புலி வந்தது





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)
வருடைய பெயரும் நிக்கோலஸ் என்பதுதான். பூர்வீகம் லெபனான். யுத்தம் காரணமாக இவரது பெற்றோர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்தனர். இவரது பிறப்பு வளர்ப்பு எல்லாம் அமெரிக்காவிற்தான். இவரது நடை, உடை, பாவனை, பேச்சுக்களில் அமெரிக்க ஸ்டைல் தெரிந்தது. அமெரிக்காவில் கல்வி பயின்றவர். நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் அதியுயர் பட்டம் எடுத்து வந்திருந்தார். இத்தாலிய புறஜெக்டின் முழு நிர்வாகத்தைக் கவனிக்கவும் இன்னும் விரிவாக்கவும் வேண்டிய தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஈர்க்கிலைப் போன்ற ஒடிசலான தேகம். முதன் முதலில் வேலையைப் பொறுப்பேற்று வந்தபடியாலோ என்னவோ சற்றுப் பயந்த சுபாவம் கொண்டவர் போலவும் காணப்பட்டார். அதிகம் பேசவில்லை.
கம்பனி உரிமையாளரான மிஸ்டர் ஜோர்ஜ் பூரி இவரை வேலைத் தலத்திற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்து வேலைத் தலத்தைச் சுற்றிக் காண்பிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்.
நிக்கோலஸை வேலைத் தலத்திற்கு அழைத்துச் சென்றேன். கோர்ட், சூட், ரை சகிதம் மினுக்கிவிடப்பட்ட சப்பாத்தில் ‘டொக் டொக்’ என நடை பயின்று வந்தார். இந்த ஆடை வேலைத் தலத்தைச் சுற்றிப் பார்ப்பதற்குச் சரிப்பட்டு வராது. சீமெந்து பக்கட் பண்ணப்படும் மெசின்களுக்கு அண்மையில் போகும்போது சீமெந்துப் புழுதி உடைகளில் படியும். அதுபற்றி நிக்கோலசிடம் கூறினேன்.
“இப்படியே போனால் உங்கள் ஆடையில் டஸ்ற் பிடிக்கும். உங்கள் உடுப்புக்கு மேலாக இந்த ஓவரோலைப் போட்டுக்கொள்ளுங்கள்.” ஸ்டோரிலிருந்து ஒரு ஓவரோலை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
தொழிலாளர்கள் வேலையிலீடுபடும்போது அணிந்துகொள்ளும் ஆடை அது. காலிலிருந்து கழுத்து வரை ஒரே அங்கியாகத் தைக்கப்பட்ட ஆடை. முன்பக்கமாகத் திறப்பதற்கு கழுத்திலிருந்து இடுப்பு வரை சில பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதை அணிந்து கொள்ளும் முறை பழக்கப்பட்டவர்களுக்குத்தான் சுலபமாயிருக்கும். முதலில் கால்களை நுழைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கைகளைச் செருகி நரம்புச் சுளுக்கு வந்தது போன்ற பாவனையில் கைகளை மேலுயர்த்தி அணிந்து கொள்ளலாம். வேலையில் ஈடுபட்டிருக்கும்போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய ஆடை.
அந்த ஆடையைக் கொடுத்தபோது நிக்கோலசின் முகம் சுளித்தது.
“இல்லை… வேண்டாம். இப்படியே வருகிறேன்.”
வேலைத் தலத்தில் தொழிலாளர்கள் எல்லாம் இதே யூனிபோர்மைத்தான் அணிகிறார்கள். அந்த மட்டத்துடன் அவர் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லையோ என்று தோன்றியது. அல்லது அந்த ஆடையை அணிந்து கொள்வதிலுள்ள சிரமத்தை அவர் கற்பனை செய்து பார்த்திருக்கலாம்.
வேலைத் தலத்தினைச் சுற்றிப் பார்த்து வரும்போது உடையிற் படியும் சீமெந்துத் துகள்களை விரலினால் நுணுக்கமாகச் சுண்டித் தட்டிக்கொண்டு வந்தார். தொழிலாளர்கள் இந்தக் காட்சியை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். சீமெந்து பையிடும் பகுதிக்குள் சென்றபோது ஒரு பை சொல்லி வைத்ததுபோல வெடித்தது. இயங்கிக் கொண்டிருந்த மெசினில் பையைப் பொருத்தும் வாயூடாக சீமெந்து எங்கும் சீறிப் பரவியது. ஒரே சீமெந்துப் புழுதி மண்டலம்.
நிக்கொலஸ் சீமெந்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டு விட்டார். கண்ணைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடினார். அவரது ஆடை, தலைமுடி, முகம் எங்கும் ஒரே சீமெந்து மயம். (கண்ணாடி போட்டிருந்ததால் கண் தப்பித்துக் கொண்டது.)
அவரைத் தொடர்ந்து நானும் வெளியே ஓடி வந்தேன். அதிர்ச்சியடைந்திருந்தார். உடலில் நடுக்கம் தெரிந்தது. பார்க்கப் பரிதாபமாயிருந்தது. சீவியத்திலேயே இதுபோன்ற ஒரு தொழிற்தலத்துக்குப் போயிராத கிளீன் சூட்டிலேயே வாழ்க்கையைக் கழித்தவருடைய முதல் அனுபவம் இப்படி அமைந்துவிட்டது.
“ஐம் சொறி மிஸ்டர் நிக்கொலஸ்!?
கொம்பிறசர் எயார் லைனைத் திறந்து காற்றை அடித்து அவரது உடையிலும் தேகத்திலுமிருந்த சீமெந்துத் தூசியைப் போக்குவதற்கு உதவினேன்.
‘என்ன இது? ஏன் இப்படி?” எனக் கேட்டார்.
“இது தவிர்க்க முடியாதது. மெசினில் பக்ட் பண்ணும்போது சில சமயங்களில் இப்படி நடக்கக்கூடும். சீமெந்துப் பையின் தரம் சரியில்லாவிட்டால், அல்லது மெசினில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால், அல்லது பக்ட் பண்ணும் ஒப்பரேட்டர் சரியாகப் பையை மெசினில் பொருத்தாவிட்டால் இப்படி நடக்கக்கூடும். ஓடிக் கொண்டிருக்கும் மெசினிலிருந்து சீமெந்து சீறிப் பாய்கிறது.
கோபப்படுகிறாரோ எனும் சந்தேகம் உள்ளூர இருந்தாலும் சரியான காரணத்தை இன்னும் விளக்கமாகக் கூறினேன்.
“அப்படியானால் உள்ளே நின்று வேலை செய்பவர்களின் கதி அதுதானா? அவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள்? மூக்கில் போட்டிருக்கும் மாஸ்க் எந்த அளவிற்கு டஸ்றரை வடிகட்டும்?”
“இப்போதைக்கு அதுதான் கதி…”
“இந்த நிலைமையை இம்புறூவ் பண்ண ஏதாவது செய்ய முடியாதா..? இது சரியில்லை… தொழிலாளர்களை இப்படிக் கஸ்டப்படுத்தக் கூடாது…”
அந்தக் கணத்திலேயே அவர் என் நெஞ்சைப் பற்றிக்கொண்டார். பல மேலதிகாரிகளுடன் பணி புரிந்திருக்கிறேன். இப்படித் தொழிலாளர்களுக்காகப் பரிவு கொள்பவர்கள் மிகக் குறைவு. தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பல கோணங்களில் எடுத்துச் சொன்ன பின்னர்தான் சிலருக்குப் புரிய வரும். இன்னுஞ் சிலருக்கு (அல்லது பலருக்கு) அது புரியவே மாட்டாது (அல்லது புரிந்துகொள்ள விரும்புவதில்லை). நிக்கொலஸ் வித்தியாசமானவராயிருந்தார். இப்போதுதான் தன் கல்வியை முடித்துக்கொண்டு பணியேற்றிருக்கிறார். மிக உயர் பதவி. எனினும் அவரிடம் எந்தக் கிறுக்குத்தனமும் இல்லை.
இப்படித்தான் எங்கள் அறிமுகம் ஆரம்பமாகியது. சேர்ந்து பணி புரிவதற்கு உகந்த ஆளாயிருந்தார். எனது அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்தார். வேறு அலுவல்களைக் கவனிக்க வேண்டிய நிர்வாகப் பொறுப்பு இருந்தாலும் தினமும் ஒருமணித்தியாலமாவது எங்கள் வேலைத் தலத்திலும் செலவிடுவார்.
அன்றாட செலவு விபரங்கள், வேலை விபரங்கள் மட்டுமின்றி தொழிலாளர்களுடைய குறைபாடுகளையும் தானாகவே கேட்டறிவார். சீமெந்து பையிடும் பகுதிக்கு மேலதிகமாக புளோவர்கள் பொருத்தப்பட்டு டஸ்ற் வெளியேறும் வசதிகள் செய்யப்பட்டன. அவர்களுடைய இருப்பிட வசதிகளை மேம்படுத்துவது, சாப்பாட்டின் தரத்தைப் போஷாக்குடையதாக்குவது, வேலை முடிந்தபின் பொழுதுபோக்குவதற்கு ரேபிள் ரெனிஸ் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற சகல விடயங்களையும் பரிந்துரைத்தபோது ஆர்வத்துடன் தனது நிர்வாகப் பொறுப்பின் ஓர் அங்கமாக எடுத்துக் கொண்டு செயற்பட்டார்.
இதெல்லாம் அவரைப் பற்றிய ஒரு முன்னுரைதான். அவருடன் நான்கு வருடங்கள் வரை பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மிகவும் ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய மேலதிகாரிகளில் அவரும் ஒருவர்.
இனித்தான் புலி வரப் போகிறது!
ஒருநாள் தனது அலுவலகத்திலிருந்து நிக்கொலஸ் என்னை ரெலிபோனில் அழைத்தார்.
“உடனடியாக வாருங்கள்!”
காரை எடுத்து வாகன நெருக்கடியான பாதைகளை ஊடறுத்துக் கொண்டு ஓடினேன்.
அவசரமாக அழைத்திருப்பதால் என்ன காரணமோ தெரியாது. தலைமை அலுவலகத்திலிருந்து ஏதாவது விபரம் கேட்டிருக்கலாம். அதுபற்றி நேரில் கலந்துரையாட நிக்கொலஸ் விரும்புகிறார் போலும்… காலையில் வேலைத் தலத்திற்கு அவர் வந்து போனபோது இந்த அவசரம் இருக்கவில்லை. இது ஏதாவது விசேட காரணமாயிருக்கலாம். என்ன அது?
அலுவலகத்தில் அவரை முகம் பார்த்து அமர்ந்தபோது இரண்டு தாள்கள் கொண்ட ஒரு கடிதத்தை (?) எடுத்து என் முன் போட்டார்.
“படியுங்கள்..!”
வாசித்தேன். அது ஓர் அவதூறுக் கடிதம். எனக்கு எதிராக எழுதப்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து வந்திருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.
இந்த நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்து எட்டு வருடங்கள் பணியாற்றிய தருணம் அது. கம்பனியில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. (எனது பெயருக்கு மேலாக) அது நான் சம்பாதித்த பெயர். பல நாடுகளிலும் உள்ள தங்கள் பிரிவு நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை இலங்கையிலிருந்து எடுக்கும்போது அவர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை பல சமயங்களில் என்னிடம் தந்திருந்தார்கள். உடலுழைப்புத் தொழிலாளர் மட்டத்திலிருந்து பொறியியலாளர் தரத்திலுள்ளவர்கள் வரை ஆட்களை எடுப்பதுண்டு. தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய நாடுகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான உள்ளூர் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு இலங்கையில் ஓர் ஏஜண்டை கம்பனி நியமித்திருந்தது. (விசா ஒழுங்குகளைக் கவனித்தல், விமான ரிக்கட்டை பெற்றுக் கொடுத்தல் போன்ற கருமங்கள்.) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விமான ரிக்கட் முதற்கொண்டு சகல செலவுகளையும் கம்பனி செலுத்தும். ஆனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறவர்களிடமிருந்து ஏஜன்ட்காரன் ஒரு தொகைப் பணத்தை (மறைமுகமாக) அறவிட்டுக் கொண்டிருந்தான். (ஆனால் ஏனைய முகவர்களைப் போல மிகப் பெரிய தொகை அல்ல.) இதை நான் கண்டும் காணாதவன் போலத்தான் இருந்தேன். இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களை (மருத்துவ நிலை சரியில்லை… எம்பசியிடமிருந்து விசா கிடைக்கவில்லை போன்ற ஏதாவது பொய்க் காரணங்களைக் காட்டி) நிறுத்திவிடக் கூடும்.
தொழிலாளர்களைத் தெரிவு செய்யும்போது அவர்களது குடும்ப நிலவரம், அதாவது பொருளாதார ரீதியான கஷ்ட நஷ்டங்கள் உள்ளவர்களையே கூடியவரை தெரிவு செய்தேன். இன வித்தியாசமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களைத் தெரிவு செய்வதிலும் நியாயமான கொள்கையைக் கடைப்பிடித்தேன்.
இத்தாலியில் வேலைத்திட்டம் விரிவாக்கப்பட்டு, இன்னும் ஆட்கள் தேவைப்பட்டபோது இலங்கை வந்து தேவையானவர்களைத் தெரிவு செய்துவிட்டுப் போயிருந்தேன். ஏஜன்ட்காரன் அதில் சில பெயர்களைத் தவிர்த்துவிட்டு, வேறு பெயர்களைப் போட்டு அவர்களையும் நானே தெரிவு செய்ததாகக் குறிப்பிட்டுத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தான். இதுபற்றி அவனிடம் தொலைபேசியில் பேசியபோது, எங்கள் கம்பனியின் ஏனைய சில இடங்களில் பணிபுரியும் (சிங்கள) என்ஜினியர்களின் உறவினர்கள் அவர்கள் எனவும், அவர்களது வேண்டுகோளின்படிதான் பெயர்களை மாற்ற நேர்ந்ததாகவும் கூறினான். எனினும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களையே எடுக்கவேண்டுமென்பதில் நான் உறுதியாயிருந்தேன். சரியான பெயர்களைத் தலைமை அலுவலகத்திற்கு அறிவித்து அவர்களை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். அவதூற்றுக் கடிதத்திற்கான காரணம் அதுதான்.
இலங்கை ஏஜன்டிடமிருந்துதான் அவதூற்றுக் கடிதம் வந்திருந்தது. சாராம்சம் இதுதான்.
“எக்கச்சக்கமான தொகைப் பணத்தினைப் பெற்றுக் கொண்டு இவர் ஆட்களைத் தெரிவு செய்கிறாராம். வடக்கு கிழக்கிலுள்ள புலிகளையும் தெரிவு செய்துகொண்டு வந்திருக்கிறாராம். அவர்கள் இங்கு வந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்களாம். இவர் இலங்கை வரும்போது விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸார் பிடித்துக் கொள்வார்களாம். ஏஜன்ட் என்ற முறையில் தன்னிடம் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் பலமுறை வந்து விசாரித்தார்களாம்.”
இவன் எதற்காக இப்படி ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினான் என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. (எனினும் ஏஜன்ட்காரனைப் பயன்படுத்தி அந்த சிங்கள என்ஜினிய நண்பர்கள் கடிதத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.)
இங்கு இன்னுமொரு முறை குறுக்கிட வேண்டியிருக்கிறது.
இலங்கையில் யுத்த நிலைமைகள் பற்றியும் யுத்தத்திற்கான காரணங்கள் பற்றியும் நிக்கொலஸ் அவ்வப்போது விசாரித்து அறிந்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்தவனாகையால் காணும் போதெல்லாம் விளையாட்டாக ‘புலி’ எனக் குறிப்பிட்டுத்தான் என்னோடு கதைப்பார்.
குண்டுகள், தாக்குதல்கள் பற்றி செய்தி ஊடகங்களில் தகவல் வரும் நாட்களிலெல்லாம் “இலங்கை ஒரு சிறிய நாடு, ஏன் சண்டை போடுகிறீர்கள்? உங்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியாதா?” எனக் கேட்டுக் கொள்வார்.
கடிதத்தை வாசித்து முடிந்ததும் நான் எழுந்தேன். கடிதத்தை நிக்கொலசின் மேசையில் போட்டேன்.
“மிஸ்டர் நிக்கொலஸ்… ஏன் போராடுகிறீர்கள் என்று அடிக்கடி கேட்பீர்கள்தானே? ஏன் தெரியுமா? இதற்காகத்தான்..!”
அவருக்குப் புரியவில்லை. இன்னும் புரிய வைத்தேன்.
“இலங்கையில் பணிபுரிந்தபோதும் இதேபோன்ற அநியாயங்கள்தான் நடந்தன. தமிழன் என்ற காரணத்துக்காக பலவித குழிபறிப்புக்கள். எங்களுக்குக் கீழே வேலைசெய்தவர்களைக்கூட எவ்வித தகுதியும் இன்றி மேலதிகாரிகளாகப் போடும் கூத்துக்கள். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வெறுத்துப் போய்த்தான் வெளிநாட்டுக்கு வந்தேன்…
இலங்கையைப் போலன்றி இங்கு எனது திறமையும் ஆற்றலும் கணிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து எவ்வளவோ தூரம் வந்து எங்கோ ஒரு நாட்டில் உயர் பதவியில் இருப்பதும் அவர்களுக்குப் பொறுக்கவில்லை..!” எனது சீற்றம் நிக்கொலசிற்குப் புரிந்திருக்க வேண்டும்.
“மிஸ்டர் ராஜா… இருங்கள்… இருங்கள்..! பதட்டப்பட வேண்டாம். நாங்கள் உங்களை நம்புகிறோம். இதனால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படக்கூடும். அதுதான் எங்கள் கவலை”.
“எனது கவலையும் அதுதான். இப்போது அங்கு நாடு உள்ள நிலையில் தொலைபேசியில் சும்மா தகவல் கொடுத்துவிட்டாலே போதும். விமான நிலையத்தில் வைத்துப் பிடித்துக்கொண்டு போவார்கள். நான் எப்படி என் வீட்டுக்குப் போவது?”
நிக்கொலஸ் ஆறுதற்படுத்தினார்.
“இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்…”
இரண்டாவது நாள் நிக்கொலஸ் என்னிடம் வந்தார்.
“கிரீசுக்கு (தலைமை அலுவலகத்திற்கு) போவதற்கு விமான ரிக்கட் ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கு நீங்கள் பயணமாக வேண்டும்.”
ஏதும் பேசாமலே பார்வையைக் கேள்வியாக்கினேன்.
“இலங்கையிலிருந்து ஏஜன்ட்காரனையும் அங்கு அழைத்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையை விசாரிக்கலாம்.”
கிரீசிற்குப் பயணமானேன். நிக்கொலசும் வந்திருந்தார். நான் தங்கியிருந்த ஹோட்டலிற்கு மதிய நேரமாக வாகனம் வந்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது.
போனபோது நிக்கொலசும் இன்னும் இரு அலுவலர்களும் ஏஜன்ட்காரனும் அமர்ந்திருந்தார்கள். எனக்குக் காட்டப்பட்ட கதிரையில் அமர்ந்தேன்.
“மிஸ்டர் ராஜா… நாங்கள் ஏற்கனவே அவருடன் பேசிவிட்டோம்” என நிக்கொலஸ் கூறினார். சில ஃபைல்களை எடுத்து மேசையில் போட்டார். ஏஜன்ட்காரனைப் பார்த்தார். அவனது முகம் இருண்டு போயிருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன்.
“மிஸ்டர்… இதுபோல நிறைய ஃபைல்கள் இலங்கையிலிருந்து வந்திருக்கின்றன. தங்களை முகவராக நியமிக்கும்படி கேட்டு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அவை. உங்களுடைய பைலை மூடிவிட்டு இவற்றில் ஒன்றைத் திறக்கும்படி செய்யவேண்டாம்.. ராஜா எங்களுடன் பத்து வருடங்கள் வேலை செய்கிறார். உங்களைவிட அதிகமாக எங்களுக்கு அவரைப்பற்றித் தெரியும். இப்படியான கீழ்த்தரமான குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம்..!”
“ஐம் சொறி… சேர்!” இந்த வார்த்தையை அவன் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு ஹோட்டலில் மதிய போசனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அவருடன் கோபப்பட வேண்டாம். நட்புணர்வுடன் பேசுங்கள்” என என்னிடம் நிக்கொலஸ் கூறினார். நான் கோபப்படவில்லை. இதமாகவே பேசினேன்.
“இலங்கைக்கு வரும்போது எனக்கு அறிவித்துவிட்டு வாருங்கள். விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பாகக் கூட்டிப் போவேன்” என என்னிடம் ஏஜன்ட்காரன் கூறினான்.
நான் சிரித்தேன்.
“எனக்கு உங்களுடைய பாதுகாப்புத் தேவைப்படாது!”
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |