பல்லக்குப் பயணம்
கதையாசிரியர்: காஞ்சனா ஜெயதிலகர்
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 232
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜமுனாவிற்குள் ஆத்திரமும் அழுகையும் கலந்து பொங்கின. மெல்லிய மூக்கு வெந்து விடைக்க, செய்வதறியாது அறைக்குள் நின்றாள் நடந்தாள்.
நாத்தியின் குரல், முறுமுறுவென்று மந்திரம் போடுவது கேட்டது.
பிறந்த வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பின் பிறந்த கடைக்குட்டி அவள். செல்வத்துடன் செய்வ வாழ்வு.
கடந்த இரு மாதங்களில் – அதாவது ராகவனைக் கைபிடித்தபின் ஜமுனாவின் வாழ்க்கை முறை புரட்டிப் போட்ட நிலுரில் மாறியிருந்தது.
“மாசச் சம்பளக்காரனுக்கு அப்பா கொடுக்கறாரேன்னு யோசிக்காதேம்மா. நல்ல பையன், படிப்பு, உயர்ந்த ஒழுக்கம். அழகு அத்தனையிலும் மாப்பிள்ளைவைரம். திறமையிருப்பதால் மேலும் உயருவார். உங்களுக்கு வேண்டிய சௌகர்யம் செஞ்சு தர்றேன் – சரிதானே?”
வரதட்சணை லிஸ்ட் திட்டாத வருங்காலப் புருஷனின் கண்ணியத்தை மதித்த அவள், “அவர் சம்பளத்துக்குள்ளே திருப்தியா இருக்கலாம்பா என்று மனதாரச் சொல்லி, ராகவனைக் கைப்பிடித்திருந்தாள்.
அப்பா தேர்வு, சோடை போகயில்லை.
நிலவின் இரவுகளில் பிதன் வடித்து, நிலா ஒளித்த பகல்களும் அவன் அன்பில் குளிர்ந்திருந்தன.
“அண்ணா நகரில் உனக்கு ஃப்ளாட் வாங்கிட்டேம்மா ஜமுனா. உடனே வேண்டாம். ஆறு மாசம் மாமியார் வீட்டோட இருந்து அவங்க குடும்பப் பழக்க வழக்கமெல்லாம் பழகு. பிறகு அங்கே குடித்தனம். எல்லாம் மாப்பிள்ளைகிட்டே பேசிட்டேன்.”
“சரிப்பா.”
புகுந்த வீட்டிலும் அன்புதாண்டவமாடியது. தாங்கினர்மாமன் மாமி. இவளது நறுவிசான வேலை, நயமான பேச்சில் மகிழ்ந்து, வந்து போவோரிடமெல்லாம் “மருமகப் பொண்ணு தங்கம். விடு விடுன்னு பத்து வேலை பார்த்தாலும் முகச்சிரிப்பு மாறாது.”
“அதிர்ந்து பேசிக் கேட்சு முடியாது.”
“சம்பந்தி, பெட்ரோல் பங்க் கணக்கை இவ பார்க்க இங்கேயே அனுப்பிடுவார். விவரமான பொண்ணு” என்றதில் நெகிழ்ந்து போனாள்.
“புது ஃப்ளாட்டை வாடகைக்கு விட்டுடவா அத்தை? அல்லது நீங்களும் அங்கே வந்திடுங்களேன்.”
“பேரன், பேத்திகளமுதல்ல எடுங்க. பார்த்துக்க வரோம். இப்ப இப்படியே இருப்போம்மா. எட்ட இருக்கற உறவு இறுகும்.”
அவள் கண்ணேதான் பட்டதோ?
கணவனோடு முறுக்கிக் கொண்டு பிறந்த வீடு வந்திருந்த நாத்தனாரின் ‘படுத்தல்’ இரு வாரங்களாய் ஜமுனாவின் சந்தோஷக் கோலத்தை அங்கங்கே அழித்துக் கொண்டிருந்தது.
மறுமாதம் தனிக்குடித்தனம் எனும் நிலையில் ஏன் பிரச்னை கிளப்ப வேண்டும் என்று இவள் தணிந்து தணிந்து விழுங்கினாலும், ‘அண்ணி’ என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்து பிரியங்காட்ட முயன்றாலும், உள் மனம் சிலும்பியது… நிமிர்ந்து முறைத்தது.
நாத்தி கௌரியும் விடாது நச்சரித்தாள். பிடுங்கினாள், சீண்டினாள்.
“உன் பட்டுப் புடவையிலே நாலு கொடேன் ஜமுனா! ஜர்கையைப் பார்த்து என் மாமன் மாமியும் கண்ணு கூசிக் கிடப்பாங்க!”
”வீடும் வி.சி.ஆரும் இறைக்க காசிருந்தா, எனக்கும் உள்ளூரிலேயே ஒர் இளிச்சவாய் மாப்பிள்ளை பாத்திருக்கலாம். இப்போ முந்நூறு மைல் ஓடி ஓடி அல்லாடரேன் – சீரழியறேன்”,
“பிள்ளைகூட இனிமேத்தான் பெத்துக்கப் போறேன். செய்யறதுக்கு அத்தை நீ வந்தாச்சே! மருமகனுக்கு ஐஞ்சு, பத்து பவுனு போடமாட்டியா? அல்லது ராகவனை மட்டும் அமுக்கிட்டு எங்களைப் போங்கடீன்னுருவியா?”
மூச்சை இழுத்து விட்டு, மன லகானை அடக்க முயன்றாள் ஜமுனா. ஆனால் மாமன், மாமி முன்பு போல மலர்ச்சியாய்த் தெரியாதது கலக்கந்தான்.
மகளைப் பற்றிய சஞ்சலமா? அல்லது அவளடித்த புளியம் இலையில் புதுப்பேய் ஒட்டிக் கொண்டதா?
“உனக்கு இரண்டு ஜோடி வெள்ளிக் குத்து விளக்கு வந்திருக்கே. ஒரு ஜோடி நான் எடுத்துக்கறேள்.”
“இல்ல -அண்ணி வந்து, பெரிசு அப்பா அம்மா கொடுத்தது. அன்னம் வச்ச சின்ன செட், திருச்சி பெரியம்மா ஆசையா என்னைக் கடைக்கு அழைச்சிட்டுப் போய் வாங்கித் தந்தது. வர்ற தீபாவளிக்கு உங்களுக்குப் புதுசா…”
“இருக்கறதைத் தர இஷ்டமில்லை – வாங்கித் தர்றியா? கொடுக்க தனி மனசு வேணும்.”
அதன்பிறகு வரும் உறவுகளிடம் அவளது பேச்சுகளில் நிஷ்டூரம் அதிகமாயிற்று.
“சமதையாப் பையனுங்க கிடைக்காமலா? அதை விட்டு எங்க வீட்டுப்படி என் குனிஞ்சு ஏறணும்? ஏதோ இவ நல்லபடி உண்டாகி பெத்துத் தந்தா சரி. என்னால விடுங் காசுந்தான் முடியும்னுட்டு இவ வெறும் வயிறாப் போயிடுவாளோன்னு சில சமயம் ‘பக்’குன்னுது.”
ஆத்திரம் இவளுள்ளும் ‘பக்’கென்று முட்டியது. புருஷன் வரட்டும். அத்தனையையும் சொல்லி, கைக்குக் கிடைத்ததெல்லாம் அள்ளி வீசலாம். ம்ஹும்… கண்மூடி ஒரு கணம் நின்றாள்.
திருமணத்திற்கு முன்தினம் இவளுக்குத் தலைவாரியபடி பெரியம்மா கூறியது மனத்தில் இன்னும் வெகு தெளிவாய் இருந்தது.
அது நிதானச் சொட்டாகி, பொங்கும் மனத்தை அடக்கியது.
‘பல்லக்குத் தூக்கவும் தெரியணும்: அதில ஏறவும் தெரியணும்டீ பெண்ணே’.
வைரக் கம்மலில் முத்து ஜிமிக்கிகள் ஆட, கேட்டான்: “அதென்ன பெரியம்மா?”
“குடும்பம் ஒரு பல்லக்கு. அதைச் சுமக்கறது நாமதானே முதல்லே மூச்சுப் பிடிச்சுத் தூக்கணும். அதுக்கே தனி வலு வேணும். பத்து நூறு வருஷம் முன்னே பல்லக்குத் தூக்கிகளைத் தனியா அமர்த்தி சோறு போடுவாங்களாம், பிறர் பாத்தா கண்ணு பட்டுப்போற மாதிரி சாப்பிடுவாங்களாம். அவங்க சோற்று மலை நடுவே குழி செய்து நெய்யும் குழம்பும் கீரையும் இனிப்பும்…”
“போதும் போதும்… “கல்யாணப் பெண் கிளுகிளுவெனச் சிரித்தாள்.
”வலு வேணுமே! இங்கே நமக்கு வலு மனசிலே இருக்கணும். ‘கடவுளே! எனக்கந்த மனசு தரணும்: தைரியம் வேணும்‘னு வேண்டிக்கிட்டு வாழ்க்கையைத் தொடங்கு. முதல்ல தூக்கியாச்சுன்னா, பிறகு அலுக்காம, சலிச்சுக்காம, தோள் நொந்தாலும் வழுவாம தாங்கணும்.”
“ஏறிப் பயணப் படறதப் பற்றி சொல்லுங்க பெரியம்மா. அது சுலபமில்லையா?”
“அது சொகுசுதான். அவ்வப்போதான் வரும். அல்லது சுமந்து களைச்ச நேரத்திலே அந்த சுகம் அமையும். அப்போ தோரணையும் நாசூக்குமாய் ஏறி உட்காரு. அனுபவி. நினைப்பிலே வச்சுக்கோ ஜம்மு.”
மருதாணி சிவப்பு விரல்களை ஊன்றி ரசித்தபடி கேட்டதையும் மனத்தில் போட்டு வைத்தது நல்லதாயிற்று.
இது சுமக்கும் காலம் – கவனமாய், முழு முயற்சியோடு தூக்க வேண்டிய நேரத்தில் அழுது சுவனத்தைச் சிதற விட்டு விடுவானேன்?
அறை மூலையில் இருந்த வாஷ்பேஸினில் முகம் கழுவித் துடைத்துக் கொண்டாள். மேலாகத் தலையாரி பொட்டிட்டாள். உள்ளேயும் சற்று பிரகாசம்.
கதவைத் திறக்க கௌரியின் ‘கத்திக் குத்துகள்’ இவளைத் தெளிவாய் எட்டின.
ஊரிலிருந்து வந்திருந்த சின்ன அத்தையிடம் பேச்சு – “நம்ப தகுதிக்கு உட்பட்டுத்தான் பெண் எடுக்கணும் அத்தை? புறங்கையை நக்கிக்கலாம்னு ஆசைப்பட்டோம்னா, தேனீ கொட்டுத்தான் மிஞ்சும்” நாவு கொட்டியது.
விருந்தாய் வந்த அத்தை, தடவலாய்ப் பேசினாள்.
“வசதியான வீட்டுப் பொண்ணுன்னா ஒரு கௌரவம் தவிர ஒரு நல்லது பொல்லதுக்குக் கை கொடுப்பாங்களே?”
“மூடின கைதான் அத்தை! திறக்க மனசில்லை. இதுங்களுக்கு வெள்ளியும் பட்டும் காட்டிப் பழக்குவானேன்ற திமிர்.”
எத்தனை கொடுத்திருக்கிறாள். பட்டு, பாலியெஸ்டர் என்று நினுகக்கு ஒருவிதமாய்ப் புடவை, ரவிக்கைத் துணிகள், பெட்டி, பாத்திரம், அலங்காரச் சாமான், செருப்பு என்று யோசித்து யோசித்து எத்தனை பரிசுகள்! இன்னும் எது உறுத்துகின்றது? எண் புன்னகையா? புரிந்து கொண்டு வாழும் புது வாழ்வா? கசப்பைக் கக்கி விட்டு யோசித்தாள்.
அம்மா தந்துவிட்ட அதிரசமாவு குளிர்பெட்டியில் இருந்தது. எண்ணெய் காயவிட்டவள், மறு அடுப்பில் பால் காய்ச்சி காபி சுலந்தாள். சிறு தட்டில் காராச்சேவு வைத்து, அதிரசங்களைத் தட்டிப்போட பத்து நிமிடங்களில் டிபன் தயார்.
ஆவி பறக்கும் தட்டுகளுடன் முன்னறைக்குள் நுழைந்தாள்.
”சித்தி! சாப்பிடுங்க. சூடா செய்தேன். ”
சில விநாடிகள் தடுமாறிய முதியவள், பொன்னிற அதிரசத் தட்டை ஆர்வமாய் வாங்கிக் கொண்டாள்.
“தாம்மா – தொண்டை வறண்டாப் போல இருக்கேன்னு நினைச்சேன். வந்தப்ப குடிச்ச மோருதான்.”
“அண்ணி எடுத்துக்கோங்க.'”
மாமன், மாமிக்கும் பரிமாறியவள், இரவு சமையலுக்கு அரிசி களைந்து, புளி கரைந்து வடகம் பொரித்தபோது சமையலறைக்குள் விருந்தாளி தலை நீண்டது.
“அதிரசம் வாயில வெல்லமாக் கரைஞ்சுது. எனக்கும் உன் பக்குவம் சொல்லேம்மா ஜமுனா!”
“கூட இரண்டு சாப்பிடுங்க சித்தி! தனியாத்தான் வந்தீங்களா? எத்தனை பிள்ளைங்க உங்களுக்கு?”
…..
“அடே, பேரன் பேத்தியெல்லாம் கண்டுட்டீங்களா?”
…..
“மூத்த பேத்தி பேரு அம்சாவா? எங்கண்ணன் பொண்ணு பேரு கூட அதுதான்.”
“உங்ககூட வந்து உக்காந்து பேச ஆசைதான். அண்ணி ஏதோ மனசு நொந்து வந்திருக்காங்க. தனியா பேச விரும்புவாங்கன்னு தான் ஒதுங்கி நின்னேன்.”
…..
“கைனகாலஜிஸ்ட் டாக்டர் இந்திரா எங்க குடும்ப நண்பர். அண்ணியை ஒருநாள் கூட்டிட்டுப் போகலாம். கைராசிக்கார டாக்டர். இந்த வருஷம் முடியறதுக்குள்ள அண்ணி உண்டாயிட மாட்டாங்களா? கடவுளும் நம்மைக் கைவிட மாட்டார்”
…..
“இந்த தீபாவளிக்கு சேந்துதான் கடைக்குப் போகணும் – அவங்களுக்கும் புடவை, வெள்ளி விளக்கெல்லாம் வாங்கணும்.”
…..
“இருங்க, சாப்பிட்டுத்தான் போகணும் – உங்களுக்காகத்தான் சித்தி இத்தனை வடகம் பொரிக்கறேன். தக்காளி வடகம்.”
பேச்சில் நெருங்கி விட்டாள்.
வேலைகளை முடித்து குளிக்கப் பின்புறம் போனபோது சின்ன அத்தை பேச்சு கேட்டது.
”ஏன் கௌரி? புதுசா கல்யாணமானது அத்தனை வேலையும் இழுத்துப் போட்டு பார்க்குது. இராச்சமையலாவது நீ பார்க்கலாமே? நம்ப ராகவன் வர்ற நேரம் அது அலுங்கிப் போய்…”
“நீங்களும் அவளைத் தலையிலே ஏத்திட்டீங்களா?” காரமாய்க் கேட்டாள் நாத்தி.
“பிரியமான பொண்ணும அவ. நீ கொஞ்சம் அனுசரணையா…” மாமி இடையில் புருந்தாள்.
”இவளுக்கு அனுசரணை, பொறுப்பு இருந்தா இப்படி மாப்பிள்ளைய விட்டுட்டு சல்லிக் காரணத்துக்கெல்லாம் ஓடி வருவாளா? இதை அதைத் தான்னு எங்களப் பிடுங்குவாளா? ஜமுனாப் பொண்ணு குணவதி – அதனால தழைஞ்சு பொறுத்துப் போறா. இவ ரொம்ப ஆடினா, ராகவன் நாளைக்கே தனிக்குடித்தனம் போயிடுவான். நானே அனுப்பி வைப்பேன்.”
மாமியாரின் அலுப்பில் இவன் உள்ளம் மலர்ந்தது. தான் மூச்சு பிடித்து பல்லக்குத் தூக்கியாகி விட்டது என்பதும் புரிந்தது.
அந்த நிம்மதியில் கௌரியின மீதுகூட சின்னதாய்ப் பரிவு.
ஆசைகளில் தடுமாறும் கௌரியைத் தாங்கி சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வர, அனுபவித்து குளிரக் குளித்தாள்.
ஊற்றித் தேய்க்க, உடல் தளர்ந்து கொடுத்தது. சற்று முன் சிலிர்த்து, சினந்த உள்ளமும் குளிர்ந்து அமைதியாய்க் குவித்து நின்றது.
– அமுதகரபி, மார்ச் 1996.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.