பிடிவாதம்!




தன் பெண் அகல்யாவின் கண்களில் கண்ணீர் வடிவதைப்பார்த்து அதிச்சியடைந்த பரமசுந்தரி “என்னாச்சு?” என வினவினாள்!
“அவரு பிடிவாதமா,கோவமா பேசறாரு. தேவையில்லாத கேள்விய கேட்கறாரு. கல்யாணத்துக்கப்புறம் வேலைக்கு போகவேண்டான்னு சொல்லறாரு. அவரோட தொழில்ல சம்பாதிக்கிற பணத்தை அவரோட அம்மா கையில தான் கொடுப்பாராம். கல்யாணத்துக்கு முன்னாடி போன்லயே இப்படிப்பேசறவரு கல்யாணத்துக்கப்புறம் எப்படி நடந்துக்குவாரு..? அதனால..”என அதற்கு மேல பேச முடியாமல் திணறினாள் அகல்யா!
“அதனால….?” என்னடி…? நீ என்ன சொல்ல வாரே…?”கவலையின் உச்சத்தை தொட்ட அச்சத்தில் கேட்டாள் தாய் பரமசுந்தரி!
“இந்தக்கல்யாணத்த நிறுத்திடுங்க “என உறுதிபடக்கூறிய மகளின் பேச்சால் மயக்கமடைந்து சரிந்தாள் பரம சுந்தரி!
மயக்கம் தெளிந்தவள் அழுதவாறு “எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவெடு. மண்டபம் பார்த்தாச்சு,நிச்சயம் முடிஞ்சாச்சு. ஆயிரம் பத்திரிக்கையும் கொடுத்து முடிச்சாச்சு. இதுக்குத்தான் கல்யாணத்துக்கு முன்னாடி தினமும் போன்ல மாப்ள கூட பேச வேண்டான்னு சொன்னேன். நீ கேட்டியா?” என்றாள் அகல்யாவின் தாய்!
“பேசுனதுனாலதானே அவரு சுய ரூபம் தெரிஞ்சிருக்கு..!” என்றாள் கோபம் ததும்ப அகல்யா!
“சில பேரு கல்யாணத்துக்கு முன்னாடி நடிச்சு சாதகமா பேசிடுவாங்க. அப்புறம் இயல்பான குணத்தோட நடப்பாங்க. இவரு மனசுல பட்டத இப்பவே இயல்பா பேசிட்டாரு. இதுக்கு போயி கோபிச்சுட்டு கல்யாணத்த நிறுத்திட்டா அப்புறம் மாப்பிள்ளை அமையாது. ஊரும்,உறவும் இல்லாததும்,பொல்லாததுமா பேசிடுவாங்க” என காலில் விழாத குறையாக மகளிடம் கெஞ்சினாள்!
அப்போது தன் தந்தையுடன் எதிர்கால கணவன் ராக்கி காரிலிருந்து இறங்கி வருவதைப்பார்த்து அதிர்ச்சியும், ஆச்சர்யமடைந்தாள் அகல்யா!
“என்ன ஆச்சர்யமா இருக்கா? இல்ல அதிர்ச்சியா இருக்கா? நான் தான் மாப்பிள்ளை கிட்ட சொல்லி பிடிவாதமா பேசற மாதிரி நடிக்கச்சொன்னேன். இப்ப எதக்கேட்டாலும் ஒத்துப்போயிட்டா,உனக்கு பிடிச்சுப் போற மாதிரி நடிச்சுப் போயிட்டா, கல்யாணத்துக்கப்புறம் கருத்து வேறுபடும் போது வெறுப்பு வந்திடும்!”
“…..”
“தம்பதிகள்னா பத்துக்கு பத்து பொருத்தம் இருந்து கல்யாணம் பண்ணினாலும் ஊடல் எனும் கோப தாபங்கள் சகஜம். விரும்பி நடக்கும் திருமண வாழ்க்கையிலும் இந்த நிலை இருக்கும்னு நம்ம சங்க இலக்கியங்களிலேயே சொல்லியிருக்காங்க. பிடிவாதமும்,பின் விட்டுக்கொடுப்பதும் இல்லற வாழ்க்கைப்பயிருக்கு உரம்னு அனுபவப்பட்ட எங்களுக்கு புரியும். நிஜம் எப்பவுமே கசக்கும். பொய் தான் இனிக்கும். ஆனா நிலைக்காது. கோபம்,பிடிவாதம் மனித குணம். இப்படிப்பட்ட சாதாரண பேச்சுக்கே உன்னால பொறுத்துக்க முடியாம கல்யாணமே வேண்டாம்னு முடிவுக்கு வந்திட்டீன்னா பெரிய கஷ்டங்களை எப்படி சமாளிப்பே…?”
“…..”
“பேசி, உன் எண்ணங்களை சொல்லி புரிய வைக்காம, டக்னு போன கட் பண்ணிட்டு,’உறவு முறிந்தது’ன்னு ‘மெஸேஜ்’ கொடுக்கிறதா படிச்ச பொண்ணுக்கு அழகு..? உன்ன அவரு பொண்ணு பார்க்க வந்தப்பவே எதார்த்தமா பேசின விதம் பிடித்துப்போய்தான் உன்ன அவருக்கு மணம் முடிக்க சம்மதித்தேன்..!”என அப்பா தயாளன் கூறியதைக்கேட்ட அகல்யாவுக்கு அவர் மீது வெறுப்பு நீங்கி, குடும்ப பொறுப்பு வந்தவளாக ஓடிச்சென்று உள்ளன்புடன் வருங்கால கணவனுக்கு தண்ணீர் டம்ளரை கொண்டு வந்து கொடுத்த போது வெட்கத்தில் அவள் முகம் கோவைப்பழம் போல சிவந்து போனது ஆச்சர்யமில்லை!
-கதையாசிரியர்:
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி