பழைய செருப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 2,240 
 
 

ஏழைகளின் குடிசையில் வாழும் குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறுவதில்லை. சிகனுக்கும் விதிவிலக்கல்ல.

“அம்மா….அம்மா…..”

“ஏண்டா…? சும்மா எப்ப பார்த்தாலும் லொம்மா, லொம்மான்னு கூப்புட்டு இருக்கறே? எனக்கு நாளைக்கு உங்கப்பாவுக்கு மருந்து, மாத்திரை வாங்க பணத்துக்கு என்ன பண்ணறதுன்னு கவலை. உனக்கு பங்களா வீட்டு பையன் போடற மாதரி செருப்பு கேட்குதா?” அலுத்துக்கொண்டாள் சிகனின் தாய் சிங்காரி.

“அம்மா…நான் என்ன புதுசா கேட்டேன்?பழசம்மா…..பழசு” என்றான் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிகன்.

சிகன் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தவன் தான். தந்தைக்கு சிகன் பிறந்து ஒரு வருடத்தில் ஏற்பட்ட விபத்தால் இருந்த வீட்டையும் விற்று மருத்துவ செலவு செய்து விட்டு, கிராமத்தில் உள்ள தந்தையின் நண்பரின் ஓட்டு வீட்டில் வாடகையின்றி வசித்து வருகின்றனர். ஒரு விபத்தால் வாழ்க்கையே தலை கீழாக மாறி விட்டது.

தாய் அதிகம் படிக்காததால் ஊரில் உள்ள பங்களா வீட்டில் சமையல் வேலை கிடைக்க உணவுப்பிரச்சினை தீர்ந்தாலும், இன்னுமொரு பெண்குழந்தையுடன் அவன் தாயால் தன் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

செருப்பு போடாமல் சிகன் பள்ளிக்கு மண் ரோடு வழியாக சென்ற போது வேலா முள் குத்தி சீல் பிடித்து விட்டதை அரசு மருத்துவரிடம் காட்ட, “ஏன் ஷூ போடாம ஸ்கூலுக்கு போனே…?” என்ற மருத்துவர் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கி, தாயின் முகத்தை நோக்கினான் சிகன்.

“வருச, வருசம் பழைய செருப்பு நாஞ்சமையல் செய்ய போற வீட்டுல கிடைக்கும். இந்த வருசம் அவங்க கொடுக்கலை. புதுசா வாங்க பணமில்லை” என்றாள் சிகனின் தாய் கண்ணீருடன்.

அடுத்த நாள் அரசு மருத்துவர் ஷூவுடன் சிகன் வசித்த வீட்டின் முன் நிற்பது கண்டு ஆனந்தமும், ஆச்சர்யமும் கொண்டவளாய் சிகனின் தாய் ஓடிவந்து வரவேற்றாள். ஆனால் சிகனின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி வரவில்லை.

“டாக்டர் என் கூட முப்பது பேர் படிக்கிறாங்க. எல்லாரும் பழைய செருப்பு தான் போடறாங்க. நான் மட்டும் இந்த புது ஷூ போட்டா அவங்க மனசு வருத்தப்படும். அதனால உங்க பையனோட பழைய செருப்பு இருந்தா கொடுங்க போதும்” என்ற சிகனை அதிர்ச்சி கலந்த கவலையோடு வாரி அணைத்துக்கொண்ட அரசு மருத்துவர் சங்கர், சிகனுடன் படிக்கும் முப்பது ஏழை மாணவர்களுக்கும் புது ஷூ வாங்கிக்கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *