பறவைகள் படைப்பவன்!




ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். அத்தோடு ‘‘இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதே.’’ என்றும் சொன்னார்.
பண்டிதரின் மனைவிக்கும் ஒன்றும் விளங்கவில்லை. எனவே தன் நம்பிக்கைக்கு உரிய பக்கத்து வீட்டு அம்மாளிடம் விஷயத்தைச் சொன்னாள்.
அவள் ரகசியமாகச் சொன்ன விதத்தை வைத்து பண்டிதரின் வாய்க்குள் பல இறகுகள் இருந்திருக்கும் என்று புரிந்துகொண்டாள் பக்கத்து வீட்டு அம்மாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பண்டிதரின் மனைவிக்கு ஆறுதல் சொன்னாள்.
‘‘இதை யார்கிட்டேயும் சொல்லாதே’’ என்றாள் பண்டிதரின் மனைவி.
‘‘அய்யய்யோ, வாயைத் திறக்க மாட்டேன்’’ என்றாள் பக்கத்து வீட்டு அம்மாள். ஆனால் இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலவும் இருந்தது. அப்போது துணி துவைக்கும் பெண் அந்த வழியாகப் போவதைப் பார்த்தாள். அவளை அழைத்து மொத்த விஷயத்தையும் சொன்னாள். ஒரு முழு சிட்டுக்குருவியே பண்டிதரின் வாயில் இருந்து வந்ததைப் போல் சொன்னாள். ‘‘இப்பிடி ஒரு விசயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை’’ என்றாள் துணிதுவைக்கும் பெண். அவள் வீட்டுக்குப் போகும் வழியில் அவளது தோழி வந்தாள். ஆச்சர்யத்தோடு தான் கேள்விப்பட்ட விஷயத்தைஅவளிடம் சொன்னாள். பரபரப்பாகச் சொல்லும்போது சிட்டுக்குருவி என்பதற்கு பதிலாக ‘சிட்டுக்குருவிகள்’ என்று சொல்லிவிட்டாள். அந்தத் தோழி இதைத் தன் கணவனிடம் சொல்லும்போது, ‘‘அந்தப் பண்டிதர் வாயில இருந்து சிட்டுக்குருவிகள், கூடுகளோட வந்து விழுந்துச்சாம்’’ என்றாள்.
இந்தச் செய்தி இன்னும் பரவியது.
‘பண்டிதரின் வாயில் இருந்து பல விதமான பறவைகள் வெளிவந்தன.’
‘அவர் வாயில் இருந்து ராஜாளிப் பறவை வெளியே வந்தது.’
அன்று மாலைக்குள்ளாக இந்தச் செய்தி பல கிராமங்களுக்கும் பரவியது.
எல்லாரும் இந்த அதிசயத்தைப் பார்க்க பண்டிதரின் வீட்டுக்கு வந்தார்கள்.
‘‘என் வாயில் இருந்து எந்தப் பறவையும் வெளிவரவில்லை’’ என்று பண்டிதர் எவ்வளவோ மறுத்தும், வெறும் வாயில் இருந்து பறவை வரவழைக்கும் அதிசயத்தைச் செய்துகாட்டச் சொல்லிக் கெஞ்சினார்கள்.
என்ன செய்வது என்று தெரியாத பண்டிதர் அனைவரையும் தன் வீட்டுக்குள் உட்காரச் சொன்னார். ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்தில் இருந்த காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டார்.
இந்தச் செய்தி உண்மை அல்ல, வதந்தி என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வரை காட்டுக்குள்ளேயே வாழ்ந்தார்.
– வெளியான தேதி: 16 ஆகஸ்ட் 2006