பேசும் பதினாறு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2025
பார்வையிட்டோர்: 2,391 
 
 

(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

ஒரு சின்ன இடைச்செருகல். 

நடிகை தற்கொலை! 

செய்தி பரவப் பரவ பத்திரிகை நிருபர்களின் கும்பல் போலீசையும் முந்திக் கொண்டு வந்துவிட்டது. 

வாசலில் கூடிவிட்ட ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப் மடுத்துவது சிரமமாக இருந்தது. 

பெரிய பெரிய கனமான அச்சடிக்கும் யந்திரங்கள் – அவசரமாக நின்றன. 

அவசரமாக முதல் பக்கத்து எட்டு ‘காலம்’ செய்தி நீக்கப்பட்டு, புதிதாகச் செய்தி கம்போஸிங் செய்ய அனுப்பப்பட்டது. விவாதிக்கப்பட்டது. 

அந்த ஸ்ரீதுளசியின் பழைய சினிமா ஸ்டில் ஒன்று அவசரமாகத் தேடி எடுக்கப்பட்டது. 

போஸ்டர்களில், தலைப்புச் செய்திகளில் தலையாயசெய்தி மாற்றப்பட்டது. 

பிரபல சினிமா நடிகை மரணம். 

விசாரணைக்கு வந்த ஏ.ஸி. இளமையாக இருந்தார். மெரீட்டில் பதவிக்கு வந்தவர் போலத் தெரிந்தார். ஆனால் – 

பேச்சில் பழக்கமான அனுபவக் கண்டிப்பு தெரிந்தது. ஸ்டைலாக என்னைப் பார்த்தார். 

சந்தேகமாகப் பார்த்தார்: “போன் செய்தது?”

“நான்தான்..” 

”இந்த நேரத்தில் இங்கே எப்படி வந்தீர்கள்?” 

“அவங்கதான் போன் செய்து அவசரமாக வரச்சொல்லிச் சொன்னாங்க.வந்தேன்.பார்த்தேன். ஆனா, என்னைப் பார்க்கக் கூடிய நிலையில அவங்க இல்லே. அதுதான் என் வருத்தம்.” 

ஃபிளாஷ்கள் மின்ன மின்னப் படங்கள் எடுக்கப்பட்டதும் – மின்விசிறி நிறுத்தப்பட்டது. 

“வீட்டிலிருந்தது யார்?” 

“சமையல்காரம்மாள் மட்டும்தான்.”

விசாரணையின்போது அம்மாள் அழுகையுடன் சொன்னாள்:  

“வழக்கத்துக்கு மாறாக, பனிரெண்டரை மணிக்கே சாப்பாடு போடச் சொல்லிச் சாப்பிட்டாங்க. ‘பொண்ணு வருகிறது சந்தேகம். காத்திருக்காம, நீ சாப்பிட்டுட்டு ஓய்வெடு’ன்னாங்க. நானும் சாப்பிட்டுட்டுத் தூங்கப் போயிட்டேன்.” 

“யாராவது வந்தாங்களா?” 

“எனக்குத் தெரியாதுங்க. பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேர் வருவாங்க, போவாங்க.” 

“குறிப்பா, யாரையும் நினைப்பில்லையா?” 

“தாடி வச்ச சாமியார் ஒருத்தர் வந்தார். கொஞ்சம் ஓவராகவே பேசினார். நடுவே ‘கலையரசி’ன்னுகூட கேட்டுருக்கார். எஜமானி கோபமா பேசினது கண்ணாடி வழியா தெரிஞ்சுது. அப்புறம், சாமியார் கோபமா எழுந்து போயிட்டார்.” 

“வேற யாரும் வந்திருக்க வாய்ப்பு உண்டா?” 

“இல்லீங்க. அவர் போனதும் நான்தான் வெளிக்கதவைச் சாத்திப் பூட்டிட்டுப்போய் தூங்கினேன். அப்புறம் இவங்க ‘பெல்’லை அடிச்சப்பதான் எழுந்து வந்து கதவைத் திறந்தேன்.பூட்டின வீட்டுக்குள்ளே கதவு திறக்காம அதெப்படி உள்ளேவர முடியுமாம்?” 

“கூர்க்காவைக் கூப்பிடுங்க.” 

“இல்லீங்க. போன மாசம்தான் கணக்கைத் தீர்த்து அம்ச்சிட்டாங்க.” 

“நீங்க போங்க. அப்புறமா பேசிக்கறேன்” என்ற இளம் ஏ.ஸி. என்னிடம் வந்தார்.”நீங்க சொல்லுங்க. உங்களை எதுக்காகக் கூப்பிட்டாங்க?” 

“முதல்லே அவங்க போன் பண்ணினப்ப நான் இல்லே. வந்து செய்தி தெரிஞ்சு நான் போன் செய்தப்ப, ஏதோ கட்டை ஆண்குரல் எடுத்தது. ராங் நம்பர்னு வைச்சுட்டேன். அப்புறம் இவங்கதான் போன் செய்து பேசினாங்க.” 

“நீங்க பேசினது ராங் நம்பராகவே இருக்கலாமில்லையா?” 

“இருக்க முடியாது. ‘கொஞ்சம் முன்னால் எனக்கு போன் பண்ணினது நீங்களா? கீழே அட்டெண்ட் பண்ணினாங்க யாரோ’ன்னு சொன்னாங்க. 

“ஐ.ஸீ. அந்த ஆள் பெயரைச் சொன்னாங்களா?” 

“சொல்ல முயற்சி செய்தாங்க. முத்தி – முத்தின்னு சொல்றதுக்குள்ளே கனெக்ஷன் விட்டுப் போச்சு. அப்புறம் ரெண்டொரு தரம் முயற்சி செய்து பார்த்தப்ப எங்கேஜ்டஉே இருந்தது. அவங்க குரலை வைச்சு ஏதோ விபரீதமா உணர்ந்த் உடனே புறப்பட்டு வந்துட்டேன்.” 

“ஆம்புலன்ஸ் வந்தாச்சு சார்” என்றார்கள் யாரோ. 

”ஏ.ஸி. சார். இவங்களை இந்தப் பரபரப்பு எல்லைக்கு அப்பால் கூட்டிட்டு போக அனுமதியுண்டா?” 

“வெளியே?” 

“இல்லே. தோட்டத்துப் பிரம்பு நாற்காலியில் இருக்கோம்.”  

அனுமதித்ததும் வெளியே கூட்டி வந்து கேட்டேன்: “கலை, உண்மையைச்சொல்லு உன்னால முடியாததை ஆளை வைச்சுச் செய்துட்டியா?” 

கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தாள்: “என்ன சொல்றீங்க?” 

“உன் அம்மாவைக் கொல்லத் துடிச்சுகிட்டிருந்தவள் நீ. உன்னால் முடியாததை ஆளை வைச்சுச் சாதிச்சிட்டியான்னு கேட்டேன்.” 

உலர்ந்த சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள். மல்லாந்து சாய்ந்து கொண்டாள். 

”அம்மாவை நான் வெறுக்கறேன். மறுக்கல்லே. ஆனா, நிஜமாகவே கொலை செய்கிற அளவுக்குத் தீவிரமாக இல்லே. நான் உங்ககிட்டே சொன்னதன் நோக்கமே வேற.” 

“என்ன நோக்கம்?” 

”அம்மாவை எச்சரிக்கிற நோக்கத்தில் நீங்க சொல்லுவீங்க. என் வெறுப்பு தெரிஞ்சா அவங்களுக்கும் புத்தி வரும்னு நினைச்சுத்தானே தவிர, வேறே நோக்கமில்லே.” 

பார்த்தேன். 

“நம்புங்க மிஸ்டர் ராஜா.நான் எங்கம்மாவை வெறுத்தேனே தவிர, அழிக்க நினைக்கல்லே. சத்தியமா அந்த நோக்கமே எனக்கில்லே. நம்புங்க, ப்ளீஸ்” – கண்ணீர் வழியச் சொன்னாள்: ”எனக்கே தெரியும் ராஜா, அம்மா போயிட்டால் அப்புறம் நான் அனாதையாயிடுவேன். அப்புறம் தண்டனை அவங்களைவிட எனக்குத் தான் கடுமையாக இருக்கும்.” 

என் தோளில் முகம் புதைத்துக் கதறி அழும்போது தான்- 

ஆம்புலன்ஸ் போர்டிகோவை விட்டுக் கிளம்பியது. அது காம்பவுண்டு சுவரைக் கடந்து வெளியேறிப் போகும் வரை வெறிச் சோடிய பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்த கலையரசி – 

கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.

“எழுந்திருங்க, மிஸ்டர் ராஜா. உங்களுக்கும் எனக்கும் இனிமேல்தான் வேலை நிறைய இருக்கிறது”. 

புரியாமல் பார்த்தேன். 

“எஸ்! என் அம்மாவின் சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க உங்களையே என் பிரைவேட் ‘ஐ’யாக நியமிக்கிறேன். போலீஸ் அனுமதியோட குற்றவாளியைத் தேடிக் கண்டு பிடிக்கலாம். வாங்க” 

“நீயுமா?” 

“ஆமாம். நானும்தான், அம்மா ஆயிரம் தப்பு செய்திருக்கலாம். அவளைத் தண்டிக்க யார் யாருக்கோ காரணமும் இருக்கலாம். உரிமையம் இருக்கலாம் ஆனா என்னை அநாதையாக்க இவங்களுக்கென்ன உரிமையிருக்கு? இவங்க எல்லாம் யார் ராஜா?”

சட்டென்று என் மார்பில் முகம் புதைத்து, முதுகில் கைகளைப் படரவிட்டுக் கதறினாள்: “எனக்கு உதவுங்க. ப்ளீஸ், எனக்கு உதவுங்க.” 

பிரியமாக அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தேன்.

“வா. போகலாம்”. 

காரில் போகும்போது சொன்னேன்: 

“போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சு நாளைக்கு மத்தியானம் தான் சவத்தை நம்மகிட்டே ஒப்படைப்பாங்க. ஆனா, அதுக்குள்ளே – சவால் விட்டுச் சொல்றேன், கலை – அவங்க நெஞ்சில நெருப்புக் கொட்டறதுக்கு முந்தி, நான் கொலைகாரனைக் கண்டுபிடிச்சு போலீஸ்லே ஒப்படைப்பேன்.” 

வலது கையால் ஸ்டீயரிங் வீலை இயக்கியபடி, இடது கட்டை விரலை உயர்த்தினேன். 

“திஸ் ஈஸ் சாலஞ்ச்.” 

– தொடரும்…

– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *