கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2025
பார்வையிட்டோர்: 2,223 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாட்டு வெய்யில் நெருப்பாய் இருந்தது. வலதுபுறத்து முகம் முழுதும் எரிகிற மாதிரி. இரண்டு பேரும் பேசிக் கொண்டே விரைந்து நடந்தார்கள். வழமையான பஸ் இன்று காலை வாரிவிட, பம்பலப்பிட்டி சந்தியில் வந்திறங்கி வேறு பஸ் எடுக்க நேர்ந்திருக்கிறது. 

கொழும்பு நடைபாதைகளில் நடப்பது, இப்போ தெல்லாம் பெரிய தொல்லையான வேலை. ஒருபுறம் கடல், மறு புறம் தமிழன் என்று துட்டகைமுனு சொன்னது போல, இங்கே ஒரு புறம் வேலி, மறுபுறம் வியாபாரிகள். நடக்கிறது எப்படி? – இந்த மாதிரி கிரி ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். இவன், கிரிக்குத் தலையாட்டியே, வழி நீளம் விரித் திருந்த கடைகளிற் கண்களை மேயவிட்டபடி நடந்தான். இங்கே இருக்கிறதா பார்க்க வேண்டும் – அந்தப் பூகோளம். 

ஒரு பூகோள உருண்டை வாங்கி, சுதாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கனநாளாக நினைவு. நேற்று கோட்டைப் பக்கம் ஒரு அலுவலாகப் போன பொழுது, பூந் தோட்ட வீதி நெடுக அது இருந்தது சின்னன் – ஒன்றரை இஞ்சிதான் விட்டமிருக்கும். ஆனால் வலு தெளிவாக; அந்த அளவே ஒரு அழகாக, கோளத்துக்கேற்ற ஸ்ரான்ட் வேறு. விலையைக் கேட்டபோது. எங்கும் எட்டு ரூபா சொல்லி, ஏழரைக்குத் தரலாம் என்றார்கள். வாங்க மனம் வரவில்லை. விட்டு விட்டு வந்தான். ஏழரை கொஞ்சம் கூடத்தான். 

‘மூண்டரைக்கு வேலை முடியிறது. எல்லாவிதத்திலும் நல்லது மச்சான் – இந்த வெய்யில் ஒண்டை விட….’ என்றான் கிரி. 

அந்தா! அதுதான். அடுத்தடுத்திருந்த இரண்டு சாப் பாட்டுக் கடைகளுக்கு நடுவில் – இரண்டின் வாசல்களையும் மறைக்காமல், பரப்பப் பட்டிருந்த அங்காடி நடுவில், இந்தக் கோளங்களிலும் ஐந்தாறு. 

‘ஒரு நிமிஷம், கிரி….’ என்று சொல்லி, அதில் நின்றான். 

‘….யாரது, இங்கே?’ 

சாப்பாட்டுக் கடைச் சுவரிலிருந்து இறக்கப் பட்டி ருந்த சின்னப் பொலித்தீன் பத்திக்குள்ளிருந்து ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள். 

‘என்ன வேணும் மாத்தயா?” 

‘இது எவ்வளவு?’ 

‘ஏழு ஐம்பது….?’ 

‘ஏழு ஐம்பதா?’ – அவள் அவன் நடக்கத் திரும்பிய 

‘சரி, ஆறரை தாங்க….’ என்றாள் அவள். வெளியே வந்து. 

‘பரவாயில்லை, வேண்டாம்.’ 

‘ஆறு ரூபா தந்திட்டு எடுங்க’ – ஒரடி எடுத்து வைத்தவனைப் பின்னால் கூப்பிட்டாள். திரும்பி வந்தான். 

ஒன்பது பத்து வயதிருக்கும் அந்தப் பிள்ளைக்கு. கறுப்பு. இரட்டைப் பின்னல். இந்த வெக்கையில் கருகிக் களைத்திருந்தாள். கொஞ்சம் நீர்க்காவியும் கொஞ்சம் ஊத்தை யுமாய் வெள்ளை யூனிஃபோம். பள்ளிக் கூடத்திலிருந்து. நேரே வியாபாரத்தைக் கவனிக்க வந்திருக்க வேண்டும் என்று பட்டது. 

‘இந்த விலையை யாராவது பெரிய ஆள் சொல்லியிருந்தால் நல்லாயிருக்குமே’ என்ற நினைவுடன், 

‘உன்ர அப்பாவைக் கூப்பிடு….’ என்றான். 

‘அவர் இங்க இல்லை….’ 

அரை நிமிடம் நின்றுவிட்டு, அவளுக்குக் கிட்டப் போய்ச் சொன்னான். 

‘தங்கச்சி, எனக்கிப்ப இது வேண்டாம். கோட்டைப் பக்கமெல்லாம் இதுக்கு விலை ஏழரை ரூபா சொல்லுறான்கள். நீ ஆறு ரூபாய்க்குத் தரலாமென்கிறியே…ஏழரைக்குக் குறைய ஒருத்தருக்கும் கொடாதே….’ 

-இதைச் சொல்லிவிட்டு, ‘….சரி வா’ என்று கிரியின் பக்கந் திரும்பிய போது, அவன் பின்னால் நின்று கீச்சிட்டாள்: 

‘ஆறு ரூபாவுக்கெண்டாலும் இதை வாங்க மனமில்லாம….புத்தி சொல்லிவிட்டுப் போறீங்களே…. இண்டைக்கு. ஒரு வியாபாரமுமில்லை, மாத்தயா.’ 

நின்று திரும்பிப் பார்க்க, ‘ஆறு ரூபா தந்திட்டு எடுத்திட்டுப் போங்க….’ என்றாள் மீண்டும். 

பொக்கற்றுகளுக்குள் எல்லாமாக, ஏழு முப்பத்தைந்து இருந்தது. இனி, பஸ்சுக்கு முப்பது சதம் போதும். ஏழு பாயை எடுத்து நீட்டி, ‘சரி, தா….’ என்றபோது, அவள் ஒரு கணந் தயங்கினான். 

‘….அங்கே எல்லாம் ஏழரை ரூபாய் விக்கிறான்கள், பிடி!’ என்று திணித்தான். 

கோழி முட்டையிலுங் கொஞ்சம் பெரிதான இந்தப் பூகோள உருண்டையை உருட்டிப் பார்த்துக் கொண்டு நடந்த போது, சிரிசிரியென்று சிரித்துக் கொண்டு கிரி கூட வந்தான். 

– மல்லிகை, ஏப்ரல் 1980.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *