பெரும்பூதூர் உடையவர்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பெரும்பூதூர் என்னும் ஊரிலே உடையவர் என்று பெயருடையவர் ஒருவர் முன்னாளில் இருந்தார். அவர் பேரறிவும் நல்லொழுக்கமும் அமையப் பெற்றவராக இருந்தார். மறை முதலிய நூல்களை ஓதியுணர்ந்தமையின், அவர் திருந்திய மனநலம் பொருந்தியவராக இருந்தார். திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, பெரிய நம்பி முதலிய திருமாலடியார்களை அவர் போற்றி வழிபட்டமையின் அவருடைய உள்ளமும் திருமாலை நாடியது. அதனால் நாளும் அப்பெருமானை வழிபட்டு நின்றார்.
பெருமாளைத் தாம் போற்றிய தோடமையாது மற்றவர்களையும் போற்றுமாறு செய்தார். அதனால் திருமாலைப் போற்றும் அன்பர்கள் கூட்டம் மிகுதிப்பட்டது. பலருக்கும் உடையவர் ஆசிரியரானார். உடையவரின் பெருமை உலகிலே உயர்ந்தது. நாடெலாம் திருமாலைப் போற்றி நன்மையை அடைந்தது.
உடையவர் திருமாலைப் போற்றியபடியால் உலகத் திற்கும் நன்மையை உதவித் தாமும் நன்மையைப் பெற்றார். அவரை இன்றும் உலகம் , ‘எம்பெருமானார்’ என்றும், ‘இளையாழ்வார்’ என்றும் ‘பாடியகாரர்’ என்றும் போற்றி வழிபடுகின்றது. அக்காலவுலகில் நிகழ்ந்த திருமாலைப் போற்றுதல் ஒளவையார் காலத்தில் சிறிது குறைவுபட்டதாகையால் இவ்வாறு, ‘திருமாலுக் கடிமை செய்’ என்று கூறியருளினார்.
“திருமாலுக் கடிமை செய்” (இ-ள்) திருமாலுக்கு – விட்டுணுவுக்கு; அடிமை செய் – தொண்டு செய்வாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,