புதுமையான மனிதர்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே ஒரு செந்தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் பன்னூல்களையும் பழுதறப் பயின்று சிறந்து விளங்கினார். அவர் பேரறிவு பொருந்தியவராக இருந் தும் உலகத்தினரோடு ஒட்ட ஒழுகும் திருந்திய பண்பு பொருந்தியவராக இல்லை. எந்தச் செயலைச் செய்தா லும் மற்றவர்கள் செய்வதற்கு மாறுபாடாகவே அவர் செய்வார். தமக்கு அண்மையில் வாழ்ந்திருக்கும் மக்க ளோடு பழகமாட்டார். எப்பொழுதுந் தனித்தவராகவே இருப்பார். யாராவது அவரைப் பார்க்கச் சென்றால், அவர்களோடு மனம் பொருந்திப் பேசமாட்டார். தந்தி யடித்தாற் போல் இரண்டொரு மொழிகளைப் பேசி அனுப்பிவிடுவார்.
அவரைப் பார்க்கச் சென்றவர்கள் எழுந்து செல்லாமல் உட்கார்ந்திருந்தால், “ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? போய்விட்டு வாருங்கள்,” என்று கூறி அனுப்பிவிடுவார். ஒருமுறை அவரிடஞ் சென்றவர்கள் மறுமுறை செல்லமாட்டார்கள். அப்புலவர் கோயில் முதலிய இடங்கட்குச் செல்லவேண்டுமானால், யாருஞ் செல்லாத சமயமாகப் பார்த்துத்தான் செல்லுவார். எதிர்பாராதவாறு யாரேனும் தோன்றி ஏதேனும் பேசினால், தக்கவாறு பதிலளிக்கமாட்டார். ஊமையைப் போலப் பேசாது செல்வார். இத்தகைய இயல்பு வாய்ந்த புலவரின் பெயர் மாசிலாமணிப்புலவர்.
மாசிலாமணிப் புலவர் நூல்கள் பல எழுதியிருந்தார். அந்த நூல்கள் நன்றாக அமைந்திருந்தன. அதனால் மாசிலாமணிப் புலவருடைய பெயர் பல விடங்களிலும் பரவியிருந்தது. பல்கலைக் கழகம் ஒன்றிலே மாசிலாமணிப் புலவரைத் தமிழ்ப் புலவராக ஏற்படுத்தினார்கள். முதலிற் புலவர் அந்த வேலையை வேண்டாம் என்று மறுத்துவிடலாமென்று எண்ணினார். அவ்வேலைக்குத் திங்கள் ஊதியம் ரூபா முந்நூறாகலின் அதனை விடக்கூடாது என்று பிறகு துணிந்தார். வேலையை ஒப்புக்கொண்டு பார்க்கத் தொடங்கினார். யாரோடும் நெருங்கிப் பழகாத அவருடைய பழக்கம் அங்குந் தொடர்ந்தது.
மணியடித்தவுடன் வகுப்புக்குள் நுழைவார். பாடம் முடிந்தவுடன் எழுந்து விரைந்து சென்றுவிடுவார். எவரேனும் ஐயமானவைகளைப் பற்றிக் கேட்டால் அவைகட்கு மட்டும் பதிலளித்துவிட்டுப் பறந்துவிடுவார். ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைகட்கு அவர் செல்லமாட்டார். எங்கேனும் ஒதுக்கிடங்களில் தங்கியிருப்பார். பல்கலைக் கழகத்திற்குள் அவரைப் பார்ப்பதுகூட அருமையாக விருந்தது.
மாணவர்கள் நல்லவர்களையே கிண்டல் செய்யும் அறியாமைப் பண்பு பொருந்தியவர்கள். அவ்வாறாக மாசிலாமணிப் புலவர் போன்ற தனிப்பட்ட குணமுடையவர்களை விட்டுவிடுவார்களா? ‘சுடுமூஞ்சி’ என்றும், ‘முசுடு’ என்றும், ‘வியப்புடைப் பிறவி’ என்றும் ‘கொம்பு முளைத்த தம்பிரான்’ என்றும் பல பெயர்களிட்டுப் பகடி செய்தார்கள். பிற ஆசிரியர்களும் மாணவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். மாசிலாமணிப் புலவருக்கு நாளடைவில் தொல்லை மிகுதியாயிற்று. அவர் தமக்கு ஆசிரியத் தொழில் வேண்டாமென்று கூறி வெளியேறிவிட்டார். தனிப்பட்ட இயல்புடையவர்கள் இவ்வாறு தான் பிறரால் பழிக்கப்படுவர்.
“தேசத்தோ டொத்துவாழ்” (இ-ள்.) தேசத்தோடு – வாழ்ந்திருக்கும் நாட்டில் உள்ளவர்களுடனே; ஒத்து – மனம் பொருந்தி; வாழ் – நீ வாழ்ந்திருப்பாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,