புதைமணல்
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுனாமியின் கோரவடுக்கள் நிறைந்த பிரதேசங்களைத் தாண்டிச் சென்ற எமது வாகனம் “சண்முகம் வித்தியாலய” நலன்புரி நிலையத்தின் முன்னாற் சென்று நின்றது. வாகனத்திற் சென்ற இளைஞர்கள் இளைஞிகள் அனைவரும் குதித்து இறங்கினோம். அரசசார்பற்ற நிறுவனத்தின் இந்தச் சொகுசு வாகனத்திற் பயணிப்பதே ஒரு சொர்க்க போகம்தான். சுனாமிப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதவர்களுக்கு உளவளத்துணை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதே எமது வருகையின் பிரதான நோக்கமாக இருந்தது.
வாகனத்தைக் கண்ட முகாமில் இருந்தவர்கள் விழுந்தடித்துக் கொண்டு வந்து அதைச் சூழ்ந்து கொண்டனர். சோகம், துயரம், அவலம் எனத் துன்பத்திற்கு எத்தனை ஒத்த சொற்கள் உள்ளனவோ அவற்றையெல்லாம் வெவ்வேறு விதங்களிற் கலந்துள்ள முகங்கள்.
“வாங்கோ..வாங்கோ” முகமலர்ச்சியுடன் வரவேற்றார் முகாம் பொறுப்பாளர். உளவளத்துணை வழங்கப்பட வேண்டியவர்களின் விபரங்களை அவரே திரட்டி வைத்திருந்தார். அவரை ஒரு வேவு அணியினராகக் கற்பனை செய்தால் எமது வருகை ஒரு தரையிறக்கமாகவே கருதப்படவேண்டும். இந்த எண்ணம் என்னுள் சிரிப்பை முகிழ்ப்பித்தது.
“என்ன தம்பி சிரிக்கிறியள்?”
”ஒண்டுமில்லை. நாங்கள் எங்கை தங்கிறது?”
“அதுக்குத் தனியா றூம் இருக்கிறது. அந்த வகுப்பறைதான். பத்துப் பேருக்குக் காணுமே?”
“ஓம் வடிவாக் காணும். இருக்கிற இடம் முக்கியமில்லை. எங்கடை பணிதான் முக்கியம்”
நாங்கள் எங்களது பொருட்களை உரிய இடத்திற் சேர்த்த பின் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வழங்கப்பட்டன. எனக்குக் கோவிந்தன் என்பவரின் பொறுப்புக்கிடைத்தது. உளவளத்துணை தொடர்பான எனது நீண்ட அனுபவத்தின் மூலம் அவரைக் குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. “ஐயா, என்னட்டை நீங்க ஒப்படைத்த கோவிந்தனைப் பற்றிச் சொல்லுங்கோவன்”
“இந்த முகாமிலேயே கடுமையான பாதிப்புள்ளவர் அவர்தான். மனைவி முந்தியே இறந்து போனா. ஆசை அருமையாக வளர்ந்த ரண்டு பிள்ளையளையும் கடல் கொண்டு போட்டுது. அதுதான்…”
“இப்ப என்ன செய்யிறார்?”
”முகம் பேயறைஞ்ச மாதிரி இருக்குது. ஒருதரோடையும் கதை இல்லை. பிள்ளையளை ஞாபகப்படுத்திற சம்பவங்கள் எதையும் கண்டால், உடனை தலையிலை அடிச்சுக்கொண்டு குழறுவார். அது மட்டுமில்லை. உடுக்கிற சாரம், படுக்கிற படுக்கை எல்லாத்தையும் அடிக்கடி உதறிக் கொண்டிருப்பார். நடைப்பிணம் எண்டு ஊருக்கை சொல்வினமே இவருக்கு இப்ப அந்த நிலைதான்.”
“சரி ஆள் ஆரெண்டு காட்டுங்கோ பாப்பம்
“அந்தா, அந்தப் பச்சை சாரத்தோட போறாரே அவர்தான். கிணத்தடிக்குப் போறார் போல கிடக்கு.”
”இஞ்சை எங்கை இருக்கிறவர்?”
“இந்தா, இந்தச் சுவர் மூலைதான் அவற்றை இடம்”
அவரது இடத்தைப் பார்த்தேன். பாய் இல்லை. ஒரு பெண் குழந்தையின் சட்டை மட்டும் விரிக்கப்பட்டிருந்தது. ஆண் குழந்தையின் காற்சட்டை, சேட் என்பன தலையணையாக. ஓ! பிள்ளைகளின் நினைவில் வாழ்தலா? குணப்படுத்தலின் முதற்படி இவரை இந்நினைவுகளிருந்து அப்புறப்படுத்தலாகத்தானே இருக்க முடியும்?
கோவிந்தன் முகம் கழுவிவிட்டு வருவது தெரிந்தது. எவ்வாறு அறிமுகம் செய்து கதையைத் தொடங்குவது என்ற சிந்தனைச் சிதறல்கள் என்னைச் சுற்றி…
அவர் துவாயைத் தேடுவது தெரிந்தது. உதவிக்குச் சென்றேன். “ஐயா, இந்தாங்கோ துவாய்” வாங்கிக்கொண்டே ஒரு பார்வை. நட்பும் பகையுமற்ற நொதுமல் நிலை என்பது இதுதானோ?
முகம் துடைத்தான பின் ஒவ்வொரு உடையாக எடுத்து உதறி இருந்த இடத்திற்கு எதிரே வைத்தார். சாரத்தின் கட்டைத் தளர்த்திப் பலமுறை உதறியபின் உடுத்துக் கொண்டார். ரத்த ஓட்டத்தையே தடுப்பது போல் தலையை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு பலமுறை உதறினார். எங்கோ செல்லப் புறப்பட்டு அங்குமிங்கும் தேடினார்.
”சேட்டே தேடுறியள்?’
”ஓம்”
“அந்தப் பெட்டிக்குள்ளையெல்லே வைச்சனியள்?”
சேட்டை எடுத்துப் பலமுறை உதறினார். போட்டார். மீண்டும் கழற்றி உதறியபின் போட்டுக்கொண்டு புறப்பட்டார்.
கோவிந்தனின் இருப்பிடத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் திருநீற்றுப் பூச்சுடன் படுத்திருந்தார். அவரிடம் ஏதாவது அறியலாமா?
“ஐயா, உங்கடை பேர் என்ன?”
”சங்கரப்பிள்ளை”
”உங்களுக்குச் சுனாமியாலை பாதிப்பொண்டும் இல்லையே” “இல்லாமல்… எனக்குப் பிள்ளையள் இல்லை. மனிசியைத்தான் கடல் கொண்டு போட்டுது.”
“இவர் ஏன் இப்படி இருக்கிறார்?”.
“ஆர் கோவிந்தனே? இப்ப கொஞ்சம் பரவாயில்லை எல்லோ. முந்திச் சாப்பாடு, தண்ணி வென்னி ஒண்டும் இல்லை. பிறகு நான்தான் ஒரு மாதிரிச் சுகப்படுத்திச் சாப்பிட வைச்சனான்.”
“நீங்க சுகப்படுத்தினனீங்களோ? என்ன செய்தனீங்கள்?”
”இவருக்கு இவற்றை மச்சானோடை நெடுகப் போட்டி. சுனாமி வந்த அண்டு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு ரவுணுக்கு வெளிக்கிட்டவராம். அப்ப,மச்சான்காரன் வீட்டை வந்ததாலை அதுகள் போகாம நிண்டிட்டுதுகள். அதுகள் மச்சானாலைதான் செத்ததெண்டு அவரிலை கோபம்.’
“அது கிடக்கட்டும். நீங்க எப்படி அவரைச் சுகப்படுத்தினனீங்கள் எண்டு சொல்லுங்கோவன்”
“பொறுங்கோ. அதுதான் சொல்லிறன். இவனைச் சாப்பிடப் பண்ண வேற வழிதெரியேல்லை. ஒரு பொய் சொன்னன். மச்சான்காரன் உனக்குச் செய்வினை செய்ததாலதான் இவ்வளவும் நடந்ததெண்டு நம்பவைச்சன். பிறகு அவரை இருத்தி எனக்குத் தெரிஞ்ச மந்திரம் எல்லாஞ் சொல்லித் தண்ணீர் தெளிச்சு விபூதியும் பூசிவிட்டன். அதோடை கொஞ்சம் முகம் வெளிச்சுது. சாப்பிடவும் தண்ணி குடிக்கவும் தொடங்கினார்.”
“பிறகென்ன நல்ல வேலை செய்திருக்கிறியள்”
”ஆனால் அதாலை ஒரு பிரச்சனையும் வந்திட்டுது. நான் சொன்ன செய்வினை திரும்பவும் தன்னிலை ஏறிவிடுமோ எண்டு நினைக்கத் தொடங்கிவிட்டார். அதுதான் அடிக்கடி உடுப்பை உதறுகிறார்.”
”சைற் எவக்ற்” என்பது இதுதானோ? என்றாலும் முதியவர் கோவிந்தனைச் சாப்பிடப் பண்ணியிருப்பது பெரிய விடயம்தானே? நாங்கள் எவ்வளவோ கதைச்சுக் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டுமென நினைத்த ஒன்றைச் சின்னச் செயற்பாட்டாலை முடிச்சுப் போட்டாரே? இது தான் தமிழரின் பாரம்பரிய உளவளத்துணை முறையா? நூல்கட்டுதல், விபூதி போடுதல் என்பவற்றை எமது உளவளத்துணை முறையினுட் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும், அவற்றைத் தவறென்று நிராகரிக்கவில்லை. எனவே இந்த முறைகளாலேயே குணப்படுத்த முடியுமா என முயன்று பார்க்க விரும்பினேன்.
“அப்ப பெரியவர், மிச்சமிருக்கிற செய்வினையை நீக்க இன்னும் ஒருக்கா, ரண்டுதரம் திருநீறு போட்டிருக்கலாமே?”
“எனக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்ததுதான். எண்டாலும் அதை மாத்தப் பிறகும் என்ன நடக்குமோ எண்டு பயம் வந்திட்டுது. தன்ரை உடுப்பைத்தானே உதறிறார் எண்டு விட்டிட்டன்.”
வெளியே போன கோவிந்தன் உள்ளே வருவது தெரிந்தது. அவர் வழியிற் சென்று எதிர்கொண்டேன்.
“நீ…. நீங்க ஆர்? எனக்கு உதவி எல்லாஞ் செய்றியள்?
”ஐயா…. நானும் இஞ்சை கிட்ட இருக்கிறவன்தான். எனக்கு ஒரே ஒரு பிள்ளை. அதைக் கடல் கொண்டு போட்டுது. அதுதான் மன ஆறுதல் தேடி இஞ்சை வந்திருக்கிறன்”
“கடவுள் எல்லாருக்கும் ஏன்தான் சோதினையளைக் குடுக்கிறானோ தெரியேல்லை”
“என்னையா இப்படிச் சலிக்கிறியள். உங்களுக்கும் ஏதேனும் பிரச்சனையே?’
“ஏதேனும் பிரச்சனை இல்லைத்தம்பி. எல்லாமே பிரச்சனைதான்.”
இப்போதுதான் அவர் முகத்தைக் கிட்டவைத்து நேருக்கு நேரே பார்க்கிறேன். சூரியனை மேகக்கூட்டங்கள் மறைக்கவும் விலகவும் வானம் இருண்டு, ஒளிர்ந்து கொண்டிருக்குமே. அது மாதிரிக் குழப்பமும் தெளிவும் கலக்கும் கண்கள். அவை எங்கும் நிலைபெறாமல் யாரையும் நிமிர்ந்து பார்க்கத் துணிவின்றித் தரை தழுவுகின்றன. ஞாபக அலைகள் மனப்பாறையில் மோதி மோதித் திரும்பிச் செல்வதான கலங்கல் நிறைந்த முகம்.
“என்ன ஐயா, ஒரே சலிப்பாக் கதைக்கிறியள்?”
“ரண்டு பிள்ளையளையும் கடல் அள்ளிக் கொண்டு போனாச் சலிக்காம என்ன செய்யிறது”.
“நீங்க சொன்னது சரிதான் ஐயா, கடவுள் எல்லாருக்கும் கஷ்ரங்களைத்தான் குடுக்கிறான்”
”ஓம் தம்பி ரவுணுக்குப் போகேக்கை “ரிப்பி – ரிப்பி” வாங்கிக் கொண்டாங்கோ எண்டு அனுப்பின பிள்ளையள்… வந்து பாக்கேக்கை இல்லை தம்பி”
குலுங்கிக் குலுங்கி அழுகிறார். அவர் அழுது துயரங்களைக் கழுவிக்கொள்ளச் சிறிது நேரம் கொடுக்கிறேன்.
“ஐயா ரவுணுக்குப் போகேக்கை பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு போகோணும் எண்டு நினைக்கேல்லையே”
“ஐயோ! அதுகள் வெளிக்கிட்டதுகள் தம்பி. அந்த நாசமறுப்பான் வந்து நிப்பாட்டிப் போட்டான்.”
“ஆர் ஐயா, அவர்?”
“அவனோ…என்ரை மனிசீன்ரை தம்பிதான் அந்த… மோன். அண்டைக்கு மட்டும் அந்த நாய் வந்து தடுக்காட்டி இண்டைக்கு என்ரை பிள்ளையள் என்னோடை இருந்திருக்கும்”
மீண்டும் தலையிடித்துக் கொண்டே கதறியழத் தொடங்கினார். சிறிது நேரம் அழ அனுமதித்தேன்.
”ஐயா….எனக்கு கைரேகை பாக்கத் தெரியும். ஒருக்காப் பாக்கட்டே?” ”என்ன மசிருக்கு…? பாத்தாப்போல என்ரை பிள்ளையள் திரும்பி வரப்போகுதுகளே?”
“இல்லை ஐயா, எங்கை பிழை எண்டு பாப்பமே?”
“இந்தாங்கோ”
“நீங்க நல்ல கடவுள் நம்பிக்கையான ஆள். உங்களுக்கு எல்லாம் கடவுள் தந்தவர். உங்கட சொந்தக்காரர் தான் ஆரோ மனம் பொறுக்காம என்னவோ செய்து போட்டினம். அதுதான் இந்த நிலை வந்தது.”
“ஓம் ஓம் தம்பி நீர் சொல்லிறது சரிதான்”
“ஐயா, ஆரோ உங்களுக்குச் செய்வினை செய்திருக்கினம். இஞ்ச பாருங்கோ. இந்த ரேகை கறுத்துப் போய் இருக்கு”.
“உண்மைதான் தம்பி. நீர் சரியாகச் சொல்லுறீர். அந்தாளும் அதுதான் சொன்னது.”
”ஆனா… பிறகு ரேகையில கொஞ்ச இடத்திலை தெளிவிருக்கு. ஏதாலும் பிரயாச்சித்தம் செய்தனீங்களே?’
“ஓம் தம்பி.உதிலை ஒரு ஐயா திருநீறு பூசித் தீத்தம் தெளிச்சவர். அதுக்குப் பிறகு கொஞ்சம் சுகம்.’
”எண்டாலும் முழுசா எடுபடேல்லை. திரும்பியும் அதுகள் ஏறப்பாக்குது” “அதுக்குத்தான் தம்பி, நான் பயந்து பயந்து வாழிறன்”
“அதே ஆளைக்கொண்டு இன்னும் ரண்டு பார்வை பாக்க எல்லாம் சரியா விடும்”.
“தம்பி அதில வாற திருநீற்றுப் பூச்சுக்காரர்தான் நான் சொன்ன ஆள்”
“அவரே. அவரை எனக்கு நல்லாத் தெரியும். செய்வினை எடுக்கிறதிலை வலு விண்ணன்”
அந்த முதியவருக்கும் சில ஆலோசனைகள் வழங்கிய பின்னர் அன்று மாலையும் அடுத்த நாட் காலையும் திருநீற்றுப் பூச்சுடன் பார்வை பார்க்கப்படுகிறது. திருநீற்றுக் கையைத் தலையிலிருந்து கால்வரை இழுத்து வந்து நிலத்திலே தொட்டு, மந்திர உச்சாடனத்துடன் இறங்கு, இறங்கு ” என அடிக்கடி கூறுகிறார். பார்வை முடிந்ததும் கோவிந்தன் முகத்தில் மகிழ்ச்சியுடன் கூடிய தெளிவு காணப்படுகிறது.
“ஐயா, இப்ப உங்கடை முகம் நல்லா வெளிச்சிட்டுது”
“ஓம் தம்பி. ஏதோ பாரம் இறங்கின மாதிரித்தான் இருக்குது. உங்கடை உதவியளை மறக்கேலாது.”
என்னுட் பரிபூரண நம்பிக்கை முளைவிடத் தொடங்குகிறது. சாரம் உதறுவது நின்றுவிட்டது. செயற்பாடுகளிலே தெளிவு. முற்றாகக் குணப்படுத்தி விட்டேன். இனித் தொழிலை நோக்கித் திரும்பி விட்டால் வெற்றிப் பூரிப்போடு நான் ஊர் திரும்பலாம்.
“அப்ப ஐயா, உங்கடை பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் திரும்பவும் தொழிலுக்குப் போகத் தொடங்கிவிட்டினம். நீங்கள் என்ன செய்யப் போறீர்கள்?”
“என்ன மசிருக்கு? முந்தி நான் கடல்லை இருந்து இறங்கினவுடனை பிள்ளையள் ஓடிவரும். மீன் வித்துக் கைச்செலவுக்குக் காசு குடுத்தாப் பிறகுதான் பள்ளிக்குப் போகுங்கள். இனி ஆருக்காண்டித் தொழிலுக்குப் போவன். என்னைத் தனிய விட்டிட்டுப் போட்டீங்களே” அடி வயிற்றிலிருந்து அவல ஓசைவரக் குழறி அழத் தொடங்கினார். நான் திகைத்துப்போனேன். சாண் ஏற முழஞ்சறுக்கும் வேலையா? அழுகை தணிந்து படிப்படியாக மீண்டு வந்தார். என்னுடன் தாராளமாகக் கதைக்கத் தொடங்கினார். இயல்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார். மீண்டும், அவரைத் துயர் மூட்டத்தில் இருந்து மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை என் மனதிற் கூடு கட்டத் தொடங்கியது.
அரசசார்பற்ற நிறுவனத்தின் வாகனம் ஒன்று அவ்விடத்தில் வந்து நின்றது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் அனைவருக்குமான உடுதுணிகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இழப்புக்கள் பற்றிய கவனத்தைக் தற்காலிகமாகத் திருப்பிய மக்கள் அவற்றைப் பெற முண்டியடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் கோவிந்தனிடம் எந்தச் சஞ்சலமும் இல்லை. “ஓடும் செம்பானும் ஒக்கவே நோக்கும்” தன்மையுடன் கண்களை மட்டும் அவர்களை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார்.
இவரைத் தொழிலுக்கு அனுப்புவதைவிடச் சமூக இசைவாக்கத்தைப் படிப்படியாக வளர்த்தெடுப்பது நன்மை தரலாம் என்ற எண்ணம் என் மனதிற் பளீரிட்டது. பொருளிற்காக நிற்கும் வரிசையில் இவரை நிறுத்தினால் பலருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் ஏற்படும்.
“ஐயா, புது உடுப்பெல்லாம் குடுக்கினம்… நீங்க என்ன செய்யப் போறியள்?”
“என்ன மசிருக்கு? எல்லாரும் தங்கடை பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் குடுக்கினம். நான் ஆருக்குக் குடுப்பன்? ஐயோ என்ரை சாந்தன் என்ரை தனுசுக்குட்டி. என்னை விட்டிட்டு எங்கை போட்டியள்?” அவலக்குரல் அந்தப் பிரதேசத்தின் தற்காலிக உற்சாகத்தையும் கழுவிச் சென்றது.
எங்களது கடமை முடிந்து திரும்ப இன்னும் சில நாட்களே இருந்தன. அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பதற்றமும் பரபரப்பும் என் மனமெங்கும்.
இவருக்கு ஏதாவது விடயத்தில் ஆர்வம் இருந்தால் அந்தத் திசையில் திருப்பிவிடலாம் என்ற சிந்தனை. கவிதை.. கதை… நாடகம்….. சினிமாப்படம்…? முகாமிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர் கிரிக்கெற்றில் ஆர்வமுடையவர் என்பதை அறியமுடிந்தது. முகாமிலுள்ள தொலைக்காட்சியில் விளையாட்டுச் செய்திகள் இடம்பெறும்போது மறைந்து நின்று பார்த்ததைக் கண்டதாகச் சிலர் கூறினர். சுனாமிக்கு முன்னர் இலங்கை அணி விளையாடும் போட்டி என்றால் தொழிலையும் விட்டுவிட்டு, யார் வீட்டிலாவது கெஞ்சி மன்றாடி ஆட்டத்தைப் பார்ப்பதையும் அறிய முடிந்தது. எனவே தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்கிக் கொடுத்துக் கிரிக்கற் ஆட்டங்களில் அவரது கவனத்தைத் திருப்புவதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம் முடிவெடுத்தேன். அது மட்டுமல்ல. தொலைக்காட்சிப் பெட்டியின் பாதுகாப்பைக் காரணங்காட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பவும் முடியுமெனக் கணித்தேன்.
யார் வாங்கிக் கொடுப்பது?
அவரது மைத்துனரே முன்வந்தார். எனக்கோ ஆச்சரியம். ”உங்களைப் பற்றித்தானே அவர் பிழையா…?
”ஓம், எனக்குத் தெரியும். பாவம் பிள்ளையளை இழந்த கவலை. அவர் சுகப்பட்டாரே போதும். நான் வாங்கித்தந்ததெண்டு சொல்லாதேங்கோ” ஒரு நல்ல இதயத்தை சந்திப்பது பெரும் பாக்கியம்தான். காலையிலேயே தொலைக்காட்சிப்பெட்டி கொண்டு வந்து இறக்கப்பட்டுவிட்டது. எங்கோ போன கோவிந்தனின் வருகைக்காகக் காத்திருந்தேன். ஊருக்குத் திரும்ப வேண்டியநாள் வந்துவிட்ட நிலையில் என் கடமையை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் போவதான பெருமிதம் நெஞ்சில். அவரைக் கண்டவுடன் உடலெங்கும் பரபரப்புடன் கூடிய மின்பாய்ச்சல்.
“வாங்கோ, உங்களுக்குக் கிரிக்கெற் மச் எண்டால் விருப்பமோ?”
”ஓம், என்னென்டு தெரியும்? சின்ன வயதிலை பள்ளிக்கூட ரீமிலை விளையாடினனான். பிறகு தொழில் ….பேந்தெங்கை? எண்டாலும் இலங்கை விளையாடிற மச் எல்லாம் பாப்பன்.”
“இப்ப அவுஸத்திரேலியா இலங்கைக்கு வந்திருக்கெல்லோ?” “ஓம் நேற்றுச் செய்தியிலை காட்டினவை”
”அந்த மச்சை நீங்கள் முழுசாப் பாக்கவேணுமெண்டு ரீ.வி. ஒண்டு உங்களுக்கு வாங்கி வைத்திருக்கிறேன். இது உங்களுக்குத்தான்”.
ஒரு கணம் மின்வெட்டுப்போல மகிழ்ச்சி தோன்றிமறைய
”ஐயோ….என்ரை சாந்தன் எத்தினை தரம் ரீ.வி. வாங்கித்தா எண்டு கேட்டிருப்பாய். இப்ப ரீ.வி வந்திட்டுது. நீ எங்கையப்பு போட்டாய்?” தலையிலடித்துக் கொண்டே பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினார்.
– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.
– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.
ம.பா.மகாலிங்கம்
யாழ்ப்பாணம் இளவாலை மயிலங்கூடலைச் சேர்ந்த ம.பா.மகாலிங்கசிவம் 1968ல் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழக சிறப்புக் கலைமாணி (தமிழ்) கல்வித் தகைமை பெற்ற இவர் தற்போது யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். கவிதை, சிறுகதை, ஆய்வு, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதிவருகிறார். யாழ் பல்கலைக் கழகக் கலைப் பீடத்தால் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதைப் போட்டிகளில் முதலிடம், கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். புலவர் ம. பார்வதிநாதசிவத்தின் மகனான இவரது தொடர்பு முகவரி:- சிவபுரம், இணுவில் மேற்கு, இணுவில்.