பதிவுகள்
கதை ஆசிரியர்: விமலா ரமணி
“ஷிவாங்கி”
விஜயா இரைந்து கூப்பிட்டாள்.
“கம்மிங் மம்மி” – கத்தியபடியே ஷிவாங்கி, அறையிலிருந்து வெளிப்பட்டாள்.
வாவ்! விஜயாவிற்க்குத் தன் மகளைப் பார்த்தபோது, தன் கண்களே பட்டுவிடும்போல், தோன்றியது. பத்திரிகைகளாக இருந்தால், ‘இருபது வயதுப் புயல்’ என்பார்கள். ‘காதல் சூறாவளி’ என்பார்கள். ‘அசர வைக்கும் அழகு’, கிறங்க வைக்கும் பிரதேசம்’ – என்றெல்லாம் வர்ணிப்பார்கள். ஆனால், விஜயா தன் மகளைத் தாய்க்குரிய கருணையோடு பார்த்தாள்.
“ஹாய் மம்மி.. நீ சொன்னதால தான் இந்தச் சூடிதார். இல்லேன்னா ஜீன்ஸ், மிடினு ஏதாவது போட்டுட்டு வந்திருப்பேன். நான் கல்யாண மண்டபத்துக்கு போட்டா?”
“சரி.. சீக்கிரம் வா..”
ஷிவாங்கி, கல்யாண மண்டபம் நோக்கி ஓடி விட்டாள். கல்யாண மண்டபத்திற்கு அருகிலேயே இவர்களுக்கென்று அறை ஒதுக்கி இருந்தார்கள்.
உறவு, நட்பு என்று எல்லாமாகச் சேர்ந்து, இவளை இந்தத் திருமணத்திற்கு இழுத்து வந்துவிட்டது. இல்லாவிட்டால் இந்தக் கிராமத்தில் முப்பது வருடங்களுக்கு முன், இவள் வாழ்ந்த இந்தப் பழைய ஊரில், இவளுக்கு என்ன வேலை?
கெட்டிமேளச் சப்தம்.
ஓ! மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள் போலும். சிரிப்பும், பாட்டும் தூரத்து ஓசையாகக் கேட்டன.
விஜயா, மெல்ல வெளியே வந்தாள். இன்னும் மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரமிருந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்தால் என்ன?
படி இறங்கினாள். வெளியே நடந்தாள்.
ஊர், நிறைய மாறி இருந்தாலும், சில மண்வாசனை இடங்கள் மாறவில்லை.
அதோ… அதோ அந்தக் கிருஷ்ணன் கோயிலும், அதை ஒட்டிய ஒற்றையடிப் பாதையும், சுழித்து ஓடும் தாமிரபரணி ஆறும், இன்னமும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
விஜயா, அங்கிருந்த கிணற்றைப் பார்த்தாள். தண்ணீர் நிறைய இருந்தது. கிணற்று நீரில் இவள் முகம் தெரிந்தது. ஐம்பது வயது விஜயா பத்து வயதுச் சிறுமியாகக் கிணற்றில் தெரிந்தாள்.
“காப்பாத்துங்க.. என்னைக் காப்பாத்துங்க.. யாராவது என்னைக் காப்பாத்துங்க.”
மொட்டைக் கிணற்றின் மேல் பாகத்தில் முளைத்திருந்த, ஏதோ ஒரு மரத்தின் வேரைப் பிடித்தபடி, சிறுமி விஜயா கத்துகிறாள்.
அதோ… அதோ… கோதண்டம். இவளின் முறைப்பையன்.. அத்தை பையன்.. தலைதெறிக்க இவளை விட்டுவிலகி, ஓட்ட ஓட்டமாக ஓடுகிறான்.
பத்து வயது சிறுமிக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் திருமணம் பேசிய காலம் அது! “இவன்தான் உன் ஆம்படையான்” என்று அடையாளம் காட்டப்பட்ட காலம்.
அந்த தைரியத்தில் தானோ என்னமோ, அன்று இவள் நாவல்பழம் பொறுக்கிக்கொண்டு தனி வழியே வந்தப்போது, கோதண்டம் இவளை வழிமறித்தான்…
“டீ விஜி.. பழம் கொடு..” என்றான்.
“சீ போடா. நான் மாட்டேன். உனக்கு வேணும்னா நீ பொறுக்கிக்கோ.”
“வவ்வவ்வே”
கோபத்தில் கோதண்டம் இவள் மீது பாய…
நிலை தடுமாறிய விஜயா, அந்த மொட்டைக் கிணற்றில் விழுந்தாள். கோதண்டம் பயந்து ஓடினான்.
“யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்…”
அப்போது…
“சின்னம்மா…”
விஜயா மேலே பார்க்கிறாள்.
மாசானம்! இவர்கள் வீட்டில் வேலை செய்யும் மாரியின் மகன்.
“சின்னம்மா… இந்தாங்க.. இந்தக் குச்சியைப் புடிச்சிட்டு வாங்க..”
“வேண்டாம் மாசானம்.. கை வழுக்குது. உன் கை.. கொடு..”
“அம்மா.. நான்..”
“கை கொடு மாசானம்.. இல்லே நான் செத்துடுவேன்.”
மாசானம் கை கொடுத்தான். அவன் தூக்கி விட்டதில் கண்ணாடி வளையல்கள் உடைந்தன. வீட்டிற்க்கு வந்த விஜயா நடந்த விஷயங்களை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் மாசானம் மாட்டிக் கொள்வான்.
மேளச் சத்தம்… விஜயா சுயஉணர்வு பெற்றாள். ஓ! மாப்பிள்ளை அழைப்புக்குக் கிளம்பி விட்டார்களா? இந்த கிருஷ்ணன் கோயிலுக்குத் தான் வருவார்கள்.
விஜயா, தன் அறைக்குத் திரும்ப நினைத்தபோது? யார் யாரோ திடுதிடுவென்று ஓடி வரும் சப்தம்?
மக்கள் கூச்சல்… ஏன்? என்னவாயிற்று?
“கல்யாணத்துக்கு வந்த பொண்ணுங்க சும்மா இருக்கவேண்டியதுதானே? ஆத்துலே ஏன் குளிக்க வரனும்? இப்பப் பார், நீச்சல் தெரியாம ஆத்தோட போயிட்டாங்களாமே..”
விஜயாவிற்க்கு ‘பகீர்’ என்றது. “ஒருவேளை ஒருவேளை ஷிவாங்கியும்…”
ஆற்றில் மூழ்கி மூச்சு முட்டிய அந்தப் பெண்ணை, கரையோரத்தில் கிடத்தி இருந்தார்கள். முதலுதவி செய்து கொண்டிருந்தார்கள்.
அதோ… அதோ… ஈரமாகக் கிடக்கும் அந்தத் துப்பட்டா ஷிவாங்கியுடையதுதான்.
“ஷிவாங்கி” கதறியபடி மகளை நோக்கி ஓடினாள், விஜயா.
ஷிவாங்கி கண் திறந்தாள்.
“நோ.. மம்மி.. ஐ யம் ஓகே…”
உட்கார்ந்தாள்.
“இவர் மட்டும், ஆத்தோடு போன உங்க பொண்ணைக் காப்பாத்தி கரை சேர்க்கலேன்னா, இன்னிக்கி அவ்வளவுதான்” என்று கூட்டத்தில் ஒருவ்ர், அந்த ஆளை அடையாளம் காட்ட.
விஜயா பார்க்கிறாள்.
ஈரம் சொட்டச் சொட்டத் தள்ளி நிற்ப்பது?
மாசானம்! மாசானமேதான்.
இவளுக்குக் கை கொடுத்த அதே கரங்கள்தான், இவள் மகளையும் மீட்டிருக்கிறதா?
சுற்றி நின்ற கூட்டம் மெல்லக் கலைந்தபிறகு, விஜயா மாசானத்தைப் பார்த்தாள்.
“மாசானம்.. அன்னிக்கு என்னைக் காப்பாத்தினே.. இன்னிக்கு.. இன்னிக்கு என் மகளை. நீ நீ இங்கே தான் இருக்குறீயா?”
“ஆமாம்மா.. இந்த ஆத்துல, கிணத்துல விழுந்தவங்களை காப்பாத்தறதே என் வேளையாப் போச்சும்மா.. பக்கத்துலேதான் குடிச..”
மாசானம் தயங்கியபடி கேட்டான். “ஐயா…”
விஜயா சிரித்தாள்.
“மாசானம்.. நீ என்னை சாவிலே இருந்து காப்பாத்தினே. ஆனா என் புருஷனை சாவிலே இருந்து அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியலை.”
மாசானம் விழித்தான்.
“உம்… உன் அப்பன் மொடாக் குடிகாரன். சாராயக்கடையிலே செத்தான். இவர் உயர்ந்த குடிமகன்… பார்லேயே கிடந்து, குடிச்சு குடிச்சு செத்தார். அவர் எனக்குத் தந்த ஒரே பரிசு, ஷிவாங்கிதான். அது போகட்டும். உன் சம்சாரம்…”
“எல்லோரும் இருக்காங்கம்மா…” என்றவன், “தப்பா நினைக்காதீங்க.. இந்தப் பணத்தை பாப்பா கல்யாணத்துக்கு என் பரிசா வைச்சுக்குங்க…” என்று அவள் கைகளில் பரிசுப் பணத்தைத் திணித்தான்.
அவர்கள் கை கூப்பி விடைபெற்றுச் சென்றார்கள்.
வாழ்க்கை என்பது சில சமயம், பிரிக்கப்படாத பரிசாகவே இருக்கிறது. அதைப் பிரித்துப் பாராமலே நாம் தூக்கி எறிந்து விடுகிறோமோ? இவைகள் காலப் பதிவுகளா? காதல் பதிவுகளா?
மாசானம், அவர்கள் போவதைப் பார்க்கிறான்.
அதன்பின்…? தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையை எடுக்கிறான்.. பிரிக்கிறான்..
அதற்குள்…
உடைந்த கண்ணாடி வளையல்களின் துண்டுகள்!.