அந்தரங்க சிநேகிதியின் தேவை?”
“வா, பார்க்கலாம்.”
நாங்கள் அந்த வீட்டை அடைவதற்குள் கதவு அடைக்கப்பட்டிருந்தது, அவசரமாக.
கிசுகிசுப்பான பேச்சும், சுவாரஸ்யமான வீறிடலுமாக அட்டகாசமான சூழ்நிலையை உணர முடிந்தது.
கதவைத் தட்டியதும், ஓசைகள் சட்டென்று அடங்கின. “யாரது?” என்றது பெண் குரல்.
வாயைத் திறந்தகலையை அடக்கிவிட்டு, “மிஸஸ் ஸ்ரீதுளசி பணம் அனுப்பியிருக்காங்க. பரணி பாண்டியன் இல்லீங்களா?”
சட்டென்று கதவைத் தள்ளித் திறந்தவன், கலையரசியைக் கண்டதும் லுங்கி நழுவுவதுகூடத் தெரியாத அளவு பயந்துபோனான். என் பார்வையை உணர்ந்ததும்தான் சட்டென்று குனிந்து லுங்கியை வாரி இடுப்பில் கட்டிக் கொண்டான்.
”கலை! நீயா?”
“ரோக். யூ ஆர் ரோக்” என்று சீற ஆரம்பித்த கலையை அடக்கினேன்.
“மிஸ்டர் இவங்கம்மாவை உனக்குத் தெரியுமா? நடிகை ஸ்ரீதுளசி.”
“தெரியும். அவங்களை மறக்க முடியுமா? மகள் காதலிச்ச குற்றத்துக்காக என்னை ஆளை விட்டு அடிச்சவங்கதானே! அதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். என் ஆண்மை!”
“அந்த ஆத்திரத்திலேதான் அவங்களைக் கொலை செய்துட்டியா?”
என் வார்த்தையின் அர்த்தம் ஜீரணிப்பதற்குக் கொஞ்ச நேரமாயிற்று அவனுக்கு.
“கொலை? என்ன சொல்றீங்க?”
“மிஸ்டர் பரணி பாண்டியன். உங்க விளையாடற ஆசையை மைதானத்தோட நிறுத்திக்கிட்டால் போறும். எதுக்காக எங்ககிட்டேயும் விளையாட ஆசைப்படறீங்க?” – அதட்டலாகச் சொன்னேன்: ”ஸ்ரீதுளசி கொலை செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியாது?”
“தெரியாது. நிஜமாவே தெரியாது.”
“பொய், கொலை செய்தவனுக்கே கொலையைப் பற்றித் தெரியாது என்கிறது நம்ப முடியாத விஷயம்.”
“நோ.” – அலறி விட்டான்: “நோ.'”
“எஸ். மகளோட பழக விட மறுத்தாங்க. ஆளை வைச்சு அடிச்சு ஆண்மையைப் பறிச்சிட்டாங்க. இந்த ஆத்திரத்தை எல்லாம் சேர்த்துவைச்சு அவங்களைக் கொலை செய்து பழி தீர்த்துக்கிட்டீங்கன்னு குற்றம் சாட்டறேன்.”
“நீங்க யாரு சார் இதையெல்லாம் கேட்க?”
“என்னோட பிரைவேட் ஐ. துப்பறியும் நிபுணர். போலீஸுக்கு உதவியாக அம்மாவின் மரணத்தில இருக்கிற சிக்கலைக் கண்டு பிடிக்க போறவன்”
“மிஸ்டர் ராஜா. உங்க குற்றச்சாட்டு பொருந்துது. கால் போலீஸ்.”
”நோ. உங்க குற்றச்சாட்டு தப்பு. அவங்களை நான் கொல்லுகிறதா? ஹைலி இடியாடிக். அதனால் எனக்கு நஷ்டமே தவிர, லாபமில்லே.”
“என்ன சொல்றே?”
“ஆளை வச்சு அடிச்சது, ஆஸ்பத்திரியில் நான் படுத்தது, ஆண்மை பறிபோனதாக உன்கிட்டே சொன்னது எல்லாமே பொய். உங்கம்மா சொல்லச் சொன்ன பொய். அந்தப் பொய்க்கு விலை கொடுத்தாங்க. இந்த ஸ்கூட்டர் மாசமானால் ஆயிரம் ரூபாய் சன்மானம். இந்த நிலையிலே அவங்களை நான் கொலை செய்ய நினைச்சால் இந்த உலகத்திலேயே முதல் முட்டாள் நானாகத்தான் இருப்பேன்.”
அழுகையும் ஆத்திரமுமாகப் பார்த்தாள் கலை.
“சே! என்ன மனிதன் நீ? கேவலம், சாக்கடைப் புழு. பணத்துக்காக எனக்கே துரோகம் செய்து – ஐ ஹேட் யூ. கொஞ்ச நாளேயானாலும் உன் மார்பிலே காதலியாகப் புரண்டதுக்காக நான் வெட்கப்படறேன். புழுவே!”
“கலையரசி”
“நரகத்துக்குப் போ” என்றவள், என்னை இழுத்துக் கொண்டு நடந்தாள். “இந்த சாக்கடையில் நிற்காதீங்க. வாங்க போயிடலாம்.”
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.