பழங்கறி இன்ப அடிகள்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குன்றை என்னும் ஊரிலே உண்மையறிவின்ப அடி கள் என்னும் துறவி ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உறைந்திருந்தார். அவர் துறவிக்கோலத்தை மேற்கொண்டிருந்தாராயினும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளையும் அடக்குதற்குச் சிறிதேனும் பயிற்சி பெற்றிலர். அந்த அடிகளுக்குப் பழங்கறியாகிய சுண்டற் கறியைக் கண்டால் அளவு கடந்த மனக்கிளர்ச்சியும் இன்பமும் உண்டாகிவிடும். அதனால் அவருடைய பெயர் ‘பழங்கறி இன்ப அடிகள்’ என்றும் வழங்கி நின்றது.
பழங்கறியும் கிழங்கு வகைகளும் நோயை உண்டு செய்வன ஆகும். உண்மையறிவின்ப அடிகள் காலை மாலை நண்பகல் என்னும் மூன்று காலங்களிலும் பழங்கறியை அளவுகடந்த விருப்பத்துடன் மிகுதி யாகத் தின்று கொண்டிருந்தபடியால், அவருடைய உடலில் நோய்களின் கூட்டங்கள் அடிக்கடி குடிபுகுந்தன.
அடிகளார் ஒரு மடத்தின் தலைவராக அமர்ந் திருந்தபடியால், மிகுந்த பொருளைச் செலவு செய்து அடிக்கடி நோயைப் போக்கிக்கொண்டே வந்தார். அவருக்கு மருந்தளித்து நோய் தீர்த்த மருத்துவர்கள், “பழங்கறியை உண்ணுதல் கூடாது. பழங்கறிதான் நோய்களையெல்லாம் உண்டாக்குகின்றன” என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர்.
பழங்கறியிலேயே உயிரை வைத்திருந்த உண்மை யறிவின்ப அடிகள் (சச்சிதாநந்த சாமிகள்) மருத்துவர்களின் நல்லுரையைச் சிறிதும் பொருட்படுத்தினா ரல்லர். மேன் மேலும் அதனையே தின்று கொண் டிருந்தார். ஒருமுறை அடிகளுக்கு நோய் மிகவுங் கடுமையாகிவிட்டது. நோயைத் தீர்ப்பதற்கு ஆயிரம் வெண்பொற் காசுகளுக்குமேல் செலவு செய்து கூட நோயைத் தீர்க்க முடியவில்லை. வீடுபேற்றைப் பெற்று விட்டார். ஆகவே, நோய்க்கு இடங்கொடாமல் நாம் நம் உடலைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.
“நோய்க்கிடங் கொடேல்” (இ – ள்.) நோய்க்கு – உடல்நலக் கேட்டிற்கு ; இடங் கொடேல் – வழியுண்டாகுமாறு நீ நடந்து கொள்ளாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955