பூமராங்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 7,222 
 
 

வேலையில்லாப் பட்டதாரிகளான அந்த நால்வரும் தினமும் மாலையில் குறிப்பிட்ட அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து, நேரம் போவது தெரியாமல் அரசியல், சினிமா, விளையாட்டு, நடிகைகளின் அந்தரங்கம் என பொறி பறக்க அலசுவார்கள்.

அதிலும் சினிமா நடிகைகளைப் பற்றிய அலசல் என்றால் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.

விவேக் வேகமுடன் சொன்னான், “பிலிம் இண்டஸ்டிரில எல்லா நடிகைகளும் படுத்துதாண்டா ஆகணும்…அதனாலதான் நல்ல குடும்பத்துப் பெண்கள் எவரும் நடிக்க வர மாட்டாங்க. ஹரிசாண்டல் அக்ரிமென்ட் முடிந்தப்புறம்தான் நடிப்பதற்கான அக்ரிமெண்டே, புரியதா?”

சங்கர், “எல்லோரையும் அப்படிச் சொல்ல முடியாது மச்சி, என்னோட ஹீரோயின் லதாங்க்கினி பேமிலி பேக்கிரவுண்டே தனி….அவ கான்வென்ட்டில் படிச்சவ, எவனும் அவள தொட்டிருக்க முடியாது தெரியுமா?” என்றான்.

விவேக் கிண்டலாக, “நீ என்ன லதாங்கினி பெட்ரூம் வரையிலும் போய்ப் பார்த்த மாதிரி பேசறியே” என்றதும் மற்ற நண்பர்கள் வெடித்துச் சிரித்தார்கள்.

மூர்த்தி அவசரமாக “நவீன், நீயே முழு சிகரெட்டையும் முடிச்சுடாதே, ரவுண்ட்ஸ் விடு” அவன் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி புகை இழுத்தான்.

விவேக் தொடர்ந்து, “கேவலம் எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளத்துக்காக ஆபீஸ்ல வேலை பார்க்க வர்ற பெண்களையே அவனவன் ஓரம்கட்டி படுக்கைல தள்ளிடராணுங்க, லட்ச லட்சமா சம்பளம் வாங்கிற நடிகைகளை மட்டும் விட்ருவானுங்களா என்ன? அது ஒரு மோசமான இண்டஸ்டிரி அதுல ஒருத்தியும் யோக்கியமில்லை அத முதல்ல புரிஞ்சுக்க” என்றான்.

நவீன் “சினிமால பெஸ்ட் மாரிட் கப்பிள் யார் தெரியுமா? அந்தக் கப்பிளைதான் எல்லோரும் கல்யாணத்திற்கு மணத் தம்பதிகளை வாழ்த்த அழைப்பார்கள்..”

“……………”

“அவர்கள்தான் ராதிகாவும், சரத்குமாரும். சரத் மூன்று முறையும், ராதிகா நான்கு முறையும் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க…அதுனால அவங்கதான் பெஸ்ட் மாரிட் கப்பிள்” நவீன் சொன்னதும் அங்கு ஒரே சிரிப்பு.

இரவு எட்டு மணிக்கு அவர்கள் அரட்டை கலைந்து, விவேக் வீடு திரும்பிய போது, தன் வீட்டு வாசலில் படகு போன்று ஒரு வெள்ளை நிற பென்ஸ் கார் நிற்பதைப் பார்த்து வியப்புடன் உள்ளே சென்றான்.

வீட்டினுள் அவன் குடும்பத்தினர் முகங்களில் மகிழ்ச்சி பொங்க, கூடத்தின் நடுவே நடுத்தர வயதில் அமர்ந்திருந்த ஒருவரை பரபரப்புடன் உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

விவேக் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவனுடைய அப்பா சந்தோஷத்துடன் சொன்னார், “விவேக், நல்ல காலம் பொறந்திருச்சுப்பா… காலேஜ் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த உன் தங்கச்சி ரம்யாவைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் மதனகோபால் அவருடைய புதுப் படத்துக்காக நம்ம ரம்யாவை ஹீரோயினா புக் பண்ண வீடு தேடி வந்து மூன்று லட்சம் அட்வான்ஸும் கொடுத்திருக்கார்.”

Kannan என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *