பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
காரை திடீர் ப்ரேக் போட்டு நான் நிறுத்திய வேகத்திற்கு அலறிவிட்டாள் ஸ்வப்னா. “என்ன பாஸ் நீங்க? நான் நடுங்கிப் போயிட்டேன். பாருங்க, கையெல்லாம் எப்படி நடுங்கிறது?”

“அதோ, அங்கே பார்” என்று நான் சுட்டிக்காட்டிய திசையில் அந்த கலையரசி வந்து கொண்டிருந்தாள். அவள் நெருங்கியதும் –
சட்டென்று கதவைத் திறந்து பார்த்தேன்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பின்னணியில், வெறும் துவாலையாலான பெரிய கோட்டுடன் நீச்சல்குளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவள், நிமிர்ந்து பார்த்தாள்.
“யார் நீங்க?” என்றாள் கோபமாக.
“என்னைத் தெரியவில்லை?”
“சுத்தமா தெரியல்லே. வழிவிடுங்க. நான் நீச்சலடிக்கப் போகணும்”.
“ஐ யம் ராஜா. ஃப்ரம் ராஜா துப்பறியும் ஃபாக்டரி. நேற்று சந்தித்தோம்.”
ஒரு பதுமை போலப் பார்த்தாள். “பயனற்ற ஃபாக்டரி. பிரயோஜனமில்லாத ஆள். சே!”. – நகர முயன்றவளைத் தடுத்தேன்.
“இரு. இரு.”
“இங்கேயே ஒண்ணும் செய்ய முடியல்லே. இந்த அழகுலே லண்டனுக்குப் போயி ஸ்கராட லண்ட்யார்ட் – சொல்லாதீங்க. ஏன் அவங்க பேரைக் கெடுக்கறீங்க?”
“சின்ன விஷயமா, நீ உங்கம்மாவைக் கொலை செய்ய என்னை வழி கேட்கிறது சின்ன விஷயமா?”
“என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.”
“ஏன் உன்புத்தி இப்படி விபரீதமா போகுது?”
“தெரிஞ்சுக்கணுமா? சொல்றேன்.”
காரை சுற்றி வந்து, கதவைத் திறந்து ஸ்வப்னாவைப் பிடித்து இழுத்து-
பின் ஸீட் கதவைத் திறந்து உள்ளே திணித்தாள். அவள் ஆட்சேபணையை அலட்சியப்படுத்திவிட்டு, கோட்டைக் கழற்றிட்டூ பீஸ் நீச்சலுடையுடன் என் பக்கத்தில் அமர்ந்து என்னைச் சிலிர்க்க வைத்தாள்.
கச்சிதமான பதினாறு வயது அழகு, என்னை மூச்சுத் திணற வைத்தது.
மடிந்து வரிவிழுந்த வயிற்றுக்கும், வழவழப்பான கால்களுக்கும், இடுப்புகளின் அபரிமிதமான வளைவுகளுக்கும்-
கவிதை இயற்றும் ஆசை வந்தது. ஆனால் –
பின் ஸீட்டிலிருந்த ஸ்வப்னா செருமிக் கொண்டதும், கவிதை ஆசையை மறந்தேன்.
“இப்ப சொல்லு. எதுக்காக உன் அம்மாவைப் பற்றி இப்படியொரு விபரீத எண்ணம் வருகிறது உனக்கு?”
“பரணி பாண்டியனைத் தெரியுமில்லையா உங்களுக்கு?” என்ற கலையைப் புரியாமல் பார்த்தேன்.
“யார் அவர்? காபினேட் மந்திரியா?”
“ஸ்டேட் புட்பால் சாம்பியன் பரணி பாண்டியனைத் தெரியாதா?” என்றாள் சில்லறைக் காசுக்கான பார்வையுடன்
“தெரியும். எனக்குத் தெரியும்” – ஸ்வப்னா குதித்தாள்: “போன வருஷம்கூட ராஞ்சி கோப்பை மேட்சிலே ரன் ரன்னாக குவிச்சாரே, அவர்தானே?”
பட்டென்று தலையிலடித்துக் கொண்டேன்: “என் காரியதரிசி என்கிற பெண் யந்திரமே! கொஞ்சம் பேசாமல் இரேன்.” -அவள் முறைக்க; திரும்ப முறைத்தேன்: ”புட்பால் மேட்சில ரன் எடுத்தானாமே. டாம்-இட்”
கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஸ்வப்னா. “நீ சொல்லும்மா, என்ன அந்த பரணி பாண்டியனுக்கு?”
“அவர் என்னைக் காதலிச்சார். நானும் அவரோட வாழுகிறதாக நிறைய கனவுகளை வளர்த்துக்கிட்டேன்.”
“தப்பேயில்லையே. மேலே சொல்லு..”
“துணிச்சலாக அம்மாகிட்டே சொல்லிட்டேன். அப்போதைக்கு அதிகமா எதிர்ப்புக் காட்டாத அம்மா-அப்புறமா, இவ்வளவு கேவலமா நடந்துப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லே.”
“என்ன செய்தாங்க?”
“தப்பு செய்தது நான்னு நினைச்சால், என்னைத் தண்டிக்க வேண்டியதுதானே? எதுக்காக அந்த அப்பாவியை ஆளை விட்டு அடிக்கனும்?”
“அப்படியா?”
“பயங்கரமா தாக்கிட்டாங்க. பாவம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரியிலே உடம்பு முழுக்க கட்டுப்போட்ட நிலையில இருந்தாரு. வெளியே வந்த பிறகு ஒரு நாள் சந்திச்சுப் பேசினப்பதான் அந்த பயங்கர உண்மையைச் சொல்லி அழுதார்.”
“என்னவாம்?”
“டாக்டர் சொல்லிட்டாராம் – கல்யாணமே செய்துக்காதேன்னு கண்டிப்பாக சொல்லிட்டாராம்.”
“ஏன்?”
“முதுகுத் தண்டிலே பலமான அடிபட்டு அவர் ஆண்மையே பறிபோயிடுச்சாம். ‘அநியாயத்துக்கு ஒரு பெண் வாழ்க்கையை நாசம் பண்ணாதே’ன்னுட்டாராம்.”
“இப்ப அந்தப் பையன் எங்கே இருக்கான்?”
“எதுக்கு அவன் விலாசம் கேட்கறீங்க?”
“விசாரிக்கத்தான். அதுமட்டும் நிஜம்னு ஆயிட்டா. அது ஆண்வர்க்கத்துக்கே உங்கம்மா செய்த துரோகமாயிடும். அப்புறம் நீ கேட்கிற யோசனைகளை நானே சொல்லித் தரேன்.” – அழுத்தமாகச் சொன்னேன்: “உங்கம்மாவைக் கொலை செய்கிற வழியை – “
”சொல்றேன். குறிச்சுக்குங்க” என்று அவள் சொல்லச் சொல்ல –
குறித்துக் கொண்டேன்.
கிளம்பு முன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்தேன்.
நீச்சல் குளத்தின் உச்சாணிப் பலகையின் நுனிக்கு ஏறி நின்று, கைகளைத் தலைக்கு மேலாகக் குவித்து அம்புபோல நேராகத் தண்ணீரில் பாய்ந்தாள் அவள்.
ஆபீஸுக்கு நாங்கள் திரும்பியபோது ஜேம்ஸ்பாண்ட் பாய்ச்சலுக்குத் தயார் என்பது போல நின்றிருந்தான்.
“சார்…சார். சினிமா நடிகை போன் பண்ணினதாக சொல்லச் சொன்னாங்க. தவிச்சுப் போயிட்டேன்.”
‘ஏன்’டா?”
“யாருன்னு தெரியல்லியே. யார் சார் ஸ்ரீதேவியா?”
“டாமிட்” அவன் தலையைத் தட்டிவிட்டு போனைச் சுழற்றலானேன்.
எடுத்த எடுப்பில் ஆண்குரல் உறுமிற்று: “யாருப்பா அது?”
“ஸாரி. ராங் நம்பர்” என்று போனை வைத்துவிட்ட மறு வினாடி-
போன் ஒலித்தது.
“நீங்கள்தான் போன் செய்ததா?” என்றது ஃபுளூட் குரல்: “கொஞ்சம் முன்னே?”
“ஸ்ரீதுளசியா?”
“ஆமாம், நானேதான். ராஜாதானே?’
“ஆமாம். கொஞ்சம் முன்னால் ஆண் குரல் கேட்டதே?”
“அது வெளியே ஹால் போனிலிருந்து பேசினான். இது என் பர்சனல் போன்.”
அவள் குரலில் இருந்த ஒரு தினுசான பீதி எனக்குப் புரியவில்லை; குழம்பினேன்.
“ஹலோ. என்ன விஷயம்? ஏன் ஒருமாதிரி பேசறீங்க? ஏதாவது பெரிய பிரச்சினையா?”
“மிஸ்டர் ராஜா, உடனே நீங்க இங்கே வரணும்.”
“இப்பவேயா?”
“உடனே,உடனே வந்தாகணும், ப்ளீஸ்” என்றவளின் குரலில் தெரிந்த அழுகையை உணர முடிந்தது.
“ஏன் என்ன ஆச்சு?”
“என் உயிருக்கு ஆபத்து. நீங்க உடனே இங்கே வந்தாகணும்.”
“உங்க பெண் அங்கே இருக்கிறாளா? கலையரசி”
“இல்லே.”
“கொஞ்சம் முன்னால் ஒரு ஆண்குரல் கேட்டதே. யார் அது?”
“முத்… முத்திரு…” என்பதற்குள் –
தொடர்பு அறுந்து போயிற்று.
“ஹலோ ஹலோ” என்று நான் போட்ட கூச்சலுக்கு ஸ்வப்னா நடுங்கிப் போனாள்.
அலறினாள்: “என்ன பாஸ்?”
“அட சட். பயந்தாங்கொள்ளி. வா, போகலாம்.” – அவளை இழுத்துக் கொண்டு காருக்குப் போனேன்.
சரேலென்று பாய விட்டேன்.
காரில் போய்க் கொண்டிருக்கும்போது கேட்டேன்: “ஏன் ஸ்வப்னா ‘முத்தி…முத்தி’ன்னா என்ன?”
“சே!போங்க பாஸ்” என்று நிறைய வெட்கப்பட்டாள்: “நான் மாட்டேன்.”
“சொல்லு. முத்தின்னா என்ன அர்த்தம்?”
“சே. போங்க பாஸ், முத்தி எல்லாம் நான் தரமாட்டேன். முத்தமெல்லாம் -”
“அடச்சீ அதில்லே முத்தின்னு ஆரம்பிக்கிற ஆளு பேரைச் கேட்டேன்.”
“முத்தியால் நாயக்கன் – முத்தரையன்.’
“சரித்திர பெயர் மாதிரியில்லே இருக்கு” என்ற நான் காரை அவசரமாக நிறுத்திப் பார்த்தேன்.
பெட்ரோல் பங்கில் அவள் தெரிந்தாள்.
“கலையரசி!”
எங்களைக் கண்டதும் ஓடி வந்து நின்று முறைத்தாள்: “தெரியாமதான் கேட்கறேன். ஏன், எதுக்கு என் பின்னாலேயே சுத்தறீங்க?”
கதவைத் தள்ளித் திறந்து அவளை இழுத்து அமர்த்திக் கொண்டேன்.
“என் பையனைப் பார்த்தீங்களா? விலாசம் கொடுத்தேனே, பாவமாயில்லே?”
“அது அப்புறம். முதல்லே உன் வீட்டுக்குப்போகிறோம்.”
“எதுக்கு, நான் அங்கேயிருந்துதானே வரேன்.”
“வீட்டிலிருந்தா?”
“பின்னே? இந்த டிரஸ் எல்லாம் எப்படி வந்ததாம்?”
“நீ புறப்படறச்சே…” – அவசரமாகக் கேட்டேன்: “உங்கம்மா எங்கேயிருந்தாங்க?”
“மீட்டிங் ரூமிலே யாரோடவோ பேசிக்கிட்டிருந்தாங்க.”
“யார்கூட?”
“தெரியல்லே. தாடி எல்லாம் வச்சு சாமியார் மாதிரி இருந்தார். இதான் என் மம்மியோட வீக்னஸ். சாமியார்-மாமியார் என்கிற பெயர்லே யார் வந்தாலும் உட்கார வச்சு, பேசிக்கிட்டிருப்பாங்க. எவன் வந்தாலும் தடானு கால்ல விழுந்துடுவாங்க. சே!”
“சரி, உன் காரை எடுத்துட்டு வா.”
“எங்கே?”
“உன் வீட்டுக்குத்தான்.”
“ஏன்?”
“உங்கம்மா ஏதோ ஆபத்திலே இருக்கிறதாக நினைக்கிறேன்”.
“அவங்களாலதான் மத்தவங்களுக்கு ஆபத்து வருமே தவிர, அவங்களுக்கு ஆபத்து? நோ, நெவர்”.- சுட்டு விரலையசைத்தாள்: ”நெவர் ஐ ஸே. உங்கமாதிரி ஆயிரமாயிரம் பிரைவேட் ‘ஐ’களை ஏய்க்கிற சாமர்த்தியம் அவங்களுக்கு இருக்கு. ஸோ, மறங்க. நான் டிஸ்கோ கிளாஸுக்குப் போகணும். வரட்டா.”
“நோ. இப்ப நீ எங்களோட வரவேண்டியது அவசியம். போனில் பேசின உங்கம்மா குரலில் ஏதோ விபரீதம் இருந்தது.”
“போய்ப் பார்த்து ஏமாறத்தான் போகிறீங்க.”
“அப்படி ஏமாந்துட்டால் அப்புறம் நீ உன் வழியைப் பார்த்துக் கொண்டு போயேன்.”
எரிச்சலாகப் பார்த்தாலும் அவள் காரில் ஏற முயன்று தோற்றாள்.
அது உறும மறுத்தது. ‘தத்’ – எரிச்சலாக ஸ்டீயரிங் வீலை அடித்துவிட்டு இறங்கி வந்தாள்: “காரை ஓரங்கட்டி வையுங்கப்பா. அப்புறமா வந்து எடுத்துக்கறேன்.”
என்னிடம் வந்தாள். “உங்க காரிலேயே வரேன். எனக்கும் என்னமோ தெரியலே. அம்மாவைப் பார்க்கணும் போல உள் மனசு கிடந்து துடிக்குது. ஏன்னுதான் புரியல்லே.”
“புரியாதவரைக்கும் க்ஷேமம். கமான் யார்.”
காரை கிளப்பி விட்டு சீற்றமாகப் புறப்பட்டேன்.
“மெல்லப் போங்க பாஸ். நீங்க போகப் போகிறது இவ வீட்டுக்குத்தான்; ஆஸ்பத்திரிக்கில்லே” என்ற ஸ்வப்னாவை அடக்கினேன்.
“ஷட் அப் யூ ஸ்வப்னா.”
அவர்கள் வீட்டையடைந்தபோது – தோட்டத்துப் பாதையில்வளைந்து திரும்பியபோது-
போர்டிகோவில் தயங்கி நிறுத்தியபோதெல்லாம் – அந்த வீட்டின் அமைதி, காரணமின்றி என்னை அலைக் கழித்தது. இனம்புரியாத பயம் என் நெஞ்சை நெருடியவாறு இருந்தது.
படி ஏறிப் போய் அழைப்பு மணியை அழுத்தி அலற விட்டேன்.
கதவு திறக்கப்படவில்லை.
நகர்ந்து செல்லும் வினாடிகள் என்னை மிகவும் குழப்பின. ‘என்னதான் நடக்கிறது உள்ளே? ஏன் இந்த அமைதி?’
மீண்டும் அழைப்புமணியை அலற விட்டபோது-
“வரேன்” என்ற குரலுடன் கதவைத் திறந்த அம்மாள் முகத்தில் களைப்பும், கண்களில் தூக்கமும் மீதமிருந்தன. அவள் பார்வை எனக்குப் பின்னால் போனதும்-
“என்ன பாப்பா இது, காலையில் போன புள்ளே சாப்புடக்கூட வராம இருந்துட்டே? உங்கம்மா என்னடான்னா என்னைப் பிய்ச்செறியறாங்க. சாப்புடறீயா?”
“வேண்டாம்.”
கதவைத் தள்ளி உள்ளே போனோம்.
“அம்மா எங்கே?”
“மாடி ரூமில் இருக்காங்க” என்ற சமையல் அம்மாள், நான் மாடி ஏற முயன்றபோது தடுத்தாள்: “இருங்க.போகாதீங்க. உள்ளே இருந்துகிட்டு வெளியே போர்டு மாட்டி வைச்சிருக்காங்க. தொல்லைபடுத்தக் கூடாது. அப்புறம் அவங்களுக்கு கோபம் வரும்.”
“அவங்கதான் போன் பண்ணி என்னை உடனே இங்கே வரச் சொன்னாங்க. நகரும்மா.”
அம்மாளை நகர்த்திவிட்டு மாடி ஏறும்போது கலையிடம் கேட்டேன்.
“எதுக்காகப் பொய் சொன்னே?”
“பொய்?”
“நீ இங்கே வரவேயில்லே. ஆனா, வந்து டிரஸ் மாத்திக் கிட்டிருக்கிறதாகச் சொன்னே. அது பொய்தானே?”
”அதுவா? என் சிநேகிதி வீட்டுக்குப் போய் அவளோட டிரஸைப் போட்டுட்டு வந்துட்டேன்.”
“தேவையில்லாம பொய் சொல்லாதே. அது நிறைய குழப்புது.”
அந்த அறைக்கதவை நெருங்கித் தட்டினேன்.
உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டு இருந்தது என்று தான் நினைத்தேன். ஆனால்-
கதவுக் குமிழைத் திருகத் திருக, கதவு மெலிதாக உள் நோக்கிப் போயிற்று.
சடாரென்று திறந்ததும் காட்சி தெரிந்து வீரென்றது. மின்விசிறியில் தொங்கிய நிலையில் கிறுகிறுவென்று சுழன்று கொண்டிருந்தாள், அந்த ஸ்ரீதுளசி. அநேகமாக, பிறந்த மேனியாக – பிணமாக!
அலறிக்கொண்டே உள்ளே போக முயலும் கலையரசியைப் பிடிவாதமாக இழுத்துத் தள்ளிக் கதவைச் சாத்தினேன்.
திரும்பிட படி இறங்க நடந்தபோது-
வழியில் மயங்கிக் கிடந்த ஸ்வப்னாவைத் தாண்டி வர வேண்டி வந்தது.
அம்மாவுக்காகக் கதறும் கலையரசியின் அழுகை, கீழே காப்பி போட்டுக் கொண்டிருந்த அம்மாளை ஈர்த்தது.
“என்ன ஆச்சு? என்னம்மா ஆச்சு?” என்று பதறிச் கொண்டே ஓடிவந்து நின்றாள்.
கதறும் கலையையும், ஒப்பாரியே வைக்கத் துவங்கிவிட்ட சமையல் அம்மாளையும் அடக்கி-
போனை எடுத்துத் திருகினேன்.
எதிர்க் குரல் வரும் முன் திரும்பி, மாடியறையில் அந்த அறையைப் பார்த்தேன்.
‘டோண்ட் டிஸ்டர்ப் மீ’ வாசகம் தாங்கிய அட்டை காற்றில் பறந்து பறந்து அல்லாடியது, இங்கிருந்தே தெரிந்தது.
திரும்பிக் கொண்டு போனை காதில் பொருத்தினேன். கமிஷனர் பேசினார்.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.