கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2025
பார்வையிட்டோர்: 252 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பிள்ளை, உனக்கென்னடி பிடிச்சது? இப்ப பள்ளிக்குப் போக மாட்டேனெண்டு நீ சொல்லத் தொடங்கி எவ்வளவு நாளாச்சு…?” 

அன்னம்மாள் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டாள். பொன்மணி சீறினாள். 

“ஏன் நான் போகாட்டிக் காசு வராதெண்டே அந்தரம்? நீ பயப்படாதை காசு கட்டாயம் வரும்” அன்னம்மா துடித்தாள். 

“எடி, உன்னைக் காசுக்காகவே நான் போகச் சொல்லுறன்? பேய் பிடிச்சவள் மாதிரி வீட்டுக்குள்ளேயே கிடக்கிறாய் எண்டு சொல்ல வந்தா..” தாய் மூச்சு வாங்கத் தொடர்ந்து சொன்னாள். “…உன்னை நானே வாத்தி வேலைக்குப் போகச் சொன்னனான்? எப்பவோ கலியாணப் பேச, மாட்டன் படிப்பிக்கப் போறனெண்டு ஒற்றைச் காலிலை நிண்டாய்; இப்ப என்ன கதை கதைக்கிறாய்?.. உனக்கு விருப்பமில்லாட்டி வேலையைவிடு” 

“கோவிக்காதை அம்மா; தெரியாமல் சொல்லி போட்டன். எனக்கு மனஞ் சரியில்லை. கொஞ்சநேரம் தனியா விடு.” 

“இதென்ன பிள்ளையோ…? ஒண்டும் விளங்கேல்லையே! கடவுளே…” அன்னம்மா முணுமுணுத்துக்கொண்டே போனாள். 

‘சே, என்ன அருவருப்பான உலகம் எட! நன்றிதான் வேண்டாம். கொஞ்சங்கூட மனுசத்தன்மை? என்ன படிச்சென்ன, என்ன உடுத்தென்ன…? மனசு சரியில்லாட்டி, மனிசன் மனிசனில்லை. 

‘இப்ப நான் என்ன செய்கிறது? பள்ளிக்குப் போகவா. விடவா?… பள்ளியாவது பாடமாவது! நான் நினைச்சதுக்கும் இப்ப நடக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்…?’ பொன்மணி, வேதனையில் முகஞ்சுளித்தாள். ‘…இந்த இலட்சியம் அது இது எல்லாம் கதைக்கத்தான்; சீவியத்துக்குச் சரிவராது நாங்கள் சரியா நடப்பமெண்டாலும் உலகம் விடாது ‘அம்மா சொன்னதில்லைதான் என்ன பிழை? நான் தானே படிப்பிக்கப் போறனென்டு ஆசைப் பட்டேன்?’ ஆசிரியத் தொழில், உன்னதமான தொழில். வருங்காலச் சந்ததிகளை உருவாக்கும் பொறுப்புமிக்க – நுணுக்கமான – தொழில். எத்தனை சின்னஞ் சிறிசுகள் ‘ரீச்சர் ரீச்சர்’ என்டு ஓடிவரும்?? இப்படி நினைச்சுத்தானே கலியாணப் பேச்சையும் உதறித் தள்ளினன். அம்மா என்ர மனசை மாற்றப்பட்டபாடு? 

‘எப்படியோ. பதினெட்டு வயதிலை படிப்பிக்கத் தொடங்சி, இப்ப முப்பது வயதிலை பன்னிரண்டு வருச ‘ஸேவிஸ்’ ஆச்சு. எவ்வளவு சந்தோஷமான, நிம்மதியான காலமாய்ப் போச்சுது. இந்தப் பன்னிரண்டு வருஷமும்…? 

‘ஆனா முந்தநாள்-? இந்தப் பன்னிரண்டு வருசத்திய நிம்மதியையும் நிறைவையும் அந்தப் பன்னிரண்டு நிமிடத்துச் செயல் அடித்துச் சென்று விட்டதே? 

‘காற்று ஊதி, வெடித்த பலூன் போலக் கடைசியில் மிஞ்சுவதெல்லாம் வெறுமையேதனோ? அண்டைக்கு நடந்தது…? சீ, என்ன உலகம்!’ வேதனையில் இதழ்கள் கோண பொன்மணி கண்களை மூடிக்கொண்டாள். 


பொன்மணி பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். இந்த எட்டேகால் மணி பஸ்ஸிலை போனால் நேரஞ் சரியாயிருக்கும். ஒன்பது மணிக்குத்தானே பள்ளிதொடங்கும்? 

சாலையின் திருப்பத்து மறைவில், எங்கெங்கெல் லாமோ யந்திர இரைச்சல் கேட்டதேயொழிய பஸ்ஸைக் காணவில்லை. 

“என்ன பஸ் ஸேவிஸ் இது?” 

அவள் சலித்துக் கொள்ளும் போதே, தெருவின் வளைவில் பேரிரைச்சலுடன் சிவப்பு ராட்சஸன் போல பஸ் திரும்பியது. 

ஸீஸன் ரிக்கெற்றை எடுக்கவும், பஸ் வந்து முன்னால் நிற்கவும் சரியாகவிருந்தது. ரிக்கற்றை எடுத்து, வழக்கமான – பழக்கமான ‘கொண்டக்டர்’ என்பது தெரிந்தும், அவருக்குத் தன்னைத் தெரியும் என்பதை அறிந்தும், காட்டிவிட்டு உள்ளே ஏறினாள். டிரைவருக்குப் பின்னால், மூன்றாவது சீற் ஜன்னலை ஒட்டினாற்போல – அதுதான் அவளுடைய இடம். இருக்கையில் அமர்ந்து, முகத்திற் துளித்திருந்த வியர்வையைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டாள். 

அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. 

“ஏறுங்கோ, தம்பியவை” கொண்டக்டரின் குரல் உற்சாகமாகத் தொனித்ததிலிருந்து, ஏறப்போவது இள வட்டங்கள் என்பது புரிந்தது. 

‘வழக்கமாக இங்கே ஒருத்தரும் ஏறுவதில்லை. இண்டைக்கு, யார்?’ நினைவு கிளம்பு முன்னரே விடை கிடைத்து விட்டது. 

மூன்று வாலிபர்கள். ‘லோங்ஸும் சேட்டும்’ அமர்க்களப்பட்டன – பார்த்தாலே கல்லூரி மாணவர்கள் என்பது புரிந்தது. ஒவ்வொருவர் கையிலும் இரண்டு மூன்று புத்தகங்கள் வேறு. பஸ் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டது மூவரும் இடந்தேடித் தங்கள் கண்களை ஓட்டினார்கள். ஆண்களிருக்கும் இடங்களிலேயே அவர்கள் பார்வைகள் பரந்தன. 

தலையைத் திருப்ப முயன்ற பொன்மணி, சற்று வியப் புற்றவளாய் மீண்டும் ஒரு தரம் அந்த மூவரையும் பார்த்தாள். 

‘அட, அது செல்வம்! மற்றது தனபாலனா?… இரண்டு பேருந்தான்! எவ்வளவு வளர்ந்து விட்டார்கள். இருவரும் இப்ப கல்லூரியிற் படிக்கிறார்கள் போல இருக்கு. என்னி டம் படித்தவர்கள் தானே!’ என்னிடம் படித்தவர்கள் என்கிற நினைவில் அவள் மனம் புளகாங்கிதமடைந்தது. அவனிடம் படித்த சிலர் இன்று பல்கலைக் கழகத்திலும் இருக்கிறார்கள். 

‘….அந்த மூன்றாவது பையன்? அவன் யாரோ, புதியவன்’ 

அவர்களுடைய பார்வை அவள் முகத்திற் படிந்தது. பொன்மணி முறுவலித்தாள். ஒரு பாசம், இன்னவென்று இனங் காணமுடியாத ஒரு பாசம், மேவிநின்றது. அவர்கள் ஒரு வினாடி திடுக்கிட்டது போலத் தோன்றினாலும், மறு வினாடியே சமாளித்துக் கொண்டு முறுவலித்தனர். சட்டென்று பொன்மணியின் உள்ளத்தில் ஏதோ நெருடினாற் போலிருந்தது. 

அவர்கள் அவளைப் பார்த்த பார்வை அது ஒரு கணமே யானாலும் – அவளைத் துளைத்துவிட்டது. அந்தப் புன்னகை கூட பழைய விகல்பமற்ற புன்னகையாக அவளுக்குப் பட வில்லை. அந்தப் புன்னகையூடே ஒரு களங்கம் – சந்திரனில் மறுபோல, இல்லை, பாலில் விஷம் போல ஊடுருவியதை அவளுணர்ந்தாள். எல்லாமே வெறுமையாகிவிட்டாற் போல ஒரு உணர்வு அவளைச் சூழ்ந்து கொண்டது. ‘ஏன் சிரித்தோம்’ என்று தன்னையே அவள் நொற்று கொண்டாள். 

‘சே, இதெல்லாம் என்ன? அவர்களின் முகத்தில் வாலிபம் கோடிட்டிருக்கிற முதிர்ச்சியால், முகம் மாறுபட்டுச் சிரிப்புமே மாறியிருக்கலாம். அவர்கள், என் தம்பிகள் இல்லை, மக்கள்! பெறாமக்கள்! எனக்குள்ள ஆயிரம் புதல்வர்களுள் இருவர். அவள் தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டாள். சாதாரணமாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். கண்களின் புறப்பார்வையில், அவர்கள் தனக்குப் பின்னே உட்காருவதாகத் தோன்றியது. 

நினைவோட்டங்களிடையே. தப்பித் தவறிக் காதில் விழுந்தபின் ‘ஸீற்’ சம்பாஷனை அவளைத் திடுக்குறச் செய்தது. ‘ஆர் மச்சான் இது? சொந்தமே?’ அந்த மூன்றாவது – புதிய – பையன்தான் கேட்டிருக்க வேண்டும். இவர்களில் ஒருவன் குரல் விளங்கவில்லை. திருப்பிக் கேட்டான் ‘ஏன் கேக்கிறாய்?” குரவில் குறும்பு தொனித்தது. அவ அவளுடைய ‘மாணவர்’களுள் இரண்டாமவன் தொடர்ந்தான். ‘…சொந்தமில்லையடாப்பா; முந்தி எங்களுக்குப் படிப்பிச்சவ’ ‘ஓகோ…’ புதியவன் இழுத்தான், உற்சாகமும் வியப்புங் கலந்த குரலில் “ரீச்சரா..? ஏன்ரா. என்ன வயதிருக்கும்?” அவன் கேட்டான். “அதை ஏன் உனக்கு?” இவர்களில் ஒருவன் கேட்டான். “ஃபேஸ்கட் எப்படி மச்சான்?” இது மற்றவன். அவர்களுடைய சம்பாஷணா தொடர்ந்தது. ஆனால், இதற்கு மேல் அவளுக்குக் கேட்கவில்லை. வானமே இடிந்து தலையில் விழுந்தாற் போலிருந்தது. 

கோபமும் வேதனையுங் கலந்து அவளை அமுக்கின. ‘சீ, நாய்கள் இவர்களெல்லாம் மாணவர்களா?’ அந்த ஒரு கணத்திலேயே – அவர்கள் அவளை ஆராய முற்பட்ட போதே – அவர்களுக்கு எல்லாம் வெறுமையாகிவிட்டது இந்த உலகம், அவளுடைய இலட்சியம் எல்லாமே பொய். இவ்வளவு நாள் வாழ்வும் போலிதானா? இப்படியான சொற்களைத் தன் மாணவர்களிடமிருந்தே கேட்கவா அவள் படிப்பிக்கிறாள்? 

அவளுக்கு முன் உலகமே சுழல்வது தெரிந்தது. எவ்வளவு நேரமாயிற்றோ? 

“என்ன ரீச்சரம்மா, இறங்கேல்லையே? உங்கடை கடைசி ‘ஹோல்ற்’ வந்திட்டுது”. கொண்டக்டரின் குரல் அவளை உசிப்பிற்று. 

‘பள்ளிக்கூடத்தடிக்கு வந்தாச்சா? அங்கேபோய் என்ன செய்கிறது? பள்ளியும் பாடமும்’ அவளுக்கு வெறுப்பா வேதனையா என்று என்று சொல்ல முடியாத ஒரு நிலை எல்லாவற்றிலுமே வெறுப்புத்தட்டியது. 

பஸ்ஸிலிருந்து இறங்கியவள், “இந்த பஸ் திரும்ப எவ்வளவு நேரமெடுக்கும்?” என்று கொண்டக்டரைக் கேட்டாள். 

”கா, மணித்தியாலம்; அம்மா'”. 

‘ஒரு லீவு வெற்றரைக் கொடுத்திட்டு வந்திடலாம்’ பொன்மணி பள்ளியை நோக்கி நடந்தாள். மனம், உடல் இரண்டுமே களைத்துக் கனத்தன. 

பள்ளிக்குள் நுழைந்து, லீவு லெற்றரை எழுதிமுடித்து விட்டுத் தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தபோது அவர் அங்கே இல்லை என்பதைக் கண்டாள். ‘என்ன செய்கிறது?’ யாரிடமாவது கொடுத்துவிட்டுப் போகலாமென நினைத்தாள். அவளுடைய இரண்டாம் வகுப்பு மாணவன் ‘விக்கி’ தூரத்தில் போய்க் கொண்டிருந்தான். நல்லபிள்ளை. “விக்கி… இங்கை வாரும்” அவன் ஒடிவந்தான். மகிழ்வு தொனிக்க “குட் மோணிங் சீச்சர்” என்றான். ”குட்மோணிங் விக்கி. நீர் எனக்கு ஒரு உதவி செய்ய வேணும். உம் மட்டை நான் ஒரு காயிதம் தாறன், அதைப் பக்குவமா முதல் வாத்தியாரிட்டைக் கொடுக்க வேணும். என்ன?”. ரீச்சருக்கு உதவி – அல்லது பணி – செய்கிறோமென்ற பெருமிதத்தில் ”ஓ ஓ,.கவனமாக் குடுக்கிறன் ரீச்சர்” என்றான். 

“நல்லபிள்ளை தாங்கியூ” என்றவளை அவன் கேட்டான், “ஏன் ரீச்சர் நீங்க இண்டைக்கு வரமாட்டியளே?” 

“ஊஹீம்; எனக்குச் சுகமில்லை. போட்டுவாறன்” பொன்மணி வெளியே வந்தாள். 

இந்த விக்கியைப் போலத்தானே செல்வமும் தனபாலனும் இருந்தார்கள்? இன்று…? விக்கியும் இன்னுங் கொஞ்ச நாளிலை இப்படித்தான் வருவானோ? – நினைக்கவே நெஞ்சு துடித்தது. 

‘ஏதோ இரண்டு பேரை, வைத்து எல்லாரையும் கணக்குப் போடக்கூடாது’ என்று ஒரு கணம் நினைத்தாள். 

திரும்பி வந்த ரீச்சரம்மாவை அதிசயத்துடன் பார்த்த படி, ரிக்கற் கொடுத்தார் கொண்டக்டர். வழக்கமான ‘சீற்’றில் உட்கார இப்போது பிடிக்கவில்லை. வேறொரு இடத்தில் சென்று அமர்ந்தாள். 

அவளுடன் இப்படி யாராவது ‘சேட்டை’விட்டது இதுதான் முதல் தடவையல்ல. ஆனால், அவளுடைய மாணவர்களே ‘சேட்டை’ விட்டதைத்தான் அவளாற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

வழக்கமில்லாத வழக்கமாகப்போன கையுடனே திரும்பிவிட்ட மகளைப் பயத்துடன் வரவேற்றாள் அன்னம்மாள். “என்ன பிள்ளை? ஏதன் சுகமில்லையே? ஏன் உடனே வந்திட்டாய்?” தாய் பதை பதைத்தாள். 

”ஓம், அம்மா சரியான தலையிடி” அவள் படுத்துக் கொண்டாள். 


“மழை வரும் போலக் கிடக்கு. குடையைக் கொண்டு போவமே?” அன்னம்மாள் பயந்து கொண்டே மகளைக் கேட்டாள். ஒருதரம் வைரவர் கோயில் ஐயரிடம் ‘பார்வை பார்ப்பிக்க’ மகளைச் சம்மதிக்கச் செய்வதே, பெரும் பாடாக இருந்தது அவளுக்கு. 

“பேசாம வாம்மா.” – இருவரும் புறப்பட்டார்கள். 

வைரவர் கோவில் ‘முக்கால் கட்டை’ தூரத்திலிருந்தது. அம்மன் கோவிலையும், அதையடுத்திருக்கிற பெரிய வயல் வெளியையும் தாண்டிக் கொண்டு தான் போக வேண்டும். வயல் வெளியின் முடிவிலிருந்த ‘குச்சொழுங்கை’ பத்துப் பன்னிரண்டு வீடுகளை ஊடறுத்துக்கொண்டு வைரவர் கோயிலடியை அடைகிறது. 

தாயும் மகளும் அம்மன் கோயிலடிக்கு வந்து விட்டார்கள். இருந்தாற் போல, வானமே பிளக்கிற மாதிரி இடி முழங்கியது. “எட்டிவாபிள்ளை. மழை வந்தா நிக்கக்கூட இடமில்லை.” 

அம்மன் கோயிலைத் தாண்டி, வயலுக்குள்ளும் இறங்கியாயிற்று. ‘கிடைச்சிக்கட்டை’ குத்துகிற வயலில் நடப்பதே பெரும் பாடாயிருந்தது. இருந்தாற் போல, வென்ற பேரொலியுடன் மழை பிடித்துக் கொண்டது. முந்தானையால் தலையை மூடிக்கொண்டே, “அந்தா ஒரு வீடிருக்கு ஓடிவா” என்றாள் தாய். பெருந்துமியாய் விழுந்த மழையில் உடம்பு தெப்பமாய் நனைந்து விட்டது. எங்கும் ஒரே புழுதி மணம். இருவரும் ஓடினார்கள். 

வயலைப் பார்த்தவாறு. வேலியில்லாமற் கட்டப்பட்டிருந்த மண்வீடு. அது தாழ்வாரத்தில் இருவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். சாரல் அடித்தது. தன் சேலையைப் பிழிந்து, மகளின் தலையைத் துவட்டினாள் தாய். 

“நல்லா நனைஞ்சு போனாய் … குடையையாவது கொண்டு வந்திருக்கலாம்.” 

“சங்கடம் பிடிச்ச மழை. எப்பவிடுமோ?” 

பேச்சரவம் கேட்டோ என்னவோ, வீட்டுக் கதவு திறந்தது. பதினெட்டு வயது மதிக்கக்கூடிய ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். பொன்மணி திரும்பினாள். 

‘அட, அது மகேசுவரி!’ 

பொன்மணி அவளை அடையாளங்கண்டு கொண்டாள். இந்த மகேசுவரியும் அவள் மாணவிதான். இது அவள் வீடா? மகேசுவரியும் ரீச்சரைக் கண்டுகொண்டாள் பதை பதைத்து, “எட, ரீச்சரே? உள்ளுக்கு வாங்கோ ரீச்சர். நல்லா நனைஞ்சு போனியள். ஐயோ” 

“வேண்டாம் மகேஸ்: மழை விடப்போகுது.” 

“மழை இப்போதைக்கு விடாது ரீச்சர். நீங்கள் நல்லா நனைஞ்சுபோனியள். உள்ளுக்கு வாங்கோ; ஒருத்தருமில்லை”. பொன்மணி, கூச்சத்துடன், தாய் பின் தொடர உள்ளே நுழைந்தாள். 

மகேசுவரி ஒரு வெளுத்த துண்டுடன் வந்தாள். 

“ஈரம் துடையுங்கோ ரீச்சர்” 

பொன்மணி துண்டை வாங்கிக் கொண்டாள். 

‘இந்த மகேசுவரி ஆக இரண்டு வருசம் என்னட்டைப் படிச்சவள். இப்பவும் எவ்வளவு அன்பு, பயபக்தி? பெண் பிள்ளையள் இப்படித்தான். இவளின்ர தமையன் தங்க ராசாவும் என்னட்டைப் படிச்சவன்தானே. அண்ணனும் தங்கையும் ஒரே வகுப்பு. … மகேஸ் இப்ப என்ன மாதிரி வளர்ந்திட்டாள்! 

தங்கராசாவுக்கும் இருபது வயதிருக்கும்…’ 

பொன்மணி திடுக்கிட்டாள் – ‘இருபது வயது’ 

‘அவனும் செல்வத்தைப் போல, தனபாலைப் போலத் தான் இருப்பானோ? இந்த வீட்டுக்குள்ள வந்ததே பிழை.’ 

மகேசுவரி இரண்டு கதிரைகளுடன் வந்தாள். 

“இருங்கோ…” என்றவள், 

“கொஞ்சம் பொறுங்கோ ரீச்சர் வாறன்” என்று உள்ளே ஓடி மறைந்தாள். வெளியே மழை சாடிக்கொண்டிருந்தது. 

ஐந்து நிமிடங்களாயின. மகேசுவரி கையில் இரண்டு ‘மூக்குப்பேணி’களுடன், வாட்டசாட்டமான ஒரு இளைஞன் பின்தொடர உள்ளே வந்தாள். 

“தேத்தண்ணி குடியுங்கோ ரீச்சர்” பேணிகளைக் கையிற் கொடுத்தாள். 

“ரீச்சர் இவர்தான் அண்ணை, உங்களிட்டைப் படிச்சவர் தானே. முந்தி எத்தினை குட்டு வாங்கியிருப்பார்? இப்ப பெரிய ஆம்பிளை” மகேசுவரி கல கலத்தாள். ரீச்சர் வீடு தேடி வந்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்கு. வெளியே சிரித்த முகத்துடனிருந்தாலும், உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்தாள் பொன்மணி. 

“வணக்கம் ரீச்சர்…” தங்கராசா கை கூப்பினான். 

“…இந்த மழை நல்ல மழை. ஏனெண்டா, உங்களை எங்க வீட்டை கூட்டிக்கொண்ணந்திட்டுது, பாத்தியளே” அவன், குரலில் மகிழ்வு மேவக் கூறினான். அதே பழைய அன்பு, விநயம், பத்தி, எல்லாம் அவன் குரலில் இழையோடின. ‘தங்கராசா மாறவேயில்லையா?’ பொன்மணி நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ தெய்வ சந்நிதானத்தில் நிற்பவன் போலத் துண்டை இடுப்பிற் கட்டிக்கொண்டு கைகளை மார்பிற் கட்டிக்கொண்டு, அவன் நின்றிருந்தான். தன்னையறியாமலேயே, “இப்ப என்ன செய்யிறீர் தங்கராசா?” என்று கேட்டாள் பொன்மணி. 

“கமந்தான் ரீச்சர். ஒழிஞ்சவேளையில் சுருட்டுக்குப் போறது”. அன்று விக்கியிடம் கடிதத்தைக் கொடுத்த போது மகிழ்ந்தாளே, அதே மகிழ்வு. அதே பக்தி. இப்போது இந்தத் தங்கராசாவின் பார்வையில் ஒளிவிடக் கண்டாள் பொன்மணி. 

‘தங்கராசா மாறவேயில்லையா? இரண்டாம் வகுப்பிலை என்னட்டைப் படிச்ச அதே மாதிரித்தானிருக்கிறான். அதே குழந்தைத்தனம்…’ பொன்மணி, இந்தக் கணத்தில் செல்வத்தை, தனபாலை, மறந்தாள். உள்ளத்தில் என்ன வென்று இனம் பிரித்தறிய முடியாத ஒரு நிம்மதி. 

“அம்மாவும் ஐயாவும் ஒரு களியாண வீட்டை போட்டினம். அம்மா உங்களைக் கண்டாச் சந்தோஷப்படுவா ரீச்சர்.” பொன்மணிக்கு ஒன்றுமே காதில் ஏறவில்லை. மகேசுவரி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். 

தேநீரைக் குடித்து விட்டுக் குவளையைக் கீழே வைத்தாள் பொன்மணி. வெளியே மழை விட்டிருந்தது. 

“அம்மா போவோமே?” பொன்மணி கேட்டாள். 

“ஓஓ.. நேரமாச்சு…” தாயும் எழுந்தாள். 

“என்ன அவசரப்படுறியள் ரீச்சர்? இன்னுங் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாம்” அண்ணனுந் தங்கையும் ஒருமித்த குரலிற் கூறினார்கள். 

“இல்லை மகேஸ்; இருட்டுது இனிக் கோயிலுக்கும் போகவேணும்” பொன்மணியும் எழுந்தாள். 

“பொறுங்க ரீச்சர்” தங்கராசா சிறுவன் போல உள்ளே ஓடினான். திரும்பி வந்தபோது கையில் ஒரு குடை “இதைக் கொண்டு போங்கோ ரீச்சர். மழை வந்தாலும் வரும். நான் பிறகு வாங்கிறன்” மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள் பொன்மணி. 

“போட்டு வாறம்” 

தாயும் மகளும் நடந்தார்கள். 

கோவிலுக்குப்போனது, பார்வை பார்த்தது. வீட்டுக்கு வந்தது ஒன்றுமே பொன்மணிக்கு நினைவில்லை. 

‘தங்கராசா இன்னும் பழைய தங்கராசாதான். என்னுடைய மாணவன்தான், அவன் இன்னும் மாறவே யில்லை. இந்த ஒரு தங்கராசாவின் அன்பு பக்தி, இப்படியே இருக்குமானால், செல்வமென்ன, தனபாலனென்ன, எத்தனை பேர் எத்தனை கூத்தும் ஆடட்டும் எனக்கு இதுபோதும். செல்வம் – தனபாலைப் போலப் பத்துப் பேர் இருந்தால் தங்கராசாவைப் போல ஒருவனாவது இருந்தாலே போதும். அதுதான் நிறைவு, நிம்மதி, திருப்தி எல்லாம். 

அவள் மகிழ்ச்சிப் பெருமூச்செறிந்தாள். 

அவள் தோற்கவில்லை. அவள் இலட்சியம் தோற்கவில்லை.தங்கராசா மாதிரி மாணவர்கள் உள்ளவரை இந்த இலட்சியம் தோற்கப் போவதுமில்லை. அவனைப் போல எத்தனையோ பேரை உண்டாக்க அவளால் முடியும். அவள் இனிப் படிப்பிக்கத்தான் போகிறாள். ராஜிநாமாக் கடிதம் கொடுக்கப் போவதில்லை. 

அன்றிரவு படுக்கப் போகும்போது, “அம்மா, நாளைக்குப் பள்ளிக்குப் போக வேணும், வேளைக்கு எழுப்பிவிடு” என்று சொன்ன மகளை வியப்புடன் பார்த்தாள் தாய். 

‘இன்று மத்தியானம் வரை, பள்ளியே வேண்டா மென்ற பொன்மணியா இவள்?’ – அன்னம்மாள் அதிசயித்தாள். ‘வைரவர் கோயில் ஐயருடைய பார்வை நல்ல ‘சுட்டிப்பு’த்தான்’ என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். 

– கலைச்செல்வி, புரட்டாதி 1966.

– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *