பேசும் பதினாறு





(1981ல் வெளியான பாக்கெட் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
ஜேம்ஸ்பாண்ட் என வழங்கப்படும் என் ஆபீஸ் பையன் ஜேம்ஸ் படு சுறுசுறுப்பாக வாசலில் நின்றிருந்தான்.

அடிக்கடி சீப்பு எடுத்து வாரிக் கொண்டான். சட்டையை நீவிவிட்டுக் கொண்டான். இல்லாத முகத்து வியர்வையைக் காரண மின்றிக் கைக்குட்டையில் ஒற்றினான்.
அடலசண்ட் பருவம். கண்ணில் படுகிற பெண்கள் எல்லோருமே தன்னை லவ் பண்ணுகிறதாக நினைக்க வைக்கும் ரெண்டும்கெட்டான் பருவம்.
“டேய் ஜேம்ஸ்பாண்ட் உள்ளே எனக்காக வந்து காத்திருக்கும் பெண்ணின் பெயர் என்ன?” என்று கேட்டு ‘ஙே’ என்று விழிக்க வைத்தேன்.
“எப்படி தெரியும்? அவன் சொல்லல்லியே?”
“நீ உருப்பட மாட்டே, ஸ்வப்னா. இதைக்கூட கண்டு பிடிக்க முடியல்லேன்னா நான் எல்லாம் என்ன துப்பறிவாளன்? போடா முண்டம்.போயி ஒரு சிகரெட் வாங்கி வா, ஓடு” என்று துரத்தினேன். ஸ்வப்னா பின் தொடர உள்ளே போனபோது-
அங்கே அமர்ந்திருந்த அவளைப் பார்த்து, எகிறிக் குதித்து மேல்தளத்தில் தலையை மோதிக் காரை பெயர்ந்தது என்றெல்லாம் சொன்னால் அது சும்மா. கப்ஸா. ரீல்.
ஆனால், வியந்ததென்னவோ நிஜம்.
அங்கே தேடிய பெண், இங்கே அமர்ந்திருந்தால் வராதா பின்னே ஆச்சரியம்?
“வாங்க” என்று எழுத்து வரவேற்றாள். “உட்காருங்கள் சார்” என்று உபசரித்தாள்.
“இது நல்ல கண்ணராவி…” – சிரித்தேன். ”என் ஆபீஸுக்குள்ளே உட்கார்ந்து என்னையே வரவேற்கிறாயா, கலை?”
வியப்பு முகத்தில் தெரியக் கேட்டாள்: ”கலை?”
“உன் பெயர் அதாவது, முழுப் பெயர் கலையரசி. பிரபல சினிமா நடிகை, மாஜி நட்சத்திரம் ஸ்ரீதுளசியின் ஒரே மகள்.”
“ஆச்சரியப்பட மாட்டேன். என் அம்மா எல்லாத்தையும் சொல்லிருப்பா. சரி, விடுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோமா?”
அசையும் நாற்காலியில் அமர்ந்து, அரைவட்டம் போட்டு ஆடியவாறு, கைகளை மார்பில் மடித்துப் போட்டு அவளை ஆராய்ந்தேன்.
சரிந்து. மார்புகளை மேஜை விளிம்பில் குந்த வைத்திருந்தாள். அந்தப் பெரிய சட்டையில் அலட்சியமாக அவள் பிரித்து விட்ட மேல் பித்தான்கள் இரண்டும், அவள் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை என்றன.
சின்ன உதடுகளுக்குச் சற்றே கீழேயிருந்த கறுப்புப் புள்ளி நிஜமான மச்சமா. அல்லது சாந்துப் பொட்டா என்று நான் முழுமையாக ஆராயுமுன் –
ஸ்வப்னா ஒரு சீட்டில் எதையோ எழுதி எச்சரிக்கையாக நீட்டினாள்.
“அப்படி முறைக்காதீங்க அவளை. கோபம் வரும் எனக்கு”
‘ஆ..ஹ்’ – அலட்சியமாகக் கிழித்துப் போட்டேன். அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.
குளுகுளுவென்று பார்வையிலேயே என்னைக் கொன்று கொண்டிருந்தாள்.
“சரி” – நிமிர்ந்தேன். “விஷயத்திற்கு வருவோமே.”
“வரலாமே. நீங்க லண்டன் ரிடர்ன்ட் துப்பறியும் மேதைன்னு கேள்விப்பட்டேன்”
உச்சந்தலையில் சிலீர் என்று குளிர்ந்தது:
“உங்களிடம் ஒரு விஷயமாக கன்சல்ட் பண்ணணும்” என்றவள், ஸ்வப்னாவைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
“பரவாயில்லை. அவள் என் பி.ஏ. தான். அவளுக்குத் தெரியாத ரகசியமில்லை. யூ.ஸீ. நான் பல ஜோலிக்காரன். சமயத்தில் மறந்து விட்டால், இவள்தான் நினைப்பூட்டி விடுவாள். சொல்லுங்க” என்ற நான், அவள் சின்ன வயதை உத்தேசித்து மாற்றினேன்: “சொல்லு.”
“ஒரு பெரிய தப்புப் பண்ண வேண்டியிருக்கு. அதுவும் மாட்டிக்காமல் செய்ய வேண்டியிருக்கு. அதுக்கு நீங்கள்தான் வழி சொல்லித் தரணும்.”
சிரித்து விட்டேன்.
“ஸாரி. நடந்த, நடக்கிற தப்புகளைக் கண்டு பிடிக்கிறது தான் என்னுடைய வேலையே தவிர தப்பு நடக்க வழி சொல்லுகிறது இல்லே. மன்னிச்சுக்க. உனக்கு உதவி செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்” – உள்ளங்கையை உயர்த்தினேன். ”நீ போகலாம்.”
“நோ பாஸ். வந்த கேஸை விரட்டியடிக்கிறது தப்பு. இந்த கேஸை நீங்க ஏத்துக்கத்தான் வேணும்” என்ற ஸ்வப்னாவை முறைத்தேன்.
“முடியாது சிறுமியே, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.”
“திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டா ஆயிடுச்சா? உங்களால் முடியல்லேன்னா சொல்லுங்க. இந்த வழக்கை நானே எடுத்து நடத்தறேன்.”
“செய்யேன்” – என்றவன் பரிதாபமாக அந்த கலையைப் பார்த்தேன்: “பாவம், இளம் பெண்ணே! என் இனிய பேசும் பதினாறே! உன் தலைவிதி இப்படி ஆகும்னு இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? ஹும். போ.”
கிளம்பியவள், மீண்டும் அமர்ந்தாள்.
“அம்மாவைப் பார்க்கப் போனீங்களே, என்ன சொன்னாங்க?”
“சொல்லல்லே. கொடுத்தாங்க. சுடச்சுட இட்லிவடை சாம்பாரிலே ஊறப் போட்டுக் கொடுத்தாங்க. தின்னோம். காப்பி சாப்பிட்டோம். பை பை சொன்னாங்க. கிளம்பி வந்துட்டோம்”. கைகளை விரித்தேன்: “தெட்ஸ் ஆல்.”
“நம்ப முடியல்லே. ஆனாலும், நம்பறேன். எனக்கு உங்க உபதேசம் தேவை. எவ்வளவு பணம் வேணுமின்னாலும் தரேன்.”
”பணம்? கொடு; வாங்கிக்கிறேன். ஆனா, தேவை என்னதுன்னு தெரிஞ்சுகிறதுக்கு முன்னால உதவுவேனா, மாட்டேனான்னு சொல்றதுக்கில்லே. ஸாரி.”
“அதுதான் சொன்னேனே சார் ஒரு சின்னத் தப்புப் பண்ணணும். அதுவும், மாட்டிக்காமல் செய்யணும். அதுக்கு நீங்க வழி சொன்னா போதும்.”
“நீ ஏம்மா அவரை கெஞ்சிட்டிருக்கே. நான்தான். உதவறேன், உன் கேஸை நான் எடுத்துக்கிறேன்னு சொன்னேனே? என்னைக் கேளு. இப்ப சொல்லு. சின்னத் தப்புன்னா? காதல் விவகாரமா?”
“இல்லே,கொலை.”
விலுக்கென்று நான் நிமிர-
எழுந்தே நின்றுவிட்ட ஸ்வப்னா – பெரிதாக அலற அவள் வாயைத் திறக்கவே, சுட்டு விரலை உயர்த்தி மடக்கி, வாயை மூட வைத்தேன். அலறலை நிறுத்தினேன்.
“பெண்ணே! கத்தாதே. எனக்கு உதவியாக வருகிறவளானால், கொலையையே நேரில் பார்த்தால்கூட அதிர்ச்சியில்லாமல் பார்க்கிற துணிச்சல்காரியா இருக்கணும்.இப்படி ‘கொலை’ என்கி வார்த்தைக்கே அலறக் கூடாது. டிஸ்மிஸ் பண்ணி விடுவேன். ஜாக்கிரதை. நீ சொல்லும்மா. எதுக்காகக் கொலை செய்ய ஆசைப் படறே?”
“சும்மா ஒரு மன மாற்றத்திற்காகத்தான்… ஜஸ்ட் லைக் தெட்.”
“என்னம்மா இது! கொலை என்கிறது எவ்வளவு பெரிய விஷயம்! என்னமோ இட்லிக்குக் கார சட்னி தொட்டுக்கப் போறன்கிற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றே?”
“எப்பவோ செய்திருக்க வேண்டிய கொலை. இலக்கணம் தெரியாததனால் தவிர்த்தேன். இப்ப உடனே செய்தே ஆகவேண்டிய கட்டாய காலகட்டம். அதான் யோசனை கேட்க வந்தேன்.செய்யணும். அவசரமாக இந்தக் கொலையை நான் செய்தே ஆகணும்.”
“என்ன ஸ்வப்னா, கேஸை எடுத்துக்கப் போறியா?” என்றதும்-
அவசரமாகத் தள்ளி நின்றாள்.
“அது சரி. மனநிலை உற்சாகத்துக்காக கொலை செய்யப் போறேன்னே: சரி, யாரைன்னு சொல்லல்லியே?”
“எங்க மம்மியை.”
“வாட் டூ யூ மீன்? உங்கம்மாவைன்னா?”
“பிரபல மாஜி நட்சத்திரம் ஸ்ரீதுளசி என்கிற அம்மாளை- என்னைப் பெற்ற தாயைக் கொல்லணும். வெள்ளைப் பாஷாணமாமே, அது எங்கே கிடைக்கும்?”
திணறிப் போனேன்.
அழுத்தமாகச் சொன்னேன்: ‘கெட் அவுட் ‘
“வாட் டூ யூ மீன்?”
ஸ்வப்னா தமிழில் மொழிபெயர்த்து, “வெளியே போடி” என்றதும்-
கோபமாக எழுந்து எங்களையே கொல்லுவது போல முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறிப் போனாள்.
நாங்கள் அவசரமாக வெளியே பாய்ந்தபோது-
அவளுடைய பன்ரொட்டி போன்ற இறக்குமதி கார் குபீரென்று பாய்ந்து, சரேலென்று எங்கள் மீது காற்றை வாரி வீசிவிட்டுப் போயிற்று.
காரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வரும் ஜேம்ஸ் பாண்ட் தலையில் தட்டி சிகரெட்டைப் பிடுங்கினேன்.
பற்றவைக்க முயன்ற முயற்சியில் கை நடுக்கத்துக்கு நெருப்பு ‘தை தை’ என்று குதித்துப் பற்றவைக்க மறுத்தது.
தீப்பெட்டியைப் பிடுங்கி ரஜினி ஸ்டைலில் ஜேம்ஸ்பாண்டு கிழித்துப் பற்றவைக்கவே, சுகமாகப் புகையை இழுத்து வாயும் மூக்குமாக வெளிவிட்டேன்.
– தொடரும்…
– 1981, பேசும் பதினாறு (பாக்கெட் நாவல்), முதற் பதிப்பு: ஜூன்2013, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.