புற்று…





வழக்கம் போல கணிணியில் முன் அமர்ந்து பெயர் மாற்றம் செய்துகொண்டு ஒரு பிரபல தமிழ்க்குழுவிற்கு அந்த செய்தியை அனுப்பினார் உத்தம நம்பி. பிரபல அரசியல்வாதியுடன் பிரபல நடிகையை இணைத்துக் கற்பனையாய் கண்டபடி செய்திகள் திரித்து அவர் அனுப்பியதை இணைய உலகமும் முகநூலும் வாசிக்கத் தொடங்கியது.

இன்று நேற்றல்ல கல்லூரி நாளிலிருந்து மொட்டைக்கடிதம் எழுதுவது காலனியில் அக்கா தம்பி அண்ணன் தங்கை போலப் பழகுகிறவர்களை இணைத்து வதந்தி பரப்புவது என பெயருக்குப் பொருத்தமின்றி உத்தம நம்பி நாசவேலை செய்வான்.
மனைவி வசந்தாவிற்கும் இதுபற்றி தெரியும்.அடிக்கடி கணவனிடம் ‘இது சரி அல்ல’என்பாள். உத்தம நம்பியோ,”அடி போடி..இதெல்லாம் ஒரு ஜாலிக்கு செய்வதுதான்” என்பார்.
“ஒருநாள் உங்க பொண்ணு யாருடனாவது ஓடிப்போகப் போகிறாள்பாருங்க அப்பதான் உங்களுக்கு புத்திவரும்” என்ற வசந்தாவின் வார்த்தைகள் பொய்யாகிப் போயின..
“ஹ பாத்தியாடி உன் சாபம் பலித்ததா? எனக்கு இதில் ஒரு ‘த்ரில்’இருக்குது. யாருக்கும் சந்தேகம் வராதபடி பேரை மாத்திக்கிட்டு செய்றேன்..என் மகளே ‘அப்பா! வித்தியாச மனிதர் நீங்க’ன்னு பாராட்டிட்டுப் போய்ட்டா!” என்று சிரித்துக்கொண்டார்.
“உங்களுக்கெல்லாம் கடவுள் தான் பாடம் புகட்டணும்” என வசந்தா மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
அன்று உத்தமநம்பியும் வசந்தாவும் உறவினர் வீட்டு திருமணம் போய்விட்டு வீடு திரும்பியது முதல் வயிற்று வலியில் அவஸ்தைப்பட்டார் உத்தம நம்பி.
ஒருவாரம் எந்த மருந்தும் சாப்பிட்டும் பயன் இல்லை.
குடும்ப டாகடரின் அறிவுரைப்படி சில மருத்து பரிசோதனைகளை முடித்துக் கொண்டார் உத்தம நம்பி.
பரிசோதனைகளின் முடிவைப் பெற டாக்டர் சொன்னபடி வசந்தாவுடன் அவரைப் பார்க்கச் சென்றார்,
“உத்தம நம்பி! வயிற்றுப்பகுதி பரிசோதனை ரிசல்ட்டில் உங்களுக்கு புற்று நோய் வந்துள்ளது தெரிகிறது அதுவும் முற்றின நிலையில் இனி வாழ்க்கை அதிக நாள் உங்களுக்கு இல்லை என்பதை வருத்தமுடன் சொல்லிக்கறேன்” என்று டாக்டர் சொல்லவும் வசந்தா கணவனைப் பார்த்த பார்வையில் கரையான் பலகாலம் கட்டிய புற்றில் ஒருநாள் பாம்பு தான் வசிக்கும் என்ற வழக்கு மொழி தெறித்தது.