பெண்மை





அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி.
“ஏம்பா…எத்தன முறை சொல்லியாச்சு. திருந்தவே மாட்டியா…” கடுகடு முகத்துடன் பேசினார் தலைவர் முருகையன்.
“ஏம்புள்ளய நிக்க வச்சு கேள்வி கேட்குறீங்க… எவள வச்சுருந்தா இவளுக்கு என்னவாம்…வீட்ல புருசனா நடந்துக்கிறான்ல. ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவான். இவளுக்கு என்ன கொற வச்சான்…”சேலையை வாரி சுருட்டிக்கொண்டு பேசினாள் மீனாட்சி.
“ஏம்மா…மீனாட்சி…அந்தப் பொண்ணும் உம்மவன மாதிரி எவன வேணாலும் வச்சுக்கட்டும். வீட்டுக்கு வந்தா உம் மவனுக்கு பொண்டாட்டியா நடந்துக்கட்டுமே…லாவகமாய் பேசினார் முருகையன்.
“அய்யா…மன்னிச்சுடுங்க. புள்ளைக தப்ப கண்டிக்காம ஒசத்தி பேசினதாலதான் நான் இவ்ளோ தப்பு பண்ணிட்டேன். ஏம் பொண்டாட்டிய நல்லா வச்சுக்குறேன்…” கதறிவாறு எல்லோரது முன்னாலும் கீழே விழுந்தான் மலைச்சாமி.
மீனாட்சி வாயடைத்துப் போனாள்…
“எல்லா மனைவியும் நம்மல மாறி புருசனும் யோக்கியமா இருக்கனும்னு நெனக்கிறது தப்பா…ஒருவனுக்கு ஒருத்திதானே நல்ல இல்லறம்….” முதன்முறையாக தேவியின் கண்கள் கூட்டத்தினரைப் பார்த்து கேட்டன.
பேசாமலே நின்றிருந்த தேவியை ஊரே பெருமையாக பேசியது…
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.