பலபேர் தலையிட்ட வேலை பாழ்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புத்தூர் என்னும் ஊரிலே செங்கண்ணன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு வீடு கட்டத் தொடங்கினான். அதற்காக ஒரு திட்டம் வகுத்து முடிவு செய்தான். அப்பொழுது பலரும் பல விதமாகச் செங்கண்ணனுக்கு அறிவு சொல்லத் தொடங்கினார்கள். செங்கண்ணனோ எல்லோருக்கும் நல்லவனாக நடக்க வேண்டும் என்னும் எண்ணமுடைய வன். அவன் ஒவ்வொருவருடைய சொல்லையுங்கேட்டு அவ்வவ்வாறு செய்யத் தொடங்கினான். அதனால் அவன் செய்யத் தொடங்கிய வேலை உருப்படியாகா மற்போய்விட்டது. செங்கண்ணனுக்கு அறிவு சொன்னவர்களோ, தாங்கள் கூறியபடி கேட்காதபடியினால் தான் அவ் வீட்டு வேலை ஒழுங்காக முடியவில்லை,’ என்று சொன்னார்கள்.
செங்கண்ணன் ஒரு பெரியவரைக் கண்டு, “ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லுகிறார்கள். அதனால் வீட்டு வேலை முடிவுபெறமாட்டேன் என்கிறது. இதன் பொருட்டு என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
பெரியவர் செங்கண்ணனைப் பார்த்துப், ”பலபேர் பேச்சைக்கேட்டுச் செய்யும் வேலை பாழாகும் என் பதை நீ அறியாயா? எல்லோருடைய பேச்சையும் ஏன் கேட்கத் தொடங்கினாய்? பெரியோர்களுடைய அறிவுரையை மட்டுங் கேட்டு வேலையைச் செய். அவ் வாறு செய்வாயானால் வேலை விரைவாகவும் ஒழுங்காக வும் நடைபெறும்,” என்று அறிவுரை கூறினார். செங் கண்ணனும் அவ்வாறே பலருடைய சொல்லையுங் கேட்பதை விட்டுவிட்டு, அவ் வேலையிலே பழக்கமுள்ள அறிஞர்களுடைய சொற்களைக் கேட்டு அதன்படி செய்து வீட்டு வேலையை முடித்தான். ஆகையால் அறிவிற் சிறந்தவர்களுடைய சொல்லை மட்டுந்தான் நாம் கேட்கவேண்டும்.
“மேன்மக்கள் சொற்கேள்” (இ – ள்.) மேன்மக்கள் – உயர்ந்தோருடைய, சொல் – சொல்லை, கேள் – கேட்டு நட.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955