கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 4,925 
 
 

அத்தியாயம் 1.1-1.3 | அத்தியாயம் 1.4-1.6 | அத்தியாயம் 2.1-2.3

1.4 தளிர்

இரவில் சரியாகத் தூங்காததனாலோ என்னவோ, பொழுது விடிந்ததும் தலை ஒரே கனமாகக் கனத்தது. உள்ளத்தில் குடைந்த வேதனையின் பிரதிபலிப்புப் போல உடம்பெல்லாம் குடைச்சலாக இருந்தது. வெகுநேரம் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டு இருந்தேன். குளித்து விட்டுப் பாட்டி ஈரப்புடவையை உலர்த்துவதற்காகக் கொடிக்கோல் சகிதம் வந்தாள். “ஏண்டி சுசீலா, இன்னும் எழுந்திருக்க வேளையாகவில்லையா? புக்ககம் போகும் பெண் விடிந்து ஏழு மணி வரையுமா படுத்துக் கொண்டிருப்பாள்?” என்று கடிந்து கொண்டாள்.

அவள் கடுமையினால் கண்களிலே நீர் நிறைந்து விட்டது. பழக்கமுள்ள அம்மா எத்தனை கடிந்தாலும் எனக்கு உறைக்காது. பாட்டிதான் என்றாலும் என் மனத்தை விட்டுக் காத தூரத்துக்கு அப்பால் இருக்கிறவளாயிற்றே! பழக்கம் இல்லாத இடத்தில், அன்பு செய்ய யாரும் இல்லாத இடத்தில் வந்து முள்வேலிக்குள் அகப்பட்டுக் கொள்வது போல அகப்பட்டுக் கொண்டோமோ என்று வேதனை நெஞ்சை வந்து மறித்தது.

“இல்லை பாட்டி, தலையைப் பாறாங்கல்லாகக் கனக்கிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது” என்றேன் மெதுவாக.

“அது வாயை விட்டுச் சொன்னால் தானே தெரியும்? எழுந்து வா. குளிக்க வேண்டாம். சுக்குக் கஷாயம் போட்டுத் தருகிறேன்” என்றாள் அருமந்தப் பாட்டி.

ஹேமா அன்று தலைவலி என்று படுத்துக் கொண்டது, என் ஞாபகத்தில் வராதே என்று நெட்டித் தள்ளியும் கேட்காமல் வந்தது. சே சே! அவள் யார், நான் யார்? ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வச் சீமானின் அருமைப் புதல்வியாகிய அவள் எங்கே? கேவலம் ஐநூறு ரூவாய்க்குத் தாளம் போடும் ஏழை குமாஸ்தாவுக்கு வேண்டாம் என்று சொல்லும்படியாக மூன்றாம் பெண்ணாகப் பிறந்த நான் எங்கே? இந்தச் சுக்குக் கஷாயமே பெரிதாயிற்றே!

ஊருக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளியது. கைகளையும் காலையும் நீட்டி முறித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த நான், “என்னை ஊரிலே யார் கொண்டு போய் விடுவா?” என்று கேட்டேன்.

“ஏன்? இங்கே முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கா? ஊரிலே என்ன வச்சிருக்கு? மெதுவாகப் போனால் போச்சு” என்று அவள் முடித்து விட்டாள்.

‘போல் என்ன? முள்ளின் மேல் தான் இருக்கிறேன்’ என்று கூறிவிட வாய் துடித்தது. ஆனால் பேசாமல் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டுக் கீழே இறங்கிச் சென்றேன். உடம்பு கணகணவென்று இருப்பது போல் வேறு உணர்ந்தேன்.

“ஹேமாவைப் போல நான் இங்கே படுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வேன்?”

என்னைப் பயம் பற்றியது. ஊடே இந்த நினைவு மனத்திலே வந்தது.

அன்று ஒரு கணம் மயங்கி விழுந்ததற்கு அவர் அந்தப் பாடு பட்டாரே; இப்போது நான் இருக்கும் நிலை தெரிந்தால்…? இந்த அத்தையகத்தை இனிமேல் ஆயுளிலும் எட்டிப் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடுவார்!

அச்சமும் கவலையும் சூழ நான் பாட்டி கொடுத்த சுக்குக் கஷாயத்தைக் குடித்து விட்டு மாடிக்கு வந்த சமயம், அத்தை ஓர் இளைஞனுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

“இனிமேல் பயம் இல்லை என்று டாக்டர் சொல்கிறார். இனிமேல் ஜாக்கிரதையாக அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நானும் ஊரிலிருந்து வந்த நாட்களாக அங்கே வந்து எட்டிப் பார்க்க வேணும், பார்க்க வேணும் என்று குட்டிக்கரணம் போட்டுப் பார்க்கிறேன். எங்கே முடிகிறது? நாளைக்கு நீதான் மஞ்சுவைப் போய் அழைத்து வரப் போகிறாயாக்கும்? அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? அம்மாவுக்குச் சாதாரண ஜுரந்தானே?” என்று அத்தை விசாரித்தாள்.

“அப்படித்தான் டாக்டர் சொல்கிறார். அப்பா உடம்புக்குப் புதிதாக என்ன வந்திருக்கிறது. அதே நிலைதான். ஊரிலிருந்து மாமா பெண் வந்தாளே, அவளுக்கு இருமல். அவள் கைக்குழந்தைக்கு மாந்தம். அதை ஏன் கேட்கிறீர்கள், மாமி? வீடே ஆஸ்பத்திரியாக இருக்கிறது இப்போது. சிவனேயென்று நான் டாக்டருக்காவது படித்திருந்தால் லாபமாக இருந்திருக்கும். இன்னும் மஞ்சு வேறு வந்துவிட்டால் கேட்க வேண்டாம். ஏற்கனவே துர்ப்பலம். அதிலும் இப்போது கர்ப்பிணி” என்று சிரித்துக் கொண்டே கூறிய அவன் பார்வை என் மீது பட்டு விட்டது.

“இது யார் மாமி?” என்று நான் சென்ற பிறகு விசாரிக்காமல் நேரிடையாகவே அவன் கேட்டது வெகுளியான உள்ளத்தை எனக்கு அறிவித்தது.

“இவள் தான் சுசீலா. இவளுக்குத்தான் கல்யாணம் நடந்தது” என்றாள் அத்தை.

“ஓகோ! இவள் தான் கல்யாணப் பெண்ணா? பார்க்க ஹேமாவை விடச் சின்னவளாக இருக்கிறாளே; அதற்குள்ளாகவா கல்யாணம்? மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்?” என்று அவன் விசாரித்த போது எனக்கு வெட்கமாக இருந்தது. நேருக்கு நேர் ஓர் இளைஞன் என்னைப் பற்றிக் கேட்பது இதுதான் முதல் தடவை.

“சின்னவள் என்ன? வயசு பதினாறு ஆகிறது. ஹேமா பார்க்கச் சற்றுத் தாட்டியாக இருக்கிறாளே ஒழிய, அவளை விட இவள் தான் பெரியவள். மாப்பிள்ளை பட்டணத்தில் தான் வேலையாக இருக்கிறான்” என்று பதிலளித்தாள் அத்தை.

அவன் பின்னும், “இவள் உங்களுடன் வந்தாளாக்கும்! பாவம் ஹேமா படுத்துக் கொண்டு விட்டாளே; இவளுக்கு எப்படி போது போகிறது? ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தாளோ?” என்று தூண்டித் துளைத்து விசாரித்தது, எனக்கு அவன் யாரென்று அறியும் ஆவலை மூட்டியது. அங்கு வந்து நான் ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாருமே என்னைப் பற்றி நினைக்காததை, அப்போதுதான் என்னைக் கவனித்தவன், ஒரு நொடிக்குள் இவளுக்கு எப்படிப் போது போகிறதென்று சரியாகக் கேட்டானே! இங்கு யாருக்கும் தோன்றாததை அறிந்து விட்ட இவன் யாராக இருக்கும்? என்று நான் வியந்தேன்.

“அவள் வந்த வேளையேதான் சரியாக இல்லையே! இத்தனை களேபரமாக இருக்கிறதே! ஓரிடத்துக்கும் இவளை அழைத்துப் போகவில்லை. நாளைக்கு மஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து விட்ட பிறகு தான் நீ பட்டணம் போகிறாயாக்கும்” என்று அத்தை சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டாள்.

“ஆமாம், நாளையே கிளம்பிப் போய் அவளை அழைத்துக் கொண்டு இங்கே விட்டுவிட்டு மறுபடியும் நான் புறப்பட வேண்டும். காலேஜ் திறந்து விடுகிறது. வெங்கிட்டு இல்லையாக்கும்! நான் வரட்டுமா மாமி?” என்று அவன் கிளம்பலானான்.

“போகிறாயா? மஞ்சு வந்த பிறகு முடிந்தால் வந்து விட்டுப் போ. இரேன், சாப்பிட்டுவிட்டுப் போயேன்” என்று அத்தை உபசாரம் செய்தாள்.

“இல்லை, இல்லை. எனக்குக் கொள்ளை வேலை கிடக்கிறத். இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவதற்கும் இல்லை. நான் வருகிறேன்” என்று கைபிடிச்சுவர் ஓரமாக நின்ற என்னைப் பார்த்துக் கூட அவன் விடை பெற்றுக் கொண்டான். அவனைத் தொடர்ந்து அத்தையும் கீழே சென்றாள். நான் வராந்தாவிலிருந்து அவன் வாயிலில் வந்து சைக்கிளில் ஏறிச் சென்றதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் யார் என்று அத்தையிடம் கேட்க எனக்குத் துணிவு வரவில்லை. அத்தையை ‘அம்மாமி’ என்று அழைத்தானே; ஹேமாவினுடைய அப்பா வழியில் சொந்தமாக இருக்கலாம்.

மெள்ள மெள்ள எனக்கு நினைவு வந்தது. ஹேமாவுக்கு அத்தை பிள்ளை இவனாகத்தான் இருக்க வேண்டும். மகாராஜா காலேஜில் புரொபஸராக இருப்பவர் இவன் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அம்மா ஒருமுறை பேச்சுவாக்கில் அப்பாவிடம் கூறியது கூட என் ஞாபகத்திற்கு வந்தது. “உங்கள் தங்கை யகத்துக்காரருக்கு உடன் பிறந்தவள் உண்டே, அவளுக்குப் பிள்ளை இருக்கிறான். அவா மனசு வச்சா நம் சுசீலாவைப் பண்ணிக் கொள்ளக் கூடாதா? அவளுக்கு என்ன, அழகு படிப்பு எதில் குறைவு? எல்லாம் பணத்தில் மறைந்து கிடக்கு. அப்படி ஒன்றும் அது எட்ட முடியாத சம்பந்தம் இல்லை. சொத்து, சுதந்திரம் ஒன்றும் கிடையாது. அவர் வேலையுடன் சரி. அவர்கள் பண்ணிக் கொள்கிறேன் என்றாலும் உங்கள் தங்கையும் அம்மாவும் முட்டுக்கட்டை போடுவார்கள்” என்று அவள் குறிப்பிட்டது இவனாகத்தான் இருக்க வேண்டும். “சின்னவளாக இருக்கிறாளே? அதற்குள்ளா கல்யாணம்?” என்று அவன் கேட்டதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வந்தது. பார்ப்பதற்கு நான் அப்படியா இருக்கிறேன்?

தொடர்ந்து அத்தை முதல் நாள், “இத்தனை வயசா வித்தியாசம்? மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும் கிட்டத்தட்ட” என்று கொடுத்த அபிப்பிராயம் ஏனோ என் நெஞ்சில் வந்து குறுக்கிட்டது.

ஹாலின் ஒரு புறமாக இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. அவன் கூறியது உண்மைதானா என்று ஆராயும் பொருட்டோ என்னவோ அதையே பார்த்துக் கொண்டு நின்றேன். உண்மையில் நான் அப்போது பூரணப் பொலிவுடன் விளங்கினேன் என்று சொல்ல வேண்டும். நானே என்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளவில்லை. கதைகளிலே வரும் கதாநாயகி போல நீண்ட கூந்தல், பளபளத்த சிவந்த மேனி, அகன்ற கருவிழிகள் எல்லாவற்றிலும் என் முற்றாத இளமை நன்றாகத் தெரிந்தது. நிலைக்கண்ணாடியில் என் உருவத்தில் ஆழ்ந்திருந்த நான், மனக் கண்ணாடியிலுள்ள என் கணவரிடம் எப்படிப் போனேனோ?

முதல் முதலாக அவர் என்னைப் பார்க்க வந்த போது நான் கண்ட அவர் உருவத்துக்கும், பின் கண்ட காசி யாத்திரைக் கோலத்திற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தன போல் எனக்குத் தோன்றியது. உண்மையைக் கூறப் போனால் அந்த இரு தோற்றங்களிலும் அவர் உருவம் என் மனத்தில் பதியவே இல்லை. ஆனால் ஊர்வலத்தின் போது நான் கண்ட அவர் கோலம் என்னுள் அழியாமல் உறைந்து விட்டது. அந்த மேற்கத்திய உடையில் அவர் எனக்கு அதிக உயரமுள்ளவராகக் காட்சி அளித்தார். முன் நெற்றியை மட்டும் மறைத்துக் கொண்டு இருமருங்கிலும் சற்று உள்ளே தள்ளிய கிராப்பு, அடர்ந்த புருவங்களுக்குக் கீழே கருமை பாயாத பெரிய விழிகள், அளந்து பிடித்தாற் போன்ற கூரான நாசி, சற்றே தடித்த உதடுகள், வளைவாக இரட்டை மோவாயில் வந்து முடியும் முகவாட்டம் என்றெல்லாம் என் உள்ளம் ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்தது. எப்படியும் அவரைப் பார்த்தால் எனக்குப் பொருத்தம் இல்லாதவராக மதிக்க முடியாது. நாலு பேர் நாலு விதமாகத் தான் அபிப்பிராயம் கொடுப்பார்கள். யார் என்ன சொன்னால் என்ன? அவருக்கு என்னைப் பிடித்து விட்டது. எனக்கு… எனக்கு மட்டும் என்ன? இப்போது நாங்கள் இருவரும் வாழ்வு முழுவதும் எக்காரணம் கொண்டும் பிரிய முடியாதபடி புனித ஒப்பந்தமாகிய மணமுடிப்பில் பிணைக்கப்பட்டு விட்டோம். இனிமேல் அம்மாதிரி நினைப்பது தவறு; நினைப்பது பாவமுங்கூட!

எத்தனை நேரம் இவ்விதச் சிந்தனைகளில் ஒன்றிப் போயிருந்தேனோ? ஒரு நாளும் இல்லாத திருநாளாக அத்தை என்னை அழைத்துக் கொண்டே வந்தவள், “ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னாயாமே? பாட்டி சொல்லுகிறாளே” என்று கேட்டாள்.

“ஆமாம், நானும் வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகவில்லையா?” என்றேன். அவள் குரலில் தோன்றிய பாவம் என்னை ஊருக்கு அனுப்புவதில் இஷ்டம் இருப்பதாக எனக்குத் தொனித்தது. எனக்கு அது சுதந்திர உணர்ச்சியின் மகிழ்ச்சியை அளித்தது.

“இல்லை, போகிறதானால், யார் கொண்டு விட இருக்கிறார்கள் என்று பார்த்தேன். பாட்டியை இப்போது அனுப்புவதானால் சிரமமாகிவிடும். நாளைக்கு மூர்த்தி அந்தப் பக்கந்தான் போகிறான். உன்னை ஊரிலே கொண்டு விடச் சொன்னால் தங்கமாக விட்டுவிடுவான். நாகப்பட்டினம் நாலைஞ்சு ஸ்டேஷன் தானே அப்புறம்? அண்ணாவுக்குக் கடிதம் போட்டால் வந்து அழைத்துப் போகிறான்” என்று இழுத்தாள் அத்தை.

இறக்கை கட்டிக் கொண்டாவது ஊரில் போய்க் குதித்து விட வேண்டும் என்று ஆவலுற்றுத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த நான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவேனா? ஏற்கனவே துணைக்கு வர யாரும் இல்லை என்ற பீடிகையை வேறு அத்தை போட்டு விட்டாள். அப்புறம் எப்போது நேருமோ? அதுவரை சிறைக் கைதி போல இங்கேயே எப்படி இருப்பது?

“அப்படியானால் நான் நாளைக்கே போகின்றேன் அத்தை. ஊருக்கு இன்றைக்கு ஒரு கடிதம் போட்டு விட்டால் நாளைக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போய்விடுவார்” என்றேன் ஆவல் ததும்ப.

“நிஜந்தானா? மூர்த்தியைப் பார்த்துத் தெரிவிக்க வேண்டும். அப்புறம் கடைக்குப் போய் உனக்கு… ஏதானும்” என்று இழுத்துக் கொண்டே அத்தை குண்டு குண்டென்று கீழே ஓடினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம், அத்தை” என்று அவள் வாக்கியத்தை முடிக்கு முன்னரே ஊகித்துக் கொண்ட நான் கத்தினேன்.

சற்றைக்கெல்லாம் வெங்கிட்டு என்னைப் பார்த்தவன், “நாளைக்கு ஊருக்குப் போகிறாயாமே சுசீலா? அதற்குள் என்ன அவசரம்?… உம்… அவர் ஞாபகம் வந்து விட்டதாக்கும்?” என்று குறுநகை செய்தான்.

பெரியவர்களைப் போல இவர்களுக்கு இன்னும் அந்தஸ்துக்கு வேண்டிய கபடம் உரமேறவில்லை. அதனாலேயே என்னைச் சமமாகப் பாவித்தார்கள். ஆனால் நான் அடுத்த தடவை வரும் போது இவர்களும் பெரியவர்களாகி விடுவார்கள். நிலைமைக்குத் தகுந்த கௌரவம் சமத்துவ மனப்பான்மையை ஒழித்துவிடும்!

அசடு போல் எண்ணுகிறேனே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம் பார்க்க வேண்டும்? ஒரு முறை வந்து விட்டுத்தான் எப்போது திரும்பப் போகிறோம் என்ற நிலையை அனுபவித்தேனே. “ஏதோ உடன் பிறந்தவன் பெண் வந்திருந்தாள் ஒரு மாதம்; நல்ல பெண்” என்ற மட்டிலும் வந்தேன். போகப் போகிறேன். முன்னும் இல்லை உறவு; பின்னும் இருக்கப் போவதில்லை.

அத்தை, பாட்டி பின் தொடரக் கையில் இரண்டு புடவைகளுடன் ஓடி வந்தாள். “அங்கே போய் மூர்த்தியிடம் சொல்லிவிட்டுக் கடைக்குப் போய் விட்டு அவசர அவசரமாக ஓடி வருகிறேன்… அப்பா! மூச்சுத் திணறுகிறது” என்று காரில் போய்விட்டு வந்த அத்தை சாவகாசமாகக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாள். பாட்டிக்குப் பொறுக்கவில்லை.

“எதுக்கடி பாரு, இப்போது அவளுக்குப் புடவையும் கிடவையும்? அவசரமாகக் கிளம்பி வந்துட்டான்னா உன்னை யார் என்ன சொல்லப் போகிறார்கள்? நீ செய்து கொண்டே இருந்தால் ஒரு காலணாவுக்கு உனக்கு அங்கே திருப்பிக் கொடுக்கிறவர்கள் இல்லை!” என்று பெண்ணின் சொத்துப் பறி போகிறதே என்ற முறையில் எச்சரித்தாள்.

எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. என்னுடைய அத்தை வீட்டு வாழ்வின் இறுதிச் சோதனைக் கட்டம் வந்து விட்டதென நினைத்தேன்.

“நீ சும்மா இருடி அம்மா. எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணம் ஆகி முதல் முதலாக வந்திருக்கிறாள். வெறுங்கையோடு அனுப்பினால் நாளைக்கு, அத்தை அழைத்துப் போனாளே சீராட, என்ன வாங்கிக் கொடுத்தாள்? என்று ஊர்க்காரர்களே கேட்பார்கள். இந்த கலர்கள் இரண்டும் நன்றாக இல்லை, சுசீலா?” என்று வினவினாள் அத்தை.

“ஊர்க்காரர்களுக்கென்ன? வாய்க்கு வந்ததைக் கேட்பார்கள்” என்று சுவை குன்றியவளாக முகத்தைக் கோணிக் கொண்டாள் பாட்டி.

இந்தப் புடவைகளை வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற பிரச்னை என்னுள்ளே பெரிய திண்டாட்டத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அத்தை அன்பாய் மருமகளைச் சீராட்டிவிட்டு அன்பின் அடையாளமான பரிசாக உள்ளன்புடன் இவைகளை எனக்கு வாங்கி அளிக்கவில்லை. தான் பணக்காரி என்ற கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளுடைய அகம்பாவத்தின் சின்னமாக, எங்களுடைய எளிய நிலையைக் குத்திக் காட்டும் வார்த்தைகளுடன், ஊர்க்காரர்கள் வாய்க்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு இவைகளை வாங்கி அளிக்கிறாள். இப்படிப்பட்ட பொருளை, என் மனத்துக்குச் சிறிதும் ஒவ்வாத வகையில் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன்! எவ்வளவுதான் இல்லாமையால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கண்ணியமுள்ள எவரும் தம் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் முறையில் தம்மை ஏளனப்படுத்திக் கொண்டு வரும் பொருளில் கொஞ்சமும் நாட்டம் கொள்ள மாட்டார்கள். கேவலம் அந்த நூல் புடவைகள் மிகச் சாதாரண ரகந்தான். இரண்டும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்தும் பத்தும் இருபது ரூபாய்க்கு மேல் பெறாது.

நான் போராட்டத்தில் ஆழ்ந்திருந்த போதே அத்தை தன் பரிசுப் பொருளைப் பற்றி மிகவும் சிலாக்கியமான வர்ணனைகளில் மூழ்கி விட்டாள். “நல்ல நைஸ் புடவை. ஸில்க் மாதிரி வழுவழுப்பாகவும் இருக்கிறது. துவைத்துக் கட்டவும் உதவும். இந்தக் கலர்கள் இரண்டே இரண்டு தான் இருந்தன. எனக்கு ஒன்று கொடுத்தான் கடைக்காரன். இப்போதே ஒன்றைப் பிரித்துக் கட்டிக் கொள்” என்று எனக்கு உத்தரவிட்டாள். என்ன பதில் கூறுவது என்றே எனக்குப் புரியவில்லை.

‘எனக்கு வேண்டாம்’ என்று நறுக்குத் தெறித்தாற் போல் முகத்துக்கு நேரே கூறுவதா, இல்லையென்றால் கொஞ்சமும் பிடிக்காமல் அந்தப் புடவைகளை வாங்கிக் கொண்டு வியாதியஸ்தர் துணிபோல் கூசிக் கூசி அணிவதா?

என் மனம் இரண்டுக்கும் இடம் கொடுக்கவில்லை. அந்த மட்டும் பாட்டி சமய சஞ்சீவி போல் எனக்கு உதவியாக, “செவ்வாய்க்கிழமையும் தானுமாக இன்று பிரித்துக் கட்டிக் கொள்ள வேண்டாம். புக்ககம் போகும் பெண்ணுக்கு இரண்டு சித்தாடை வாங்கும் குறை தீர்ந்தாச்சு. மாற்றி மாற்றி உடுபுடவையாக இருக்கும்” என்றாள். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவளாக நான் அவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்தேன். ஏதோ வாங்கி வைத்தேன் என்றாலும் முழு மனத்துடன் நான் அவைகளை அங்கீகரிக்கவில்லை.

“நாளைக்கு மூர்த்தி இங்கேயே வந்து அழைத்துப் போகிறேன் என்றான். வேண்டாம் அப்பா, உனக்கு எதுக்குச் சிரமம். நானே ஸ்டேஷனுக்குக் கூட்டி வருகிறேன் என்றேன். எப்படியும் இந்த வழியாகத்தான் போக வேண்டும். வருகிறேன் என்றான். ஆனால் சாப்பாட்டிற்கே வந்துவிடு என்று சொன்னேன். காலை பத்து மணிக்கு வண்டி. ஊருக்கும் போகிறாள்; ஒரு பாயசம் பச்சடியுடன் காலையிலே சமையல் செய்து விடும்படி அந்த அஸமஞ்சத்தினிடம் சொல்லு, அம்மா. ஹேமாவை இன்று பூரா நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கோ?” என்று அவசரமாக மொழிந்த அத்தை விரைந்தாள்.

பட்டணத்தின் நடுவே வந்து வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட பட்டிக்காட்டானைப் போன்று புடவையை எப்படிக் கழிக்கலாம் என்று வழி தெரியாமல் நான் விழித்தேன்.

1.5 தளிர்

மைசூரின் அழகிய விசாலமான வீதிகளுக்குக் குளிர்ச்சியையும் மனத்துக்கு ரம்மியத்தையும் தரும் வண்ணம் நின்று நிழல் தரும் மரங்களும், ஊருக்கே ஒரு கம்பீரத் தோற்றத்தை அளித்த மாட மாளிகைகளின் கூட கோபுரங்களும் என் நினைவிலிருந்தும் பார்வையிலிருந்தும் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தன. ‘வாழ்க்கையின் ஒவ்வொரு பாகமுங் கூட இப்படித்தான் கழிந்து விடுகிறது!’ என்று நெடு மூச்செறிந்த நான் வண்டிக்குள் திரும்பினேன். அதுவரை நான் எட்டிக் கூடப் பார்த்திராத இரண்டாம் வகுப்புப் பெட்டியின் மெத்தை என் மனதில் அதிகமான கூச்சத்தை உண்டு பண்ணியது. அத்தனை நாட்களில் நான் அதுபோலத் தனிமையில், இல்லை – ஓர் அன்னிய வாலிபனுடன் பிரயாணம் செய்ததில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்ட போது என் கூச்சம் பின்னும் அதிகமாகி என்னை என்னவோ செய்தது. அவ்வளவு பணம் படைத்திருந்த அத்தை கூட, என்னை அழைத்து வந்ததாலோ, அன்றி அத்திம்பேரும் வெங்கிட்டுவும் முன்னமேயே ஊர் திரும்பி விட்டதாலோ, வரும்போது மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்தாள். பழக்கமில்லாத என் நிலை அவனுக்குத் தெரிந்து விடக் கூடாதே என்று நான் அலட்சியமாக இருப்பவளைப் போலத்தான் பாவனை செய்து கொள்ள முயன்றேன். சாதாரணமாக இருக்கும் போது அழகாகத் தோன்றுபவர்கள் புகைப்படம் எடுப்பவரின் ‘இயற்கையாக இருங்கள்’ என்ற வார்த்தையில் மூன்று நாட்கள் சோகத்தில் திளைத்தது போல் ஆகிவிடுவதில்லையா? நானும் எந்தப் பாவனையும் செய்து கொள்ளாமல் இயற்கையாக இருந்திருந்தேனானால் அவன் கவனத்தைக் கவராமலிருந்திருப்பேன். இப்போது என் பாவனை பொருந்தாமலிருக்கும் முகத் தோற்றம் அவனைச் சீக்கிரம் கவனிக்கச் செய்து விட்டது!

“ஏன்? என்னவோ போல் இருக்கிறாயே? இடம் சௌகரியமாக இல்லையா? ஆமாம், அங்கிருந்து வெளியே பார்த்தால் முகத்தில் கரித்தூள் அடிக்கும். இப்படி வந்து உட்கார்ந்து கொள்” என்று அவனுக்கு எதிர்ப்புற ஆசனத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த எனக்கு, தனக்குப் பக்கத்திலேயே ஓரத்து இடத்தைக் காட்டினான் மூர்த்தி.

பெட்டியில் நான் ஒருத்திதான் என் இனத்தைச் சேர்ந்தவள். இன்னும் இரண்டே வயதானவர்கள் தாம் எங்களைத் தவிர அங்கு இருந்தனர். ஒருவர் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்க மற்றவர் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

“இல்லை, இங்கேயே சௌகரியமாக இருக்கிறது” என்று சிரமத்துடன் அவனுக்குப் பதிலளித்துவிட்டு நான் மறுபடியும் முகத்தை வெளியில் நீட்டிக் கொண்டேன்.

“இல்லை, அங்கே கரித்தூள் அடிக்கும் கண்களில். இப்படி வா! சொல்வதைக் கேள்!” என்று அவன் மிகவும் சகஜமாக எச்சரித்தது என் சங்கட நிலையை உச்ச நிலைக்குக் கொண்டு போய் விட்டது.

‘இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டுமே? எப்படிப் போகப் போகிறாய்?’ என்ற பயம் என் மனத்தில் குடியேறியது. அந்தப் பயம் ஏன் இப்படிப் புறப்பட்டு வந்தோம் என்று என்னை நினைக்கச் செய்து, முன்பின் பழக்கமில்லாத வாலிபன் அவன், அவனுடன் தனியே வழிப்பிரயாணம் செய்வதாவது? என் புத்தி ஏன் அசட்டுத்தனமாகச் சென்றது? ‘நீங்களே கொண்டு விடுங்கள், பாட்டி’ என்று பிடிவாதமாகச் சொல்லியிருக்கக் கூடாதா? இவனுடன் வர நேர்ந்த இந்தச் சந்தர்ப்பம் ஒரு சங்கடத்தை மட்டுமா தேடித் தந்திருக்கிறது? அத்தை என்னுடைய தாழ்ந்த அந்தஸ்தை விளக்கிக் காட்டுவது போல வேறு பேசிவிட்டாள். “டிக்கெட் வாங்க வேண்டாமா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை தனது பெரிய கைப்பையைத் திறப்பதற்குள் அவனாகவே கையில் இருந்த டிக்கெட்டுகளைக் காட்டி, “அவளுக்கும் சேர்த்தே வாங்கி விட்டேன்” என்றது அத்தைக்கு சற்றுச் சப்பிட்டுவிட்டதை முகம் காண்பித்து விட்டது.

“அவளுக்கும் சேர்த்தா இரண்டாம் வகுப்பு வாங்கினாய்? அவளை அழைத்துப் போக வேண்டும் என்றால் கூடவே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? பெண்கள் வண்டியிலேயோ, அடுத்த வண்டியிலேயோ உட்கார்த்தி விட்டுச் சற்றைக்கு ஒரு தரம் நீ கவனித்துக் கொண்டால் போதாதா? வீணாக ரெயில்காரனுக்குக் கொடுப்பானேன்? அந்தக் காசைக் குழந்தை கையில் கொடுத்தால் இரண்டு ரவிக்கைத் துணியாவது வாங்கிக் கொள்வாளே?” என்று அத்தை ஒரு குட்டிப் பிரசங்கமே அல்லவா செய்து விட்டாள்?

நான் இந்தச் சௌகரியங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அருகதை இல்லை என்று அறிவித்துங்கூட அவன், “பரவாயில்லை மாமி. என்னையே அப்பாதான், இந்த முறை ‘ஸெகண்டு கிளாஸில் போ. திரும்பி உடனே நீ கிளம்ப வேண்டும். தவிர மஞ்சுவும் ஒன்பது மாதக்காரி’ என்று சொன்னார். அவரே சௌகரியமாகப் போ என்று கூறும் போது, நானாகக் குறைத்துக் கொள்வானேன் என்று தான் வாங்கினேன்” என்று சிரித்து மழுப்பி விட்டான். ஏற்கனவே நான் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறேன் என்று கொஞ்சமும் அவள் அறியவில்லை? பணச் செருக்கும் அகம்பாவ அழுத்தமும் வேரோடி இருக்கும் நெஞ்சுக்கு எதிராளியின் தாங்காத மனசை ஏளனம் செய்வது போல் பேசுவது தவறு என்று படவே படாதோ? அத்தையாம் அத்தை! உயிரே போவதாக இருந்தால் கூட இவள் காலடிக்கு வரக் கூடாது!

“சொல்லச் சொல்ல அங்கேயே உட்கார்ந்திருந்தாய் அல்லவா?” என்று அவன் கேட்கும்படி பாழாய்ப்போன புகை என் முகத்திலே வந்து தாக்கிக் கண்களில் கரித்தூளை விசிறி விட்டது. தோல்வியை ஒப்புக் கொள்வது போல் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன். விழிக்கவே முடியாதபடி எரிச்சல் கொளுத்தியது. முன்பு அவன் காட்டிய இடத்தில் போய்ச் சாய்ந்து கொண்டேன்.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த அவன், “தண்ணீரை விட்டுக் கண்களை நன்றாக அலம்பிவிடு. சுமாராக இருக்கும்” என்று கூஜாவைத் திறந்து தம்ளரில் தண்ணீர் விட்டுக் கொடுத்தான். கண்களைக் கழுவித் துடைத்துக் கொண்டு நான் உட்கார்ந்து கொண்டேன்.

அவன் காட்டிய அந்தப் பரிவு எல்லோரிடமும் சரளமாகப் பழகும் இவன் சுபாவ குணமா அல்லது வேண்டுமென்றே காட்டுகிறானா என்று எனக்கு விளங்கத்தான் இல்லை. ‘ஊர் போய்ச் சேருவதற்கு இன்னும் எத்தனை நேரம் இருக்கிறதோ? இடையில் காபி, சாப்பாடு என்று வேறு இருக்கின்றன. முழு முட்டாளாக இப்படியா வேண்டுமென்று சங்கடத்தில் சிக்கிக் கொள்வேன்?’ என்று உள்ளூறத் தவித்துப் போனேன். அவன் ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டுமே என்று நான் வேண்டிக் கொள்ளப் போக, அவன் என்னைக் கேள்வியாகவே கேட்டுத் துளைத்து விடுவான் போல் இருந்தது.

“உங்கள் வீட்டிலே நீ ஒரு பெண்தானா?” என்று முதலில் கேட்டான்.

“இல்லை. எனக்கு அக்கா இருவர் இருக்கிறார்கள்” என்று நான் முணுமுணுத்தேன்.

“ஏதோ தனியாகப் போவதற்குப் பேச்சுத் துணையாகத் தமாஷாக இருக்கும் என்று உன்னைக் கொண்டு விடுகிறேன் என்று ஒப்புக் கொண்டேனே? நீ பேசா மடந்தையாக இருக்கிறாயே? இந்தக் காலத்தில் எந்தப் பெண் இப்படிப் பட்டிக்காட்டு அம்மாமியாக இருக்கிறாள்? ‘ஸ்கூல் பைனலில் அந்த ஜில்லாவுக்கே முதலாக மார்க்குகள் வாங்கித் தேறியிருக்கிறாள் சுசீலா. மாமா காலேஜில் சேர்க்காமல் இருக்கிறார்’ என்று உன்னைப் பற்றி ஹேமா கூட முன்பே சொல்லியிருக்கிறாளே? அப்படிப் படித்த பெண்ணாகவே நீ இருக்கவில்லையே?” என்று அவன் என்னைப் பார்த்து நகைத்தான்.

‘பட்டிக்காட்டு அம்மாமி’ என்று அவன் கூறியது என் உள்ளத்தில் உறைத்தது. என் கணவர் கூட இப்படி இருக்கும் பெண்களைக் கண்டால் பிடிக்காது என்றாரே! அந்தக் கணக்கில் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் செய்து கொண்டேனே ஒழிய, அசடு, இப்போது சமயம் வாய்த்திருக்கும் போது பயந்து பயந்து சங்கோசப்பட்டுச் சாகிறேனே? அவரைப் போலப் பண்படைந்த மனமுள்ளவன் போல் இருக்கிறது இவன். இவன் வாயிலிருந்து பட்டிக்காட்டு அம்மாமி என்ற பட்டப் பெயர் கேட்கும்படியாக பித்துக்குளியாக நடந்து கொண்டு விட்டேனே?

என் அசட்டுக் கூச்சத்தைத் தூசியை உதறுவது போல உதறித் தள்ளி விட்டுப் பதில் கொடுக்க நான் முடிவு செய்த போது அவன் என்ன கேள்வி கேட்டான் என்று மறந்துவிட்டேன். ஆனால் மூர்த்தி அவ்வளவு தூரம் நான் சங்கடப்படும் வரை வைத்துக் கொள்ளவில்லை. அதற்குள் இன்னொரு கேள்வி விடுத்து விட்டான்.

“சென்னையில் உங்கள் வீட்டார் எங்கே இருக்கிறார்கள்?” என்று வினவினான்.

நான் பதில் கூற வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட பின் அவன் கேட்ட கேள்வி எனக்கு விடை தெரியாததாக இருந்தது! சென்னையை நான் முன்பின் பார்த்தவள் அல்ல. விலாசங்கூட எனக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “நான் இதுவரை அந்தப் பக்கம் சென்றதில்லை. ‘ராதாராம் எலக்ட்ரிகல்ஸ்’ என்று இருக்கிறதாமே? அந்தக் கம்பெனி சொந்தக்காரர் அவருடைய தமையன் தான்” என்றேன்.

அவன் சட்டென்று நிமிர்ந்து கொண்டு, “என்னது? ராதாராம் எலக்ட்ரிகல்ஸ் என்றா சொன்னாய்? அப்படியானால் கேசவமூர்த்தியின் தம்பியா?” என்று கேட்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“தெரிந்திருக்கிறதே உங்களுக்கு?” என்று மலர்ந்த முகத்துடன் நான் திருப்பிக் கேட்டேன்.

“அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை. கேசவமூர்த்தியின் மைத்துனியை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரி இளைஞர்கள் சங்கத்தின் ஆதரவிலே நடக்கும் விவாதங்களுக்கு ராஜதானிக் கல்லூரியிலிருந்து அவள் அடிக்கடி வருவது வழக்கம். அந்த முறையிலே எனக்குப் பரிச்சயம் உண்டு. அவள் பிரஸ்தாபித்துக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை கேசவமூர்த்தியின் சகோதரர் என்று பொருட்காட்சி ஒன்றில் அவள் எனக்கு அறிமுகம் செய்வித்ததாகக் கூட ஞாபகம் இருக்கிறதே?” என்று அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்தான்.

மதனியின் தங்கை ஒருத்தி அவர்களுடனேயே இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள் என்று அப்பா சொல்லியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அவளாகத்தான் இருக்க்ம் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

யோசனை பலனளித்து விட்ட மகிழ்ச்சியுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவன், “ம்… நினைவுக்கு வருகிறது. உன்னுடைய ‘அவர்’ பெயர் ராமநாதன் தானே?” என்று புன்னகை செய்துவிட்டு, “அவர் என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டான்.

இதுவரையில் நான் உதறித் தள்ளியிருந்த பாழும் சங்கோசம் என்னை மீண்டும் முகமூடியிட்டு விட்டது. காலில் கௌவும் அட்டையை உதறித் தள்ளுவது போல் அத்தனை சிரமப்பட்டு அதை உதறித் தள்ளியிருந்தேன். ஆனால் அவருடைய பேச்சை யார் எடுத்தாலும் உள்ளத்திலே பொங்கி வரும் உணர்ச்சி என் சரளமான போக்கில் நெளிவையும், குழைவையும் கொண்டு வந்து விடும் போது, குறும்புச் சிரிப்புடனும், குறுகுறுத்த விழிகளுடனும் எனக்கு அதிகம் பழக்கமில்லாத இளைஞன் ஒருவன் கேட்கும் போது நான் என்ன செய்வேன்? அதுவும் வேற்று ஆடவர் எவருடனும் தனிமையில் பழகும் அனுபவம் எனக்கு முற்றும் புதிதாக இருக்கும் போது? அவன் கேட்டுவிட்டு என்னையே வேறு புன்னகை மாறாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

பட்டுத் துணியால் மூடியது போல் மனம் கதகதக்க எப்படியோ கூட்டிக் குழப்பி அவர் எங்கு வேலையாக இருக்கிறார் என்று நான் ஒரு வழியாகக் கூறினேன். “அப்பா…டா! இதற்கு இத்தனை யோசனையா?” என்று கேட்டுவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான்.

இந்தப் புதிய அனுபவம் ஒரு சமயம் தேவலை போலும் இருந்தது. ஒரு விதத்தில் பயமாகவும் இருந்தது.

சற்றும் எதிர்பாராத விதமாக மூர்த்தியிடத்தில் என்னுடைய புரியாத சந்தேகங்களைத் தெளிவிப்பது போலும், அவன் மனநிலை எனக்கு நன்கு விளங்குவது போலும் தொடர்ந்து நாங்கள் பெங்களூர் வந்து வண்டி மாறிய பின் ஓடும் ரெயிலில் ஒரு சம்பவம் நேரிட்டது.

நாங்கள் அந்தப் பெட்டியில் வந்து ஏறும் போது ஏற்கனவே ஒரு ஆடவனும் இளநங்கை ஒருத்தியும் அதில் இருந்தார்கள். அவள் கன்னட நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவள் முகமும் அணிந்திருந்த ஆபரணங்களும் விளக்கின. சோகம் சூழ்ந்த அவள் முகத்தோற்றம் கல்வியோ நாகரிகமோ சிறிதும் இல்லாதவளாகவும், அறியாமை மெத்த நிரம்பினவளாகவும் தோன்றியது. அந்த மனிதன் நாகரிகமாக உடையுடுத்து நல்ல தேகக்கட்டு வாய்ந்தவன் போல மீசையும் கிருதாவுமாகத் தென்பட்டான். நானும் மூர்த்தியும், ஆமாம், உம் என்று பேசிக் கொண்ட மாதிரியில் கூட அவர்கள் பேசவில்லை. ‘வெவ்வேறு ஆசாமிகள் போல் இருக்கிறது’ என்று நான் முடிவு செய்தேன்.

“கீழே அப்படியே படுத்துக் கொண்டு விடு. இன்னும் ஆட்கள் வந்தால் படுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு மூர்த்தி மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கினான். ஆனால் எனக்குப் படுக்கப் பிடிக்கவில்லை. தூக்கமும் வரவில்லை. என்னை அப்படிக் கொட்டுக் கொட்டென்று விழித்திருக்கச் செய்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவர்கள் இருவரும் அதே நிலையில் இருந்தது தான் அது.

அது என்னவோ சந்தேகம் தட்டியது. அந்தப் பெண்ணைப் பார்த்து நான், “எங்கே போகிறாய்?” என்று கேட்டேன். அவள் பதிலுக்கு அழுது வழிந்த குரலில் கன்னடத்தில் ஏதோ சொன்னாள். என்ன சொன்னாள் என்பது எனக்குப் புரியவில்லை. “தனியாகவா போகிறாய்?” என்று அர்த்தமில்லாமல் கேட்டு வைத்தேன். அதற்கும் அவள் ஏதோ உளறிக் கொட்டினாள். அவனைப் பார்த்தால் தமிழன் போலவே எனக்குப் பட்டது. ஆனாலும் எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஏனோ வாயே திறக்கவில்லை.

என்னதான் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு சமயத்தில் அறியாமலே என்னை ஓர் அசத்தல் அசத்தி விட்டது. ஆசனத்தில் சாய்ந்தவாறே நான் கண்களை மூடியிருக்கிறேன். ‘டடக், டடக், டடக், டடக்’ என்று சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும் சப்தம் மட்டும் கொஞ்சம் நேரம் வரை என் செவிகளில் விழுந்து கொண்டிருந்தது. பின்னர் அதுவும் மெல்ல மறைந்து விட்டது. எத்தனை நேரம் நான் தூங்கி விட்டேனோ தெரியவில்லை. சப்தம் போட்ட பேச்சுக்குரல், அழுகையொலி எல்லாமாக என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன. வண்டி ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணி கன்னடத்தில் ஏதேதோ கடல்மடை திறந்து விட்டது போல் சொல்லிப் பிரலாபித்து அழுது கொண்டிருந்தாள். மூர்த்தி கீழே ஓரத்தில் தூங்கி விழுந்த கண்களுடன் அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு எல்லாம் விசித்திரமாகவும் குழப்பமாகவும் இருந்தன. ஆவலும் சந்தேகமும் பின்ன, “என்ன விசேஷம்” என்று நான் வினவினேன்.

“வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே சொல்ல மாட்டாளோ…? அயோக்கியன்!” என்று அவள் பிரலாபித்து முடித்ததும் மூர்த்தி தானாகவே கூறிக் கொண்டான். பிறகு என்னிடம் அவன் தெரிவித்த விவரம் இதுதான்:

அந்தப் பெண் எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசி. அவள் புருஷனுக்கு மைசூரை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டு நெசவு போடும் தறிகள் சொந்தத்தில் இருக்கின்றனவாம். மூன்று மாதம் முன்பு அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் உள்ள பிறந்த ஊருக்குப் பிரசவத்துக்காக வந்தாளாம். குழந்தை பிறந்து இறந்து விட்டதாம். திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்னர், அவள் புருஷன் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் தந்தி கிடைத்ததாம். வந்த சமயம் அவள் தந்தை ஊர் விவகாரத்தில் சிக்கி விரோதக்காரர்களின் தாக்குதலால் பக்கத்து நகர ஆஸ்பத்திரியில் படுத்திருந்தானாம். அவள் என்ன செய்வாள்? எப்படியோ தன்னந்தனியே பக்கத்து ஊர் வந்து ரெயிலேறி இருக்கிறாள். தவறுதலாக அறியாமல் மைசூர் செல்லும் வண்டிக்குப் பதில் பெங்களூர் வண்டியில் ஏறி விட்டாள். கிராமத்தை விட்டு வெளி உலகம் தெரியாத பெண் தானே? அத்துடன் கஷ்டநிலை வேறு. ஊர் வந்து சேரும்வரை அவளுக்குத் தவறுதல் புலப்படவில்லை. இரவு நேரத்தில் அந்தப் பெரிய நகரத்தில் வந்ததும் அவளுக்குத் திக்குத் திசை புரியவில்லை. அந்த சமயத்தில் அவன் குறுக்கிட்டிருக்கிறான். பாவம், அவள் அவனை நம்பித் தன் கஷ்டங்களைத் தெரிவித்துச் சரியான வண்டிக்கு ஏற்றித் தன்னைச் சேர்த்துவிடக் கோரியிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்கள், தோற்றம் எல்லாம் அவனை ஆசை வலைக்குள் வீழ்த்தி விடக் கூடியவனவாக இருந்திருக்கின்றன. திக்கற்ற அவள் நிலை, அறியாமை எல்லாம் அவனுக்குச் சாதகமாக இருக்கவே, தானும் மைசூர் போகப் போவதாகக் கூறித் தேற்றி அனுதாபப்படுபவன் போல நடித்து, கடத்திப் போக எண்ணியவனாகக் கன்னட நாட்டை விட்டுச் செல்லும் வேறு வண்டியில் தன்னுடன் ஏற்றிக் கொண்டு விட்டான். கொஞ்ச தூரம் வந்த பிறகு அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்ததாம். என்னிடம் தன்னுடைய ஊருக்கு வண்டி எப்போது போகும் என்று கேட்டாளாம்! நானும் தூங்கி விடவே அவன் கூறிய பதில் அவளுக்குச் சமாதானமாகத் தொனிக்கவில்லையாம். அவனும் என்ன நினைத்தானோ என்னவோ, சற்று முன் அவள் ஸ்நான அறைக்குள் சென்றிருந்த போது அவன் அவள் பெட்டி சகிதம், வண்டி நிற்கும் சமயம் சரியாக இருந்திருக்கவே, இறங்கி விட்டான். திரும்பி அவள் வந்து பார்த்த போது அவன் இருக்கவில்லை. அவள் குழப்பம் தீர்ந்து, பெட்டியைக் காணவில்லை என்று அறிவதற்குள் வண்டி ஓட ஆரம்பித்துவிட்டது. அப்புறந்தான் சத்தம் போட்டு மூர்த்தியை எழுப்பியிருக்கிறாள்.

அடுத்த தடவை வண்டி நின்றதும் மூர்த்தி அவளுடன் இறங்கிப் போய் விவரங்களைத் தெரிவித்து அவளை போலீஸாரிடம் ஒப்பித்து விட்டு வந்தான். என் மனம் எல்லாவற்றையும் மறந்து அவள் பால் இளகிவிட்டது. சுய தைரியமும், வெளி உலகில் பழகிய அனுபவம் இல்லாத பெண்கள் திக்கற்ற நிலையில் சிக்கிவிட்டால் நயவஞ்சக வலையைக் கொண்டு வீழ்த்தி விடக் கயவர்கள் காத்திருக்கிறார்களே?

“பாஷை தெரியவில்லை. போயும் போயும் ஒரு போக்கிரியிடமா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? நிர்க்கதியான அவளுடைய கஷ்டத்தைக் கேட்டாலே யாருக்கும் மனம் இளகுமே? எப்படித்தான் மோசடி செய்ய அவன் துணிந்தானோ? கண்டவர்களையும் நம்பக் கூடாது என்று சொல்வதும் சரியாக இருக்கிறது. எனக்கு அப்போதே சந்தேகம் தட்டியது” என்று என்னை அறியாமலேயே மனம்விட்டுச் சொல்லிக் கொண்டு போனேன் நான்.

இத்தனை நீளமாக முணுமுணுக்காமல் என் இயற்கையான போக்கிலே அவன் முன்னிலையில் நான் பேசியது அதுதான் முதல் தடவை.

“அவன் போயே போய்விட்டான். இனிமேல் எங்கே அகப்படப் போகிறான்? பெட்டியில் நூறு ருபாய் போலப் பணம் வைத்திருக்கிறாளாம். மூன்றாம் வகுப்பானால் கூடக் கூட்டம் அதிகம். யாரேனும் எப்படியேனும் அந்தப் பெண்ணை விசாரிக்க நேர்ந்து உளவு தெரிந்துவிடும் என்று முன் யோசனையுடன் தான் இங்கு யாருமில்லாத வண்டியில் எறியிருக்கிறான், திருடன். கவிழ்க்கும் எண்ணமும் மோசடியுமே எங்கும் மலிந்து விட்டன. முதலிலேயே சந்தேகம் தோன்றியவுடனேயே ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறேன், பார்த்தவுடனேயே யாரையும் எப்படி நம்புவது என்ற ஞானோதயம் திடீரென அப்போது குறுக்கிட்டதாம். ஏன் அப்படிச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை என்னையும் அவன் கோஷ்டியில் சேர்த்து விட்டாளோ என்னவோ?” என்று கூறிய மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

அவனுக்கு என்ன புரிந்ததோ புரியவில்லையோ. எனக்கு அவன் கூறியது எதுவும் அப்போது மண்டையில் பிடிபடவில்லை. இன்னொரு விஷயம் என் நினைவில் அப்போது உறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் இருவர் மட்டுந்தான் அப்போது அந்தப் பெட்டியில் இருந்தோம்! நானும் கிட்டத்தட்ட அவள் போன்ற நிலையில் தான் இருக்கிறேன். அநுபவமில்லாதவள். பழக்கமில்லாத பிராந்தியத்தில் பிரயாணம் செய்கிறேன். மூர்த்தியை எனக்கு நன்றாகத் தெரியாது. அவளைப் போல இவன் என்னை ஏமாற்றி மோசடி ஏதும் செய்ய முடியாது. ஆனால்… ஆனால்… நினைக்கும் போதே மனம் பயத்தால் துடித்தது. அவனோ இளைஞன். நானோ பருவ மங்கை… இதோ அருகில் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்படியே நெருங்கி என் கையைப் பிடித்தானானால்?… நான் என்ன செய்வேன்? பொறி ஒன்றில் நானே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தேன். என்னுடைய சிந்தனைக்குள் புகுந்து என்னை இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கிக் கொண்டிருந்த ‘அவர்’ நினைவு, அத்தையகத்து ஏளனம், அப்பாவின் கஷ்ட நிலை எல்லாம் என்னை விட்டு ஓடிவிட்டன. எப்படி அங்கே விட்டு நாசுக்காகத் தப்புவது என்பதிலேயே சிந்தனை லயித்தது. ‘என்னை வேறு பெட்டியில் கொண்டு விட்டு விடுங்கள்’ என்று திடீரென்று நான் கூறினால் அவன் என்ன நினைப்பான்?

என்ன நினைப்பான் என்ன? உண்மையில் குற்றமுள்ள நெஞ்சானால் ‘ஏன் எதற்கு?’ என்று ஆட்சேபிப்பான். இல்லாவிட்டால்…

இல்லாவிட்டால் மட்டும் என்ன செய்வான்?

‘சீ அசட்டுத்தனம். அப்படிக் கேட்கக் கூடாது. உண்மையில் நான் பயந்த மாதிரியாகக் காண்பித்துக் கொள்வதே ஆபத்துத்தான். அத்தகைய துடுக்குத்தனம் காண்பித்தானானால் அபாய அறிவிப்புச் சங்கிலி இருக்கவே இருக்கிறது’ என்று சற்றுத் தைரியம் கொண்டு என்னை நானே பலப்படுத்திக் கொண்டேன். “என்ன சுசீலா? அவளைப் பற்றிய சிந்தனையில் ஒரேயடியாய் ஆழ்ந்து விட்டாற் போல் இருக்கிறது?” என்ற மூர்த்தியின் சிரிப்பொலி என்னைச் சிந்தனை உலகிலிருந்து மீட்டது.

நான் எதுவும் பேசும் முன் அவனாகவே பேசலானான்.

“இம்மாதிரி சில பேர்கள் இருப்பதனால் ஆண் சமூகத்தையே எல்லோரும் சந்தேகிக்கும்படி இருக்கிறது. அவனுடைய கௌரவமான நடையும் பாவனையும் மோசடி செய்பவனாகவா காட்டின? ஏற்கனவே நம் ஹிந்து சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்கள் குறைவு. அதிலும் ஆண்கள் அவர்களைச் சகோதரிகள் என்று சமமாக எண்ணி மரியாதை கொடுக்காமல் கீழ்த்தரமாக நினைப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தைரியமும் ஓடிப் போய் விடுகிறது. நான் எவ்வளவோ முறைகள் கவனித்திருக்கிறேன்? பஸ்ஸிலோ, மற்றும் பொது இடங்களிலே சற்று நன்றாக ஆடையணிந்து கவர்ச்சிகரமாகப் பெண்கள் யாரேனும் தென்பட்டுவிட்டால், பெண்கள் முன்னேற வேண்டும், முன்னேற வேண்டும் என்று மேடைப் பிரசங்கம் செய்பவர்கள் கூட, ஏதோ காணாது கண்ட அதிசயம் போல் வெறித்துப் பார்ப்பார்கள். சகஜமாக நினைப்பதில்லை. இத்தனை நாகரிகம் வந்துங்கூட, கூட்டங்களிலோ, க்யூ வரிசையிலோ பெண்மணி ஒருத்தி நிற்க வேண்டி வந்தால் மரியாதையில்லாமல் இடித்துக் கொண்டு போகும் ஆண்களை நான்பார்த்திருக்கிறேன். உண்மையில் பெண்கள் முன்னேற வேண்டுமானால், எல்லாத் துறைகளில்ம் தங்கள் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், ஆண்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணமும், மரியாதை தவறி நடப்பதும் அகல வேண்டும்” என்றெல்லாம் மேடை பிரசங்கி தோற்று விடுவான் போல ஆவேசமாகக் கூறிக் கொண்டு போனான்.

என் சந்தேகத் திரை படீரெனக் கிழிந்தது. மூர்த்தியின் தூய இருதயத்தை நான் தெளிவாகக் கண்டேன். அடாடா, மனித உள்ளங்கள் தாம் எத்தனை விசித்திரமானவை! நான் அவன் சொல்லிலும் செயலிலும் சகஜ மனப்பான்மையைக் காட்டுவதைச் சந்தேகித்து இந்தக் குறுகிய நேரத்துக்குள் என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்! அத்தை எனக்கு உயர் வகுப்புச் சௌகரியம் தேவையில்லை என்று சொல்லியும் அவன் கேட்காமலே இருந்ததன் காரணத்தைக் கூட இப்போது வேறு வழியிலே கண்டுபிடித்தேனே; அவன் அந்தத் துர்பாக்கியவதியை எக்காரணம் கொண்டு இந்த வண்டியில் ஏற்றினானோ அது போல இவனும் நினைத்து விட்டானோ என்றல்லவா கலங்கியது பாழாய்ப் போன மனசு? அதுவும் அந்தக் காரணத்தைத் தானாகவே அவன் எனக்கு கண்டுபிடித்துச் சொன்ன போது என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது போல் பீதி கொண்டேனே!

ஆனால் அதே சமயம் அவன் என் மனத்திலுள்ளபடியே சற்றும் சிந்திக்கவில்லை என்றும், நிர்மலமாக நடந்து கொள்ளாத ஆண் சமூகத்தினிடம் அவன் சிந்தனை லயித்திருக்கிறது என்றும் இப்போதல்லவா தெரிகிறது? இருவர் மனப்பான்மைக்கும் எத்தனை வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் போல, சீர்படாத குறுகிய என் நோக்கு எங்கே? எல்லாவற்றையும் பரந்த நோக்குடன் பார்க்க்ம் அவன் சீரிய மனப்பான்மை எங்கே?

உள்ளூறக் குன்றிவிட்ட எனக்கு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசவே முதலில் அவமானமாக இருந்தது. தெளிவு கொண்டு பின், “ஆமாம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை” என்று ஆமோதித்தேன்.

என் மனோவேகம் எப்படித்தான் சென்றது என்று நானே அறியவில்லை. என் கணவர், கிராமத்துப் பெண்ணின் அர்த்தமற்ற சங்கோஜத்தையும் அளவுக்கு மீறிய அடக்கத்தையும் வெறுப்பவர். இத்தகைய மனோபாவந்தான் கொண்டிருப்பாரோ என்று மகிழ்வுடன் ஆராய ஆரம்பித்து விட்டேன்.

இந்நேரத்தில் நான் இப்படி மூர்த்தியுடன் பிரயாணம் செய்கிறேன். இந்த விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்று அறிந்தால் அவர் பெருமை கொள்வாரா?

மறுநாள் புங்கனூருக்கு எங்கள் வண்டி வந்த போது அப்பா என்னை அழைத்துப் போக ரெயில் நிலையத்திற்கு வந்திருக்கவில்லை. அத்திம்பேரின் கடிதம் அவருக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த அன்ற் கிடைக்கும் போது, நான் வருகிறேன் என்று முன்கூட்டியே அவர் எப்படி அறிந்திருக்க முடியும்?

1.6 தளிர்

அப்பாவை ஸ்டேஷனில் காணாமற் போகவே நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போய்விட்டேன். கடிதம் போய்ச் சேர்ந்திருக்காது என்ற நினைப்பே எழவில்லை. ‘உடம்பு மிகவும் அசௌகரியமாக இருக்குமோ ஒருவேளை? அப்படியானால் சுந்துவாவது வந்து நிற்பானே; ஏன் அவனையும் காணோம்?’ என்று ஒரு கணத்துக்குள் மனம் எண்ணாதவெல்லாம் எண்ணிவிட்டது.

வண்டி புங்கனூரில் இரண்டு நிமிஷத்திற்கு மேல் நிற்காது. நீண்ட பிரயாணக் களைப்புடன் எற்பட்டிருக்கும் இப்போதைய கவலையும் என்னைக் கலக்க “ஒருவரும் வரவில்லையே!” என்று கையைப் பிசைந்தேன். தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “நன்றாகப் பார்த்தாயா? பயப்படாமல் நிதானமாகப் பார். யாரும் வரவில்லையானால், நானும் இறங்கி விடுகிறேன். அடுத்த வண்டிக்குப் போனால் போகிறது” என்றான்.

‘அவனுக்கு எதற்கு என்னால் வீண் சிரமம்? ஊர் வரை வந்தாயிற்று. எனக்குத் தெரியாத இடமில்லையே!’ என்று எண்ணிய நான், “வேண்டாம், நானே ஒரு வண்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுவேன்” என்றேன்.

“அப்படியானால் உங்கள் ஊருக்குள் நான் வரவேண்டாம் என்கிறாயாக்கும்?” என்று முறுவலித்தான் அவன்.

நான் அவனுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துச் சொன்னதை அவன் அப்படி வித்தியாசமாக நினைத்துப் பேசியது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

“ஓ! அப்படி நான் நினைக்கவில்லை. எங்கள் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் நீங்கள் விஜயம் செய்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்” என்று பதிலுக்கு நானும் நகைத்தேன். அவசர அவசரமாகச் சாமான்களைக் கீழே தள்ளினோம். அந்தப் பாழாய்ப் போன ஊரில் சாமான்களைக் கொண்டு செல்ல ஒரு கூலி கூடக் கிடையாது. ஸ்டேஷன் கட்டிடத்திற்கு வெளியே நாலைந்து குதிரை வண்டிகள் மட்டும் நிற்கும். “இருங்கள்” என்று மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் வெளியே நின்ற வண்டிக்காரனை அழைத்து வரப்போன போது ஸ்டேஷன் மாஸ்டர் என்னைப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தார்.

பிறகு, “ஏம்மா அப்பா வரவில்லை? முதன் முதலில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஊரிலிருந்து வரும்போது இப்படியா அலட்சியமாக இருப்பது?” என்று கேட்டார் அந்த மனிதர்! மூர்த்தி மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டுமென்று எவ்வளவு சுளுவாக அவர் ஊகித்து விட்டார்!

‘அவர் மாப்பிள்ளை அல்ல!’ என்று கூறிவிட என் வாய் துடித்தது. ஆனால் பின் அவன் யார் என்பார்; வெறித்துப் பார்ப்பார். இந்த அநாவசிய வளர்த்தலுக்கு இடம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் பேசாமல் போவது உத்தமம் என்று மௌனமாக நான் வண்டிக்காரனை அழைத்து வந்தேன். அவனுக்குச் சாமான்களைக் காட்டிவிட்டு நான் மூர்த்தியுடன் ஸ்டேஷன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன். அவன் கொடுத்த நாகை டிக்கெட்டுக்கு விவரம் கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர், நாங்கள் சற்று அப்பால் வந்ததும், புக்கிங் கிளார்க் சுந்தரேசனிடம், “வைத்தியநாதையர் மாப்பிள்ளை கல்யாணத்தின் போது மாநிறமாக இருந்தாற் போல் இருந்ததே; இப்போது சிவப்பாக இருப்பது போலத் தோன்றுகிறதே! ஏனையா, என் கண் தான் கோளாறா! அல்லது கல்யாணம் ஆன பிறகு பிள்ளையாண்டான் சிவந்துவிட்டானா?” என்று தம் ஹாஸ்யத்திற்குத் தாமே நகைத்துக் கொண்டு அபிப்பிராயம் கேட்டது எனக்கு மட்டுமின்றி, மூர்த்திக்கும் காதில் விழுந்து விட்டது. ‘களுக்’ என்று அவனுக்குச் சிர்ப்புக் கூட வந்துவிட்டது. எனக்கோ வெட்கம், கோபம், அவமானம் எல்லாம் மேலிட்டன. ‘உங்கள் ஊர் ஜனங்கள் என்ன இப்படி இருக்கிறார்கள்?’ என்று அவன் கேட்டு நகைப்பது போல இருந்தது. ஏதோ குற்றம் செய்துவிட்டவளைப் போல நான் வண்டியில் முதலில் ஏறிக் கொண்டேன்.

‘ஜல், ஜல்’ என்று அக்கிரகார வீதியில் குதிரை வண்டிச் சத்தம் கேட்டு விட்டால் போதும், யார் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்ற சங்கதிகளை ஆவலாக அறியும் பொருட்டு அக்கிரகார மகாஜனங்கள் அவ்வளவு பேரும் தெரு வாசற்படியில் ஏதோ ஊர்வலம் காணுவதைப் போல வந்து நிற்பதும், பின் வண்டி சென்றதும் ஒவ்வொருவரும் தத்தம் அண்டை அயலாருடன் கூடி எதற்காக, யார், எப்படி வந்திருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களைக் குறித்து விவாதம் செய்துவிட்டுத்தான் உள்ளே செல்வார்கள் என்பதும் என்னை இன்னும் கலக்கும்படி நினைவுக்கு வந்து தொலைத்தன.

மூர்த்தி வேறு, வண்டி தெருவுக்குள் நுழைந்ததுமே, “இவ்வளவு பேர்கள் நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பார்கள் என்று நான் எண்ணவில்லை, சுசீலா! இரட்டைச் சாரி வீடுகளிலும் ஜனங்கள் அமோகமாக வரவேற்புக் கொடுக்கிறார்கள்” என்று எனக்குத் தகவல் கொடுத்தான். நானே பின்புறம் உட்கார்ந்திருந்தால் அவ்வளவு தெரிந்த முகங்களையும் பார்க்க நேர்ந்து வழியிலேயே அவர்களிடையே குசல ப்ரச்னங்களுக்குப் பதில் கொடுக்கவும் வேண்டி வரும்! அதற்கு இது தேவலைதான்.

வீட்டு வாசலில் வண்டி நின்றது. அப்பாவுக்கு அன்று ஏதோ காரணம் கொண்டு காரியாலய விடுமுறை என்று எண்ணுகிறேன். திண்ணையில் உள்ள பழைய சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சுந்துவுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர், வண்டி நின்றதைப் பார்த்து ஆச்சரியத்துடன் வந்தார். பின்னால் ஜகது, அம்மா எல்லோருமே வண்டிச் சத்தம் கேட்டு வந்து விட்டார்கள். பக்கத்து வீட்டில் ஜானி வந்திருக்கிறாள் போல் இருக்கிறது. அவள் வேறு என் கண்களில் முதல் முதலாகத் தட்டுப்பட்டு விட்டாள். அவள் இதழ்களில் இலங்கிய கேலியும் குறும்பும் கலந்த அர்த்த புஷ்டியான நகை, நான் ‘அவருடன்’ வந்திருப்பதாக அவள் எண்ணியிருப்பதை எனக்கு அறிவித்தது!

“வருகிறோம் என்று கடிதம் போடவில்லையே! திடீரென்று புறப்பட்டீர்களா?” என்று அப்பா கேட்டார்.

அம்மாவும் ஜகதுவும், “இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று என்னைக் கேட்காமல் கேட்டார்கள். “உள்ளே வாருங்கள், விவரமாகக் கூறுகிறேன்” என்று ஜாடையாக நான் விடுவிடென்று உள்ளே நுழைந்தேன். மூர்த்தியை அப்பா திண்ணையிலேயே ஐக்கியமாக்கிக் கொண்டு சங்கதிகளை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

“ஹேமாவுக்கு அத்தை பிள்ளையம்மா இவன். நாகப்பட்டினத்திலிருந்து தங்கையைப் பிரசவத்துக்கு அழைத்து வரப்போவதாக முந்தாநாள் வந்து சொன்னான். தற்சமயம் என்னைக் கொண்டு விட வருவதற்கு யாரும் இல்லை என்று இவனுடன் அனுப்பினார்கள். கடிதம் போட்டிருக்கிறதென்று அத்தை சொன்னாளே? அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவார் என்று நான் நினைத்திருந்தேன். யாருமே வராதது எனக்கு எத்தனை கவலையாகிவிட்டது தெரியுமா அம்மா? அப்பாவுக்குத்தான் உடம்பு சுகமில்லையோ என்று பயந்துவிட்டேன்” என்று நான் மடமடவென்று ஒரே மூச்சில் கூறி முடித்தேன்.

“ஏன், உன் பாட்டிக்கு என்னவாம், உன்னை அழைத்து வர முடியாமல்? இந்த மாதிரி அறிந்த பேர் பின்னும் அறியாத பேர் பின்னும் அனுப்ப வேண்டுமா?” என்றாள் அம்மா. எனக்கு அவள் அபிப்பிராயம் வேதனையைக் கொடுத்தது.

“இவன் ரொம்பத் தங்கமானவன் அம்மா. இவனை விட வேறு நல்ல துணை கிடைக்கவே கிடைக்காது. மிகவும் சரளமாகப் பழகும் வெகுளியான சுபாவம்” என்று அழுத்தம் திருத்தமாக நான் தெரிவித்ததைக் கண்டு ஒரு கணம் ஜகதுவும் அம்மாவும் அசந்து போய்விட்டார்கள்.

அம்மா வெறுப்பை மாற்றிக் கொள்ளாமலேயே, “போதும்! உன் அத்தையின் காரியம் உனக்குத்தான் பிடிக்கும். என்ன செய்தாலும் மெச்சிக்கொள்ள! ஏதோ மதிப்புக்கு ஒரு வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு குதி போட்டுக் கொண்டு ஓடினாயே?” என்று இடித்தது மல்லாமல் அத்தையின் பேரிலுள்ள வெறுப்பால் மூர்த்தியையும் மட்டமாக எடை போட்டது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “நான் ஒன்றும் மெச்சிக் கொள்ளவில்லை. உங்களுக்குப் பிடிக்காமல் நான் போனது தப்பு தப்பு என்று ஆயிரம் தடவை சொன்னால் கூடப் போதாது. அத்தையாம் அத்தை! ஆனால் இந்தப் பிள்ளையுடன் அனுப்பியது தவறு என்று மாத்திரம் நினைக்காதேயுங்கள். இவன் மிகவும் நல்லவன்” என்றேன் நான். மூர்த்தியின் கபடமற்ற தனத்தை அதற்கு மேல் அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

அப்பாவுடன் சாப்பிட உட்கார்ந்த மூர்த்தி, “உங்கள் பெண் என்ன சொன்னாள் தெரியுமா? நீங்கள் வரவேண்டாம், நானே வண்டி வைத்துக் கொண்டு போய் விடுகிறேன் என்றாள். நான் அப்படியே போயிருந்தால் தேவலை என்று அவள் உள்ளூர நினைத்துத்தான் கூறியிருக்கிறாள் என்பது எனக்கு அப்புறந்தான் தெரிந்தது! ஏனென்றால் நான் யாரென்று தெரிந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னை விரட்டி அடித்திருப்பார்கள் போல் இருக்கிறது” என்று நகைத்தான். அப்பா அவன் பேச்சை சட்டென்று புரிந்து கொள்ளாமல் விழித்துவிட்டு, “என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

மூர்த்தி என்னை நோக்கிவிட்டுப் பின்னும் சிரித்தான்.

உதடுகள் துடிக்க நான், “ஆமாம் அப்பா! வண்டியை விட்டு இறங்கினதுமே ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து வண்டிக்கார முனியன் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலில் வரும் போது நீங்கள் ஸ்டேஷனுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால்… இந்த ஊர்க்காரர்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே கிடையாது!” என்றேன்.

சூதுவாது ஏதும் தோன்றாத வெள்ளை உள்ளம் படைத்த என் தந்தைக்கு இது பெரிய ஹாஸ்யமாக இருந்தது. “அப்படியா கேட்டார்கள்” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

உள்ளே வந்த என்னிடம் ஜகது, “இப்படி ஓர் அந்நிய புருஷனுடன் நான் சிரித்துப் பேசினாலோ அல்லது தனி வழிப் பிரயாணம் வந்ததாகத் தெரிந்தாலோ என்னை வீட்டு வாயிற்படி ஏற்ற மாட்டார்கள். என்னதான் நாகரிகம், நாகரிகம் என்றாலும் ஒரு வரையறை வேண்டியிருக்கிறது. ஊர்க்காரர்கள் கேட்பது எப்படித் தப்பாகும்? கல்யாணம் சமீபத்தில் ஆகியிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் வருகிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்வார்கள்” என்றாள்.

கிராமத்தைத் தவிர நாலு படித்த மனிதர்களுடன் பழகி அறியாதவள் தானே அவள்? கிராமத்தோடு கிராமமாக வயல்வெளியைக் கட்டிக் கொண்டு கிடக்கும் அத்திம்பேருடைய குறுகிய மனப்பண்பு அவளுக்கு ஒத்து வருகிறது. நான் அப்படியா?

ஆறு வயசுக் குழந்தையும் எட்டு வயசுக் குழந்தையும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போது தாங்கள் குழந்தைகள் என்பதையே முற்றும் மறந்து விடுவார்கள். அப்பா அம்மாவை ‘ஆபீஸுக்கு நேரமாச்சு’ என்று விரட்டுவது போலவே அவன் விரட்டுவான். அம்மா நிஜமாக அப்பாவைக் கோபித்துக் கொள்வது தோற்று விடும்படி அவ்வளவு அபாரமாக அம்மாவாக இருக்கும் குழந்தை கோபித்துக் கொள்வாள். பெரியவர்களாகும் ஆசை, அவர்களுக்கு குழந்தை நினைப்பையே மறைத்து விடும்.

இந்தக் குழந்தைகள் நிலையில் தான் வாழ்க்கையில் இன்னும் முதற்படி கூட எடுத்து வைத்திராத நான் இருந்தேன். அக்கா, அம்மா இவர்களை விட மிகவும் பதம்பட்ட மனமும் நாகரிகப் பண்பாடும் அடைந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தேன் என்றால் மிகையாகாது. அதுவும் மூர்த்தியுடன் ஒரு நாளைப் பழக்கத்திற்குப் பிறகு என் அறிவு பின்னும் அதிகமாகி விட்டது போலும். புதுமனிதர்கள் சங்கத்தில் பழகும் மெருகு பெற்று விட்டேன் போலும் பெருமை கொண்டிருந்தேன். எனவே, ஜகதுவின் அபிப்பிராயம் தவறு, பெண்கள் முன்னேற்றம் என்ற ஆசையால் அவள் மனம் விரிவடைய வேண்டும் என்று அவளுக்கு உறைக்கும்படி, அவளை மடக்கி நான் வாயாடினேன்.

“உன்னைப் போல் இப்படி நாமே நம் அறிவையும் ஆற்றலையும் பயந்து பயந்து குறுக்கிக் கொண்டால் எப்படியடி பெண்கள் முன்னேற முடியும்? நாலு பேருடன் மனம் விட்டுப் பழகி, நாலு புது விஷயங்களை அறிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது? அந்நிய புருஷனுடன் பேசுவதே ஆபத்து என்ற கெடுதலான முறையில் ஏன் நினைக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் இந்தக் குதர்க்க புத்திதான் முன்னுக்கு வரும் போல் இருக்கிறது! எங்கள் வீட்டில் எல்லாம் இப்படி இல்லையம்மா. எல்லோருடனும் சகஜமாகப் பழகுவதை வித்தியாசமாக நினைக்க மாட்டார்கள். அதுவும் அவருக்கு எடுத்ததற்கெல்லாம் அடுப்பாங்கரையில் போய் ஒளிந்து கொண்டால் பிடிக்கவே பிடிக்காதாம்!” என்று விடுவிடென்று உணர்ச்சி வேகத்தில் அவர் சொன்னதை எல்லாம் உளறிவிட்டேன்.

அவள் ஒரேயடியாக மலைத்து விட்டாள்.

“அடியம்மா! இப்போதே என்னவெல்லாம் பேசுகிறாள் இவள்? அவருக்கு அப்படி இருந்தால் பிடிக்காது, இப்படி இருந்தால் பிடிக்காது என்று அதற்குள் என்னவெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?” என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயித்தாள்.

அத்துடன் நான் விட்டேனா? அம்மாவிடம் அத்தை வீட்டு சம்பிரமங்களையும் பாட்டி கூறிய கசப்பு மொழிகளையும் ஓர் அட்சரம் விடாமல் தெரிவித்து விட்டு, “ஏனம்மா, போயும் போயும் பணத்திற்கு அவர்களிடமா எழுத வேண்டும்? எங்கள் வீட்டில் தான் அது வேண்டாம், இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களே. நீங்கள் அத்தையிடமிருந்து எதையும் பெற்றுக் கொண்டு என்னைக் கொண்டு விட வேண்டாம். அதை விட நான் ஒன்றும் இல்லாமலே போய்க் கொள்வேன். அவர்கள் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்!” என்று எல்லாம் தெரிந்த அநுபவசாலியைப் போலப் பேசினேன்.

இவைகளுக்குப் பலன் கை மேலேயே உள்ளது என்பதை அப்போது நான் அறியவில்லையே!

“அவர்களிடத்தில் யார் தானம் கேட்டார்கள்? சமயத்தில் கொடுத்தால் நாளைக்கு அப்பா ரிடையர் ஆனவுடனே ‘பிராவிடண்ட் பண்டு’ பணம் வரும்; வட்டியும் முதலுமாக ஒரு சல்லிக்காசு மிச்சம் வைக்காமல் விட்டெறிந்து விடப் போகிறோம். உறவு மனுஷர் செல்வாக்காக இருந்தால் ஒரு சமயம், போது என்று ஒத்தாசை கேட்பது உலகத்தில் இல்லையா? நான் புடவை வாங்கிக் கொடுத்தால் அகலமில்லை, சரிகையில்லை என்று பாத்திரக்காரிக்குப் போட்டேன், கூட்டுகிறவளுக்குக் கொடுத்தேன் என்று முகத்திலடித்தாற் போல உன் அத்தை சொல்லுவாள். தங்கத்தின் கல்யாணத்தின் போது அப்படித்தான் நேருக்கு நேர் மட்டம் தட்டினாள். இப்போதுதான் ஆகட்டும், சுமங்கிலிப் பிரார்த்தனைக்கு வரச் சொல்லி ஆயிரம் தடவை வரிந்து வரிந்து எழுதச் சொன்னேனே! மதிப்பு வைத்து வந்தாளா உன் அத்தை? உன் பாட்டிக்கு என்னைச் சொல்லாவிட்டால் சாப்பிடுவது ஜெரிக்காது. அவர்களுக்கு அதே வழக்கம். அதே தொழில்” என்று அம்மா காரசாரமாகப் பேசியதுமன்றி, உன் அத்தை, உன் பாட்டி என்று அழுத்திக் கூறினாள். அங்கேயானால் பாட்டி, உன் அம்மா, உன் அப்பா என்றாள். இவர்களுக்கு நடுவே நான் இப்படியா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? அநாதி காலம் தொட்டே இருக்கும் இந்த விரோத மனப்பான்மை காரணமில்லாமலே வளர்ந்து வரும் சக்தி வாய்ந்தது. இந்தச் சிக்கலைப் பிரிக்க பிரிக்க இன்னொருபுறம் தாறுமாறாக நமக்குத் தெரியாமலே பின்னிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதை அறிய எனக்கு இன்னும் அநுபவம் கிட்டவில்லையே!

“அத்தையிடமிருந்து இத்தனை நிஷ்டூரங்களைக் கட்டிக் கொண்டு வந்தாயாக்கும்?” என்றாள் ஜகது.

எனக்கு அந்தப் புடவைகளின் ஞாபகம் வந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்றிருந்த என் தயக்கம், அத்தை இரண்டாம் வகுப்புச் சீட்டுக்கு மட்டம் தட்டிய போது, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தது. ‘அவள் அகங்காரத்துடன் அம்மா அளித்த விலையுயர்ந்த புடவையையே அலட்சியம் செய்யலாமானால், நான் நிராகரிக்கக் கூடாதா? சொன்னதெல்லாம் உறைந்திருக்கிறது. நானும் மழுங்குண்ணி மண் பொம்மையல்ல என்று தெரிந்து கொள்ளட்டுமே! இப்போது அவைகளை மூர்த்தியிடம் கொடுத்து விட்டால் என்ன? ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தந்திரமாக அவைகளைத் தட்டிக் கழித்து விட வேண்டும். ஆனால் அதற்குள் இவர்களிடம் சமாசாரத்தைக் கூறிவிடக் கூடாது. முடித்து விட்டுச் சொல்லிக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்து கொண்டவளாக, மூர்த்தி திண்ணையில் இருக்கிறானா, அப்பாவும் கூட இருக்கிறாரா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு வாசற் பக்கம் வந்தேன்!

அவ்வமயம் தபால்காரன் வந்துவிட்டுப் போயிருக்கிறான் போல் இருக்கிறது.

புன்னகையுடன் ரேழியிலே எதிர்ப்பட்ட மூர்த்தி, “ஸ்ரீமதி சுசிலா ராமநாதனுக்குக் கடிதம் இருக்கிறது” என்றான் என்னைப் பார்த்து.

அவனிடமிருந்து சாய்ந்த கையெழுத்திலே அச்சுப் போலிருந்த மேல் விலாசத்தைத் தாங்கிய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட போது, ஆனந்த மிகுதியால் என் உள்ளத்துடன் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தது. நடுங்கிய கரங்களுடனும், ஒளி மிகுதியால் அசைவற்ற விழிகளுடனும் நான் கடிதத்தை வாங்கிக் கொண்டவள், அத்துடன் இன்னொரு கார்டும் வந்திருக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அவனாகவே, “இது, நீ வருவதைக் குறித்து மாமா எழுதியிருந்த கடிதம் போலிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கொடுத்தான். அவனிடம் கூற வந்த விஷயத்தை நான் அடியுடன் மறந்து விட்டேன்.

நான் சற்றும் எதிர்பாராத விதமாக கடிதம் ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு வரியிலும் கரை புரண்ட அவரது அன்புப் பிரவாகத்திலேயே ஊறியவளாக நின்று விட்ட எனக்கு, ஜகது வந்து எட்டிப் பார்த்து, “ஆபீஸ் கடுதாசி போலிருக்கிறதே! ஏதடி? எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று கேட்டதோ, நடையிலிருந்து மூர்த்தி, “ஐந்து மணி வண்டியில் கிளம்பலாம் என்றிருக்கிறேன். வண்டி ஒன்று வேண்டுமே” என்று கேட்டதோ கனவு உலகத்திலேயிருந்து கேட்பது போல் இருந்ததில் அதிசயம் இல்லையே! அத்தையைச் சொல்லப் போனேனே? இன்னும் கொஞ்சம் கூடிவிட்ட பெருமையில் கர்வம் தலைதூக்க, ஜகதுவின் அறியாமையை ஏளனம் பண்ணும் முறையிலே, “அடி மக்கு! டைப் அடித்திருந்தால் ஆபீஸ் கடிதமாக்கும்!” என்று புங்கனூர் எலிமெண்டரி பாடசாலையில் மூன்றாம் வகுப்புக்கு மேல் எட்டிப் பார்த்திராத அவளுக்கு துணைப் பாடங்கள் யாவையும் ஆங்கிலத்திலேயே படித்து வெற்றிகரமாக உயர்தரப் பள்ளிப் படிப்பை முடித்திருந்த நான் பட்டம் சூட்டினேன்.

பெட்டியைத் திறந்து விலை மதிப்பற்ற பொக்கிஷமாகிய அந்தக் கடிதத்தைப் பத்திரம் செய்யப் போன போது தான் புடவைகள் கண்களைக் கவர்ந்து கவனத்தில் நுழைந்தன. எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா வெளியில் எங்காவது போயிருந்தாரோ என்னவோ, காணவில்லை. ஜகதுவும் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு பின்கட்டுக்குப் போய்விட்டாள். “அத்தை எனக்கு இரண்டு புடவைகளும், ஹேமாவுக்கு இரண்டும் வாங்கி வந்தாள். பேச்சு வாக்கில் என்னிடம் கொடுத்த போது நான் நாலையும் கவனியாமல் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு விட்டேன் போல் இருக்கிறது. இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் திரும்பிப் போவீர்கள் இல்லையா அங்கு? இதை தயவு செய்து கொண்டு கொடுத்து விடுகிறீர்களா?” என்று புடவைப் பொட்டலத்தை அவனிடம் நீட்டினேன்.

அவன் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தான். “நாலும் உனக்கே தான் வாங்கினாளோ என்னவோ” என்றான்.

“இல்லை, இல்லை. ஹேமாவுக்கு என்று சொன்னாளே” என்றேன் நான். அழுத்தம் திருத்தமாக.

“இம்மாதிரி புடவைகள் கூட அவள் உடுத்துகிறாளா என்ன! ஸில்க்கும் ஜார்ஜெட்டும் தவிர அவள் நூல் புடவைகள் உடுத்தியே நான் பார்த்ததில்லையே?” என்று அவன் முறுவல் செய்தான்.

என் முகத்தில் அசடு தட்டியிருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டாலும், வேண்டாத சுமை ஒன்று கழிந்தது என்று திரும்ப எத்தனித்தேன். அப்பா வெளியிலிருந்து வந்தார்.

“என்னது? புடவையா?” என்று கேட்டு அவர் அதைக் கைகளில் வாங்கு முன்னரே என் நெஞ்சம் குற்றமுள்ளதைப் போலக் குறுகுறுத்தது. தூண்டித் தூண்டி அவர் ஏதாவது கேட்டு, மூர்த்தி வாயை விட்டு விட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்துடன் நான் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு, “ஒன்றுமில்லை அப்பா. அவர் தங்கைக்கு வாங்கிப் போகிறாராம்!” என்று துணிந்து ஒரு பொய்யை, எப்படித்தான் என் நாவில் வந்தது என்று அறியவில்லை, சொல்லிவிட்டேன்.

அதிகம் எனக்குப் பழக்கமும் சொந்தமும் உரிமையும் கொண்ட அப்பாவின் கேள்விகளுக்குப் பயந்து ஒரு நாள் பழக்கமுள்ள மூர்த்தியிடம் அதிக சுவாதீனம் கொண்டாடும் முறையில் ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் புகன்றது எனக்கே பிறகு எண்ணிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.

அப்பா புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் என்னை விழிகள் அகலப் பார்த்தான். நான் என்ன காரணம் கொண்டு அவ்விதம் பொய் கூறினேன் என்று அவன் எப்படி ஊகித்துக் கொண்டிருக்க முடியும்? எப்படியோ பளுவை அவன் மீது சுமத்திவிட்டு நான் ஒன்றும் அறியாதவள் போல் உள்ளே வந்து விட்டேன்.

அவனும் குட்டை குழப்பவில்லை. சற்று நேரத்தில் கிளம்பிப் போய் விட்டான். அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்து விட்டேனே ஒழிய அந்த நிமிஷத்திலேயே மனம் நிம்மதியை இழந்து விட்டது.

பெரியவர்களிடம் மறைந்து அவசரப்பட்டு விட்டேனே! நான் கூறிய பிரகாரம் மூர்த்தி அவைகளை அத்தையிடம் கொண்டு கொடுத்தால் வேண்டுமென்று நான் செய்திருக்கும் காரியத்திற்கு என்னவெல்லாம் சொல்லுவாளோ? அவளுக்கு வேறு இந்தச் சங்கதியெல்லாம் தெரிந்து விடுமே!

சே… சே… என்ன பிசகு செய்தேன்? ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பதற்குச் சரியாக ஒரு நாழிகை வேகத்தில், இந்தக் காரியம் என்ன பலனைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்காமல் ஒன்றும் அறியாத அவனை மாட்டி வைத்தேனே? நான் சொன்ன பொய்யைக் கேட்டு அவன் என்ன நினைத்தானோ? பார்க்கப் போனால் அற்ப விஷயந்தான்.

‘ஏன் கொடுக்கக் கூடாது? அவள் குத்திக் காட்டுவது போல் எங்கள் எளிய நிலையை இடித்து விட்டு அளித்திருக்கும் பரிசை நான் நிராகரித்தது தான் சரி’ என்று ஒருபுறம் மனம் விவாதித்தது.

அப்பா அம்மாவிடம் பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தவள் கடைசியில் யாரிடமுமே தெரிவிக்கவில்லை.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *