பிஞ்சுப்பழங்கள்!




‘இந்த உலகில் வாழவே கூடாது. நம்மை உயிருக்குயிராய் காதலிப்பதாக சொன்ன கயா பிரேக்கப் சொல்லி விட்டதால் இனி வாழ்ந்து என்ன பயன்? இதயம் சுக்கு நூறாகி விட்டது. சினிமா ஹீரோவைப்போல தண்ணியடித்து மன வருத்தத்தைப் போக்கலாமென்றாலும் நம்மால் வாங்க முடியாது. பணமும் இல்லை. நமக்கு விற்பனை செய்ய சட்டத்தில் இடமுமில்லை. சட்டத்திற்கு தெரியுமா இதயத்தின் வலி…?’ என நினைத்து சிகு வேதனையடைந்தான்.

‘நம்மிடம் இவ்வாறு சொன்னவள், உடன் படிக்கும் நமது நண்பர்கள் யாராவது ஒருவருடன் பழகினால் நம்மை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நம் மனம் என்ன பாடு படும்?நமக்கு பிரேக்கப் சொன்னாலும் மற்ற யாருடனும் பழகாமல் இருக்க வேண்டும்’ என கடவுளை வேண்டிக்கொண்டு படுக்கையில் குப்புறப்படுத்து தன் மகன் அழுவதைப்பார்த்து தாய் நமனா கவலை கொண்டாள்.
“படிக்கிற வயசுல எதுக்கு காதல், கீதல்னு? யாராச்சும் தெரிஞ்சா தப்பான பையனா உன்னை நெனைக்க மாட்டாங்களா? பையன்னு இருந்தா பொண்ணுங்க மேல ஈர்ப்பு வர்றது சகஜம் தான். அதுக்காக நமக்கு புடிச்சவங்களையெல்லாம், கூட படிக்கிறவங்களையெல்லாம் காதலிக்க முடியுமா? காதலிச்சாலும் கல்யாணம் தான் பண்ணிக்க முடியுமா? அதுக்கு இன்னும் வயசு ரொம்ப தூர இருக்கு. இந்தா கவலைப்படாம ஜூஸை குடி. படிச்சாத்தான் வாழ முடியும். படிப்பு இல்லேன்னா உங்கப்பா மாதிரி கெடைக்கிற வேலைக்கெல்லாம் போயி கஷ்டப்பட்டு உன்னால வாழ முடியாது” என தாய் நமனா கூறிய பின்னும் சாப்பிடாமல் அடம்பிடித்தான்.
‘கயாவைப்போல ஒரு பெண்ணைப்பார்க்கவே முடியாது. அழகு தேவதை அவள்’ என்றது அவனது பால்மனம். அவளைப்பார்த்தாலே மனம் லேசாகி விடுவதை உணர்ந்து குதூகலமாக அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பான். பசியும் வராது. பக்கத்திலிருப்பவர்களும் தெரியாது. தினமும் சாப்பாட்டு டிபன் பாக்ஸை மாற்றிக்கொள்வார்கள். அவள் கொண்டுவந்த சாப்பாடு புளி சாதமாக இருந்தாலும் பிரையாணி போல் இருப்பதாகக்கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்துவான்.
ஒரு முறை பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருந்தபோது எங்கு போனாலும் அவளுடனே செல்வது, அவளுக்கு தேவையானதை வாங்கித்தருவது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என அதிக நேரம் கயாவுடன் சிகு இருந்ததை வைத்து இவர்களை காதலர்களாகவே மற்றவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.
‘நான் உடல், நீ உயிர். உயிர் போனால் உடல் வாழாது’ என்பது போன்ற வரிகளை எழுதிக்காட்டி கயாவை காதலிக்க வைத்திருந்தான். தேர்வுக்குப்படிப்பதற்கு பதிலாக கவிதை புத்தகங்களை வாங்கி அதிலிருந்து பொருத்தமான கவிதைகளை அவளுக்கேற்ப மாற்றி, அவளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி காதலை வளர்ப்பதும், தானாகவும் கவிதைகளை எழுதி அனுப்புவதும், காதல் சிறுகதைகளைத் தேடிப் படிப்பதும், சிறு வயது திருமணங்களைப்பற்றிய செய்திகளைத் தேடுவதும் என கவனம் சிதறியதால் தேர்வில் உரிய மதிப்பெண் பெற இயலாமல் போனது கூட வேதனை தராத நிலையில், அவளது வாயிலிருந்து வந்த ‘பிரேக்கப்’ எனும் வார்த்தை புயலைப்போல் மொத்தமாக அவனது வாழ்க்கைக்கோட்டையை இடித்துத் தள்ளியிருந்தது.
ஒரு வாரம் தனது மாணவன் வராததாலும், அலை பேசியில் அழைத்தும் எடுக்காததாலும் அவனது ஆசிரியை விசாரித்துப்போக வீட்டிற்கே வந்ததும் ஆடிப்போனான். ‘தனக்கு நேர்ந்திருக்கும் துன்பத்தை ஆசிரியையிடம் எவ்வாறு சொல்வது. சொன்னால் தவறாக நினைக்க மாட்டார்களா?’ என யோசித்ததால் ‘மன நிலை சரியில்லை’ என்பதை தலைகீழாக மாற்றி ‘உடல் நிலை சரியில்லை’ எனக்கூறினான்.
“பெத்தவங்களுக்கு அடுத்த நிலைல நாங்க இருக்கோம். வீட்ல கூட தூங்கற நேரம் அதிகம். ஸ்கூல்ல தான் விழித்திருக்கிற நேரம் அதிகம். அப்படிப்பார்த்தா எங்க கூடத்தான் அதிக நேரம் செலவிடறீங்க. நீங்க நல்லா வாழ்ந்தாலும், மோசமா வாழ்ந்தாலும் அதுக்கு எங்களோட பங்கு அதிகம். எதுன்னாலும் எங்களுக்கு இன்பார்ம் பண்ணியிருக்கனமா? வேண்டாமா? ஒரு வாரம் வரலே… போன் பண்ணினாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. இப்படியா இருப்பாங்க? சரி ஒடம்ப பார்த்துக்க” என தனது பள்ளி ஆசிரியை பிருந்தா சொன்னபோது தனது செயலுக்காக வருந்தினான்.
“உங்கூட படிக்கிற கயாவும் ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரலே. அவங்க வீட்டுக்கும் போயிட்டுத்தான் இங்க வாரேன்” என ஆசிரியை சொன்ன செய்தியைக்கேட்டு தூக்கி வாரிப்போட்டது.
‘அவளால பாதிக்கப்பட்ட நமக்கு துன்பம்னா, நாம ஸ்கூலுக்கு போகாதது சரி. அவ எதுக்கு ஸ்கூலுக்கு போகாம இருக்கனம்? ஒரு வேலை அவளுக்கும் காதல் இருக்குதோ….? பிரேக்கப்னு விளையாட்டுக்கு சொல்லியிருப்பாளோ…?’ குழப்பத்தின் உச்சத்துக்கே சென்றான் சிகு.
“உங்கம்மாவப்போல இன்னொரு அம்மா நானும் இருக்கறத மறக்கக்கூடாது. ஒடம்பு மட்டுமில்லை. மனசு சரில்லைனாலும் சொல்லு, படிப்பு புரியலேன்னாலும் சொல்லு. அதுக்கான சொல்யூசன் கண்டு பிடிச்சு சொல்லறேன். அதுக்காக இப்படி லீவு எடுத்துட்டு லைப்ப வீணாக்கிடாதே” என கூறி விட்டு சென்ற ஆசிரியை தெய்வமாகத்தெரிந்தார்.
ஆசிரியை சென்று சிறிது நேரத்தில் கயாவும், அவளது அம்மாவும் தன் வீட்டிற்கு வருவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவன், ‘என்ன பிரச்சினை வெடிக்கப்போகுதோ…?’ எனும் பயத்தில் தனது அறைக்கு சென்று உட்பக்கமாகத்தாழிட்டுக்கொண்டான்.
வந்தவர்களுக்கு அம்மா காஃபி போட்டுக்கொடுத்திருப்பது காஃபி மணம் வருவதை வைத்து புரிந்து கொண்டான்.
ஒரு முறை உறவினர் ஒருவர் சிகுவின் வீட்டிற்கு வந்த போது “சிகுவுக்கு ஏத்தாப்ல சிட்டாட்ட ஒரு பொண்ணு சொந்தத்துலயே இருக்கறா. படிச்சு முடிச்சு வேலை கெடைச்சதும் பேசி முடிச்சிடலாம். இன்னும் என்ன பத்து வருசந்தானே இருக்குது? வடநாட்ல பையன் பிறந்த உடனே பொண்ணு யாருன்னு முடிவு பண்ணற பழக்கம் கூட இருக்குது. அப்படி சொந்தம் உட்டுப்போகாம இருக்க கொழந்தைங்க கிட்ட நாமளும் இப்பவே சொல்லி வெச்சிடுவோம். என்ன சிகு உனக்கு தியா ஓகே தானே…?” என கேட்பதைக்கேட்டு வெட்கப்பட்டு பெட்டுக்கடியில் சென்று படுக்கும் மனநிலையில் சென்ற வருடம் வரை இருந்த தன் மகன், ஒரு பெண்ணைக்காதலிப்பதாகச் சொன்னதும், அப்பெண் பிரேக்கப் சொன்னதால் மனம் சோர்ந்து சாப்பிடாமல் உடல் நிலையே பாதித்ததும் ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருந்தது அவனது தாய் நமனாவிற்கு.
“நாமெல்லாம் காலேஜ் வரைக்கும் படிச்சு வேலைக்குப்போயி பெத்தவங்க பாத்த பையனைக்கல்யாணம் பண்ணி இவங்களைப்பெத்து வளர்த்தோம். இப்ப பிஞ்சுலயே பழுக்கனம்னு நெனைக்குதுக. பதிமூனு வயசு முடிஞ்சு பதினாலு வயசு தான் ஆகுது. வாழ்க்கைன்னா என்ன அர்த்தம்னே புரியாது. இப்ப படிப்பு தான் முக்கியம். நான் எடுத்து சொன்னத புரிஞ்சுட்ட எம்பொண்ணு உங்க பையன் கிட்ட பிரேக்கப் னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு வந்தாலும், ராத்திரில தூங்காம, நேரத்துக்கு சாப்பிடாம இருக்கிறதப் பார்த்து அவன் மேல இருக்கிற க்ரஸ் அவளுக்கு இன்னும் போகலைங்கிறத புரிஞ்சுகிட்டேன். இப்படியே விட்டம்னா உசுருக்கு ஆபத்து வந்திருமோன்னு பயந்து தான் உங்க கூடவும், உங்க பையங்கூடவும் நேர்ல பேசீட்டு போகலான்னு அவளையே கூட்டிகிட்டு வந்தேன்” என கயாவின் தாய் நிர்மலா கூறியதைக்கேட்டு சிகுவின் தாயாருக்கு சற்று அவமானமாக இருந்தது.
“ஒரு பிரச்சினைய நேருக்கு நேர் சந்திக்காம பயப்பட்டு, வெட்கப்பட்டு ஓடி ஒளியற பால் மனம் மாறாத பையன் காதல்ங்கிற பேர்ல பைத்தியமா படிக்காம இருக்கிறது சரியில்லை. எல்லாம் யூடியூப் பண்ணற வேலை. குழந்தைலியே செல்போன அவங்க கிட்ட கொடுத்தது நம்ம தப்பு. இப்ப தும்ப உட்டுப்போட்டு வாலைப்பிடிச்சா காளை அடங்கவா போகுது? ம்..கல்சர் சுத்தமா மாறிப்போயிருச்சு. நீங்களும் பக்குவமா பையன் கிட்ட எடுத்து சொல்லி வைங்க. இப்போதைக்கு பிடிச்சிருந்தா நண்பர்களா ஸ்கூலுக்கு போகட்டும். கல்யாண வயசு வந்த பிறகும் புடிச்சிருந்தா கண்டிப்பா எம்பொண்ண உங்க பையனுக்கு கட்டி வைக்க எனக்கு முழு சம்மதம். மனசுக்கு புடிச்சவங்களோட வாழறதுதான் நல்லது” என கயாவின் தாய் சொன்னதைக்கேட்டு கதவைத்திறந்து தைரியமாக வெளியே வந்த சிகுவைப்பார்த்ததும் ஓடிச்சென்று கை கொடுத்தாள் கயா.
“ஸாரிடா… வேற வழியில்லை. அம்மா அட்வைஸ் பண்ணினதும் இப்ப லவ் பண்ணினா படிப்பு புரியாதுன்னு தெரிஞ்சிட்டேன். அதனால தான் பிரேக்கப் சொன்னேன். ஆனா சொன்னனே தவிர நீ இல்லாம என்னால முடியல. சாப்பாடு புடிக்கல. ஏன் என்னையே எனக்கு புடிக்கலை. அம்மா நெறைய அட்வைஸ் பண்ணி எனக்கு புரிய வெச்சாங்க. அப்புறம் தான் உன்கூட நேரா பேசி உனக்கும் புரிய வைக்கனம்னு வந்திட்டேன்”
என பேசியவளையே வைத்த கண் வாங்காமல், பதில் பேச முடியாதவனாய் பார்த்துக்கொண்டிருந்தான்.
“பிரேக் போட்டு நிறுத்தர கார மறுபடி ஓட்ட முடியாதா என்ன? பிரேக் போட்டு நிறுத்துன நம்ம காதல் கார் பத்து வருசம் மட்டும் அப்படியே நிக்கட்டும். அம்மா சொன்ன படி நடந்துக்கலாம். நாளைக்கு இருந்து ஸ்கூலுக்கு போகலாம். சாப்பாட்டு டிபனக்கூட மாத்திக்கலாம். ஆனா அவங்கவங்க மனசு அவங்கவங்க கிட்டயே இருந்தாத்தான் படிக்கவே முடியும். படிச்சாத்தான் வாழவே முடியும்” என திடீரென அறிவில் வளர்ந்தவளாய் கயா கூறியதால் மனம் சீரான சிகு “தேங்ஸ் கயா” என கூறி விட்டு ஓடிச்சென்று அவனது தாயை கட்டிப்பிடித்துக்கொண்டதை கயாவும் புரிந்தவளாய் முகம் மலர்ந்து சிரித்த படி, கைகளை ஆட்டிக்கொண்டு அவளது தாயுடன் கிளம்பிச்சென்றாள்!