பெருமை – ஒரு பக்க கதை





ஏங்க… நம்ம பக்கத்து வீட்டு நரேனை அவங்க ஆபீஸ்ல வெளிநாட்டுக்கு அனுப்புறாங்களாம்…
அவங்க அம்மா பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க.. நம்ம சுரேஷும் அவன் கூட ஓண்ணா படிச்சு அதே கம்பெனியில தானே வேலை செஞ்சிட்டிருக்கான்.. அவனுக்கு ஏன் ஆஃபர்
வரலை… தன் பிள்ளையைப் பற்றி அங்கலாய்த்தாள் கோமதி…
ஏய் மெதுவா பேசு… பக்கத்து ரூம்ல தான் இருக்கான். காதில விழுந்தா மனசு கஷ்டப்படுவான்.. இவனுக்கு அந்த வாய்ப்பு வந்திருந்தா போகமாட்டானா. முன்னே பின்னே வரலாம்.படிப்பிலயும் இவன் ஆவரேஜ் தானே…எல்லாத்துக்கும் பிராப்தம்னு ஓண்ணு இருக்குல….
ஒரு அப்பா ஸ்தானத்தில அங்காலய்ப்பை ஒரு அளவோடு சொன்னார் சிவராமன்.
அப்போது மொபைல் போனில் சுரேஷ், நரேனிடம் பேசிக்கு கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. நரேன். என்னைத் தான் முதல்ல கூப்பிட்டாங்கன்னு உனக்குத் தெரியுமே… நான் பாட்டுல வருஷக் கணக்கா பணத்தைச் சம்பாதிக்க வெளிநாடு போய்ட்டா.. எங்கப்பா அம்மாவை வயசான காலத்துல பார்த்துக்க யாருமில்லை நரேன்…அதான் வேண்டாம்னு மறுத்துட்டேன்.. என்று அவன் பேசிக்கொண்டே போக..
சிவராமன்-கோமதியின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
– கே.தியாகராஜன் (20-7-11)