கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”அம்மா! அம்மா!! இந்தச் சனி பிடித்த புத்தகங்களை எல்லாம் அந்த அலுமாரியில் வைத்துப் பூட்டிவிடுங்கள். உங்களுடைய ஆய்க்கினையும் உபாத்திமாருடைய தண்டனையும் இன்றோடு தொலைந்துவிட்டன. இனிமேல் சாப்பிடுவதும் விளையாடுவதுந்தான் எனக்கு வேலை” என்று சொல்லிக் கொண்டே சங்கடத்தைத் திறந்து கொண்டு தாயிடம் ஓடி வந்தான் என் மகன் விவேகானந்தன். அவன் மூன்றாம் வகுப்பிற் படிப்பவன். படிப்பென்றால் அவனுக்கு வேப்பம்பழம் தின்பது போலிருக்கும். வீட்டிலே ஒரு சிறிய காரியம் நடந்தால் அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு பள்ளிக்குப் போகாமல் நிற்பான். வீடுவேய்தல், கிழங்கு கிண்டுதல், வேலி அடைத்தல் என்பன போன்ற காரியங்களிலே அவனால் ஒரு உதவியும் செய்யமுடியாததனாலும், சும்மா சாட்டுக்கு ஒரு ஓலை, இரண்டு கிழங்கு, மூன்று வரிச்சுமட்டை என்பவைகளை எடுத்துக் கொண்டு தானும் ஒரு வேலையாள் போல நடித்து பகல், ஒன்பது-பத்து மணிவரையும் பாசாங்கு செய்துவிட்டுப் படிக்கப் போகும் நேரம் பிந்தி விட்டதாகச் சொல்லிப் போய்ப் படுத்துவிடு வான். பிதாவாகிய நான் தண்டிக்கப் போனால், தன் பேத்தியாரின் மடியிற் போய்க்கிடப்பான். அவவும் பேரனைத் தண்டிக்க விடமாட்டா! நானும் மாமிக்குக் கிட்டப்போக நாணப் பட்டு அவ்விடத்தை விட்டு நீங்கி விடுவேன். 

சில காலங்களிலே அவன் சீலையை வயிற்றில் நன்றாக அழுத்திக் கட்டி வயிறு வீங்குவதுபோற் காட்டி, “பொருமல்”, “குத்து” என்ற சாட்டுடன் படிக்கப் போகான். சில நாட்களிலே பாடசாலைக்கென்று புத்தகஞ் சிலேற்றுக் கொப்பிகளோடு புறப்பட்டுப்போய் அவைகளை வேறிடத்தில் ஒளித்து வைத்து விட்டு விளையாட்டில் நேரம் முழுவதையும் கழித்துப் பின்பு பாடசாலை விடும் நேரத்திலே, தானும் நன்றாகப் படித்துவிட்டு வருபவன் போல வாடிய முகத்துடன் வீட்டுக்குத் திரும்புவான். வேறு சில நாட்களிலே, ஒரு காரணமும் இல்லாமலே பாடசாலைக்குப் போகாமல் விடுவான். “வராவிட்டால் முதல் உபாத்தியாயர் துண்டு கொண்டுவரச் சொல்லுகிறவர், ஆனபடியால் ஐயா மறித்ததாக ஒரு துண்டு எழுதுவித்துத் தாருங்கள் இல்லாவிட்டால் உபாத்தியாயர் அடிப்பாரம்மா!” என்று தாயைக் கேட்பான். தாய் இந்தக் கெட்ட குணத்துக்கு இடங்கொடாமல் மறுக்கப் பின்பு பேத்தியாரிடம் போய், “பெத்தாச்சி ! பெத்தாச்சி ! என் சீவன் போய்விடும், ஐயாவிடம் ஒரு துண்டு வாங்கித்தாணை! இல்லாவிட்டால் பள்ளிக் கூடத்தில் அடிவிழும்” என்று அழுவான். பேத்தியாரும் அவன் மேல் இரக்கங்கொண்டு தன் மகளுக்குச் சொல்வதுபோல எனக்குக் கேக்கத்தக்கதாக “அடி, தங்கச்சி ! பொடியன் உசிரை ஒளிக்கிறான் பள்ளிக்குப் போக நான் என்ன செய்ய! எனக்கென்ன எழுதத் தெரியுமோ? முதல் உபாத்தியும் பொல்லாதவராம்! மருமேனுக்குச் சொல்லு இந்த ஒரு முறைக்கும் எனக்காக ஒரு துண்டு கிறுக்கிக் கொடுக்கும்படி… வாற பங்குனி மாசத்திலே அவன்ரை கோயில் நேத்திக் கடனைச் செய்து முடிச்சால் அவன் ஒழுங்காய்ப் படிப்பான். அதனாலைதான் இந்தக் குழப்படி எல்லாம் நடக்குது.” என்று அவ மூக்காலை சிணுங்குவா. நானும் “பெற்ற மனம் பித்து” என்றபடி துண்டு எழுதிக் கொடுப்பேன். 

இனி, எங்கள் வீடு பாடசாலையிலிருந்து ஒரு கட்டைக்கப் பாலுள்ளது. எங்களூர் அம்மன் கோவிலிலே ஒன்பதாம் திருவிழா மிக வேடிக்கையாய் நடப்பது வழக்கம். அத்திரு விழாவிலன்று என் மகன் புத்தகம் முதலியன இல்லாமலே போய் உபாத்தியாயரைக் கண்டு “என்னுடைய அம்மாவுக்குக் கடுமையான வருத்தம். இப்போது பிறந்த தம்பியை நான்தான் படுத்தி வைத்திருக்கவேண்டும். பெத்தாச்சி மற்ற வேலைகளை செய்கிறா. ஆனபடியால் ஐயா உங்களை “லீவு” கேட்டுக் கொண்டு வரச்சொன்னது” என்றான். உபாத்தியாயரும் “ஓம்” என்று லீவு கொடுத்து அனுப்பிவிட்டார். அங்கே வந்த என் மகன் “இன்றைக்கு பெரிய திருவிழாவானபடியால் பாடசாலை லீவு விட்டாயிற்று” என்று சொன்னான். அன்று பாடசாலை முடிந்த பின் ஐந்து மணிபோல் அந்த உபாத்தியாயரும் பகற்றிருவிழா பார்க்க வந்தார். அங்கே நானும் என் மனைவியும் இந்த மகனும் இளைய குழந்தையும் இருந்துகொண்டு “மேளச்சமா பார்க்கும் நேரம் உபாத்தியாயர் வந்து எங்கள் பக்கத்தில் உட்கார்ந்தார்! எங்களைக் கண்டார்! என் மகனை ஒரு மாதிரி யாகப் பார்த்தார்! அவன் திருதிருவென்று முழுசினான். அவனுக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை. “இவவுக்குக் கடுமையான சுகவீனமென்று உங்கள் மகன் சொன்னா னென்று உபாத்தியாயர் சொல்வதற்கிடையில் அவன் தன் பேத்தியாரிடம் பறந்துவிட்டான். இப்படியான “திருகுதாளக்காரன்” என் மகன். இவன் தான் சென்ற 28-2-42 இல் மகிழ்ச்சியுடன் தாயிடம் ஓடிவந்து அவவைப் பார்த்து “விடியு முன் என்னை எழுப்பி, “வெளிக்குப்போ! தலையைச் சீவு! பல்லைத்துலக்கு! குளி! திருநீறு பூசு! பொட்டுவை! தேவாரஞ் சொல்லு! சாப்பிடு! பள்ளிக்கூடத்துக்கு நட! என்றெல்லாம் மூச்சுவிடாமல் எனக்குக் கட்டளை போடுவீர்களே! இனிமேல், என்ன சொல்லப் போகிறீர்கள். பகல் 8 மணி வரையில் தான் நித்திரையால் எழும்புவேன். எழும்பிச் சாப்பிட்ட பின் அயல்வீட்டிலுள்ள இராசன், கமலன், பேரின்பன், திலகவதி, இந்திராவதி இவர்களோடு கூடி விளையாடுவேன். பசித்த நேரந்தான் வீட்டுக்கு வருவேன். சண்டை தொடங்கினது. எங்களுக்குத்தான் நல்ல காலம்” என்று சொல்லி ஆனந்தக் கூத்தாடினான். 

மகனே நீ சொல்லுவது எனக்கொன்றும் விளங்கவில்லையே, என்ன! இனி நீ படிக்கப் போகாயா? அல்லது உபாத்தியாயர் உன்னை மாத்திரம் படிக்க வரவேண்டாமென்று சொன்னாரா உண்மையைச் சொல்லு. 

அப்படியில்லையம்மா! மார்ச் மாதம் 1 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆந் திகதி வரையும் பாடசாலைகளை யெல்லாம் அரசாட்சியார் மூடிவிடப் போகிறார்களாம். அதனாலே நீண்ட லீவு கிடைத்துவிட்டது. சண்டைக் குண்டுகள் விழாதபடிதான் இப்படி மூடுகிறார்கள் என்று பெரிய வகுப்பிலே படிக்கிற சோமண்ணனும், தம்பிராசண்ணனும் இன்று காலையிலே, “வீரகேசரி” யில் வாசித்தவர்கள் அதுதான் இவ்வளவு சந்தோசம்! அது போக அம்மா 20, 25 கோழிக் குஞ்சுகளை மூடுவதற்குத் தடிகளாலே செய்யப்பட்ட கரப்புக் களைத்தானே நாங்கள் உபயோகிக்கிறோம். அப்படியானால், குண்டுகளால் தாக்கப்படாமல் இந்தப் பெரிய பள்ளிக் கூடங் களை என்னத்தாலே மூடப்போகிறார்கள்? இரும்பினாலே மெத்தப் பெரிசாக மூடி செய்தால்தான் பாடசாலைகளை மூடலாம். இது எப்படியம்மா நடக்கும்!. 

கேட்டீர்களே, இவன் தம்பி ஏதோ சொல்லுகிறான். பாடசாலை களை யெல்லாம் நாளைக்குத் தொடக்கம் மூடப்போகிறார்க ளாம்! எப்படி மூடுவார்கள்? (என்று கேட்டுக்கொண்டே என் மனைவியும் மகனும் வந்தார்கள்) 

இதுதான் தமிழைக் கெடுக்கும் பாழான மொழிபெயர்ப்பு. இங் கிலீசிலே “குளோஸ்” என்ற சொல்லுக்கு மூடுதல் என்பது கருத்தானாலும் இடம்நோக்கி வேறுபடுத்தி அதை மொழி பெயர்ப்பது தான் சிறப்பாகும். பாடசாலைகள் “குளோஸ்” பண்ணப்படும் என்றால் படிப்பித்தல் நிறுத்தப்படும் என்பது தான் கருத்து. இதுதான் பொருத்தமான மொழிபெயர்ப்பு மாகும். இதைவிட்டு மூடப்படும் என்பது பெட்டகம் மூடப்படும். அலுமாரி மூடப்படும் என்பது போல கருத்துப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டுவிடும். இது மாத்திரமா? இப்பொழுது பாட சாலைகளிலே “நாட்டுச் சீவன் சாஸ்திரம்” என்றொரு பாடம் படிப்பிக்கப்படுகிறதே, அது தானும் நல்ல மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லையே. பட்டினங்கள் – கிராமங்கள் – காடுகள் பாலைவனங்கள் முதலிய எல்லாம் சேர்ந்துதான் நாடு எனப்படுவது. ஆனால் இப்போது நாட்டுப்பெண் – நாட்டுக் கூத்து என்று சொல்லும்போது நாடு என்பதை சீர்திருத்த மில்லாத நிலப்பகுதியாக எண்ணி இழிவாகக் கருதுகிறார்கள். ஆனால், பட்டினங்களும் நாட்டிலேதான் இருக்கின்றன.நாட்டுச்சீவன் சாஸ்திரத்தின்  நோக்கம் பெரும்பாலும் கிராம வாழ்க்கைக்குரிய கல்வியைப் புகட்டுவதேயாகும். ஆதலால் “றூறல் சயன்ஸ்” என்பது கிராமச் சீவன் சாஸ்திரம் என்று சொல்லப்படுவது நல்லதென்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த நாலுமுழத் துண்டும் ஒரு சால்வையும் உடுத்துக்கொண்டு திரியும் நான் இப்படிச் சொன்னால் நமது அதிகார வர்க்கம் இதைச் செவியில் விழுத்துமா, அதற்கு வேறுவிதமான வேஷம் வேண்டும். 

அது கிடக்க, பாடசாலைகள் நிறுத்தப்படுவது, அல்லது படிப்பித்தல் நிறுத்தப்படுவது, நமது வடமாகாணத்திலே அது சரிப்பட்டு வராது. கொழும்பு, திருகோணமலை முதலிய அபாயகரமான பட்டினங்களிலே தான் நடைபெறும் என்று கூறினேன். இதைக் கேட்டதும் என் மகனின் மனக்கோட்டை யெல்லாம் இடிந்துபோயிற்று. அவன் மகிழ்ச்சி நீர்க்குமிழியா யிற்று. முகம் சுருங்கிவிட்டது. 

– ஈழகேசரி, 1940.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *