பரிவு





“இந்தக் கிழம் இருக்கு. அந்த மொட்டு. போயிருச்சே…”
ஹால் முழுவதும் கசகசவென்று பேச்சு. சாரதா ஓரமாய் சுருண்டிருந்தாள். பெரியவர் வாசல் ஓரமாய் ஈசி சேரில் சாய்ந்திருந்தார். வார்த்தைகள் நெஞ்சில் தைத்தது.

ஈஸிசேர் அவர் மகன் மோகன் வாங்கித் தந்தது. அவன்தான் வெறும் உடலாய் ஹாலில் கண்ணாடிப் பெட்டியில் இருக்கிறான்.
பெரியவரின் ஒரே மகன். அவரின் மனைவி போன பிறகு அவன்தான் அதே அளவு அன் பும், பரிவுமாய் அவரிடம் இருந்தான். `அப்பா சாப்பிட்டியா, காபி குடிச்சியா, ராத்திரி
நல்லா தூங்குனியா…’ என்று அக்கறையாய் விசாரிப்பான். `அப்பாவுக்கு சாப்பாடு போட்டியா…’ என்று சாரதாவிடம் அடிக்கடி கேட்பான்.
சாரதாவும் நல்ல பெண்தான். அவரிடம் கலகலவென்று பேச மாட்டாள் என்றாலும் நேரத்துக்கு சாப்பாடு, காபி கிடைக்கும். மோகன் செய்யும் எதற்கும் தடங்கல் சொல்ல மாட்டாள்.
சாப்பாடு, தங்க இடம், அருகில் மகன், ஒரே பேரன். ஆதரவு இருக்கு என்று பெரியவரும் எதுவும் பேச மாட்டார். இப்போது அந்த ஆதரவு போய்விட்டது. நேற்று பைக்கில் போன மோகன்மீது டேங்கர் லாரி மோதி அதே இடத்தில் அவன் மரணம். குடும்பத்தின் முழு நிம்மதி, மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டு போய்விட்டான்.
ஆறு வயதில் ஒரு பையன். பெரியவருக்குள் ஒரு பயம் வந்தது. உடல் நடுங்கியது.
அவர் ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவில்லை. காபி வந்தது எல்லோருக்கும். குடித்தார்கள். இவருக்கு வரவில்லை. அங்கங்கே சாரதாவின் குடும்பத்தினர் கூட்டாக அமர்ந்திருந்தனர்.
“வரவங்க எல்லாம் வந்தாச்சா?” குரல் கேட்டது.
பெரியவர் வேகமாக எழுந்து தள்ளாடி பெட்டிக்கருகில் வந்தார். கண்மூடிப் படுத் திருந்த மகனைப் பார்க்கையில் நெஞ்சுக்குழி நடுங்கியது.
`மகனே உனக்கு என்னடா அவசரம்… நான் இருக்க நீ ஏன் போனாய்… பழுத்த இலை உதிர்வதுதானே இயல்பு. மலரும் மொட்டு நீ ஏன் போனாய்… 32 வயசு போகக்கூடிய வயசா…’ – கண்ணீர் திரண்டு விழுந்தது.
வந்து தன் இடத்தில் சாய்ந்தார். கண்ணீர் மட்டும் வழிந்தது.
“80 வயசு கிழம் எல்லாம் இருக்கு. 30 வயசு அவனைக் கொண்டு போயிருச்சு கடவுள். எமனுக்கு கண் இல்லை.
“சாரதாவைப் பார்த்தா வயிறு எரியுது.
“இனி இந்தக் கிழத்தை சாரதாதான் தாங்கணும்.”
“அதுக்கு என்ன… நாளைக்கு சாரதாவையும் முழுங்கிட்டு அது உக்காந்திருக்கும்.
“அவருக்கு காபி கொடுத்தீங்களா?” யாரோ ஒருத்தர்.
“கொடுங்க, கொடுங்க. புள்ளையை முழுங் கினது ஜீரணம் ஆகட்டும்.
வார்த்தைகள், வார்த்தைகள்… அதுதான் எத்தனை பெரிய எரி நெருப்பாய் சுட்டுப் பொசுக்குகிறது? அந்த நெருப்பின் வீரியம் தாளாமல் உடம்பு நடுங்குகிறது. அதிலேயே விழுந்து தானும் எரிந்து விடலாமா என்பது போல்.
“வீடு சொந்த வீடுதானே?”
“ஆமாம். நாப்பது லட்சம் இருக்கும்.”
“மோகன் கட்டின வீடுதானே?
“ஆமாம்…”
“அப்போ சாரதாவுக்குத்தான் சேரும்.
ஆனால், கிராமத்தில் இருந்த தன் வீட்டை விற்றுத்தான் இந்த இடத்தை வாங்கிக் கொடுத் தார் பெரியவர். அவருக்கு விவசாயம்தான். மோகன் படிக்க வீடு, நிலம் என்று எல்லாம் விற்று, பணம் கொடுத்து அரசு வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
`எனக்காகத்தானே சொத்து எல்லாம் வித்தீங்க. என்கூடவே வந்துடுங்க…’ என்று மோகன் இங்கு கூட்டி வந்துவிட்டான்.
உத்தமமான பிள்ளை. அன்பைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் காட்டியதில்லை. அவரின் மனைவி சாகும்போது அவனிடம் ஒரே வார்த்தை தான் பேசினாள், `அப்பாவை பார்த்துக்க…’
அந்த வார்த்தையை அவனின் இறுதி நேரம் வரை நினைவில் வைத்திருந் தான்.
“அப்பா, உனக்கு சாயந் திரம் வரும்போது பழங்கள் வாங்கிட்டு வரேன். பழங்கள் சாப்பிடுப்பா.”
“டேய், எனக்கு முறுக்கு வேணும்டா.”
“அப்பா… நீ அதிகம் எண்ணெய் சாப்பிடறே. கூடாது.
“தாத்தா, நான் உனக்கு வாங்கித் தரேன்” – பேரன்.
மோகன் அடிபட்டுக் கிடந்தபோது அவனைச் சுற்றி முறுக்கு பாக்கெட், வறுத்த பொரி பாக்கெட் இருந்ததாம்.
எது சொன்னாலும் ஒரு சிரிப்புதான் அவனிடம். சில சமயம்… `டேய் தகப்பா’ என்பான். `என்ன பெரியவரே’ என்பான். `ஹலோ நித்தியானந்தம்’ என்று பெயர் சொல்லி அழைப்பான். தினமும் ஆபீஸ் கிளம்பும்போது, `தகப்பா போயிட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டுதான் போவான்.
இரவு வரும்போது ஏதானும் வாங்கிக் கொடுத்துவிட்டு, `என்ன நித்தி, சாப்பிட்டியா… என்ன செஞ்சே இன்னிக்கு…’ என்று உட்கார்ந்து பேசிவிட்டுத்தான் போவான்.
“அவர் கொடுத்த உடல், படிப்புதான் இன்னிக்கு என்னை அரசு வேலையில் உட்கார வச்சிருக்கு. அவர் கடமை அது. அதேபோல் என் கடமை அவரின் இறுதிக்காலத்தில் நான் அவரிடம் அன்பும், அனு சரணையுமா இருக்கறது. வாழ்க்கைங்கறது அன்பை கொடுத்து வாங்குவதுதான்” என்பான்.
இப்படிப் போகத்தான் அன்பை அள்ளி வழங்கி னாயா? பெரியவரின் உள்ளம் புழுங்கியது.
“மாமா இப்படிப் போயிட்டானே மோகன். எண்பது வயசுக்கு நீங்க இருக்கீங்க. அவனை வாரிகிட்டு போயிருச்சே தெய்வம்” – ஒரு கிராமத்து உறவு அவர் கையைப் பிடித்து புலம்பியது.
பேசத் தெரியாமல், பேசும் சிலரின் வார்த் தைகள்தான் மரணத்தைவிடக் கொடுமையாய் இருக்கிறது.
சாரதாவை சமாதானப்படுத்த அவர்கள் பெரியவரை நோகடித்தார்கள்.
“அவன் வேலை கருணை அடிப்படையில் சாரதாவுக்குக் கிடைக்கும்?”
“ஆமாம். இவளும் ப்ளஸ் டூ ஆச்சே. ஏதோ இழப்பீடு, இன்ஷூரன்ஸ் எல்லாம் முப்பது லட்சத்துக்கு பக்கமா வருமாம்.”
“நாங்க அவளை எங்க கூட கூட்டிக்கிட்டு போகப்போறோம். இனி அவளுக்கு இங்க என்ன இருக்கு?”
“பெரியவரை என்ன செய்யப்போறீங்க?
“ஏதேனும் ஹோம்லதான் விடணும். அவளுக்கு இனி என்ன தலையெழுத்து?”
ஹாலில் மோகனைப் போட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தது. பெரியவர் எழுந்து பின் பக்கம் வந்தார். மோகன் அவருக்கு என்று அங்கு சின்ன இடம் விட்டிருந்தான்.
“நீ விவசாயம் பார்த்த ஆள். சும்மா இருக்க முடியாது. ஏதாவது தோட்டம் போட்டுக்கோ” என்றிருந்தான்.
பாகல், பூசணிக்காய். தக்காளி, கத்திரிக்காய் என்று செடிகள் வளர்ந்து காய் பிடித்திருந்தது.
`ஹக்…’ பெரியவருக்கு துக்கம் பீறிட்டு வந்தது. ஒரு செடியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார். பொங்கிப் பொங்கி உயிர் கரையக் கதறினார். இந்த இடத்திலேயே தானும் போய்விட்டால் நல்லது என்று நினைத்தார்.
முன்பக்கம், மோகனை எடுத்துப் போனார் கள். வந்து வீட்டைக் கழுவி, சாப்பாடு போட்டார்கள்.
பெரியவரை யாரும் தேடவில்லை. அவர் பின்பக்கம் செடிக்கருகில் அப்படியே தன் நினைவின்றி அமர்ந்திருந்தார்.
“தாத்தா…” பேரனின் குரல்.
“இங்கயா இருக்கே?”
அருகில் வந்தான். “உள்ள வா தாத்தா.”
அவன் கையைப் பிடித்து இழுத்துப் போனான்.
“காபி குடிச்சியா?
“இல்லை கண்ணு.”
“சாப்பிட்டியா?” என்று கேட்டதுக்கு தலையை `இல்லை’ என்று ஆட்டினார்.
அதே நேரம்… “சாரதா…” என்று அலறியபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஓடி வந்தார். அப்படியே சாரதாவைக் கட்டிக் கொண்டு அலறினார்.
“உனக்கு ஏண்டி இந்தத் தலையெழுத்து? அவனுக்குப் போகிற வயசா? பழுத்த இலை, இருக்க, முதிராத மொட்டு அவனை அள்ளிக் கிட்டு போயிருச்சே…” – அவள் யாரைச் சொல்கிறாள் என்று தெரிந்தது.
அதற்குள் சாரதாவைச் சுற்றி அவள் குடும்பம் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தது. ஆறுதல் சொல்கிறோம் என்ற போர்வையில் எண்பது வயது பெரியவர் இருக்கிறார் என்று வார்த்தைகளை நெருப்பாக உதிர்த்தது.
சாரதா விருட்டென்று எழுந்து விரிந்த கூந்தலை முடிந்துகொண்டாள்.
“கொஞ்சம் நிறுத்தறீங்களா?” சீறினாள்.
“என்ன சொல்லிட்டோம் இப்போ?
“யார் எப்ப சாகறதுன்னு முடிவு பண்ண வேண்டியது நாம இல்லை. அது கடவுளோட முடிவு. அப்படிப் பார்த்தா மோகனை விடவும் நீங்களும் வயசுல பெரியவங்க தானே…”
“ஏய் என்னடி பேசறே.”
“போதும்மா. எனக்கு அனுசரணையா பேசறேன்னு ஒரு நொந்த மனுஷரை இன்னும் நோகடிக்காதீங்க. மனுஷனுக்கு மனுஷன் பரிவுதான் காட்டணும். இப்ப அவருக்கு அதான் முக்கியம். பாரும்மா… நான் எங்க மாமனார் கூடத்தான் இருப்பேன். அவர் மகன் இடத்துல நான் இருந்து அவரைக் கவனிச்சுப்பேன். நான் இன்னிக்கு எப்படி இருக்கேனோ அப்படித்தான் நாளைக்கு என் மகன் என்கிட்டே இருப்பான். வந்த வேலை முடிஞ்சுதுல்ல… கிளம்புங்க…”
சாரதா எழுந்தாள்.
ஒரு தட்டில் சோறு போட்டு கொண்டு வந்து பெரியவரிடம் நீட்டினாள்.
“மாமா சாப்பிடுங்க” என்றாள்.
பெரியவர் தட்டை வாங்காமல் ஆனந்தமாக அழுதுகொண்டிருந்தார்.
– ஜூலை 2022.