பெண்மையென்பது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 6,455 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்ஹோலில் இடம்பெற்ற உரையாடலைப் படபடக்கும் நெஞ்சோடு செவிமடுத்துக் கொண்டிருந்தாள் பாரதி. ‘நண்பர்கள் இருவரோடு வந்திருந்த தீபக்கிற்கு அப்பா என்ன பதில் சொல்லப்போகின்றாரோ?” என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது. அப்பாவின் குரல் உச்சஸ்தாயியில் முழங்கும் போதெல்லாம் திடுக்கிட்டவள், இப்போது தீபக்கின் குரலுக்கும் சேர்ந்து திடுக்கிட வேண்டியிருந்தது. 

வந்தவர்கள் விடைபெற்றதும் உள்ளறைக்குள் நுழைந்த அப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள். முகத்தில் கவலையும் ஆயாசமும் அப்பட்டமாயத் தெரிந்தது. பாரதிக்கு அவரைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஆனால், அவர் அவளைப் பார்த்த பார்வையில் வெறுப்பு மிகத் துல்லியமாய்த் தெரிந்தது. 

“அ… அப்பா. இப்போ… என்ன செய்யப்…”அவள் முடிக்கு முன்பே சீறினார். 

“நீ செஞ்சிருக்கிற காரியத்துக்கு உன்னை வெட்டிப் போட்டாலும் தகும். வேறென்ன, ராஜனுக்கு ஃபோன் பண்ணி, நிச்சயதார்த்தத்திற்கு வரவேணாம்னு சொல்லப் போறேன்; வேறு வழி?” 

“அதெல்லாம் வேணாம்பா. உங்க விருப்பப்படியே இந்த நிச்சயதார்த்தம் நடக்கும்; ஆக வேண்டியதை எல்லாம் கவனிங்க” 

“பா… பாரதி! எ… எ… நீ… என்ன சொல்றே?” அப்பா அதிர்ச்சியுடன் கேட்க,

“மேற்கொண்டு என்னிடம் எதையுமே கேட்காதீங்க அப்பா. நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன். என்னப்பா அப்படிப் பார்க்கிறீங்க? உங்க பாரதி வாக்கு மாறமாட்டாப்பா; நான் சொன்னதையெல்லாம் நீங்க உறுதியா நம்பலாம்.” அப்பா தன்னை குழப்பமாய்ப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், தெருவில் இறங்கி நடந்தாள் பாரதி. 

அறையில் தீபக் மட்டும் தனித்திருந்தான். மோட்டு வளையத்தை வெறித்தபடி சிகரட்டால் புகை வளையம் விட்டுக்கொண்டிருந்தவன் பாரதியின் பிரவேசம் கண்டதும் சிகரட்டைத் தூர எறிந்துவிட்டுத் துள்ளி எழுந்தான். அவன் முகத்தில் சந்தோஷக் களை தாண்டவமாடியது. 

“பாரதி, என்னடா திடீரென்று… அப்பா ஏதாவது?”

“பதட்டப்படாதீங்க. வருகிற இருபதாந்தேதி எனக்கும் ராஜனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது.” 

“தெரியும். அத நிறுத்தத்தானே நான் இன்று உங்கப்பாவைக் கண்டு டு… நம் காதலைப் பற்றி எடுத்துச் சொல்லி…” 

“ஆமா, நீங்க நம் காதலைப்பற்றி எடுத்துச்சொன்ன கண்றாவியத்தான் நான் காதுகுளிரத் கேட்டேனே! அப்போ எனக்கு எப்படியிருந்தது தெரியுமா? அப்படியே புல்லரிச்சுப் போயிட்டேன் புல்லரிச்சு…!” 

“ஏய்… ஏண்டா கோபப்படறே? நான் அப்படி என்னதான் சொன்னேன்? எல்லாம் நன்மைக்குத்தானே.” 

“போதும் நிறுத்துங்க. நாம ரெண்டுபேரும் காதலிச்ச இந்த ஒரு வருடத்துல என்னைக்காவது ஒரு நாள்…உங்க கை என்மேல படுறதுக்கு நான் அனுமதிச்சிருப்பேனா? அப்படியிருக்க, நான் பல தடவை உங்களோட ஹோட்டலுக்கு வந்திருப்பதாகவும் அங்கே நாம ‘ரூம்’ எடுத்துத் தங்கி… சீச்சீ… சொல்லவே நாக்கூசுறது எனக்கு. நீங்க என்னடான்னா… ச்சே! எப்படிங்க உங்களால அப்படி நாக்குல நரம்பில்லாம பேச முடிஞ்சுது? எவ்வளவு பெரிய கற்பனை!” 

“ஐயோ பாரதி! புரியாம பேசாதேடா. நான் அப்படிச் சொன்னது ஏன்னு…” 

“தெரியும். நான் நடத்தை கெட்டவள் என்று எங்கப்பா நம்பி, வேறு வழியில்லாம உங்களுக்கே என்னைக் கட்டி- வைக்கட்டும்னுதானே?” 

“தெரிந்துமா நீ…?” 

“லுக் ஹியர்! நான் உங்களக் காதலிச்சாலும் கூட எவ்வளவு கட்டுப்பாடா, கௌரவமா பழகினேன்னு உங்களுக்கே தெரியும். அப்படியிருந்தும் இன்று நீங்களே எனக்குக் ‘கெட்டுப்போனவள்’னு பட்டம் சூட்டி, என் பெண்மையை இழிவுபடுத்தி, அந்த அக்கினியில் குளிர்காயப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். இதைக் கேட்டு எங்கப்பா மனம் எவ்வளவு துடிச்சிருக்கும்? அவ்வளவு ஏன்? உங்கள் பேச்சு என்னை எவ்வளவு அவமானப்படுத்தியிருக்கும்னு நெனச்சுப் பார்த்தீங்களா?” 

“பாரதீ! நான் சொல்றதையும் கொஞ்சம்…” 

“தேவையில்ல. ஏன் தீபக், ஒரு கணவனோட முதல் கடமை என்னான்னு தெரியுமா உங்களுக்கு? தன் மனைவியின் மானத்தையும் ஆத்ம கௌரவத்தையும் பாதுகாப்பதுதான். முடிவு நல்லதா இருந்தா, வழி எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு நீங்க நினைக்கலாம். ஆனா மானத்தையும் ஆத்ம கௌரவத்தையும் அநியாயமா தொலைச்சுட்டு நீங்க தரப்போற வாழ்க்கையை ஏத்துக்க நான் தயாரில்ல.” 

“பாரதி… ப்ளீஸ்…’ 

“இதோ பாருங்க, கும்பல் நடுவுல கட்டாயத் தாலி கட்டிட்டா, அவனே கணவன்னு பின்னால போறதுக்கு நான் ஒண்ணும் தமிழ் சினிமாக் கதாநாயகி இல்ல. ஏன்னா, காதல், தாலி, திருமணம் இவையெல்லாம் எவ்வளவு புனிதமானதுன்னு எனக்கும் தெரியும். ஆண்பிள்ளையாய்ப் பிறந்துட்டோம்கிற கர்வத்துல என் பெண்மைக்கு எப்படி வேணும்னாலும் சேறு பூசலாம்னு ரொம்ப சுலபமா நெனச்சிட்டீங்க. அதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். ஏன்னா, நான் என் பெண்மைய மட்டுமல்ல, என் பெயரையும் ரொம்ப மதிக்கிறேன். குட் பை” 

கனல் தெறிக்கச் சீறிய பாரதி சற்றுதூரம் சென்று விட்டு மீண்டும் வந்து, “எங்க காதல் விவகாரத்தை ராஜனிடம் சொல்லிவிட்டேன். ஆகவே, நிச்சயதார்த்தத்திற்கு நீங்களும் தாராளமாய் வரலாம்” என்றாள். 

பாரதியின் மீது அவனுக்கு கோபமே வரவில்லை. அவள் அவன் மனதில் மலையளவு உயர்ந்து நின்றாள். 

– மித்திரன், 19.10.1997.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *