பறவைகளே… பறவைகளே…
ஒரு ஊரில் அதிசயத்தக்க ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். தினமும் மாலையில் கடற்கரையோரம் அசையாமல், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பார். கடற்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய, சிறிய பறவைகள், குருவிகள் அவர் மேல் வந்து அமர்ந்து கொள்ளும்! நேரம் செல்லச் செல்ல, மனித உருவமே தெரியாத அளவுக்குத் தலையிலிருந்து கால் வரை பறவைகள் அவர் மேல் உட்கார்ந்து ஆனந்தமாய் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்!
அந்த மனிதர் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருப்பார். இரவு வந்ததும் பறவைகள் அனைத்தும் கலைந்துபோய்விடும். அந்த மனிதர் தனது வீட்டுக்குத் திரும்பி விடுவார். இது தினமும் நடக்கும் வாடிக்கையாகிப் போனது.
பொதுமக்களும் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்.
ஒருநாள், ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு, அவனுடைய தந்தை அந்த மனிதரின் வீட்டுக்கு வந்தார்.
“பையன் ரொம்ப ஆசைப்படுகிறான். உங்கள் மீது உட்கார வரும் ஒரு சிறிய பறவையைப் பிடித்து அவனுக்குக் கொடுங்களேன்…’ என்று கேட்டார்.
அந்த மனிதரோ, நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “அது மட்டும் முடியாது. நான் பறவைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆகவே வேறு யாரிடமாவது பறவையை வாங்கி உங்கள் மகனுக்குக் கொடுங்கள்’ என்றார்.
சிறுவன், அழுதுகொண்டே, “உங்கள் மீது வந்து உட்காரும் பறவைதான் எனக்கு வேண்டும்’ என்று அடம் பிடித்தான். அந்த மனிதருக்கு சங்கடமாகப் போய்விட்டது.
சிறுவன் ரொம்பவும் ஆசைப்படுகிறான். ஒரு சிறு குருவியையாவது பிடித்துச் சிறுவனிடம் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் மறுநாள் கடற்கரைக்கு வந்தார் அந்த மனிதர்.
மாலை நேரம் வந்தது. அந்த மனிதர், மனதில் சிறுவனையே நினைத்துக் கொண்டு கடற்கரையோரம் அசையாமல் வழக்கம்போல நின்று கொண்டிருந்தார். மாலை மங்கி, இரவும் தொடங்கிவிட்டது. பறவைகளும் குருவிகளும் அன்று அவர் மேல உட்காரவேயில்லை. தூரமாகப் பறந்து கொண்டிருந்தன. இவர் அருகில் வந்த பறவைகள்கூட, இவர் மேல் உட்காராமல் தலைக்கு மேல் வட்டமடித்துவிட்டுச் சென்றன.
அந்த மனிதர் அழாக்குறையாக, “வாருங்கள், பறவைகளே! என் மீது உட்காருங்களேன்’ என்று கூவி அழைத்துப் பார்த்தார். ஆனால் பறவைகள் அனைத்தும் அவர்மீது அன்று உட்காரவேயில்லை.
நீதி: பறவைகளுக்கு மனத்தால்கூட நாம் தீங்கிழைக்கக் கூடாது!
– ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.(ஜனவரி 2012)