பிரியங்கள் பேசுமா




கிராமத்து பள்ளிக்கூடம். இன்டெர்வல் நேரம், பள்ளிக்கு எதிரே இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தாள் அந்த பெண். இருபது வயது இருக்கும். மாநிறத்தில், நேர்த்தியாக அணிந்த பாவாடை தாவணியில், அழகாய் வாரி பின்னலிடப்பட்ட கூந்தல், நெற்றியில் திலகம் என்று அலங்காரத்துடன் அழகான பெண் என்று சொல்லும் படியாகவே இருந்தாள். அவள் கமலா.
அவள் இந்த நேரத்தில் அங்கு அமர்ந்து இருப்பது இந்த சிறுவர்களைபார்த்து ரசிப்பதற்கே.

ஆனால் அதைப்புரிந்து கொள்ளாமல் அவளை சுற்றி, சுற்றி வந்து கிண்டல் செய்து கொண்டு இருந்தது ஒரு சிறுவர் பட்டாளமே. ஆரம்பத்தில் விளையாட்டாக பொறுத்துக்கொண்டு இருந்த அவள், சிறிது நேரத்தில் கோவத்திலும் அழுகையிலும் ம்ஹும்…ம்ஹும் என்று கத்திக்கொண்டு இருந்தாள். பாவம்…அவளால் பேச முடியாது; இடது கையும் செயல் படாது.
பள்ளியில் இருந்து வெளியே ஓடி வந்து “ஏய் …இப்படி பண்ணாதீங்க. அந்த அக்கா உங்களை திரும்ப அடிக்க மாட்டாங்க என்ற தைரியமா? இருங்க…உங்க எல்லோரையும் ஹெட் மாஸ்டர் கிட்ட சொல்றேன் ” என்று விரட்டி விட்டு அவளை அழைத்துக்கொண்டு போய் திண்ணையில் உட்கார வைத்தாள் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த சிறு பெண் மாலா.
ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள்தான் . இரு குடும்பங்களுக்கிடையே நெருங்கிய நட்பும் உண்டு.
கமலாவின் அம்மா சுசிலா, கமலா மற்றும் பிள்ளை கோபாலனுடன் அங்கு வசித்து வந்தாள். சுசிலாவின் கணவன் இவர்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே இவர்களை விட்டு விட்டு ஓடி விட்டாராம். அதற்கு கமலாவின் குறைபாடும் ஒரு காரணம். கமலா பிறந்த போது நன்றாகத்தான் இருந்திருக்கிறாள். கைக்குழந்தையாக கூடத்தில் அவள் படுத்து இருந்த போது மேலே உத்தரத்தில் இருந்து ஒரு மூட்டை அவள்மேல் விழுந்து ஒரு கை செயல் இழந்து விட்டது; பேச்சும் போய் விட்டது. இவை எல்லாம் அம்மாவிடமிருந்து அவ்வப்போது மாலா தெரிந்து கொண்டவை.
வயல்கள், வீடு என்று இருக்க சுசிலாவின் உடன் பிறந்தோர்களும் உதவி செய்ய இங்கேயே இருந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றாள். அந்த வகையில் அவளது தைரியத்தை பாராட்ட வேண்டும். இப்போது அவளது ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கோபாலன் மட்டுமே. கல்லூரியில் படிக்கும் இவன் படிப்பை முடித்து நல்ல வேலையில் அமரவேண்டும் என்பதே அவள் கனவு.
மாமியின் கஷ்டத்தையும் கமலாவின் நிலைமையையும் பார்த்து வந்த மாலாவிற்கு அவர்கள் மேல் முதலில் ஒரு அனுதாபம் தோன்றி பின் அதுவே அன்பாக உருப்பெற்றது. மாலாவின் அம்மாவும் அடிக்கடி “பாவம். ஏதோ இப்படி குறையாகி விட்டது. மற்றவர் போல் அவளை சீண்டாதே ; நம்மாலான உதவி செய்ய வேண்டும்” என்று சொல்லிகொண்டே இருப்பாள் அதன்பின் மாலா கமலாவுடன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தாள். அதே தெருவில் இருந்த மற்ற யாரும் கமலாவிடம் இவ்வளவு நெருங்கி பழக மாட்டார்கள். சிலருக்கு பாவம் என்ற பரிதாபம் மட்டுமே; புதிதாக பார்ப்பவர்களுக்கு பயம் .
தொலைக்காட்சி பயன்பாடு வராத காலம் அது. மாலை வேளைகளில் பெரியவர்கள் எல்லோரும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, மாலா பள்ளிப்பாடங்களை எல்லாம் அதே திண்ணையில் அமர்ந்து செய்வாள்.அவள் பக்கத்தில் கமலாவும் அமர்நது இவள் வரைவதையும், எழுதுவதையும் பார்த்துக்கொண்டு இருப்பாள். பள்ளியில் நடந்தவற்றையும், பள்ளி தோழர்களை பற்றியும் ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிக்கொண்டே இவளும் தன் வேலையை தொடர்வாள். பதில் சொல்ல முடியாவிட்டாலும், பார்வையிலும் சிறு, சிறு சப்தங்களிலும் தன்னை உணர்த்துவாள் கமலா.
சில சமயங்களில் அப்படியே தூங்கி விடும் மாலாவின் தலையை வருடியபடியே அமர்ந்து இருப்பாள் கமலா. அப்படிப்பட்ட நேரங்களில் அவள் முகத்தில் தாய்மையுடன் கூடிய ஒரு தனி அழகும், வாத்சல்யமும் தென்படும்.
லீவு நாட்களில் கமலாவுடன் தாயம், பல்லாங்குழி என்று அவளுக்கும் சேர்த்து இவளே காய்களை நகர்த்தி விளையாடுவாள். அவர்களுக்கிடையே பத்து வயசு வித்தியாசம் இருந்தாலும் நாளடைவில் ஒரு புரிதலும் நட்பும் உருவாகி, வளர்ந்தது.
“மாமி…அம்மா மருதாணி அரைத்தாள், நான் அக்காவிற்கு இட்டு விடுகிறேன்” என்று ஆசையாக இட்டு விடுவாள்.
“மாமி நீங்கள் வெறுமே வைத்து பின்னி விடுவீர்கள்; நான் அக்காவிற்கு அழகாக தைத்து விடுகிறேன்” என்று கெம்பு கற்களும், பச்சை கற்களும் பதித்து தாமரை வடிவில் செய்யப்பட்ட அழகான “ராக்கொடி” வைத்து பின்னல், பின்னி தாழம்பூ தைத்து விடுவாள். அக்கா…உன் பெயருக்கும் அர்த்தம் தாமரைதான் தெரியுமா? “தாமரையின் தலையில் தாமரை” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே அலங்காரம் செய்து விடுவாள்.
குமரியாக வளர்ந்த போதும் தானே எதுவும் செய்து கொள்ள முடியாத கமலாவை, ஒரு குழந்தையை போல் சீராட்டி மாமி பாதுகாத்தாள். ஆடை அணிகலன்களிலோ, உணவு வகைகளிலோ எந்த குறையும் இல்லாமல் பண்டிகை காலங்களில் புதிய பாவாடை தாவணி உடுத்தி விடுவதாகட்டும்; புதிய வளையல்களை அடுக்கி விடுவதாகட்டும் என்று பாசத்துடன் செய்து வந்தாள். ஆடி வெள்ளி, தை வெள்ளி , நவராத்திரி போன்ற நாட்களிலும் , தீ மிதி போன்ற திருவிழாக்கள் சமயத்திலும் கோவிலுக்கு அழைத்து செல்வாள்.
சில சமயங்களில் நல்ல பக்தி திரைப்படங்கள் டென்ட் கொட்டகையில் போடும்போது அதற்கும் அழைத்து செல்வாள். தன்னால் முடிந்தவரை அவளை நன்கு கவனித்து பார்த்துக்கொண்டாள்.
ஒரு நாள் மாமி சாப்பிடும்போது மன அழுத்தம் தாளாமல் மிகவும் வருத்தத்துடன் “ருசி இருக்கா, இல்லையா என்று கூட இவளுக்கு தெரியாது. அதனால் நான் முதலில் சாப்பிட்டு பார்த்துதான் அவளுக்கு கொடுப்பேன். என்னை கல் நெஞ்சக்காரி என்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆண்டவனிடம் நான் வேண்டி கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; எனக்கு அப்புறம் யார் இவளை பார்த்துக் கொள்வார்கள்? நான் இவளை யார் பொறுப்பிலும் விட்டு, விட்டு சாகக்கூடாது; நான் சாவதற்கு முன்பு இவள் போய் விடவேண்டும் அல்லது இருவரும் சேர்ந்து போய்விடவேண்டும்” என்று அழுது புலம்பினாள்.
மாலாவின் அம்மாவும், மாலாவும்தான் ஓரளவிற்கு மாமியின் ஆதங்கத்தையம், வருத்தத்தையும் புரிந்து கொண்டு சமாதானப் படுத்தினார்கள்.
சில வருடங்களுக்கு பிறகு கோபாலனுக்கும் நல்ல வேலை கிடைத்துவிட்டது. சுசிலாவின் சொந்தத்திலே பெண் பார்த்து திருமணத்தையும் நடத்தி முடித்தாள். அவளும் நல்ல பெண்ணே. கோபாலன் வடக்கே தான் வேலை பார்க்கும் ஊருக்கே தங்களுடன் வந்து விட சொல்லி மாமியை அழைத்தான்.
“பழகிய ஊர், வீடு நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று மாமி மறுத்தும் விடாது வற்புறுத்தினான்.
“இத்தனை வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாய்; அவன்தான் அவ்வளவு சொல்கிறானே; அவனுடன் போனால் என்ன?” இனி மேலாவது சுகமாக இருக்கட்டும் என்று சமாதானப்படுத்தினாள் மாலாவின் அம்மா.
வீடு நிலங்கள் எல்லாவற்றையும் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு மாமி கமலாவை அழைத்துக்கொண்டு பிள்ளையின் இருப்பிடத்திற்கு கிளம்பினாள்.
ஊருக்கு கிளம்பும் முன் பார்க்க வந்த மாமி, கமலாவின் கண்களில் கண்ணீர். மாலாவிடம் வந்த கமலா அவளை கட்டிக்கொண்டாள். இவளது வலது கையை பிரித்து எதையோ திணித்தாள். பிரித்துப்பார்த்த மாலாவின் கண்களிலும் கண்ணீரே. “மாமி இங்கே பாருங்கோ.. “ராக்கொடி..”
“எனக்கு தெரியும். உனக்கு தன் நினைவாக கொடுக்கிறாளாம். என்னிடம் சொல்லி விட்டுதான் எடுத்து வந்தாள்” என்றாள் மாமி.
“கமலம் சூட்டிக்கொண்ட கமலம்” – “தாமரையின் தலையில் தாமரை” சிறு வயதில் எப்போதோ கூறிய வார்த்தைகள் மாலாவின் மனதில் எதிரொலித்தது. “இவளுக்கா ஒன்றும் புரியாது ; பேச தெரியாது ; எவ்வளவு அழகாக தன் நினைவை எனக்கு தந்து செல்கிறாள்” என்று புரிந்து கொண்ட மாலாவிற்கு பேச வார்த்தைகள் இல்லை. கமலாவை புரிந்தவர்களுக்கு மட்டுமே அவளது பாஷை புரியும் !!!!!
அதற்கு பிறகு அவர்களிடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே. பிறகு வந்த வருடங்களில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாலாவிற்கும் திருமணம் ஆனது. கணவருடன் ஊருக்கு போகும்போதெல்லாம் கண்கள் தாமே மாமி வீட்டு திண்ணையை நாடும் ; பழைய நினைவுகள் மனதில் அலை மோதும். கமலாவைப்பற்றி அம்மாவிடம் விசாரித்து தெரிந்து கொள்வாள்.
அப்படி ஒரு முறை ஊருக்கு வந்த போதுதான் அம்மா சொன்னாள் . ஒரு நாள் கோபாலனிடம் இருந்து தகவல் வந்தது – “கமலா ஒரு நாள் காலை எழுந்துகொள்ளவே இல்லையாம். தூக்கத்திலேயே இறந்து விட்டாள். ஆறு மாதங்களில் மாமியும் இறந்து விட்டாள்” என்று கூறி மிகவும் வருந்தினாள்.
“ஆண்டவன் மாமியின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்றுதான் நாம் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மாமியின் வேதனைகளை புரிந்து கொண்ட கமலா மாமிக்கு ஒய்வு கொடுக்க நினைத்து ஆண்டவனிடம் பேசி இருப்பாளோ; அவருக்கு கமலாவின் பாஷை புரியாமல் போகுமா என்ன?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மாலா. அவளுக்கு கண்கள் கலங்கின. கமலாவின் ஜாடை காட்டும் முகம் மனத்திரையில் தெரிந்தது. வழக்கமான “ம்ஹும்…ம்ஹும்” என்ற சிறு குரல் காதுகளில் ஒலித்தது. கைகள் தன்னையறியாமல் தலையில் சூட்டியிருந்த ராக்கொடியை தடவிக்கொடுத்தன.
Nice story viji.
Thank you Kalyani Madam.