புத்தரின் பேரன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்டணத்திலே – 

காரோடும், டிராம் ஓடும், கடும் வெயிலால் தார் இளகி ஓடும், வீதிகளில் ஒரு வீதி. 

மாமிச பர்வதங்களையும், சாயம் தீட்டிய பொம்மி களையும் சுமந்தபடி பளபளப் பிளஷர்கள். வேகமாக ஓடிக்கொண்டுதானிருந்தன. பஸ்களும், டிராம்களும், சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் இன்னும் பல ரகமான வாகனங்களும் அங்குமிங்கும் போய் வந்தன. 

இவற்றினூடே, இவற்றின் ஏறலை இறங்கு அலை இயக் கங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு, தங்களைப் பாதுகாப்பதோடு, தங்கள் பொறுப்பிலே விடப்பட் டுள்ள சாமான்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியோடு, ஒரு பெரிய பார வண்டியை இழுத்தபடி அடிஅடியாக முன்னேறி ஊர்ந்தனர் மனிதப் பிராணிகள். 

ஆங்கிலக் கலாசாரத்தின் தத்துப் பிள்ளைகள் ‘நவ நாகரிகத்திலே ஒரு அனக்ரானிஸம்!’ என்று சொல்லிவிட்டுத் தம் பாட்டிலே போவர். வாழ்க்கை வெயிலினால் வறளடிக்கப்படாமல் மனித இதயமும் மனித உணர்ச்சியும் கொஞ்சமாவது பெற்றிருக்கிறோம் என்று சொல்லக் கூடியவர்கள், மாடுகளைவிட மோசமாக மாற நேர்ந்து விட்ட மனிதப் பிராணிகளின் கதியை நினைத்துப் பெருமூச்செறிந்து விட்டுப் போகலாம். 

ஆனால், பட்டணத்திலே ‘அவரவர் பாடுதான் பெரிசு’ என்ற கவலையோடு, தம் தொல்லையும் தலைதெறிக்கும் அவசரமும் தாமுமாய், வாகனாதிகளிலும் கால் நடையாகவும் போய் வருகிறவர்கள் தொகைதான் அதிகம். அவர்கள் கண்ணில் பட்டாலும் பிரக்ஞையில் படியாத, ஆயிர மாயிரம் அன்றாட நிகழ்ச்சிகளில் இதுவுமொன்று. அவ்வளவுதான். 

வெயிலில், கால் சுட, இளகி நிற்கும் தார் தன்நயம் உணர்த்தும். மண்டை வெடிபட, ஒளிக் கதிர் தன் வண்ணம் காட்டும். அவற்றோடு பாரம் அழுத்த, பசி வயிற்றைப் பிய்க்க, தார் நிறமேனியிலே முத்துத் துளி கள் போல் வேர்வை பொடித்து நிற்க, அவ்விரண்டு பேரும் முன் குனிந்து – பெரு மூச்சுயிர்த்து – அடி அடி யாகக் கால்களை நகர்த்தி வண்டியை இழுத்துக் கொண்டிருந்தார்கள். 

நணஙணத்து, லொட லொடத்து வரும் டிராம் வண் டியின் தடத்தை விட்டு விலகி வழிவிட வேண்டும். அதற் குள் முன் பக்கமும் பின்பக்கமும் வந்து தங்கள் அவசரத்தை ‘ஹார்ன்’ ஓசை மூலம் ஒலி பரப்பும் கார்க்காரர் களுக்கு வழி மறைத்திராத ‘மாடு’களாக விளங்க வேண் டும். இன்னும் பல தடங்கல்களையும் சமாளித்து, பலரது தாக்குதல்களையும்,ஏசல்களையும், எரிச்சல் மொழிகளை யும் தாங்கிக் கொள்ளவேண்டும். பசியைத் தணித்து வயிறு வளர்த்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி யாவது உழைத்து,நாளோட்டுகிற மனித வர்க்கத்திலே இரண்டு பேர் – அநாமதேயங்கள் அவர்கள். பிறருக்காக உழைத்து ‘உயிரைக் கொடுத்தும்’ கூட தாம் வாழ முடியாது. ‘செத்த பிழைப்பு’ பிழைக்கும் சீவன்கள். 

நாகரிக நகரத்திலே, நடுரோட்டில், அநாகரிகத்தின் சின்னங்களாய், மனித வர்க்கத்தின் மானங்கெட்ட தன் மையைச் சுட்டிக் காட்டும் பிம்பங்களாய், ‘கலாசாரம், கலாசாரம்’ என்று வ வாய்ப்பறை அறையும் கபோதி களைப் பழிக்கும் பிரத்தியட்ச கோரங்களாய், ஊர்ந்து கொண்டிருந்தார்கள் – மிஷின் யுகத்திலே கூட மனிதர்கள் பொதி மாடுகளாக மாறவேண்டிய அவசியம் ஏற்படும் என் பதை விளம்பரப் படுத்துவது போல. 

நாகரிக அலை முட்டி மோதி சுழித்து நெளிந்து புரண்டு, ஏறி இறங்கி வடிந்துகொண்டுதானிருந்தது. அவர்களை அது பாதிக்கவுமில்லை. அவர்களால் பாதிக்கப் படவுமில்லை. தெருக்களின் ஏகபோக வாரிசுகள் போல, நான்கு மாடுகள் அங்குமிங்கும் நகர்ந்தன. குறுக்கே நின்றன. அசையாது பார்த்தன. இஷ்டப்பட்டால் வழி விட்டன பிளஷர் சீமான்கள்’ வேகத்தை மட்டுப் படுத்தியும், விலகியும், சிலசமயம் காரை நிறுத்தியும் மாடுகளின் பண்பை கௌரவித்து விட்டுப் போனார்கள். ஆனால், பாரவண்டியை இழுக்க முடியாமல் இழுத்துச் செல்லும் மனித உருவங்கள் பேரில் ‘நெற்றி ஒற்றைக் கண்ணனின் பொட்டைத்தனப் பார்வையை எறிந்தார்கள். 

‘டேய், காட்டு மாட்டுத் தனமாக என்னடா வழி விடாமல் நடு ரோட்டிலே?….’உம், விலகி ஓரமாப் போங்கடா …. மடையன்கள்! வண்டி இழுத்துப் போற லெச்சணத்தைப்பாரு’ என்றெல்லாம் அருளுரை புகன்று அப்பால் போனார்கள். 

என்றாலும், மனித உருவம் பெற்றிருந்தும் மிருகங் களின் வேலையைச் செய்து வாழ முயலும் அவ்விரண்டு நபர்களும் தங்கள் உழைப்பே லட்சியமாய், கிடைக்கக் கூடிய கூலியே குறிக்கோளாய், உணர்ச்சிகளை அவிய வைத்து, அடி அடியாக அசைந்து கொண்டிருந்தார்கள். 

அதே வேளையிலே எதிரே ஒரு வண்டி வந்தது. அதிகச் சுமை எதுவுமில்லை இரட்டைக் காளை வண்டி தான். மெதுவாகத் தான் வந்து கொண்டிருந்தது.மா மாடு களில் ஒரு மாட்டுக்கு ஏதோ நோய். கழுத்து புண்ணா யிருந்தது. ரணம் பட்டு, ரத்தம் கசிந்து காய்ந் து பொறுக்காகி யிருந்தது. அதில் ஒன்றிரண்டு ஈக்கள் அரித்துக் கொண்டிருந்தன. 

அப்போது அவ்வழியா யாக வந் து சேர்ந்தார்கள் காக்கிச் சட்டையும், கருணைச் சட்டம் பதிந்த கடமை நெஞ்சும் கொண்ட அதிகார புருஷர்கள் இரண்டு பேர். மிருகங்களுக்குக் கொடுமை இழைக்கப்படுவதைத் தடுப் பதற்காக அமைந்த ஒரு இலாகாவின் செல்வர்கள். 

முரண்பாடுகள் மலிந்த இன்றைய சமுதாயத்திலே எவ்வளவோ விந்தைகள் நடக்கின்றன. இந்த புத்த வாரிசு இலாக்காவின் தயவினாலும் விந்தைகள் நடை பெறாமல் இல்லை. மனிதன் கோழியைக் கொன்று கறி செய்து சாப்பிடலாமாம் ஆனால் காலைப் பிடித்து தலை கிழாகத் தொங்கவிட்டு, கோழியை எடுத்துப் போனால் அது கொடுமையாம்! இதைப்போல அதிகம். 

சைக்கிளில் வந்த காக்கி உடைக் கருணையாளர்கள் வண்டி இழுத்துக் கஷ்டப்படும் மனிதப் பிராணிகளை பார்க்காமல் இல்லை. அவர்களை அப்படிக் கொடுமைப் ப படுத்தும் – வாழ்க்கையை வஞ்சிக்கும் சமுதாய அமைப்பு முறையைப் பற்றிச் சிந்திக்கத் தெரியாது அவர்களுக்கு. அதற்கு அவகாசமும் இல்லைதான். 

அவர்கள் பார்வையில் காயம்பட்ட மாடு தென்பட் டது. இப்படி மாட்டைக் கொடுமைப் படுத்தலாமா? அது தண்டனை பெறவேண்டிய குற்றமாயிற்றே! பிடி வண்டிக் காரனை. சார்ஜ் பண்ணு விலாசம் எழுது. நடவடிக்கை எடு – கடமை உணர்வு காட்டிய பாதையிலே அவர்கள் ரமாக முன்னேறினார்கள். வண்டிக்காரனின் கெஞ்சல் களும், கும்பிடுகளும் வாயில்லாச் சீவன்களுக்காக வக்காலத்து வாங்க வந்த இந்த யுகத்து புத்த முனிகளின் மனதில் இரக்கம் உண்டாக்கவில்லை. செய்த மகிழ்வோடு சைக்கிளில் ஏறினார்கள். 

போகும்போது எதிர்சாரியில் வண்டி இழுத்து அசையும் ‘மனித மாடுகளைப் பார்த்தார்கள். 

“எ மடையன்களா! ஓரம் போ! ரோடு என்கிற நெனப்பே இல்லாமெ நடுமத்தியிலே வண்டியைக் கொண்டு போனால்? ஓரமாப் போங்கடா!’ என்று கூவி விட்டு, தங்கள் ‘இரும்புக் குதிரை’க்கு இயக்கம் கொடுத்தார்கள். 

இரும்பு யுகத்திலே இரும்பாகத் தோன்றாமல் மனிதனாய்ப் பிறந்துவிட்ட குற்றத்தால் மாடுகளைவிட மோசமாய் வாழ்கிற இரண்டு பேரும், நெடு மூச்செறிந்த வாறே அடி அடியாய் நகர்ந்தார்கள். பார வண்டியும் கொஞ்சம் கொஞ்சமாய் அசைந்தது. 

அந்த மனிதர்களின் மோனநெடு மூச்சுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? 

ஒரு சிலர் தாம் வாழ வகை செய்துகொள்ளும் இன்றையச் சமுதாயத்திலே நாய்கள் ‘முதலாளி நாய்கள் ஆகி, சுகமனுபவிக்க முடியும்; மாடுகள் நன்றாக இஷ்டம் போல் வாழலாம்; பன்றிகளும் பறவைகளும் நல்ல போஷாக்கில் வாழ முடியும். ஆனால் மனிதரில் பெரும் பாலர் மனிதராக வாழமுடியாதா? – உழைத்து உழைத்து உடல் நலிவோரது தீ மூச்சின் பொருள் இதுவாக இருக்கலாம் அல்லவா? 

– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *