பூநாகம்





நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர்.
நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன் நந்திவர்மன் அமர்ந்திருந்தான்.அப்போது வாயில் காப்போன் வந்து, திருமுனைப்பாடி சிற்றரசர் நரசிங்கமுனையார் வந்திருப்பதாகக்கூற, வரச்சொல்லி ஆணையிட்டபின் திருமுனைப்பாடியார் வந்தார்.
‘‘வாருங்கள் திருமுனைப்பாடியாரே… என்ன சேதி?’’
‘‘மன்னா… கடம்பர் குல மகளின் குலக்கொழுந்து நீங்கள். தங்கள் வீரத்தில் எமக்கு ஐயமில்லை.ஆனால், தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களை அலட்சியப்படுத்தாதீர்கள் மன்னா…’’
முக்கிய அமைச்சர் எழுந்து மெல்லப் பேசினார்.
‘‘அறிவோம் முனைப்பாடியாரே. அதற்காகத்தான் இந்த அவசரக் கூட்டம். வடக்கே ராக்ஷ்டிரகூடஅரசன் அமோகவர்ஷன், பல்லவ நாட்டின் மீது பாய நேரம் பார்த்திருக்கிறான். அரசர்க்குத் திறைச்செலுத்தும் சோனாட்டின் சில பகுதிகளைப் பிடிக்க ரகசியத் திட்டம் தீட்டி வருகிறான்.அதுமட்டுமில்லை, அவனுக்குத் தூண்டுதலாக அரசரின் தாயாதி தம்பியான விக்கிரமன் முதலானோர்பகைவனுக்கு உதவக் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் முனைப்பாடியார் என்ன புதுச்செய்திகொண்டு வந்திருக்கிறீர்கள்? அறியலாமா?’’
‘‘செய்தி அல்ல.. அரசரைக் காக்கும் ரக்ஷயை… ஜீவரக்ஷயை கொண்டு வந்துள்ளேன் அமைச்சரே…’’
நந்திவர்மன் திகைத்தான்.
‘‘ஜீவரக்ஷயா! என்ன அது? மன்னன் அனுமதி வழங்க, அந்த அவைக்கு ஒரு பளிங்குச் சிலை மெல்லிய துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்பட்டது.
காவலர்கள் அந்த மெல்லிய துணியை விலக்க, ஒரு அழகான பெண்ணின் முழு உருவம். சலவைக்கல்லில் செய்தது. அபயஹஸ்த முத்திரையுடன் நின்றது. அது சிலையா? இல்லை மெய்யாகவே ஒருபெண்ணா என்று மயங்கும் அளவிற்குச் சிலையின் அமைப்பு இருந்தது. நந்திவர்மன் திகைத்தான்.
‘‘நய பரதனே… இது சாதாரணச் சிலை அல்ல.. ஜீவராக சிலை. சில மூலிகைகளின் ரசாயனச்சேர்க்கை கொண்டு தயாரித்தது. இதனருகில் விஷமுள்ள எந்தப் பதார்த்தத்தைக் கொண்டுசென்றாலும் சிலை நீலநிறமாக மாறிவிடும். மன்னரை ஆபத்து டிசூழ்ந்திருக்கும் வேளையில், இந்தச்சிலை பாதுகாப்பாக ஜீவர¨க்ஷயாக இருக்கும் மன்னா…’’
நந்திவர்மன் வியந்தான். இப்படி ஒரு அற்புதமா?
அரசன் கட்டளைப்படி பொற்கிண்ணத்தில் பால் கொண்டு வரப்பட்டு அதில் கொடிய நாகத்தின்விஷம் சேர்க்கப்பட்டது. அந்தப் பொற்கிண்ணம் சிலையின் மிக அருகில் கொண்டுசெல்லப்பட்டவுடன்…
ஆச்சரியம்… அற்புதம்! சிலை உடல் முழுவதும் நீலநிறமாக மாறியது.
தான் வடக்கே போயிருந்தபோது ஓர் அற்புதமான சிற்பியைச் சந்தித்ததாகவும், அவன் மூலம் இந்தச்சிலையை வடித்து எடுத்து வந்ததாகவும் அதை நந்திவர்மனுக்குக் கொடுக்க வந்ததாகவும்திருமுனைப்பாடியார் கூறினார்.
நந்திவர்மன் திறை செலுத்தவேண்டும் என்று அமோகவர்ஷனிடமிருந்து வந்த அந்த ஓலையை,நந்திவர்மன் திருப்பி அனுப்பினான். அத்துடன் போர்க்களத்தில் சந்திக்கவும் என்றும் தகவல் கொடுக்க…
போரால் நடுநடுங்கிப் போன அமோகவர்ஷன், சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, தன் மகள்சங்கையையும் நந்திவர்மனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்அது முதலிரவு அறை… திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்து… மங்கல வாழ்த்துப் பாடல்களுடன்பொன்னும், பொருளும் சீதனமாகத் தரப்பட்டு புஷ்பப் பல்லாக்கில் சங்கை அற்புதமாகஅலங்கரிக்கப்பட்டு, மாமன்னரின் அரண்மனைக்கு அழைத்து வரப்பட, அந்த அரண்மனைக்குள் நுழைந்தசங்கை, நந்திவர்மனின் புகழ் கண்டு, பெருமை கண்டு, வீரம் கண்டு வியந்தாள். ‘சர்வன்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற இவள் தந்தையால் நந்திவர்மனை வெல்ல முடியவில்லை. வலிமை மிகுந்தவன்…வீரம் மிகுந்தவன்.. யானைப் படைத் துணையுடன் குருக்கோட்டிலே போர் நிகழ்த்தி வென்ற கோமான்…தோற்ற அரசன்… இவள் தந்தையால் தரப்பட்ட பரிசுதான் இவள்.!
‘‘தேவி… என்ன யோசனை?’’நந்திவர்மன் சங்கையின் மென்தோள்களைத் தொட, சங்கை வெட்கித் தலைகுனிந்தாள்.அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தப் பளிங்குச் சிலை ஜீவரக்ஷ சிலை அவர்களைப் பாசத்துடன் பார்க்கிறது. சங்கை யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ஐம்பெருங்குழுவும், எண் பேராயமும் அமைத்து திறம்பட அரசு செலுத்தும் நந்திவர்மனுக்கு எதிரிகள் அதிகம்தான். வானம் பொய்யாது, வளம்பிழைப்பு அறியாது நாடு செழிக்கிறது சந்தேகமில்லை. ‘‘உரைசால் பத்தினியை உயர்ந்தோரும் வணங்குவர்’’ என்று நந்திவர்மன் அடிக்கடி கூறுவான். இந்த உரைசால் பத்தினி? சங்கை யோசித்தாள். மெல்லிய துணியால் மூடப்பட்ட அந்த ஜீவரக்ஷக சிலையின் அருகே போய்ப் பார்த்தாள். துணியை விலக்கினாள். சிற்பம் அற்புதமாக இருந்தது. நந்திவர்மன் தற்சமயம் நாட்டில் இல்லை. பாண்டியன் ஸ்ரீமாறனையும், அவனுக்கு உயிர்த்துணையாகச் செயல்படும் தன் தம்பி விக்கிரமனையும் எதிர்த்துப் போராட தொள்ளாற்றுக்குப் போயிருக்கிறான் நந்திவர்மன்.
(தெள்ளாற்று) சங்கத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் உடை கூடல் மாநகராம் மதுரையிலிருந்து பல்லவனுக்கு உட்பட்டிருந்த சோழவள நாட்டின் சில பகுதிகளைக் கவர்ந்துவிட்டான் பாண்டியன் ஸ்ரீமாறன். பெண்ணை ஆறுவரை அவன் கையில்தான் இருந்தது. பறிக்கப்பட்ட பகுதிகளைமீட்கப் புறப்பட்டு விட்டான் மன்னன்.
பாண்டியனுக்கும், விக்கிரமனுக்கும் புத்தி புகட்டத்தான் நந்திவர்மன் தெள்ளாற்றுப் போர் புரியப் புறப்பட்டிருக்கிறான். சங்கை ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். தெள்ளாற்றுப் போர்… மிகக் கொடூரமான போர். பிற்காலத்தில் சிவபக்தனாக மாறப்போகும் நந்திவர்மன் நிகழ்த்திய கொடுமையான போர். ‘குவலய மார்த்தாண்டன்’ என்று போற்றப்பட்ட பேரரசன், போரில் தன்னிடம் தோற்று ஓடிவிட்ட பாண்டியனின் மகள் மாறன் பாவையை வேறு வழியின்றி மனைவியாக ஏற்றுக்கொண்டு அரசவைக்கு வெற்றியுடன், அத்துடன் வீரத் திருமகளுடன் அடி எடுத்து வைத்த அந்த நேரம் சங்கை நொறுங்கிப்போனாள். பகையின்றி பார் காக்கும் வேந்தன் கடைசியில் தன்னை வஞ்சித்துவிட்டானே என்று மனம்பொருமினாள். வீரத்தில் சிறந்த மன்னன் பெண் மனத்தைப் புரிந்துகொள்ளாத கயவனாகி விட்டதை எண்ணிவருந்தினாள். போருக்குப் போனால் வெற்றித் திருமகளுடன் பகைவரின் மகளையும் துணைசேர்க்கவேண்டுமா? பாண்டியன் மகள் மாறன் பாவையை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்த அரசன், சங்கையைப் பார்த்தான்.
‘‘சங்கை… என்னை மன்னித்துவிடு… இது காலத்தின் கட்டாயம். ஆனால் என்றும் என் பட்ட மகிஷிநீதான். இவள்… இவள் பாண்டியன் மகள் மாறன் பாவை. இவள் என் மனைவி மட்டுமல்ல… உன் சகோதரி… அன்புடன் ஏற்றுக்கொள்…’’
சங்கை கண்ணீர் துடைத்து பாவையின் கைப்பற்றி தன்னிருப்பிடம் கூட்டிச் சென்றாள். அந்தப் பளிங்குச் சிலை… ஜீவரக்ஷசி பார்த்துக் கொண்டிருந்தாள். தன் ஒற்றன் கூறியதைக் கேட்ட நந்திவர்மன் திகைப்புடன். சங்கையின் அந்தப்புரம் தேடிப் போனான். அங்கே மாறன் பாவை இருந்தாள், சங்கையின் அரண்மனையில் மாறன் பாவை?
‘‘சங்கை எங்கே?’’
‘‘அக்காவைத் தேடித்தான் நானும் இங்கே வந்தேன் பிரபு.’’
‘‘நீ சொல்வது பொய்.. உனக்கு பட்டத்தரசியாக ஆசை.. ஒற்றர்கள் வந்து தகவல் சொன்னார்கள்.இந்தத் திருமணத்தில் உனக்கு விருப்பமில்லையாமே… பட்டமகிஷியாக இல்லாமல், என் இரண்டாவது மனைவியாக வாழ உனக்கு விருப்பமில்லையாமே. அதனால் என் சங்கையைக் கொல்லத் துணிந்துவிட்டாயாமே.’’
‘‘சர்வேஸ்வரா… இதென்ன கொடுமை.’’ மாறன் பாவை அழுதாள்.
‘‘ஆம் தேவி… நான் சங்கையைச் சந்திக்க இந்த வசந்தமாளிகை தேடி வரும்போது, வரும் வழியில் இருக்கும் இந்த நந்தவனத்தில் பூத்திருக்கும் காஷ்மீர ரோஜாக்களைப் பறித்து சங்கைக்குத் தருவது வழக்கம். இதை அறிந்த நீ, இங்கு மலர்ந்திருக்கும் அந்தப் பூக்களில் எல்லாம் பூ நாகங்களை படரச்செய்திருக்கிறாயாமே! நான் கொடுத்த மலர்களை முகர்ந்து பார்க்கும் சங்கை அந்தப் பூ நாகங்களால்தாக்கப்பட்டு, மூச்சு முட்டி மூக்கில் ரத்தம் வழிய இறக்கவேண்டும் என்பதுதானே உன் திட்டம்? வேண்டாம் தேவி… இந்தப் பூக்களை சங்கை முகரவேண்டாம். நானே முகர்ந்து பார்க்கிறேன். யார்பட்ட மகிக்ஷ என்கிற போட்டி உங்களுக்குள் வேண்டாம்.’’
பேசியபடி நந்திவர்மன் நந்தவனத்தில் நுழைந்து மலர் ஒன்றினைப் பறிக்க முற்பட்டபோது…‘‘அரசே அரசே நில்லுங்கள்..’’ என்று கதறியபடி ஓடி வந்தாள் சங்கை!
“அவளின் பின்னே காவலர்களால் பிடித்து இழுத்து வரப்படும் விக்கிரமன்… நந்திவர்மனின் தாயாதித்தம்பி.’’
‘‘சங்கை! உனக்கு ஒன்றும் ஆகவில்லையே… ஒற்றர்கள் தெரிவித்தது?’’
‘‘தவறான செய்தி மன்னா… உண்மையில் குற்றவாளி விக்ரமன்தான். உங்களைக் கொன்று அந்தப்பழியை எங்கள் இருவர் மீதும் சுமர்த்தி நாடு குழப்பமடைந்திருக்கும் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கநினைத்த நயவஞ்சகன். என் அந்தரங்கச் சேடி ஒருத்தி, விக்கிரமனின் பழைய காதலி. அவள் மூலம் விவரமறிந்து விக்கிரமனை நம் மெய்காப்பாளர்களுடன் சென்று சிறைப்பிடித்து வந்தேன் பிரபு.’’ நந்திவர்மன் மெய்சிலிர்த்தான்.
‘‘தம்பி விக்கிரமா… இதோ இவள் சங்கை. இராக்ஷ்டிரகூட அரசரின் மகள்… இவள் மாறன்பாவை. என் விரோதி பாண்டியனின் மகள். இவர்கள் இருவரும் என் உயிரைக் காக்கத் தங்கள் உயிரைத் தரத்தயாராக இருக்கிறார்கள். ஆனால் உறவு என்ற பந்தமுள்ள நீயோ என்னைக் கொல்ல நினைக்கிறாய். உனக்கு என் உயிர்தானே வேண்டும் எடுத்துக்கொள்…’’
விக்கிரமன் தலைகுனிந்தான்.ஒருவழியாக அரண்மனையிலிருந்து அகற்றப்பட்டு அந்த நந்தவனத்தின் நடுவில் அலங்காரமாகவீற்றிருந்த ஜீவரக்ஷகச் சிற்பம் இந்தக் காட்சியைக் கண்டவாறு நிற்கிறது.
விக்கிரமன் தன் உடைவாளை எடுத்தான்.
‘‘மன்னர் மன்னா… நான் அரசன் என்ற பதத்திற்கு அருகதை அற்றவன். இந்த உடைவாள் எனக்கெதற்கு?’’கூறியபடி விக்கிரமன் தன் உடைவாளை உருவ…அது தற்செயலாக அங்கு அலங்காரச் சிற்பமாய் நின்றிருந்த ஜீவரக்ஷகச் சிலையின் மீதுபட…அடுத்த நொடிப் பொழுதில் அந்தச் சிலை நீலநிறமாக மாறிவிட…விஷம் தடவிய உடைவாள்!
மாமன்னரின் உயிர் குடிக்க நினைத்த உடைவாள். ஒரு நொடிக்குள் உண்மையை உணர்ந்து கொண்ட அரசரின் மெய்க்காப்பாளர்கள் விக்கிரமனை அந்த இடத்திலேயே அவனது விஷஉடைவாளால் ‘களப்பலி’ தர…மாறன் பாவை கண்களை மூடிக்கொள்கிறாள்.
சங்கை நந்திவர்மனின் தோளில் சாய்கிறாள்.
நந்திவர்மன் அந்தச் சிலையைப் பார்க்கிறான். உண்மையில் ஜீவரக்ஷசி இந்தச் சிலையா? இல்லை…இந்தப் பெண்களா? இவர்கள் பூ நாகங்கள் அல்ல… பூவின் சுகந்தங்கள்.