பரீட்சைப் பிள்ளைகளோடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 1,398 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் பிறக்கும் போது இருந்த கிரகநிலை பற்றி எண்ணும் போது என்னைப்போல் பாவி யாரும் இங்குண் டோவென்று வருந்த வேண்டியிருக்கிறது. முன்னொருமுறை “பஸ்கொண்டக்ரர்” என்னைக் கண்டு என்னையும் உபாத்தி என்று நம்பி “மாஸ்டர் வாருங்கோ” என்று கூப்பிட்டுக் “கிறேடிங்” கைப்பற்றிக் கேட்டதும் நான் ‘முழிசி’ ‘முழிசி’ ஒரு மாதிரி மறுமொழி சொல்லித் தப்பியதும் இப்பத்திரிகையில் வெளிவந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம். இவ்விதமே சென்ற சில வாரங்களுக்கு முன் நடந்த தமிழ்ப் பகிரங்கப் பரீஷைப் பிள்ளைகளோடும் நான் அகப்பட்டுக்கொண்டு திண்டாட வேண்டிய தாயிற்று. 

வழக்கம்போல், இடத்தோட பூட்டுச்சட்டை, நல்லவெள்ளை வேஷ்டி, குறி தெரிய மடித்த சால்வை, உவாட்சு, பவுண்டன் பேனா என்பவைகளைத் தாங்கிய திருக்கோலத்தோடு காலை 81/2 மணிபோல் பரீஷை நிகழும் பாடசாலையின் பக்கத்து றோட்டு வழியே போய்க்கொண்டிருந்தேன். ஆசிரியர் சிலர் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தனர். சில மாணவர் என்னைப் பார்த்து “உபாத்தியாயர் எந்தப் பள்ளிக்கூடம்? எத்தனை பிள்ளைகளை விடுகிறீர்கள்? நேரம் என்ன? என்று கேட்டுக்கொண்டு கிட்ட வந்தனர். உவாட்சில் நேரம் 7.30 தான். அந்த உவாட்சை வாங்கின விலையிலும் பார்க்க, அதைப் பிழை திருத்துவதற்காகச் செலவழித்த பணம் அதிகமாக இருந்தபடியால் இனித் திருத்துவதில்லை என்று பெட்டிக்குள் வைத்திருந்தேன். எங்கேயாகுதல் “ஸ்ரையி லாக” வெளிக்கிடுகில் கையிற் கட்டிக்கொண்டு பொழுதைப் பார்த்துப் பார்த்துக் கம்பிகளைத் திருப்பிவிடுவேன். அன்றைக்கும் அப்படியே பொழுதைப் பார்த்து 8.45 என்று சொன்னேன். இனி ஆரும் நண்பர்கள் கையைப் பிடித்துப் பார்த்து நேரப் பிழையைக் கண்டுகொண்டால் நானும் ஆச்சரியக் குறிப்புடன் “ஓகோ நின்றுவிட்டதே ! ஒரு நாளும் இப்படி நிற்பதில்லையே” என்று சொல்லிக் குலுக்கிக் குலுக்கிக் காதடியில் வைப்பேன். சாவி கொடுப்பேன். இது இப்படியாக அந்த இடத்தில் தமிழாசிரிய சங்கத்தின் இப்போதைய உயர்ந்த நிலையைப் பற்றிப் பேசிக்கொண்டு நின்ற உபாத்திமாரோடு சில மணிநேரங் காலத்தைப் போக்கினேன். பரீட்ஷை முடிந்து இடைவேளைப் போசனத்துக்குச் சென்று மீண்டார்கள் மாணவர்கள். 

அவர்களுள் ஒரு மாணவன் என்னைப்பார்த்து, “உபாத்தியார் இந்தக் கணக்குகளைச் சரிபிழை பாருங்கள். மறுமொழிகளும் பக்கத்தில் இருக்கின்றன.” என்று கணக்குக் கடதாசியை எனக்கு நீட்டினான். எனக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. தெரியாதென்றால் வெட்கம். தெரியு மென்றால் விளங்கப்படுத்த வேண்டும். என்னையும் உபாத்தியென்று நம்பிக் கொண்டார்கள். உபாத்தி அல்லவென்று கூறவும் மனம் கூசுகின்றது. உடனே ஒரு யோசனை தோன்றிற்று. விட்டேன் ஒரு புருடா. அவைகளுள்ளே ஒரு கணக்கு “60 யார் நீளம் 45 யார் அகலமான புல்வெளியில் கந்தன் 20 குதிரைகளை 10 நாளும், முருகன் 40 குதிரைகளை 8 நாளும், வேலன் 30 குதிரைகளை 12 நாட்களும் விட்டு மேய்த்தனர். ஒரு சதுர யாருக்கு 2 சதங் குத்தகையானால் காசை எப்படிப் பங்கிடுவார்கள்” என்பது. “கொஞ்சமும் வளைவில்லாமல் சரியாக 60 யார் நீளமும் 45 யார் அகலமுமான காணிகள் இங்கே எங்கேயும் இருப்பதில்லையே, பொதுவாகக் காணிகள் முழுவதும் சரியான நீள் சதுரமாக இல்லாமல் திருங்கி இருப்பதையே காணமுடியும். இப்படி இருக்கிற தரையின் உண்மைப் பரப்பை எப்படிக் கணிக்கலாம். அல்லாமலும் எங்கள் நாட்டில் கந்தன், முருகன், வேலன் என்பவர்கள் 20,40,30 குதிரைகளை வைத்திருப்பதில்லையே. அருமையாக ஒவ்வொரு குதிரை வைத்திருப்பதுமுண்டுதான்! அதுவும் மோட்டார்கார் இங்கே வந்து பெருகிய பின்னர் இல்லாமற் போயிற்றே. “பிரயோகக் கல்வியையே” ஊட்ட விரும்பும் கல்வி நிபுணர்கள், நம் நாட்டுக்குப் பொருந்தாத கணக்குகளைக் கொடுத்துப் பிள்ளைகளின் பிஞ்சு மூளையை ஏன் வீணாக்குகின்றார்கள்! எங்கள் நாட்டு உறுதிகளில் அமைந்தனவாய் வாழ்க்கையோடு முற்றும் தொடர்புபட்டன வாய் உள்ள பரப்பு, கோல், குழி, லாச்சம் என்ற இப்படியான அளவுகளுடைய கணக்கை எந்தச் சோதனைக் கடதாசியிலுங் காணமுடிய வில்லையே. ஆனால் ரூட், போல், மீட்டர், பெக்கு, டொன் என்பவைகளையே காண்கிறோம்” என்று பேசி நேரத்தைக் கடத்தினேன். 

வேறொரு பிள்ளை பூமி சாஸ்திரக் கடதாசியில் “சீனி எங்கிருந்து எங்களுக்கு வருகிறது என்னுங் கேள்விக்குத், தான் யப்பானிலிருந்து வருகிறது என்று எழுதியது சரியோ” என்று கேட்டான். எனக்கென்ன தெரியும்! என்றாலும், யப்பானியர் இப்படி எத்தனையோ வகையான சாமான்களை அனுப்புகிறார்களாம். அவர்களுடைய கைத்தொழிலைப் பற்றியே எங்கும் பேச்சு. சீனியும் அங்கிருந்து வரலாந்தானே. அதற்கென்ன தடை. ஒருவேளை இப்பொழுது சுழியோடிக் கப்பலுக்குப் பயந்து வராமலும் விடக்கூடும். இப்படிப் பிற இடத்திலிருந்து சீனி வருவதனாற்றான் பனங்கட்டித் தொழில் இங்கே கெட்டது. நாட்டிலே சலரோகம் அதிகமாயிற்று! என்று மழுப்பி மறுமொழி சொன்னேன். 

இவற்றைக் கேட்ட அம் மாணவர்கள் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டுப் போக இன்னொரு மாணவன் இலக்கணக் கேள்வியில் “ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றா, இரண்டா” என்பதற்கு எது சரியென்று கேட்டான். நானோ இலக்கணத்தில் சுத்த சூனியம் போ. வழி சமாளிப்பு மறுமொழிகூடச் சொல்ல முடியாதவன். ஒருவிதமாக யோசித்துவிட்டு “தம்பீ இந்தக் காலத்தில் அவை ஒன்றா யிருந்தாலென்ன! இரண்டாயிருந்தா லென்ன! மூன்றாயி ருந்தாலென்ன! அதனால் எவ்வித நட்டமும் இல்லையே. இந்த ஆராய்ச்சியால் நமது வாழ்க்கைக்குத் தேவையான ஒரு குண்டூசியைத்தானும் செய்யமுடியுமா? அன்றியும் இங்கி லீசில் இந்த இலக்கண விசயம் இல்லையே! அதில் இல்லாததைப் பற்றி ஏன் வீணாக யோசிப்பான். என்றாலும் ஆகுபெயர், அன்மொழித்தொகை என்று இரண்டு இடத்தில் எழுதப்படுகிறபடியால் இரண்டு என்றே நான் கருதுகிறேன்” என்று சொன்னபோது அவனுக்கு மூளை கிறுகிறுத்ததை நான் கண்டுகொண்டேன். அவன் ஏதோ புறுபுறுத்துக்கொண்டு போனான். 

அப்பால், சற்றுத் தூரத்திலிருந்து வந்த பெண்பிள்ளைகளுள் ஒருத்தி, “நமது நாட்டுச் சுகாதாரத்துக்கு ஏற்ற முக்கிய சாதனங்கள் எவை என்ற வீட்டுப் பணிப்பாடக் கேள்விக்கு விடையென்ன” என்று கேட்டாள். விடையுந் தெரியவில்லை. பிள்ளையும் பெண் பிள்ளையாயிற்று! ஏன் வீணாகப் பேசுவான்? என்று கூச்சப்படுபவன்போல் பேசாமல் இருந் தேன். அவள் மேலும் ஒருமுறை கேட்டாள். நான் பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன். 

  1. 500 – 1000 என்று சம்பளம் வேண்டும். 
  2. உயர்ந்த கல்வீடுகள் வேண்டும். 
  3. 5-6 வேலைக்காரர் வேண்டும்.
  4. ஒரு கார் வேண்டும். 
  5. இரண்டு மூன்று இணுவில் ஆஸ்பத்திரி வேண்டும். 

என்று அப்பாலும் நான் சொல்லத் தொடங்குமுன் அவள் “காற்றுத் தானே மிக முக்கியமானது ஆகையால் வீட்டு யன்னல்களைத் திறந்துவிட்டுப் படுத்தால் காற்று வரும். அதுதானே முதலிற் செய்ய வேண்டியது” என்று ஏதோ பின்னும் சொல்வதற்கிடையில் எனக்கு எரிச்சல் நெஞ்சைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டுவிட்டது. “யன்னல் இருந்தாற் றானே திறந்துவிடலாம். நமது நாட்டில் 90 வீதமான வீடுகள் சிறு வீடுகளல்லவா! யன்னல்களைச் செய்வித்தாலும் வைக்கத்தக்க வீடில்லையே! சுகாதார விஷயத்தை அறியாமலா ஆட்கள் இருக்கிறார்கள்? போதிக்கிறவர்களைப் போலக் கேட்கிறவர்களுக்கும் கொழுத்த சம்பளமிருந்தால் எவ்வளவுஞ் சுகாதாரமாய் வாழலாந்தானே. 

நூறுபேர் ஒரு மாதம் உழைக்கிற காசை ஒருவர் ஒரு மாதம் எடுத்தால் சுகாதாரமாய் இருக்கலாந்தானே” என்று ஒரு நெடும் பிரசங்கஞ் செய்தேன். அடுத்த பாடநேரங்கிட்டியபடியால் எல்லாப் பிள்ளைகளும் போக நானும் என்னுடைய உவாட்சில் 6.30 என்று இருந்தபடியால் வீடு சென்றேன். 

– ஈழகேசரி, 03.12.1939.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *