பரதேசியின் உபாயம்
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருச்செந்தூர்க் கோயிலுக்குப் புதிய மானேஜர் வந்தார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஜனங்கள் பல இடங்களிலிருந்து வந்து செந்திலாண்டவனைத் தரிசித்துச் செல்வார்கள்; காணிக்கை செலுத்துவார்கள். அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடைபெறும்.
புதிய மானேஜர் நெற்றி நிறையத் திருநீறு பூசுகிறவர்; கழுத்தில் ஆறுமுக ருத்திராட்சம் கட்டிக் கொண்டிருக்கிறவர். பார்த்தால் சிவப்பழமாகத் தோற்றம் அளிப்பார். ஆனல் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தை அந்தத் தோற்றத்திற்கு ஏற்றபடி இராது. கோயிலைத் தாமே தனியே நிர்வாகம் செய்து ஆண்டவனையே தாங்குபவரைப் போன்ற ஞாபகம் அவருக்கு. வருகின்ற அடியார்களிடம் அன்போடு பேசி, வேண்டிய செளகரியம் செய்து கொடுக்க வேண்டியது அவர் கடமை. அப்படியில்லாமல் வாசலில் வேட்டை நாயைக் கட்டினதைப்போல் இருந்தது அவர் நிலை.
அடியார்கள் வந்தால், அது பண்ணக்கூடாது இது பண்ணக்கூடாது, அப்படிச் செய்யாதே இப்படிச் செய்யாதே என்று அதிகாரம் பண்ணி அதட்டுவார். பூசகர்களையும் ஏவலாளர்களையும் காரணம் இல்லாமல் கண்டித்து மிரட்டுவார். எந்தச் சமயத்திலும் கடுகடு வென்ற முகமும் சுடுகின்ற சொல்லும் உடையவராக இருந்தார்.
தரிசனத்துக்கு வருகிறவர்கள் இந்தப் பேர்வழியைப் பார்த்து மனம் வருந்தினர்கள். அவரோடு தினமும் அவஸ்தைப்படும் கோயில் வேலைக்காரர்கள் பட்ட துன்பத்துக்கு முடிவே இல்லை. செந்திலாண்டவனிடம் ஆழ்ந்த பக்தி உடைய பரதேசிகள் சிலர் அந்தக் கோயில் வாசலில் இருந்து கிடைத்ததை உண்டுவிட்டு, ஆண்டவன் தரிசனத்தை நாள்தோறும் தவறாமல் செய்துகொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் பாடு திண்டாட்டமாய்விட்டது. அவர்களுக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். வருகின்ற அடியார்களும் கோயிலைச் சார்ந்து வாழ்பவர்களும் இந்த மானேஜரால் படும் சங்கடங்களைச் செந்திலாண்டவன் பார்த்துக் கொண்டிருந்தான். மேலதிகாரிகள் காதுக்கு விஷயம் எட்டினால் ஏதாவது பரிகாரம் கிடைக்கக் கூடும். அந்தக் காலத்தில் அவ்வளவு சுலபமாக அவர்களுக்குக் குறைகள் தெரிய வழியில்லை.
மானேஜரின் கடுமை ஒரு பக்கம் இருக்கட்டும். யோக்கியதை எப்படி? அது மகாமோசம். வருகிற வரும் படியைக் கொள்ளை அடிப்பது, பொய்க் கணக்கு எழுதுவது, நிவேதனங்களைக் குறைப்பது, படித்தரங்களைக் குறைப்பது, வீணாக அபராதம் விதிப்பது முதலிய காரியங்களையும் அவர் செய்து வந்தார். “இந்த மகா பாபியையும் தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறதே!” என்று நல்லோர் வயிறு எரிந்தனர்.
அடியவர்களுக்கு உற்சாகம் இல்லை. திருட்டுத் தனமும் அதிகமாயிற்று. காணிக்கை குறைந்தது. வந்த காணிக்கை அவ்வளவும் கணக்குக்குப் போவதில்லை. உண்டியல் அடிக்கடி நிரம்புவது பழைய காலம்; இப்போது அது லேசில் நிரம்புவதில்லை.காணிக்கை போடும் வட்டைகள் சூன்யமாகிவிட்டன. கோயிலுக்கு இரண்டு யானைகள் இருந்தன. அவற்றிற்குப் போதிய உணவு போடாமல் இளைத்து விட்டன.
ஆண்டவன் சந்நிதியில் உளமுருகித் திருப்புகழும் அலங்காரமும் பாடிப் பணியும் பரதேசி ஒருவர் இருந்தார். கோயில் போகும் போக்கைக் கண்டு உள்ளம் குமுறியவர்களில் அவரும் ஒருவர். “ஆண்டவனே, சூரபன்மன் முதலிய அசுரர்களின் அக்கிரமங்களை அழித்த உன்னுடைய திருவருள் இந்த அரக்கனுடைய அக்கிரமத்தை எப்படித்தான் சகித்துக் கொண்டிருக்கிறதோ!” என்று மனசுக்குள்ளேயே சொல்லி வருத்தப்படுவார்.
நாளடைவில் திருச்செந்தூரில் நடைபெறும் இந்த விஷயங்கள் மேலதிகாரிகளுக்கு எட்டின. ஆனாலும் திட்டமாக இன்ன தவறு என்று யாவரும் தெரிவிக்கவில்லை. என்னதான் நடக்கிறதென்று தெரிந்து கொள்ள எண்ணி மேலதிகாரி ஒருவர் திருச்செந்துருக்கு வந்தார். அவர் வருவது எப்படியோ மானேஜருக்குத் தெரிந்துவிட்டது. எல்லாம் ஒழுங்காக நடப்பதுபோலக் காட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். கணக்குகளை ஒழுங்குபடுத்தி வைத்தார்.
அதிகாரி வந்தார். கோயிலைப் பார்வையிட்டார். பெரிய தவறு ஒன்றும் நேர்ந்ததாக அவர் கண்ணுக்குப் படவில்லை. சிலரை விசாரித்தார். மானேஜருடைய அதிகார மிரட்டலுக்கு உட்பட்ட அவர்கள் எல்லாம் ஒழுங்காக நடப்பதாகச் சொன்னர்கள். வேறு யாரும் அவரிடம் குறைகளை எடுத்துச் சொல்ல முன் வரவில்லை.
முன்னே சொன்ன பரதேசிக்கு இந்த நாடகத்தைக் கண்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மேலதிகாரி வந்துங்கூட, நடக்கும் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு ஏற்படாவிட்டால், அரக்க ராஜ்யம் நீடித்து நடக்க வேண்டியதுதான் ஆகவே, எப்படியாவது துணிந்து, வந்திருக்கும் அதிகாரிக்கு விஷயத்தை விளக்க வேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டார். ‘நமக்கு என்ன நீங்கு நேர்ந்தாலும் நேரட்டும். நம்மால் பலருக்கு நன்மை உண்டாகும்’ என்ற துணிவு அவருக்கு உண்டாயிற்று. அடுத்த கணம் அவருக்கு ஓர் உபாயம் தோன்றியது. அப்படிச் செய்வதே சரியென்று நிச்சயப்படுத்திக் கொண்டார்.
அதிகாரி முருகன் சந்நிதியில் வந்து தரிசித்துக் கொண்டிருந்தார். அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பரதேசி தூரத்தில் நின்றுகொண்டு தம்முடைய இனிய குரலில் திருப்புகழ் பாடத் தொடங்கினார். மிகவும் இனிமையாகவும் உருக்கமாகவும் பாடினார். அதிகாரியின் மனசை அந்தப் பாட்டு இழுத்தது. மற்றவர்களைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதிகாரி ஆண்டவனைப் பார்ப்பதும், திரும்பிப் பரதேசியைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தார். அவருடைய கவனம் தம்மேல் விழுவது பரதேசிக்குத் தெரிந்தது. உடனே திருப்புகழை முடித்து விட்டு, அலங்காரம் பாடினார். பிறகு வேறு ஏதோ பாட்டைப் பாட ஆரம்பித்தார். நிதானமாக, வார்த்தைகள் தெளிவாக விளங்கும்படிப் பாடினார்.
கொட்டைகட்டி மானேஜர்
செங்கடுவாய் வந்தபின்பு
சுத்தவட்டை ஆனதென்ன
சொல்லாய் குருபரனே!
என்று பாட்டு வந்தது. அங்கிருந்த அத்தனை பேரும் அதைக் கவனித்தார்கள். அதிகாரி நன்றாகக் கேட்டார். மானேஜர் முதலில் கவனிக்கவில்லை. பரதேசி அழுத்தமாகச் சொற்களை உச்சரித்துத் திருப்பித் திருப்பிப் பாடினார். பாட்டில் மானேஜர் என்ற வார்த்தை வேறு வந்தது. ஆகவே அவரும் கவனித்தார்.
வேலவர்க்கு முன்னிற்கும்
வீரவாகு தேவருக்குச்
சாயரட்சைப் புட்டு
தவிடோ குருபரனே !
என்று இரண்டாவது கண்ணி வந்தது. அடியார்கள் ஆச்சரியத்தில் மூழ்கி ஸ்தம்பித்து நின்றார்கள். மானேஜர் முகத்திலே கடுகு வெடித்தது. உடம்பெல்லாம் வேர்வை வெள்ளம். அதிகாரி, பரதேசியின் சாதுரியத்தை வியந்தபடி விஷயத்தை உணர்ந்து கொண்டார். பரதேசி அதோடு நின்றாரா? மானேஜரின் அக்கிரமத்திற்குப் பெரிய சாட்சி, கோயில் யானைகள். உடம்பு மெலிந்துபோன அவற்றைப் பார்த்தால் உண்மை நன்றாக வெளியாகிவிடும். ஆனால் மனேஜர் அந்த இரண்டு யானைகளையும் அதிகாரியின் கண்னில் படாதபடி எங்கோ அனுப்பிவிட்டார். வேறே கோயிலுக்குப் போயிருக்கின்றன என்று சாக்குச் சொன்னார். அந்த யானைகளின் விஷயத்தைப் பரதேசி அம்பலப்படுத்தினார்.
மாநிலத்தில் காய்கிழங்கு
வற்றலுண்டு செந்தூரில் – இரண்டு
ஆனவற்றல் ஆனதென்ன
ஐயா குருபரனே !
இந்த மூன்ருவது கண்ணி மற்ற இரண்டையும்விட அதிகமாகச் செந்தூரின் நிலையைக் காட்டியது. ஜனங்கள் தம்மை அறியாமலே தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அதிகாரி வந்த காரியம் நிறைவேறிவிட்டது. பரதேசியின் உபாயம் பலித்தது. அவர் குறைகளை உணர்ந்து கொண்டார். பிறகு? அதையுமா சொல்ல வேண்டும்?
– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.