பிள்ளைக் கறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 272 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – திருத்தண்டனும், அவ் பொண்டாட்டியும் வாந்தாங்க. எண்ணக்கிமே பொய் சொல்லாம, செவ பக்தியோட ரெண்டு பேரும் இருந்தாங்க. தெனோமும் -, ஒரு பரதேசிக்கு அன்னதானம் போடாமச் சாப்பிடுறதில்ல. இப்டி நடந்து வரயில், ஒருநா, கடவுளே!! இவங்களச் சோதிக்க நெனச்சு, பண்டாரம் பரதேசிகள இவங்க வீட்டுக்குப் போக விடுறாரு. 

அண்ணக்கிப் பாத்து, எந்தப் பண்டாரம் பரதேசியும் இவங்க வீட்டுக்கு வரல. திருத்தண்டன் பொண்டாட்டி, சோத்த ஆக்கி வச்சுட்டு ரெண்டு பேரும் வெளியெலாந் தேடுராங்க. பண்டாரம் பரதேசியக் காணமே காணம். ஊருக்குத் தெக்க, திருத்தண்டன் போயி ஒக்காந்து, பண்டாரம் பரதேசியப் பாத்துக்கிட்டு ஒக்காந்துகிட்டு இருக்கர். எங்ஙிட்டுண்டாலும் வரமாட்டாங்களாண்டு தெக்கயும் – வடக்கயும் பாத்துக்கிட்டிருக்கா. 

அப்ப, அந்த வழியா, கடவுளே, சாமியாரு வேசம் போட்டு வாராரு. கடவுளு, நம்ம பரமசிவந்தே. வரவும், திருத்தண்டனுக்கு உள்ளூர சந்தோசம் பொறுக்க முடியல. ஓடிப் போயி, காலுல நெடுஞ்சாணா விழுந்து. சாமி!! எங்க வீட்டுக்குச் சாப்பிட வரணும்ண்டு கூப்புடுறர். 

கூப்புடயில, சாமியாரு, பக்தா!! நாஞ் சாப்பிடுறத ஒன்னால தர முடியாது. நீ போப்பாண்டு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சாரு. 

சாமி!! பதினாறு வகக் காய்கறியோட சமச்சு வச்சிருக்கே. கண்டிப்பா, இண்ணக்கி நீங்க வகுறாரச் சாப்பிடணும்ண்டு விடாமச் சொல்றா. 

சொல்லவும், சரி! சாப்டுறே. ஆனா, எனக்கு வேண்டியது மாமிசம். காய்கறி இல்ல. அதுவும் நர மாமிசம். அதுவும், ஆணா இருக்கணும். அஞ்சு வயசுப் பையனா இருக்கணும். ஒன்னால இதத்தர முடியுமாண்டு கேட்டாரு. மனசுக்குள்ள பயம்,இருந்தாலும் சரிண்டு சொல்றா. சாமிய விடுறதுக்கு மனசு இல்ல. விடுஞ்செந்திருச்சா ஒரு சாமிக்காவது அன்னதானம் போட்டாகணும். போட்டாத்தான் இவங்க ரெண்டு பேரும் சாப்ட முடியும். சாமியாருகிட்ட சரிண்டு சொல்லிட்டு, ஓசுக்சுக்கிட்டே நேரா வீட்டுக்கு வாரா. வர்ர போதே எல்லாத் – தெய்வத்தயும் வேண்டிக்கிட்டே வாரா. எப்டிண்டா: சாமி!! ஏ…மனசப் போல, எம் பொண்டாட்டி மனசும் இதுக்குச் சம்மதிக்கணும்ண்டு பொலம்பிக்கிட்டே வீட்டுக்கு வாரா. 

அப்ப, திருத்தண்டன் பொண்டாட்டி, வாசல்ல நிண்டு புருச வாரதப் பாத்துக்கிட்டிருக்கா. பொண்டாட்டிகிட்ட வந்து, சாமியாரப் பாத்தே, பிள்ளக்கறி சமச்சாத்தர் சாமியாரு சாப்பிடுவாராம். பிள்ளக்கி எங்க போறதுண்டு கேக்குறா. எதுக்கு வருத்தப்படுறீங்க? நம்ம பிள்ளயக் கறி சமச்சு, சாமிக்குப் போடலாம். சாமி சாப்பிட்டால் போதும்ண்டு அவ சொல்றா. 

சரிண்ட்டு, பள்ளிக் கொடத்ல படிக்கப் போயிருக்கிற பாலகனக் கூட்டிட்டு வரப் போறர். வாத்தியாருகிட்டப் போயி, எம் பையனோட அத்தயும் மாமாவும் வந்திருக்காங்க. வாத்தியாருகிட்டப் போயி, பையனக் கூப்பிட்டுட்டு வரச்சொன்னாங்கண்டு சொன்னர். அப்ப, வாத்தியாரு, கூப்பிட்டு போண்டு சொல்லிட்டாரு. கூப்பிட்டுகிட்டு, தகப்பனும், பிள்ளயும் நடந்து வாராங்க.

நடந்து வர்ரபோது, எடறி விழுந்தா, விழுந்தா, எங்கறி கண்டிப்போகும். சாமி சாப்பிட மாட்டாரு, என்னயத் தோள்ல தூக்கிட்டுப் போண்டு மகன் சொல்றர். அழுதுகிட்டே மகனத் தூக்கிக்கிட்டு நடந்து வாரா. 

தாயும் எதிர்பாத்து, வாசல்ல காத்துக்கிட்டிருக்கா. இவங்க மனச அறிய, அத்தயும் மாமாவயும் எங்கேண்டு மகன் கேக்குறா. நீ வாரதுக்கு நேரமாச்சு, அதனால இப்பத்தா போறாங்கண்டு தாயி சொல்றா. பேசிக்கிட்டே தாயி மடியில் படுத்து ஒரங்கிப்போயிட்டா. அப்ப, தாயி கழுத்தப் புடிக்க, தகப்பன் கழுத்த அறுக்க, அறுத்து கொஞ்ச நேரத்துக்குள்ள சமச்சிட்டா. 

திருத்தண்டன், சாமியாரப் போயி, நீங்க சொன்னது மாதிரி, பிள்ளக்கறி சமச்சு வச்சிருக்கே. சாப்பிட வாங்கண்டு கூப்டுறா. 

சாப்பாட்டு நேரந் தவறிப் போச்சு, இதுக்கு மேல என்னால் சாப்பிட முடியாது. வந்தாலும் சாப்பிட மாட்டேண்டு சாமியாரு சொல்றாரு. 

நீங்க பசியா இருக்கயில, நாங்க எப்படிச் சாப்பிடுறது? கட்டாயம் நீங்க சாப்பிட வரணும்ண்டு திருத்தண்ட வப்புறுத்திக் கூப்டுறா. 

அப்ப, வேண்டா வெறுப்பா வந்து, வெளித் திண்ணயில ஒக்காந்தாரு. திருத்தண்டன் பொண்டாட்டி, கை கழுவத் தண்ணி மோந்து கொண்டாந்து தந்தா. தண்ணிய கையில வாங்கிக்கிட்டு, ஒனக்குக் கொழந்த இருக்காண்டு சாமியாரு கேட்டாரு. இருக்குண்டு திருத்தண்டன் சொன்னர். அப்டிண்டா கூப்டு, “மக்களில்லாச் சோறு மருந்து, பிள்ளயில்லாச் சோறு புளுவு”, குழந்தைக பக்கத்ல இல்லாம நாஞ் சாப்பிட மாட்டேண்டு சொல்லிட்டாரு. 

நம்ம பிள்ளையத்தே அறுத்துக் கறி சமச்சிருக்கோம். பெறகு, பிள்ள எப்பிடி வரும்ண்டு நெனச்சுக்கிட்டு, வாசல்ல போயி நிண்டு, எட்டிப் பாத்தா. வெளியில நெறையாப் பிள்ளைக வெளையாடுதுக. 

சாமியாரு சாப்பிடட்டும்ண்டு நெனச்சு, வெளிய நிண்டு சீராளா!! சீராளாண்டு ரெண்டு தடவ கூப்பிட்டா. அப்ப, அங்கிட்டிருந்து மகன் ஓடியாரர். பிள்ளயப் பாத்த ஆசயில ஓடிப்போயித் தூக்குனா. தூக்கிக்கிட்டு வீட்டுக்குள்ள போறா. போயிப் பாக்கயில, வீட்டுக்குள்ள சாமியாரு இல்ல. கறி வகைக இல்ல, சாதம் மட்டும் இருக்குது. பெறகு. பெறகென்னா? கடவுள் தான் கருண காட்டிட்டாருல்ல. கடவுள் புண்ணியத்துல, நல்லா வாழ்ந்தாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *