பழமரப்பண்புகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 1,938 
 
 

பத்து வயதிலேயே பெற்ற தாயை இழந்த நிலையில் பள்ளிக்குச்செல்வதை விட்டு விட்டு, வீட்டு வேலைகளைச்செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது சுந்தரிக்கு.

அடுப்பங்கரையில் சமைப்பதும், ஆற்றங்கரையில் துவைப்பதும் அத்துப்படி. வேலை செய்வதற்கு எப்போதுமே தயங்கியதில்லை. பிறர் வேலையையும் இழுத்துப்போட்டு தானே செய்வதும் கூடப்பிடித்திருந்தது என்பதை விட அதுவே பழகி விட்டது.

மனித குணமே தன் வேலையை பிறர் மீது சுமத்துவதுதான். தாமாக முன் வந்து பிறர் தன் வேலையைச்செய்வதென்றால் அலாதி பிரியம் ஏற்பட்டு, சூழ்நிலை விருப்பக்கைதிகளை நிரந்தர விருப்பமில்லாக்கைதிகளாக மாற்றி விட்டு, நிரந்தரமாக தாம் அச்செயல்களிலிருந்து விடுதலையாகி விடுவது மனித இயல்பாகிவிட்டது.

சிறுவயதில் விடுமுறைக்கு தாய்வழி மாமன் வீட்டிற்கு போனால் சம வயதுள்ள மற்ற குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது சுந்தரி மட்டும் தன் அத்தையோடு சேர்ந்து சமையல் பாத்திரங்களைக்கழுவிக்கொண்டிருப்பாள். பிறர் வீட்டுச்சாப்பாட்டைக்கூட தன் உழைப்பைக்கொடுத்த பின் சாப்பிட வேண்டுமென நினைப்பாள். 

‘விளையாட்டு நம் வாழ்விலேயே விளையாடிய பிறகு  விளையாடுவது எதற்கு?’ என வித்தியாசமாக யோசிப்பதால் தனக்கு பதிலாக தம்பி, தங்கையை விளையாட அனுப்பி விடுவாள்.

ஒரு முறை தந்தையின் சகோதரி அத்தை வீட்டிற்குச்சென்றிருந்த போது அத்தை பெண்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களாக இருந்த போதும் வீட்டு வேலை எதுவும் செய்யவில்லை. கேட்டதற்கு ‘எங்க அம்மா இருக்கும் போது நாங்க எதுக்கு வீட்டு வேலை செய்யனம்?’ என பதில் சொன்னதும், தனக்கு அம்மா இல்லாத நிலையை எண்ணி வருந்தி கண்ணீர் வடித்தாள். தனக்கு ஏற்பட்ட நிலை தனது சகோதர, சகோதரிக்கு ஏற்படக்கூடாது என நினைத்து அன்று முதல் ஒரு தாயைப்போல அவர்களைக்காத்திட, தாயின் வேலைகளைத்தானே செய்து அவர்களை கவலையின்றி மற்ற சம வயது குழந்தைகளுடன் விளையாட அனுப்பி விடுவாள் சிறுமியான சுந்தரி.

தற்போது வயதாகிவிட்ட நிலையில், தான் தாயின் ஸ்தானத்திலிருந்து வளர்த்த தங்கையும், தம்பியும் உயர்ந்த நிலையிலிருந்தும் உதவ முடியாத தூரத்தில் வெளிநாட்டில் இருப்பதாலும், தன் மகனும் தனக்கு உதவ முடியாமல் வெளியூரில் வேலை பார்ப்பதாலும், வெளியில் அவர்களுடன் பிறந்த ஊரை விட்டுச்சென்று தங்க தான் விரும்பாததாலும் எழுபது வயதிலும் ஓய்வெடுக்காமல் தனது வேலைகளைத்தானே செய்ய வருத்தப்படவில்லை சுந்தரி. 

மகன், மனைவி மகளுடன் வரும் போதெல்லாம் பிடிவாதமாக அவர்களை வேலை செய்ய விடாமல் தானே சமைத்துப்பறிமாறுவது பிடித்திருந்தது.

யாருமில்லாத நேரத்தில் கடந்த காலத்தை ஓய்வு நேரத்தில் அசை போட்டுப்பார்ப்பதும், இசை கேட்பதும் உடல் தசைகள் தளராமல் அசைந்து நடக்க இயலும் என புரிந்து வைத்துள்ளதால் யாரிடமும் எரிந்து விழாமல், பிறருக்காக பரிந்து பேசி வாழப்பழகியதால் பெரிய பிரச்சினைகள் ஏதும் வந்து நெஞ்சை அழுத்தவில்லை.

“அப்பெல்லாம் நல்லவங்களுக்கு மதிப்பு இருந்துது. கெட்டவங்கள ஊரும், ஒறவும் சேராம ஒதுக்கி வெச்சுருவாங்க. இப்பெல்லாம் பெருசா ஆரும் நல்லவங்க, கெட்டவங்க பாக்கிறதில்ல. எங்க காலத்துல ஒரு நாளைக்கு  ஊட்டுப்பொம்பளப்புள்ள வெளியூருக்கு ராத்திரில போயிட்டு வந்தாலே தப்பாப்பேசிப்போடுவாங்க” 

“தப்புன்னா…?”  பதினைந்து வயது நிறைந்த மகன் வழிப்பேத்தி சுகி வெகுளியாகக்கேட்டாள்.

“தப்புன்னா தப்புத்தான். உனக்கு புரியற வயசுதான. புரிஞ்சுக்கோணும். பொம்பளைங்கள அப்படித்தாஞ்சொல்லுவாங்க. இப்ப காலம் ரொம்பம்மே மாறிப்போச்சு. அன்னைக்கு பொம்பளப்புள்ளை ராத்திரில வெளில போயிட்டு வந்தா நல்லவளாவே இருந்தாலும் கெட்டவள்னு மனசே இல்லாம மட்டமா பேசுனாங்க. இப்ப அல்லாருமே ராத்திரி பகலா வெளியூருக்கு, வெளி தேசத்துக்கு போறது, வாரது, தங்கறதுனால ஆரையும் ஆரும் குத்தங்கண்டு புடிச்சுப்பேசறதில்ல. ஊரே பண்ணும்போது தப்புங்கூட சரியாத்தாம்படும். ஒருத்தரு பண்ணுனாத்தா தப்புன்னு படும். ஊருல ஒருத்தங்குடிச்சாக்குடிகாரன்னு பேசறவங்க அல்லாருங்குடிக்கிறதுனால மதுப்பிரியன்னு சொல்லறாங்க பாரு அந்தமாதர. ஒன்னி திருடன பணப்பிரியன்னு சொன்னாலுஞ்சொல்லுவாங்க. எல்லா கலிகாலம்….”  பாட்டி சொல்லக்கேட்ட பேத்தி விழுந்து, விழுந்து சிரித்தாள்.

“அப்பத்தா நீங்க இப்பவே இப்படிப்பேசறீங்க. சின்ன வயசுல எப்படிப்பேசியிருப்பீங்க…?”

“அதப்பேசி என்ன சாமி பண்ணறது…? சின்ன வயசுல என்ற பேச்ச ஒரு கண்ணால ஊட்ல ஒன்டி நின்னு கேட்டுட்டு இருந்த உங்கப்பாரு, ‘காலமுட்லும் உன்ற பேச்ச என்ற காதுல கேட்டுட்டே இருக்கோணும் போல இருக்குது’ன்னு என்ற கிட்ட வந்து கேட்டுப்போட்டாரு. நானும் ஒரு வகைல அவருக்கு மொறப்பொண்ணு தான்னு வெச்சுக்கவே…. நானும் அவரு பேச்சக்கேட்டு வெண்ணையாட்ட உருகிப்போயி ‘அப்படின்னா என்னக்கண்ணாலம் கட்டிக்கோணும்னு சொன்னதும், சந்தோசம் தாங்கமாட்டாம பல பேரு சுத்தியும் இருக்கறத மறந்து போட்டு என்னத்தூக்கி ஒரு சுத்து சுத்திப்போட்டாரு…”

“ஐயையோ…. அப்புறம்….?”

“அப்பறமென்ன? ஒறவுக்காரங்க பாத்துப்போட்டதுனாலயும், எனக்கு அம்மாக்காரி இல்லாததுனாலயும், கண்ணாலம் பண்ணி வெக்கிற அளவுக்கு வசதி என்ற அப்பனுக்கு இல்லாமப்போனதுனாலயும் பழனி முருகம்புண்ணியத்துல அந்தக்கண்ணால ஊட்லயே ஒரு தாலிச்சரடக்குடுத்து என்ற கழுத்துல கட்டிப்போடச்சொல்லி‌ ஒறவுக்காரங்க சொன்னதும் யோசிக்காம உங்கப்பாரு தாலியக்கட்டிப்போட்டாரு”

“அப்ப லவ் மேரேஜ் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க…”

“அப்படித்தா ஊரெல்லாம் பேசீட்டாங்க. நானும் அவரப்பாத்து தாலி கட்டறதுக்கு முன்னால ஒரு கேள்வியக்கேட்டுப்போட்டேன்”

“என்ன கேட்டீங்க….?”

“என்ற தம்பி தங்கச்சிய பெத்த அப்பனாட்ட பாத்துக்கோணும். நம்முளுக்கு கொழந்தை வேண்டாம்னு தான்….”

“அடப்பாவமே… அப்பறம் என்னோட அப்பா எப்படி பொறந்தாரு….?”

“அதப்பேசி என்னாகுது…. என்ற தம்பிய, தங்கச்சிய படிக்க வெச்சு கண்ணாலம் பண்ணி அவங்க வேலைக்கு வெளியூருக்கு போனதுக்கு பின்னால தான் கொழந்த ஞாபகமே வந்துச்சு. சொல்லப்போனா அதுவரைக்கும் பத்து வருச காலம் நாங்க ஒன்னா சேர்ந்து எங்கியும் போனதில்ல. ஒரு ஊட்டுக்குள்ள படுத்ததுமில்ல. ராத்திரியானா அவரு தோட்டத்து ஊட்டுக்கு போயிடுவாரு. நானும் தம்பி, தங்கச்சி கூடப்படுத்துக்குவேன்” சொல்லும் போதே பாட்டி சுந்தரி கண்ணீர் விட, பேத்தி சுகி தானும் அழுதாள்.

“பாவம் நீங்க…” சொன்னவள் பாட்டியை இறுக்கமாகக்கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

“அப்பறம் உன்ற அப்பம் பொறந்து நாம்பட்ட சந்தோசத்துக்கு அளவே இல்ல. அவனையும் ஒரு வேல செய்யாம வளத்துனேன். அவனும் படிச்சுப்போட்டு வேலைக்கு போயி என்ற குட்ட சொல்லாமையே உன்ற அம்மாக்காரிய கண்ணாலம் பண்ணிட்டு வந்து நின்னான். அந்தக்கவலைனாலையே என்ற ஊட்டுக்காரரு கஞ்சி, தண்ணி குடிக்காம வருத்தப்பட்டு நெரந்தரமா என்னைய உட்டுப்போட்டு போயி சேர்ந்துட்டாரு. நானும் அவரு கூடவே போயிருக்கோணும். அப்பாரு சாடைல நீ பொறந்ததும் எனக்குள்ள இருந்த கவல ஓடியே போச்சு. உனக்கும்மு வேலை செஞ்சு உன்னையுமே என்ற தம்பி, தங்கச்சி, உன்ற அப்பனையும் காப்பாத்துன மாதர காப்பாத்திப்போடோணும்னு  உசரக்கையில புடிச்சுட்டு இருக்கறேன்னு வெச்சுக்கவே…”

“பழங்கொடுக்கற மரம் மாதிரி மத்தவங்க சந்தோசத்துக்காகவே வாழப்பழகிட்டீங்க. அடுத்த ஜென்மத்துல உங்க வயித்துல நாம்பொறக்கோணும்னு ஆசையா இருக்குது அப்பத்தா…” எனக்கூறிய, வெளியூரிலிருந்து விடுமுறையில் தனியாக இருக்கும் தன்னைப்பார்க்க, பெற்றோருடன் வந்திருந்த பேத்தியை அழைத்து, பாசம் பொங்க மடியில் அமர வைத்து ஒரு தாயைப்போல அணைத்த போது சுந்தரி மனம் எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *