பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
இடைச்செருகல்: ஒன்று.

அந்தமான் போர்ட் ப்ளேயர் ஏர்-போர்ட்டில் காத்திருந்த முத்திருளாண்டி-
செக்யூரிட்டி செக்கப்புக்கும், கொஞ்சம் தள்ளி நிற்கும் பிளேனுக்குக் கூட்டிப் போகும் பஸ்ஸில் இடம் பிடிக்கவும் தவியாய்த் தவித்தான்.
அவன் அவசரத்தில் இருக்கிறான்.
பன்னிரெண்டு மணிக்குள் அவன் சென்னையிலிருந்தே ஆகவேண்டும்.
அவன் அவசரம் புரியாமல் –
வந்து இறங்கிய மத்திய மந்திரி, வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்தில் பல தினுசுக் கொடிகளைப் பார்த்துப் பயந்து லேசில் இறங்க மறுக்க –
ஒருவழியாகக் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, நிச்சயமாக வழியமைக்கவும் பட்டு விட்டதென்று தெரிந்த பிறகுதான் பிளேனை விட்டு இறங்கி காரில் ஏறினார்.
விளைவு?
எட்டு நாற்பதுக்குப் புறப்பட வேண்டிய பிளேன், ஒன்பது இருபதுக்குத்தான் வானம் நோக்கிப் பாய்ந்தது.
முத்திருளாண்டி என்ற பெயரை வைத்து, அவனைப் பயங்கரமாக உருவகப்படுத்தினால் உங்களுக்குத் தோல்விதான்.
‘ட்ரிம்’மாக ட்ரஸ் செய்து கொண்டு, ‘பூவிலங்கு’ முரளி மாதிரி இருப்பான்.
அந்தமானில் பரம்பரை பரம்பரையாக இருந்த தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழ் இன வித்து. சுத்த தமிழ்ப் பெயர்கள் அங்கே சாதாரணம்.
இவன் தாத்தா பெயர் முத்துக்கருப்பன்.
அந்த நாளிலேயே, அதாவது, அந்தக் காலத்திலேயே பாண்ட் போட்டவர் என்பது மட்டுமல்ல, ஜப்பானியர் காலமான. 42 முதல் 45 வரை கிமேனோகூட அணிந்ததுண்டு.
இந்த முத்திருளாண்டியின் அக்கா உண்ணாமுலை எனப் பெயரிடப்பட்டு, சோம்பல் காரணமாக முன்பாதி வெட்டப்பட்டு ஆபாசமாக அழைக்கப்படவே, அவளாகவே பெயரை வசந்தி என்று மாற்றிக் கொண்டதாக ஐதிகம்.
‘முனியாண்டி விலாஸ் மாதிரி இதென்ன தாத்தா பேரு?’ என்று இவன் சண்டை போட்டதுதான் மிச்சம். அக்காவுக்குத் தாத்தா தந்த சலுகை கடைசி வரை இவனுக்கு இல்லாமலே போய்விட்டது.
ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். பெயரில் இருக்கும் பயங்கரம் இவன் மனத்திலும் உண்டு. வக்கிரமான மனது. அநியாய குணநலன். தப்புச் செய்வதில் உற்சாகம் அதிகம்.
கொலை இவனுக்குக் கைவந்த கலை.
அதிலும், மாட்டிக் கொள்ளாமல் கொல்லுவதில் இவனுக்கு சுவாரஸ்யம் மிகவும் அதிகம்..
அதில் கிடைக்கும் ஒரு குரூர திருப்தி இவனுக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை. ஆனால் ஒன்று –
இவன் கொலை விளையாட்டு எல்லாம் அந்தமானுக்கு வெளியில்தான் நடக்கும்.
சென்னையில் இவனுக்கு ஏஜெண்டே இருக்கிறான்;
கொலை ஏஜெண்ட்
இப்போது அவன்தான் தந்தி கொடுத்திருக்கிறான்.
‘பூஜைக்குப் பூப்பறிக்க வேண்டும். உடனே புறப்பட்டு வா’ என்ற அவனது வாசகம்-
நிச்சயம் மற்றவர்களுக்குப் புரியாது.
முட்டாள்கள். ‘பூப்பறிக்க அந்தமானிலிருந்தா ஆள் வரணும்?’ என்பார்கள்.
இவன் ஒருவனுக்குத்தான் அதன் அர்த்தம் புரியும்.
பூப்பறிக்க வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்க வேண்டுமென்று அர்த்தம்.
‘ஐம்பது பைசா கிடைக்கும்’ என்றால், ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்குமென்று அர்த்தம்.
ப்ளேனில் –
லைஃப் ஜாக்கெட்டை மாட்டிக் கொள்ளும் விதத்தைச் சொல்லித் தரும் ஏர்-ஹோஸ்டஸை வேடிக்கை பார்த்தான்.
ப்ரேக்ஃபாஸ்டில் வந்த அவித்த முட்டைகளை, ஓட்டை நிதானமாகப் பிரித்து, கிள்ளித் துண்டாக்கி உப்பு – மிளகு சிலிர்த்து வாயிலடக்கிக் கொண்டான்; விழுங்கினான்.
கைக்கடக்கமான கச்சித பன் ரொட்டியில் வெண்ணெய் பூசி ரசனையுடன் விழுங்கி, ஆப்பிளைக் ‘கறுக் முறுக்’கென்று கடித்துத் தின்று, காப்பி குடித்து, ஜன்னல் வழியே பரவிக் கிடக்கும் மேகத்தை வேடிக்கை பார்த்தான்.
கொலை செய்யப் போகிறேன் சரி. ஆனால்?
‘யாரை?’
இந்த நிமிடம்வரை தெரியாது.
‘பூப்பறிக்க’ என்பதனால், கொலை செய்யப்போவது ஒரு பெண்ணை என்பதுவரை நிதர்சனமாகப் புரிகிறது.
ஆணாக. இருந்தால், ‘வாழை, குலை பழுத்து விட்டது. சீவ வா’ என்று வரும்.
பெண்!
யார் அவள்? வசீகரமாக இருப்பாளா? இருந்தாலும், சாகும் முன் எனக்கொரு சந்தர்ப்பம் தருவாளா? மேலே படர- அவளுக்குள்ளே இயங்க அனுமதிப்பாளா?
காதை அடைத்துக் கொண்டு வருவதை உணர்ந்ததும், விமானம் தரை இறங்குகிறது என்பது புரிந்தது.
நிமிர்ந்து பார்த்தான்.
‘பெல்ட்டை அணியவும்’ என்றது உத்தரவு. சோம்பலுடன் அதை அலட்சியம் செய்தான்.
சிகரெட்டை மட்டும் அக்கறையாக அணைத்தான்.
ப்ளேன் நிற்பதற்காகவே காத்திருந்தவன் போல, மேல் தடுப்பைத் திறந்து பெட்டியை உருவினான். கதவு திறந்ததும் –
ஏர்-ஹோஸ்டஸின் ‘நமஸ்தே’யை வாங்கிக் கொண்டு படி இறங்கி.ஓடினான்.
மற்றவர்கள் தானியங்கியில் வரும் பெட்டிக்காகக் காத்திருக்க இவன் மட்டும் பெட்டியுடன் விமானத் தளத்திற்கு வந்த போது அவன் தெரிந்தான்.
ஜமதக்னி!
கொலை ஏஜெண்ட் ! ஒற்றை விரலை உயர்த்தினான்.
இவனும் இடது கைக்குப் பெட்டியை மாற்றி, ஒற்றை விரலை உயர்த்தினான்.
“வா”.
காரின் பின் ஸீட்டில் பெட்டியை விட்டெறிந்து, முன் ஸீட் கதவைத் திறந்து இவனைத் திணித்து, சுற்றி வந்து காரோட்டி ஸ்தானத்தில் அமர்ந்தான் அந்த ஜமதக்னி.
பரங்கிமலை சந்திப்பைத் தொடும்போது, கோட்டு உள்பாக்கெட்டிலிருந்து நீளமான கவரை உருவி எடுத்து நீட்டினான்.
“உன் பங்குக்கு பாங்க் ட்ராஃப்ட்.”
வாங்கினான்.
“நீ இங்கே தங்குகிறவரை எல்லாமே பார்ட்டியின் செலவுதான். ஐந்து நட்சத்திர ஹோட்டல்லே ரூம் போட்டிருக்கு. அனுபவி ராஜா அனுபவி”
“பார்ட்டி யாரு?”
”அதைக் கேட்காதே. பலியாடு எதுன்னு கேளு, சொல்றேன்.”
“சரி. நான் பறிக்கப் போகிற பூ எது? சென்னை மாநகரிலே பூக்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், நான் எந்தப் பூவைக் கிள்ளப்போகிறேன்.”
“ஒரு மாஜி சினிமா நட்சத்திரத்தை”.
“சரி. பேரை சொல்லல்லேன்னாலும் பரவாயில்லே. காரணத்தையாவது சொல்லு.”
“பார்ட்டி கேட்ட சினிமா படத்தை வேணும்னே ஏலம் மாதிரி அதிக விலை கேட்டு அநியாயத்துக்கு ஏற்றி விட்டா.”
“அதுக்காகக் கொலையா? சரியான காரணமில்லாம இந்த முத்திருளாண்டி யாரையும் கொலை செய்ய மாட்டான், தெரியுமில்லே.”
“அவளோட பெண்ணைக் காதலிச்சான் என்கிற ஒரே காரணத்துக்காகப் பையனைக் கடத்திக்கிட்டு போயி, பயமுறுத்தி சித்ரவதையே செய்து இருக்கிறா. பையன் இப்ப பெண்கள் பேரைக் கேட்டாலே நடுங்கிறான்.”
“இது சரியான காரணம். அவ்வளவு திமிர் பிடிச்ச பொம்பளையை லேசில் விடக் கூடாது. ஓய் இரு.”
டிராஃப்டை எடுத்துப் பார்த்துக் கத்தினான்: “என்னப்பா இது?”
“என்னப்பா?”
“இதென்ன, இதிலே முத்திருளாண்டின்னு போட்டிருக்கு. அங்கே பாங்க் அக்கவுண்ட்லே என் பெயர் ஸ்ரீதர புத்திரன் பா.”
“ஐ.ஸீ,”
“இந்த மாதிரி விஷயங்களிலே பேரை மாத்திக்குவேன். அதான் உத்தமம்.”
“பிரச்சினையில்லே. நாளைக்குப் பத்து மணிக்கு எல்லாம் கான்சல் பண்ணிட்டு வேற வாங்கிடலாம்.”
“ஆகட்டும்.”
இடது கையால் அவனது வலது தோளைத் தொட்டான்.
“ஒண்ணு மட்டும் தெளிவா கேட்டுக்கப்பா. டிராஃப்ட் வந்ததுக்கப்புறம்தான் தொழிலையே ஆரம்பிப்பான் இந்த முத்திருளாண்டி. இப்ப சொல்லு, பலியாடோட பேர் என்ன?”
“ஸ்ரீதுளசி! மாஜி நட்சத்திரம்.”
“அப்ப சொன்ன காரணத்தைவிட வேற பெரிய காரணம் இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, வழக்கத்தைவிட பணம் பெரிதாயிருக்கே?”
“நிஜம்தான். பெரிய இடத்து விவகாரங்கள் சிலதைத் தெரிஞ்சு வச்சிருக்கிற பெண். அவள் உயிரோட இருக்கிறது தப்பு என்கிறதாம் உபநிஷத்து. இது எப்படியிருக்கு?”
“இன்னும் ஒரு விசயம் சொல்லிவிடு.”
”எது?”
“பெரிய இடத்து விவகாரம்னு சொன்னியே, அவ்விடத்துப் பேரென்ன?”
“இதுதானே வேண்டாம்கிறேன். இதபாரு. நீ டிராஃப்டை மட்டும் ஆராயுறதோட நிறுத்திக்க. மேல் விபரம் எதையுமே ஆராய ஆசைப்படாதே.”
”சரி, விடு. காரியத்தை எப்ப முடிக்கணுமாம்?”
“புதன்கிழமை பிளைட்லே உனக்கு ஸ்ரீதரபுத்திரன் பேர்ல டிக்கெட் வாங்கிடறேன்.”
“அப்ப, விஷயம்.”
“இன்னைக்கே முடிச்சிடு.”
“அவ்வளவு சீக்கிரம் முடியணும்னா இது போதாதுன்னு நினைக்கிறேன்.” – உதட்டைச் சுழித்துச் சிரித்தான். “அதுக்காகப் பணம் கேட்கிறதாக நினைக்காதே! வேற சில சங்கதிகள்…”
“அட உனக்குத்தான் தெரியுமேப்பா”- கண்ணடித்தான்: “சரளா எப்படி இருக்கா? சவுக்கியமா?” என்றான் அர்த்தமாக. “ஒண்ணும் பிரச்சினையில்லையே?”
“சே சே! ஞாயிற்றுக்கிழமையில்கூட டாக்டர் சோதனைக்குப் போய் சர்ட்டிபிகேட்டை வாங்கி வந்திருக்கிறாளே.”
“போன ஞாயிறா? நடுவிலே ஏழு ராத்திரி இருந்திருக்கேப்பா”
“ஏன் பயப்படறே?”
“பின்னே? போன தடவை டாக்டருக்குத் தண்டம் அழும்படி ஆயிற்றே, அதனால்! இப்பவும் அப்படி ஆயிடக் கூடாது பார். அதுதான்.”
“நீ ஏன் பின்னே அவளையே தேடி அலையறே?”
”வேற வழி?”
“ஏன் ஊரிலே வேற பெண்களுக்கா பஞ்சம்? இந்தத் தடவை கொஞ்சம் புதுசாய் முயற்சி பண்ணிப் பாரேன். புதுசாய்- இளசாய் எத்தனையோ இருக்கே”
பார்த்தான்.
‘புதுசாய் இளசாய்’ என்று அவன் சொன்ன விதத்துக்கே இவனிடம் உணர்ச்சி முழுசாய் எழுச்சி பெற்றுத் திணறியது.
”எங்கே?” – ஆவலாய் கேட்டான்: “எங்கே இருக்கு?”
“நீ பூப்பறிக்கப் போகிற இடத்திலேயே இருக்கு. அந்த ஸ்ரீதுளசியோட மகள். பேரு கலையரசி. சுருக்கமாக, கலை: பதினாறு: நிறையப் பேசும் பதினாறு” – அழுத்தமாகச் சொன்னான்: ”அவளை அடைஞ்சாதான் நீ ஆண்பிள்ளைன்னு ஒத்துப்பேன்.”
‘வாவ்” என்றான் முத்திருளாண்டி.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.