பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
இடைச்செருகல்: இரண்டு.
உதகமண்டலத்திற்குப் பின்னால்-

கோத்தகிரி வழியாக இறங்கி, மைசூர் செல்லும் சாலையில் –
குளிர்ச்சியான சீதோஷ்ணத்தில் சொட்டச்சொட்ட நனைந்திருந்தது அந்த பூங்குளம் எஸ்டேட்-
படிப்படியாக அமைந்திருந்த தேயிலைத் தோட்டத்தின் உச்சியில் கம்பீர வனப்புடன் தெரிந்தது அந்த பங்களா.
கால் பங்கு கான்க்ரீட்டும் முக்கால் பங்கு மரப்பலகை யாலும் ஆன அந்த பங்களாவின் சொந்தக்காரி, தில்லைநாயகி.
வயது நாற்பத்தைந்து என்றால், நம்புவதில் சிரமம் ஏற்படும். வயதைக் கூட்டிக்காட்டும் மூப்பு சீக்கிரமே வந்திருந்தது. பர்மா தேக்கு மரத்தாலான ஆடும் நாற்காலியில், தங்க ஃபிரேம் போட்ட மூக்குக்கண்ணாடியுடன் அமர்ந்து பார்க்கும் அந்த கம்பீரத்துக்கு-
தொலைவில்-
இரண்டு இலை, ஒரு மொக்கு என்று பறித்து முதுகுக் கூடையில் எறியும் எஸ்டேட் கூலிப் பெண்களுக்கு-
மேஸ்திரி வீரய்யாவின் சவுக்குக்கு இல்லாத பயம் இவளின் தொலைதூரப் பார்வைக்கு இருந்தது.
‘அம்மா பார்க்கிறாங்கடி’ என்கிற கிசுகிசுப்பிலேயே வேலையின் தீவிரம் அதிகமாகி விடும்.
பம்பரமாக சுறுசுறுப்புடன் இயங்கத் துவங்குவார்கள்.
காரணமே இல்லாமல் அந்த வீரா அதட்டும்போது – ரசித்துச் சிரிப்பார்கள்.
கண்களை மூடியிருந்த அம்மாளின் காதுகளில் அந்தக் குழந்தையின் அழுகை கேட்டதும், மெல்லக் கண் திறந்து பார்த்தாள். எங்கோ தொலைவில்-
மரத்தில் கட்டப்பட்ட தூளியில் குழந்தை ஒன்று பசிக்காக ஓயாமல் அழுதது கேட்டது.
“யாருதுடி அது குழந்தை?” என்றாள்; கம்பீரமாக எழுந்து நின்றாள். “அடியேய் யாரடி அவ, வித்தாரக் கள்ளி புள்ள அழுவற சத்தம் கேட்கல்லை? தூங்கறீங்களாடி?”
அப்படியும் பதில் இல்லாமல் போகவே –
“வீரா, அந்த புள்ளையைக் கொண்டா.”
அருவருப்பாக அவன் தூக்கி வந்த குழந்தையை வாங்கிய போது, அதன் தாய் வந்து தயக்கமாக நிற்க,
“புள்ளையைப் பார்க்க நேரமில்லேன்னா எதுக்குடி கொண்டு வரே?”
“வீட்டில் எங்க ஆத்தா சந்தைக்குப் போயிடுச்சு. ஒரு நாளைக்கு மட்டும்னு கொண்டு வந்தேன்.”
“சரி, போயி வேலையைப் பாரு. புள்ள இங்கேயே இருக்கட்டும்.. போடி.”
போய்விட்டாள்.
“அழாதேடா ராசா. அழாதேம்மா. பசிக்குதா?” -உள்பக்கமாகப் பார்த்துக் கத்தினாள்: இந்தா, ராமாயியக்கா. கொஞ்சம் பருப்பும் நெய்யுமா சோறு பிசைந்து கொண்டு வா.
“அழாதேடா! இப்ப சோறு வரும்; ஊட்டி விடறேன். அழுவாதேன்னேன்”.
‘அத்தை அடிச்சாளோ அல்லிமலர் செண்டாலே? மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூப்பந்தாலே.. அடிச்சாரைச் சொல்லியழு. ஆக்கினைகள் செய்திடுவோம்.’
குரலில் கண்ணீர் கலக்கவே பாட்டை நிறுத்தினாள். பிள்ளையைத் தோளில் சாத்தித் தட்டியவாறு கண்ணீருடன் பார்த்தாள்.
குழந்தை!
‘அதுமட்டும் காலத்தோட பிறந்திருந்தா, என் புருஷன் களவு போயிருப்பாகளா? இன்னைக்கு இந்த தனிமைதான் என்னை வாட்டுமா?’
மானசீகமாக தன் மகனைக் கூப்பிட்டாள்;
‘மவனே! நான் பெத்த ராசா. எஸ்டேட்டு பூராவும் உனக்குத் தாரேன். என்னை ஆத்தான்னு கூப்புடுடா ராசா, கூப்பிடு.’
கூப்பிடவில்லை.
காரணம், அவளுக்கு மகனே இல்லை.
‘மவளே!’ – மனதுக்குள் கண்ணை மூடிக் கூப்பிட்டாள்: ‘பொங்கலுக்கு மருமவனையும் கூட்டிட்டு வந்துடும்மா. உனக்குப் பட்டுப்புடவையும் மாப்பிள்ளைக்குச் சரிகைப் பட்டு வேட்டியும் வாங்கி வச்சிருக்கிறேன்’.
பொங்கல்தான் அடுத்த மாதம் வரும். மகளோ – மாப்பிள்ளையோ வரமாட்டார்கள்.
இல்லை, அவர்கள் இல்லை. மகள் பிறக்கவேயில்லை.
அவள் மலடி!
கணவன் நினைப்பு வந்தது.
‘மலட்டுச் சனியனே! உன்னைக் கட்டி என்னடி பிரயோசனம்? ஒரு புள்ளையுண்டா? என் சந்ததிகளைச் சொல்ல எனக்கொரு சந்ததி வேணும்டி’ என்று அவர் தினம் தினம் கத்தும் நாளில் தான் அவள் இந்த வீட்டில் வந்தாள் –
படப்பிடிப்பு என்கிற பெயரில்.
‘கம்பெனி சாப்பாட்டிலே காரம் அதிகம். என் வயத்துப் புண்ணுக்கு ஒத்து வரல்லே. தப்பா நினைக்கப் போறதில்லேன்னா ஆடைத் தயிரும் சாதமும் கொஞ்சம் அனுப்புங்களேன்!’ என்று அவரிடம் கொஞ்சியதற்கு –
முதலில் சாப்பிட மட்டும் அழைத்து வந்தார். அப்படியே வீட்டில் இடம் தந்தார். பிறகு மனதிலேயே இடம் தந்து விட்டார். குறிப்பாக, படுக்கையறையில்!
இவள் முழுவிவரமும் அறிந்து ஆட்சேபிக்க முயலுமுன் – எல்லாமே முடிந்து விட்டது.
ஆங்கிலம் படிக்கத் தெரியாத முண்டம். அவர் கேட்ட பேப்பரில் எல்லாம். கைநாட்டு வைத்து விட்டாள்.
‘நாலு நாளிலே வரேன்’ என்று சென்னைக்குப் போனவர். மாதக்கணக்கில் திரும்பவேயில்லை.
இவளாகத் தேடிப் போனபோது துரத்திவிட்டார்.
‘உன்னால், இயலாததை இவ சாதிச்சுக் காட்டிட்டாடி அவ வயிற்றைப் பார்த்தாயா?’ என்றார்.
நிஜம். அந்தப் பெண் கர்ப்பமாகி இருந்தாள். இவள் கெஞ்சி அழுது பார்த்தும், பிடிவாதமாக இவளுடன் வர மறுத்துவிட்டார்.
‘புள்ளே பிறக்கட்டும். பார்த்துட்டு வரேன். நீ போ’ என்று துரத்திவிட்டார்.
ஏறத்தாழ மூன்று வருஷம் கழித்துத் திரும்பி வந்தார் – தனியாக!
‘ஏனுங்க புள்ளையைக் கொண்டு வரலீங்களா?’ என்று இவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பிரமை தட்டினாற் போல எங்கோ பார்த்தார். வெறிச்சோடிய பார்வையுடன் கூப்பிடக் கூப்பிடப் பிரமையில் இருந்தார்.
தூக்கத்தில் புலம்பினார்: ‘பெண்களை நம்பக்கூடாது. எந்த ஒரு பெண்ணையும் நம்பக் கூடாது’ என்றார்.
ஒருநாள் ஜுர வேகத்தில், ‘வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். யாருமே வேண்டாம். நான் போறேன்’ என்று உளறினார்.
‘ஏனுங்க என்ன ஆச்சுது உங்களுக்கு?’ என்று இவள் கதற-
வெறித்துப் பார்த்தார்: ‘யார் நீ’ என்றார்.
திடீரென்று ஒருநாள் சின்னதாகப் பெட்டியுடன் கிளம்பி விட்டார்.
‘எனக்கு மனசு சரியில்லை தில்லைநாயகி. கொஞ்ச நாளைக்கு சுதந்திரமாக போயிட்டு வரேன்’.
‘எங்கேங்க?’
‘வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ போயி மனசைத் தேத்திக்கிட்டு, உனக்கு ஏத்த புருசனா திரும்பி வரேன், தில்லே’.
‘திரும்பினதும் நேரா இங்கே வந்துடுங்க. பட்டணத்திலே அவ வீட்டுக்குத் திசை மாறிப் போயிடாதீங்க. அது போகக் கூடாத இடமுங்க. ஒரு தடவை செய்த அதே தப்பை மறுபடி யும் செய்துராதீங்க’.
‘பட்டணம் பக்கமே போகமாட்டேன் புள்ளே. இங்கே யிருந்து பெங்களூர்க்கு ப்ளேன்லே போயி, பம்பாய் போயி, அங்கேயிருந்து லண்டனுக்கோ பாரீசுக்கோ போயிட்டு வந்துர்றேன்’ என்று சொல்லிவிட்டுப் போனவர்தான்-
திரும்பவேயில்லை.
பம்பாய் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம், கொஞ்ச நேரத்திலேயே விபத்துக்குள்ளாகி எரிந்தது. ஒருவர்கூட பிழைக்காதது மட்டுமல்ல –
அடையாளம் சொல்லக்கூட முடியாதபடி சிதைந்து உருக்குலைந்து போயிருந்ததுதான் கொடுமை.
அவர்கள் விமானத்திலேயே பம்பாய் அழைத்துப் போனார்கள்.
அடையாளம் காட்டுவது நிறுத்தப்பட்டு – நீளமான ஒரே சிதையை அடுக்கி, அத்தனை உடம்புத் துண்டங்களையும் அடுக்கினார்கள்.
இந்து பூசாரி, கிறிஸ்துவ பாதிரி, முகமதிய காஜி என்று அனைத்து ஜாதி பூசாரிகளும் அவரவர் வேதம் ஓத, மொத்தமாக எரித்துவிட்டார்கள்.
‘ஏனுங்க! கடைசிவரைக்கும் முகத்தைக்கூட காட்டாம போயிட்டீங்களே!’ என்று கதறியவாறு, அந்தப் பெரிய சிதையைச் சுற்றிச்சுற்றி வந்து அழுதாள்.
அங்கேதான் அவளையும் பார்த்தாள்.
ஸ்ரீதுளசி!
இருந்த ஆத்திரத்துக்கு அங்கேயே கிழித்துப் போட்டிருப்பாள்.
அதிகாரிகள் பிரித்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு இப்போதுதான் தொடர்பு வந்திருக்கிறது.
தொடர்பைத் துவக்கியவள் அவளே.
கோயிலில் வைத்துத் தாலி கட்டி சாட்சியங்களுடன் மனைவியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பிள்ளைப்பேற்றின் போது. ஆபரேஷனுக்கான பத்திரத்தில் தந்தை ஸ்தானத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.
பள்ளியில் சேர்க்கும்போதுகூட அப்பா பெயராக அவரே கையெழுத்துப் போட்டு இருக்கிறார்.
சென்னைக்குப் போய் திரும்பிய வக்கீல் கைவிரித்து விட்டார்:
“அவ புத்திசாலிப் பெண்ணும்மா. சட்டப்படி தன் பிள்ளைக்கு அப்பன் இவர்தான் என்று நிறைய ஆதாரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறாள்; அதனால்தான். துணிச்சலாக சொத்துக்களைக் கேட்கிறாள்”.
“ஒரே வழி – இருதார சட்டப்படி உங்களை டைவர்ஸ் பண்ணாம, உங்க அனுமதிப் பத்திரமில்லாம செய்துகிட்ட அந்த இரண்டாவது கல்யாணம் செல்லாதுன்னு வாதாடிப் பார்க்கலாம்!”
“ஆனா அதனாலே பெரிசா எதையும் சாதிச்சுட முடியுங்கிற நம்பிக்கை எனக்கே கிடையாது. உங்களுக்கும் அவளுக்கும் பிள்ளையில்லாததனாலும், அவள் பிள்ளையைத் தன்னுடைய பிள்ளைன்னு அவர் பகிரங்கமாக ஒத்துக்கிட்டதாலும்-
“வாரிசு சட்டப்படி அந்தப் பெண் குழந்தையை இவரோட வாரிசு ஆக்க முடியும். அதைத் தடுக்க சட்டமிருக்கான்னு இப்ப தேடிப் பார்க்கணும்…”
பருப்புச் சாதத்தை ஊட்டித் தூங்க வைத்த குழந்தையைத் தரையில் படரவிட்டு, வக்கீலை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்க சட்டத்திலே ஓட்டையைத் தேடுங்க.நான் என்னுடைய முறையிலே ஞாயத்தைத் தேடறேன்!” என்றாள் கோபமாக.
வக்கீல் புறப்பட்டுப் போனதும்-
‘வீரா’ என்றாள் கூச்சலாக.
கையில் சவுக்குடன் மேற்பார்வை என்கிற பெயரில் அதிகாரம் செய்து கொண்டிருந்த வீரா ஓடி வந்து நின்றபோது –
கற்றை ரூபாய் நோட்டுக்களை நீட்டினாள். புரியாமல் பார்த்தான்.
“பாதை எல்லாம் கல்லும் முள்ளுமா இருக்கு. சுத்தப் படுத்திடு, வீரா. என் வழியிலே குறுக்கே வர்றவங்களை இத்தனை நாளும் விட்டு வைச்சேன். இனிமேல் விட நான் தயாரில்லே.”
உள்ளே போனாள்.
திரும்பும் போது அவள் கையில் புகைப்படம் இருந்தது.
ஸ்ரீதுளசியின் படம்.
அவன் பார்த்துக் கொண்டே இருக்கும்போது-
சரேலென்று அதை இரண்டாகக் கிழித்து விட்டு, அவன் கையில் திணித்தாள்.
“தீர்த்து விடு.”
அவன் திரும்பிப் போனதும் –
திட்டமாக ஆடும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தாள்-
நெடுநேரமாக
அப்போதுதான் அந்தக் கடிதம் வந்தது. விபரீதக் கடிதம்!
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.