பூவும் செடியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 227 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துச் சொல்லும்படி கேட்டார் ராமையாத் தேவர். அவரால் அதை நம்பவே முடியவில்லை! 

மீனாட்சிபுரம் ராமையாத் தேவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வருகிற கடிதங்களை வேறு யாராவது “கண்” உள்ளவர்கள் தான் படித்துக் காட்ட வேண்டும்! ஆனால் திறமையோ?-அது எழுத்துக்குள்ளே தன உட்கார்ந்து கொண்டிருக்கிறது? ராமையாத் தேவரின் மூளைக்குள்ளே இருந்தது அது. 

ராமையாத் தேவர் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வில்லையே தவிர, பண்ணையார் வீட்டு நிர்வாகம் எல்வாம் அவரேதான்! காணி, அரைக் காணி, மா, முந்திரி, அரை முந்திரி என்று மனக் கணக்கிலே நுட்பமான கணித பின்னங்களை யெல் லாம் தீர்த்துக்கட்டி விடுவார்! ‘குழிப் பெருக்கல் ‘ ஒன்றை வைத்துக் கொண்டே, ‘லகர’க் கணக்கில் பெருக்கி வகுத்து மிச்சம் காட்டி விடுவார் ராமையாத் தேவர்! 

இப்படிப் பட்ட திறமை சாலியான தேவருக்குத்தான் திருவவதாரம் செய்தான், வேலய்யா- அதாவது வேலாயுதம்! சிறிதிலிருந்தே வேலியில்லாமல் வளர்ந்து விட்ட பயிர் அது! 

எந்தத் தோட்டத்துக் குள்ளேயும் துணிந்து நுழைந்து விடுவான் வேலய்யா! மாங்காய் பறிக்க வேண்டுமென்றால் மாமரத்திலே போய் ஏறமாட் டான்! அந்த மாமரத்தை ஒட்டி வேலியிலே வளர்ந்திருக்குமே பூவரச மரம், அதிலேதான் ஏறுவான். 

அதில் ஏறி நின்று கொண்டே லாகவமாக மாங்காய் களைக் கணக்குப் பார்த்து விடுவான்! யாராவது கேட்டால், “பூவரச மரத்திலே குழை பறிப்பதற்கு ஏறினேன்!” என்று ‘டிமிக்கி’ கொடுத்து விடுவான்! 

வேலய்யாவுக்குத் தகப்பனாருடைய சாமர்த்தியத்தில் பாதி இருந்தது.ஆனால் அது உருப்படியான பாதையில் செல்லவில்லை. விடலைகளோடு சுற்றுவதிலும், ‘மைனர்’களோடு சேர்ந்து விளையாடுவதிலுமே தோய்ந்து பதினெட்டு வயதுக்குள்ளேயே பட்டம் பெற்று விட்டான், ‘சண்டியன்’ என்று! திரு நெல்வேலி ஊரில் அவனைக் கண்டால், குழந்தைகள், ஆடவர், பெண்டிர் எல்லாருக்குமே ஒரு ஆட்டந்தான்! ‘வேலய்யாவோ வாலய்யாவோ’ என்று சொல்வார்கள். 

2 

ஒரு நாள் கிராம முன்சீப் நெல்லையப்ப பிள்ளை யவர்கள் ராமையாத் தேவரைக் கூப்பிட்டு விட்டார். 

”தேவரே, மகனை இந்த மாதிரித் தட்டி வளக் காமல் போனீரே வேய்! வெறும் படுக்காளியாயிருக் கானே வேய்!” என்று வாழைப்பழத்திலே ஊசியை இறக்கினார்! தேவருக்கும் இது ஏற்கனவே தெரிந்த விஷயந்தான். மனம் மிகவும் கஷ்டப்பட்டது. வேலியைத் தாண்டிப் போகிற ஆடு மாடுகளைப் “பவுண்டிலே” கொண்டு அடைக்கலாம். அந்தக் காரியத்தைக் கிராம முனிசீபே செய்து விடுவார். ஆனால் இந்தப் பயலை என்னதான் செய்வது! கட்டிவைத்து உதைக்கலாம் என்றாலோ, தேவருடைய தாட்சண்யம் ஒரு பக்கம். வேலய்யாவினுடைய கிறுதா ஒரு பக்கம். இரண்டும் மாறி மாறித் தயக்கம் காட்டின! 

தேவர் அன்று வீட்டுக்கு வரும்போது, தைரியத்தைக் கொஞ்சம் வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். எங்கோ மிக்க அவசரமாகப் புறப்படுவதற்காக, ஏதோ ஒரு பஞ்சவர்ணத்தை லத்தைத் தலையிலே தடவிக் கிராப்பைச் சீவிக் கொண்டிருந்தான் வேலய்யா? அவனுடைய சுருள் முடி சீப்புக்குப் பணியாமல் விம்மிக்கொண்டு சிதறியது! உடம்பிலே போட்டிருந்த மஸ்லின் சட்டையிலிருந்து ஏதோ ஒரு இரண்டரை அணா ‘ஸென்ட்’ ‘கும்’மென்று அனல்-வாசனையை வீசிக் கொண்டிருந்தது! “ஏலே!” என்றார் தேவர். பையன் ஏறிட்டுப் பார்த்தான். 

“ஏலே, ஒரே வார்த்தையிலே சொல்லிப்புட் டேன். மரியாதையா இந்தக் கிராப்பை யெல்லாம் ஒளிச்சுப்புட்டு,குடுமி வச்சுக்கிட்டு வாரதானா, இந்த வூட்டுலேமிதி. இல்லை, இந்த நிமிசமே ஒளிஞ்சிரு! ஆமா!” என்று ஆத்திரத்துடன் சொன்னார் ராமையாத் தேவர். 

“இதென்ன உங்களுக்குப் புத்தி இந்த மாதிரிப் போச்சு!” என்று இழுத்தாள் தேவருடைய சம்சாரம். “இந்தா மூதி! நீ இன்னமும் பேசினேண்ணா, ஒரே அடியில் ஒன் மணடையைப் பிளந்திடுவேன், சாக்ரதை! பய இனிமே வூட்டிலே மிதிச்சான், ஒன் மண்டைதான் உருளும், ஆமாம்!” 

மூடி விழிக்கிற நேரத்தில் இத்தனை வார்த்தைகளும் பரிமாறின! அவ்வளவுதான்! அந்த விநாடியே அங்கிருந்து புறப்பட்ட வேலய்யாவிடமிருந்து நாளது தேதி வரை எவ்விதத் தகவலும் இல்லை. அவனுடைய ஏக்கத்திலேயே தேவர் மனைவியும். இந்த உலகிலிருந்து போய் விட்டாள். தேவரோ தாம் உண்டு, தம்முடைய வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டம் உண்டு என்று, காலத்தைக் கழிக்கலானார்! 

இப்படி யிருக்கும்போது தான், இன்று, தீபாவளிக்கு முன் தினம் – இப்படி ஒரு கடிதம் வேலாயுதத்திடமிருந்து வந்திருக்கிறது! தூக்கி வாரிப் போடாமல் என்ன செய்யும் தேவருக்கு! 

“தம்பியா பிள்ளை! அப்படியானா, வேலய்யா நாளைக்கு வாரானா இங்கே!” என்று மறுபடியும் கேட்டார் தேவர். 

”ஆமா வேய்! வாராரு, உம்முடைய புத்திர பாக்கியம்! நல்ல கோடி வேட்டியா எடுத்து வையும்!” என்று சொன்னார், கிராம முன்சீப் நெல்லையப்ப பிள்ளை அவர்களின் மூத்த மகன் சிவ சுப்பிரமணிய பிள்ளை! 

3

ஊரை விட்டுக் கிளம்பிய நிமிஷத்திலிருந்து, வேலய்யா எங்கெங்கோ சுற்றினான். ஊர் ஊராக அலைந்தான். ‘சேக்காளி’களுக்கு ஒன்றும் குறைச் சலே இல்லை.’சண்டியன்’ என்ற பட்டத்துக்கு ஒரு நல்ல செல்வாக்கு இந்தக் கூட்டங்களில் இருக்கத் தான் செய்தது! 

ஆனால் எத்தனை நாள் இது ஓடும்? சென்னைப் பட்டினத்தில் குடிப்பழக்கம் இருக்கிறவரை, வேலய்யாவின் பாடு கொண்டாட்டமாக இருந்தது! வெறியர்களுக்குள் சண்டை வந்து விட்டால், இரண்டு கட்சியுமே வேலய்யாவிடம் மத்தியஸ்தம் நாடும்! எனவே, அவனுக்கு ஒரே ‘கிராக்கி’யாக இருந்தது. ஆனால் எந்த நிமிஷத்தில் புண்ணியவாளர்கள் மதுவை விலக்கினார்களோ, அன்றிலிருந்து வேலய்யாவின் தொழிலுக்குப் ‘பிகு’ குறைந்து விட்ட து. படிப்படியாகச் சாப்பாட்டுக்கே கூட ‘லாட்டரி’ அடிக்கவேண்டிய நிலைமையாகி விட்டது! 

வயிறு பட்டினி கிடந்தால், மூளை சரியாக வேலை செய்யும் என்று சொல்லுவார்கள். வேலய்யாவுக்கு இப்பொழுது மூளை கொஞ்சம் இயங்க ஆரம்பித்தது! சென்னைப் பட்டினத்தின் எல்லையிலே வளரும். புதிய நகரங்கள் வழியாக அவன் ஆடி அசைந்து நடக்க ஆரம்பித்தான், வயிற்றுக்கு வழி தேடி! 

அடையாற்றில் ஒரு பிரபல மனத்தத்துவப் பேராசிரியர் புதிதாக வீடு கட்டியிருந்தார். வீட்டைச் சுற்றித் தோட்டம் பிரமாதமாக இருந்தது. இந்தத் தோட்டத்தைப் பாதுகாக்கிற வேலையாவது தனக்குக் கிடைக்காதா என்று எண்ணி, உள்ளே நுழைந்தான் வேலய்யா. 

“நான் அனாதை. எனக்கு ஒருத்தரும் கிடையாது. இந்தத் தோட்டக் காவலாவது குடுங்க. ஒழுங்காயிருப்பேன்” என்றான் வேலய்யா. 

மனத்தத்துவப் பேராசிரியர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்! 

”இந்தச் செளடால்க் கிராப்பை எடுத்து விட வேணும். கிறுதாவை இவ்வளவு இறக்கி வைத்துக் கொள்ளக் கூடாது! இந்த இரண்டு நிபந்தனைக்கும் இஷ்டமானால், தோட்டத்தைக் கவனி!” என்றார் ஆசிரியர். 

வேலய்யா ‘சரி’ என்றான். வயிற்றுக்குள்ளே யிருந்து வந்தது அந்த வார்த்தை! உடனே வெளியே வந்தான். கிராப்பை ஒரு கணத்தில் அப்பளக் குடுமியாகக் கத்திரித்தான். கிறுதாவை எடுத்தெறிந்தான். குனிந்த தலை நிமிராமல், வேகமாகப் பங்களாவுக்குள்ளே நுழைந்தான் வேலய்யா! 

4

தோட்டக்காரன் வேலப்யாவினிடம் பேராசிரியருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. மிகவும் பிரியமாகவே இருந்தார். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பு! வேலய்யாவும் அவனோடு வேலைக்காரர்கள் பலர் இருந்தும் கூட, கலாசாலையிலிருந்து வீடு திரும்பியதும், ஆசிரியர் தாமே போய் வாளியிலே தண்ணீர் ஏந்தி வந்து, பூஞ்செடிகளுக் கெல்லாம் ஊற்றுவார்! மாங்கன்று, மாதுளங்கன்று – இவைகளுக்கு எல்லாம் தாமே பாத்தியைக் கீறி அதில் உரத்தை வைப்பார். வேலய்யா போய்த் தடுத்தாலும் அவர் கேட்கமாட்டார். மற்ற எந்த விஷயத் தில் விட்டுக் கொடுத்தாலும், இதில் மட்டும் மிகவும் கண்டிப்பு அவர்! 

வேலய்யாவுக்கு இது புரியவில்லை. ஒரு நாள் ஆசிரியரிடமே நேரில் சென்று இதைக் கேட்டு விட்டான். 

“நாங்க எத்தனையோ பேரு இருக்கும் போது, நீங்க இந்த மாதிரி..” 

“வேலய்யா, இந்த ஒரு வேலையிலே மட்டும் எனக்கு எவ்வளவு ஆனந்தம் இருக்கு, தெரியுமா! வருஷந்தோறும் எத்தனையோ பிள்ளைகளுக்குக் ‘கல்வி’ என்னும் விதையை ஊன்றி வெளியே அனுப்புகிறேன்! எத்தனையோ பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைக்கிறேன்! ஆனால், எதிலேயும் இல்லாத சந்தோஷம் இதிலே இருக்கு!” என்றார் பேராசிரியர். வேலய்யா அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே ஆசிரியரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவர் தொடர்ந்து சொன்னார்: 

“இன்று சாயந்திரம் இந்தப் பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்றினால், நாளைக்குக் காலையில் அது தன்னுடைய நன்றியை மலர்களாகப் பூத்து மகிழ்ச்சியாக வெளியிடுகிறது. இந்த வருஷம் உரம் கொடுத்தால் அடுத்த வருஷம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து அந்தக் கடனை அடைக்கிறது மாமரம்! வாழ்க்கையில் நாம் வளர்த்துப் பாதுகாக்கிற மனிதப் பயிரைப் பற்றி எதுவும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. கண்ணீரையே ஊற்றி வளர்த்தாலும் விஷக் கனிகளாகவே தருகிற பிள்ளைகளும் உண்டு!” 

வேலய்யாவுக்குத் தலை சுற்றியது. பேராசிரியருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுக் குடிசைக்குள்ளே போனவன், மறுநாட் காலையிலேதான் வந்தான். வந்து பேராசிரியர் காலிலே விழுந்தான். 

“என்னடா?” என்றார் ஆசிரியர். 

“இது வரை நான் என்னைப் பத்தி ஓரு பெரிய பொய் சொல்லிட்டேன். நான் அனாதை இன்னேன். அது தப்பு. எனக்கு ஒரு அப்பா இருக்காரு ஊரிலே. இந்தத் தீவாளிச் சமயத்தில் அவரைப் போய்ப் பாக்கணும்ணு ஆசையாயிருக்கு!” 

இரண்டு ஜதை கோடி வேட்டிகளோடு வேலய்யாவை வழியனுப்பி வைத்தார் பேராசிரியர். 

5

தீபாவளி என்ற குதூகலமான பண்டிகை கோடி வஸ்திரமும் பட்டாசுகளுமாக ஜமாய்த்துக் கொண்டிருந்தது! மீனாட்சிபுரத்தின் தெரு வீதிக ளெல்லாம் ‘சடசடா படபடா’ என்று கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன! வேலய்யா நுழைந்தான்! 

“அப்பா!” என்று அவன் கூப்பிட்டபோது, பதில் இல்லை. ராமைய்யாத் தேவர் தம்முடைய வீட்டுப்புற வாசலிலே இருந்த தோட்டத்தில், சுரு சுருப்பாக நின்று கொண்டிருந்தார்! சத்தம் செய்யாமல் மெதுவாக உள்ளே போய் அவருக்குப் பின் புறமாக நின்று, அவரையே பார்த்தான் வேலய்யா. 

விசாலமாக இருந்த அந்தத் தோட்டத்தில் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் அவன் தந்தை! ஆனந்தமாகச் சிரித்த அந்த வண்ண மலர்கள் தன்னுடைய தந்தைக்கு நன்றி செலுத்தினவா, அல்லது, தன்னைப் பார்த்து நகைத்தனவா என்று சிந்தித்தான் வேலய்யா! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *