புத்தாண்டு பரிசு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 7,633 
 
 

(2003ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்ரா பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருந்தாள். அடிக்கடி கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டு, வந்து கொண்டிருந்த எந்த பஸ்ஸிலும் ஏறாமல் எதிர்த்திசையில் தோழி காஞ்சனாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்க அவளுக்கு எரிச்சலாக வந்தது. திடீரென்று ஆட்டோவில் வந்த காஞ்சனா ஸாரி சித்ரா லேட்டாகி விட்டது. வா போகலாம் என்றார். ஆட்டோவில் ஏறிய சித்ரா எல்லோரும் ஏதோ பொம்பளையைப் பார்க்காத மாதிரி மொறைச்சுப் பார்க்கிறாங்க சே! என்றாள். ரொம்ப நேரம் காத்து நிற்கின்றாயோ ஐயாம் வெரி ஸாரிடி. அது சரி இந்த வருடமாவது கட்டுரைப் போட்டியில் நீ கண்டிப்பாக ஜெயித்து விடுவாயில்லையா? அந்த குமண ராஜனோட- கொட்டத்தை அடக்கியே தீர வேண்டும்.

கடந்த இரண்டு வருடமாக அவன்தான் கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு வாங்கிக் கொண்டிருக்கிறான். இரண்டாவது பரிசு வேறே தேவதாசனுக்குப் போய் விடுகிறது.

பெண்களால் எதுவும் சாதிக்க முடியாது. இந்த வருடமும் பரிசு எங்களுக்குத்தான் என்று கும்மாளம் போட்டுக் கொண்டு திரிகிறான். இந்த வருடமாவது திரு.வி.க. கட்டுரைப்போட்டியில் எப்படியாவது முதல் பரிசு வாங்கி விடு இல்லையெனில் காலேஜிலே தலை தூக்கி நடக்க முடியாமல் போய் விடும்.

என்ன செய்யட்டும், போன வருடமும் கட்டுரை மிகப்பிரமாதமாக எழுதியிருந்தேன். ஆனால் அவன் கட்டுரையைப் பார்த்த பிறகுதான் எனது கட்டுரை மிகவும் சாதாரணமாகத் தெரிகிறது. எத்தனை அழகாக ஒவ்வொரு பாராவிற்கும் ஒரு ஸப் ஹெட்டிங் கொடுத்து பிரமாதமாக எழுதி இருக்கிறான்.

சரி சரி. குமண ராஜன் புகழ் பாடாதே எரிச்சலாக இருக்கிறது. கல்லூரியில் சேர்ந்து மூன்று வருடமாகிறது. எப்போதும் பெண்களை மட்டம் தட்டுவதில் அவனுக்கு நிகர் அவன்தான். நீ என்ன செய்வாயோ தெரியாது. இன்றைக்கு தமிழ் புரொபசரிடம் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன். அவரிடம் தெளிவாக கேட்டு எப்படி எழுத வேண்டும் என்று விரிவாக விளக்கமாக கேட்டு எழுதிய கட்டுரையை நல்ல முறையில் திருத்தி எழுது. இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டு அன்று கல்லூரி ஆனுவல் டேயில் கட்டுரைப்பரிசை நீதான் தட்டிச்செல்ல வேண்டும்.

எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது காஞ்சனா. இதிலே பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. ஆமா இந்த வருடம் கட்டுரைத் தலைப்பு என்ன?

தமிழ் தோன்றியதிலிருந்து இன்று வரை? என்றாள் சித்ரா.

ஏற்கனவே நீ எழுதி வைத்திருப்பதை முழுவதும் சரிபார்த்துக்கொண்டாய் அல்லவா? ஆம். காஞ்சனா ஆனால் இந்த வருடம் போட்டியில் பரிசு வாங்கவில்லை என்றால்.. இந்தப் பசங்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போய் விடும்.

அதனால்தான் சொல்கிறேன். தெளிவாக பொறுமையாக தயார் செய் என்று சொல்வதற்குள் தமிழ்ப் பேராசிரியர் உமா மகேஸ்வரியின் வீடு வந்து விட இறங்கிக்கொண்டார்கள்.

அன்று இரவு முழுவதும் சித்ராவிற்கு தூக்கம் வர மறுத்தது. நான் இந்தத்தமிழ்ப் புத்தாண்டில் எப்படியாவது திரு.வி.க. கட்டுரைப்போட்டியில் பரிசு வாங்கியே ஆக வேண்டும். இந்தக் கல்லூரியில் சேர்ந்து தமிழ்ப்பண்டிட் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்து ஒரு முறையும் இதுவரை எந்தக் கட்டுரை, கதை, கவிதை போட்டியிலும் பரிசு வாங்காமல் போனது இல்லை. பரிசு கிடைக்க வில்லை கல்லூரி மகளிர் வர்க்கத்திற்கே இழுக்காக உணர்கிறேன் என்று நினைத்துக் கொண்டே படுத்தவள் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல எழுந்து ஏற்கனவே எழுதி வைத்திருந்த கட்டுரையை எடுத்து திருப்பி அழாகாக எழுத ஆரம்பித்தாள்.

தமிழ்ப்புத்தாண்டு அன்று கல்லூரி வளாகத்திலுள்ள ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. குமண ராஜன் தன் நண்பர்கள் குழாமோடு பெரியதாகச் சப்தமெழுப்பிக்கொண்டு முன் வரிசையில் வந்தமர்ந்தான்.

மாணவர்கள் சிலர் பெண்களால் எதுவும் முடியாது. இந்த வருடமும் நாங்கள்தான் பரிசு வாங்கப்போகிறோம். என்று கத்திக்கொண்டிருந்தனர்.

காஞ்சனா மெதுவாக சித்ராவின் அருகில் வந்து எப்படி செய்திருக்கிறாய்? இந்த வருடம் பரிசு வாங்கி விடுவாயா என்று கேட்டாள்.

ஏதோ செய்திருக்கிறேன். இவர்கள் பண்ணுகிற கலாட்டாவைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது.

ஏண்டி நீ எழுதியது உனக்கே நம்பிக்கையில்லையா?

அழுது விடும் நிலையில் கண்களில் நீர் திரள இருபக்கமும் தலையை ஆட்டினாள் சித்ரா. விழாவின் கலை நிகழ்ச்சிகள் முடிந்து இறுதியில் பரிசு வழங்கும் படலம் ஆரம்பித்தது.

முதலில் கட்டுரைப்போட்டிக்கான பரிசை அறிவிக்கிறோம் என்றவாறு மைக்கின் அருகில் வந்தார் கல்லூரி முதல்வர்.

எல்லோரும் மௌனமாக மேடையைப்பார்த்துக்கொண்டிருக்க எல்லா வருடமும் போல இந்த வருடமும் குமண ராஜன் என்று முதல்வர் சொல்லி முடிப்பதற்குள் மாணவர்கள் ஓ… ஓ… என்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள்.

முதல்வர் திரும்பவும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எல்லா வருடமும் போல இந்த வருடமும் குமண ராஜன் பரிசு பெறுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் நம்மை ஏமாற்றி விட் டார். இந்த வருடம் திரு.வி.க. கட்டுரைப்போட்டி பரிசைத் தட்டிச்செல்பவர் மிஸ்.சித்ரா என்று அறிவித்ததும் பெண்கள் கூட்டம் எழுந்து நடனமாட ஆரம்பித்தது.

கங்கிராஜுலேஷன்ஸ் நம் பெருமையைக்காப்பாற்றி விட்டாய் என்றாள். காஞ்சனா சித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டவாறு எழுந்து பரிசு வாங்க மேடையை நோக்கி நடந்தாள் சித்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *