பிறந்த இடம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 2,869
தினமும் அந்த குப்பத்தை தாண்டி செல்லும்போதெல்லாம் தொழிலதிபர் ஸ்ரீதரன் அந்த குப்பத்துக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் எப்படி போவது? தான் இருக்கும் இப்போதைய நிலையில் அந்த குப்பத்துக்குள் நுழைந்து ஒவ்வொரு குடிசையாக உள்ளே புகுந்து பார்க்க முடியுமா? இப்படி நினைத்து நினைத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களை ஓட்டி விட்டார்.
மலேசியாவில் இருக்கும் வரை இந்த நினைவுகள் அவரை தொல்லை பண்ணவில்லை. இப்பொழுது இந்தியாவிற்கு வந்த பின்னால், அதுவும் தினமும் இந்த குப்பத்தை தாண்டும்போதுதான் அவருக்கு இந்த குப்பத்தின் மீது பாசம் அதிகரித்துள்ளது.
ஒரு நாள் யாரும் பார்க்காமல் மாறு வேடம் போட்டாவது அந்த இடத்துக்குள் போய் வந்து விடவேண்டும் என்று நினைப்பார். பிறகு அதை நினைத்து அவருக்கே சிரிப்பு வரும். எதற்கு மாறு வேடம், மனசு மட்டும் இருந்தால் தாராளமாக போகலாம், ஆனால் அந்த மனம் அவருக்கு வரணுமே? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். அதுவும் இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும்போது அந்த குப்பத்துக்குள் சென்று இருப்பது எவ்வளவு சிக்கல்.
மனைவி அவரை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் மலேசியாவை தாயகமாக கொண்ட தமிழ் பெண். ஒரு விதத்தில் இவருடைய வளர்ச்சிக்கு அவள்தான் உறுதுணை என்றால் மிகையில்லை. இவருடைய அமைதியின்மை அவளுக்கு புரிந்தது, பிசினசில் ஏதாவது பிரச்சினையா? இருந்தால் கண்டிப்பாய் தன்னிடம் அலசுவார், இல்லை உடல் ரீதியாக ஏதாவது? அப்படி இருப்பது போல் தெரியவில்லை. மலேசியாவில் இருந்தவரை இவர் இப்படி இருந்ததில்லை. அங்கு மகனை பொறுப்பாக்கி விட்டு சென்னை வந்த பின்னால் தான் அவருக்கு இந்த பிரச்சினை என்பது அவளுக்கு புரிந்தது.
அன்று இரவு அவரிடம் கேட்டே விட்டாள். என்ன பிரச்சினை எதற்காக படபடப்புடன் இருக்கிறீர்கள். அவர் கொஞ்சம் தயங்கியவர் தன்னுடைய பிரச்சினையை சொல்லி விட்டார். இவ்வளவுதானா? சிரி சிரி என்று சிரித்தாள் அவர் மனைவி.
இப்ப நீங்க என்ன அந்த குப்பத்துக்குள்ள போய் ஒவ்வொரு குடிசைக்குள்ளயும் போகணும் அவ்வளவுதானே? அவளின் கேள்வி அவருக்கு ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. இந்த சொசைட்டி ஏதாவது சொன்னா? கேட்ட அவரை பரிதாபமாய் பார்த்த மனைவி ஏங்க பிசினசுல கொடி கட்டி பறக்கற நீங்க கேவலம் சொசைட்டி என்ன சொல்லும் அப்படீன்னு பயப்படறீங்களே? உங்களை நினைச்சா எனக்கு கோபமா வருது. இந்த சொசைட்டியா உங்களை கரையேத்துச்சு? அவளின் கேள்வி நியாயமாக பட இல்லை என்று தலையசைத்தார்.
இரண்டு நாள் ஓடியிருந்தது, இன்று அலுவல்கம் போக வேண்டாமென்று அவரை தடுத்து தன்னுடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு அந்த குப்பத்தை அடைந்தாள். அங்கு சென்றவர் ஆச்சர்யத்தில் அப்படியே நின்று விட்டார். அந்த
குப்பத்து மக்கள் அனைவரும் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். அவருக்கு மாலை போட்டு உள்ளே கூட்டி சென்றனர்.
ஒவ்வொரு குடிசை நடுவிலும் சேறும் சகதியுமாக இருக்க அவர் அதில் கால் வழுக்கி விடுமோ என்று பயந்து பயந்து நடந்தார். பின் தொடர்ந்து வந்த குப்பத்து மக்கள், அவரை கையை பிடித்து ஒரு குடிசைக்குள் அழைத்து சென்றனர்.
குடிசைக்குள் நுழைந்த உடன் அவர் மனது அப்படியே உணர்ச்சிவசப்பட்டு நின்றது. தன்னை அறியாமல் அவர் கண்களில் கண்ணீர். அவருடைய அம்மாவின் குரல்..
இன்னாடா இப்படி குந்திக்கிணீக்கற? உடம்புக்கு முடியலை அம்மா? ஸ்கூல்லயே சுருண்டுக்கினேன், ஒரு வாத்தியாரு இட்டாந்துட்டு போனாரு?
வாடா ராசா ஆசுபத்திரி கூட்டிக்கினு போறேன், உங்கப்பன் வாறதுக்கு இந்நா நேரமாகுதோ?, பாவம் அது ரிக்க்ஷா இஸ்திகிணு எப்ப வருமோ?
பக்கத்து ஆசுபத்திரிக்கு அவனை இழுத்துக்கொண்டு அம்மா ஓடியது, ஒவ்வொன்றாய் நிழல் படமாய் ஓட, அதன் பலனாய் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார். பக்கத்து குடிசைக்கு நடந்தார். ஆ..இந்த குடிசையில் கூட்டாளியுடன் அடித்து பிடித்து விளையாண்டது.
ஒவ்வொரு குடிசையாக பார்த்து பார்த்து வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடி விட்டது. எல்லாம் பார்த்து விட்டு வரும்போது அந்த குப்பத்தின் கடைசியில் சிறு மைதானம் ஒன்றிருந்தது, அதில்தான் இவர்களின் சோக்காளிகள் பளிங்க்..கபடி கபடி விளையாடுவார்கள். அங்கு சென்ற போது குப்பத்து மக்கள் எல்லோரும் அங்கு கூடியிருக்க இவரை பேச சொன்னாள் அவர் மனைவி.
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருந்ததால், இன்னாபா நான் யாருன்னு புஞ்சுச்சா, நானூம் ஒருக்காட்டி இங்கத்தான்பா புறந்து வளந்துகினேன். இப்பா பாரு இம்மா தூரம் வந்துகினேன். குப்பத்து பாஷயில் வெளுத்து கட்ட தொடங்க, அங்குள்ள மக்கள் ஹே..ய் சந்தோச கூச்சலிட்டனர். நம்ம குப்பத்து ஆளா?
சட்டென்று தன்னை நிதானப்படுத்தியவர், உங்களுக்கும் நான் சொல்ற அறிவுரையை தயவு செய்து கேளுங்க, நம்ம பசங்களை நல்லா படிக்க விடுங்க, யாராவது நம்ம குப்பத்து பசங்க படிச்சு வேலையில்லாம இருந்தா அவங்களை என் கிட்டே அனுப்புங்க, நாமும் நினைச்சா பெரிய ஆளாக முடியும்னு நான் காட்டிட்டேன், அடுத்து நீங்க காட்டணும், இளைஞர்களை பார்த்து கேட்கவும் அவர்களும் நிச்சயம் காட்டுவோம் மகிழ்ச்சியுடன் கூவினார்கள்.
அன்று இரவு அவர் மன நிம்மதியுடன் தூங்கியதை அவர் மனைவி பார்த்தார்.
மறு நாள் செய்திதாளின் ஒரு குப்பத்தில் பிறந்து வளர்ந்த தொழிலதிபரின் கதை என்று இவர் போட்டோவுடன் செய்தி வந்திருந்தது.