பண்ணையார் பொன்னம்பலம் !





அவ்வூரிலேயே அதிக தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு மற்றும் புன்செய் நிலம் கொண்டவர் பண்ணையார் பொன்னம்பலம்தான். நல்ல வருமானம். பொருள் சேர சேர ஆசை பேரசையாக மாறியது. கடவுள் பக்தி கிடையாது.
துன்பப்படுபவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது.
ஒருநாள் அவர் மனைவி புனிதவதி, “”என்னங்க! நீங்க உடம்பு சரியில்லாதபோது பிள்ளையாருக்கு 108 தேங்காய் சதுர் அடிப்பதாக வேண்டிக்கிட்டேன். கோவிலுக்கு தேங்காய்களை அனுப்புங்க. உடச்சிட்டு வரேன்!” என்றாள்.
பண்ணையார், “”நல்ல வேலையைக் கெடுத்தே. என் உடம்பு சரியானது டாக்டர் கொடுத்த மருந்தாலே, பிள்ளையார் என்ன டாக்டரா?” என்று கேலி செய்தார்.
“கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கக்கூடாதா?’ என தன் கணவனின் அறியாமையை நொந்துக் கொண்டு, அவரிடம் மேலும் வாதிடாமல் மவுனமாக சென்று விட்டாள் புனிதவதி.
அந்த ஆண்டு மழையே இல்லாமல் பூமி வரண்டு, தோப்பிலுள்ள மரங்களெல்லாம் வாடி வதங்கிக் காய்க்காமல் உற்பத்தியை பாதித்தது. போதா குறைக்கு திடீரென்று பேய்க் காற்று வீசி மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்தன. இயற்கையின் சீற்றத்தால் எல்லாம் இழந்து பொன்னம்பலம் ஏழை அம்பலமாகிவிட்டார்.
அச்சமயம் அவரின் ஒரே பிள்ளை சந்திரன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான். தன் பெற்றோர் படும் வேதனையைக் கண்டு, “”அப்பா! நான் அமெரிக்காவில் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். இந்தக் கிராமத்தை விட்டு வந்துவிடுங்கள். சென்னையில் முதியோர்களைத் தக்க வசதியோடு பராமரிக்கின்றனர். நல்ல பாதுகாப்பு. அங்கே சேர்த்து விடுகிறேன்!” என்று கூறி, தான் கொண்டு வந்தப் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் புனிதவதி அதிர்ச்சியடைந்தாள். “”கிராம மக்களோடு வாழ்ந்து வளர்ந்துவிட்டோம். அவர்கள் படும் துன்பத்தில் நாங்களும் பங்குக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்கிறோம். அயல்நாட்டில் உழைப்பதைவிட, நம் நாட்டிலேயே உழைத்தால் உனக்கும் நல்லது. நம் தேசத்திற்கும் நல்லது. நீ அமெரிக்காவுக்குக் கூப்பிட்டாலும் வர மாட்டோம்!” என்று கோபாவேசமாகப் பேசினாள்.
சந்திரனும், “”நீங்கள் எப்படியாவது போங்கள்!” என்றுக் கூறி அமெரிக்கா திரும்பினான்.
புனிதவதி பொன்னம்பலத்திடம், “”பார்த்தீர்களா உங்கப் பிள்ளையின் போக்கை. சும்மாவா சொன்னாங்க பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லுன்னு. இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிடிவாதப் போக்கு உங்கள் தலையைக் குனியச் செய்துவிட்டது. தெய்வக் குற்றம்தான் காரணம். அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்றுக் கொல்லும். உடனே 108 தேங்காய்களை உடைக்க ஏற்பாடு செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!” என்றாள்.
பொன்னம்பலம் தன் தவறை உணர்ந்து, “”புனிதவதி! உன் திட நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நான் இனி மாறிய பொன்னம்பலம். வா கோவிலுக்குச் சென்று உன் வேண்டுதலை நிறைவேற்றலாம்!” என்றுச் சொல்லி நேர்த்திக் கடனைப் பக்தியோடு செய்து முடித்தான்.
என்ன ஆச்சர்யம்! ஒரே வாரத்தில் வானம் இருண்டு மழை கொட்டோ கொட்டென்றுப் பெய்து கிராமத்திலுள்ள கிணறு, குட்டை, குளமெல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரே மாதத்தில் எங்கும் பசுமை புரட்சி. மரங்களெல்லாம் நிமிர்ந்து நின்றன. சில மாதங்களிலேயே மரங்கள் பூத்து காய்கள் குவிந்தன. வாழைகள் இலைகள் தள்ளின. நல்ல வியாபாரம். தனக்கு வந்த லாபத்தை கிராம முன்னேற்றத்திற்கே வாரிவழங்கினார் பொன்னம்பலம். முற்றிலும் மாறிய பண்ணையாரின் செயல் மக்களைப் பிரமிக்கச் செய்தது. இன்பமும், துன்பமும் மாறிமாறி வருவது இயல்பு.
திடீரென ஒருநாள் பொன்னம்பலத்தின் மகன் சந்திரன் வந்தான், அவன் பெற்றோர் வியப்படைந்தனர்.
“”என்னப்பா! உடம்பு சரியில்லையா? ஏன் முகம் வாட்டமாய் இருக்கிறது?” எனப் படபடப்போடு வினவினர்.
“”அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள். பணத்திமிரில் இறுமாப்போடு தங்களிடம் பேசிவிட்டேன். அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியினால் என் கம்பெனி மூடப்பட்டு வேலை இழந்தேன். நஷ்ட ஈடாக பெரும் தொகை அளித்துள்ளனர். இதைத் தங்கள் கிராம விவசாய வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளுங்கள்!” எனச் சொல்லி கண்ணீர் விட்டான். “”சந்திரா! ஆண்டவன் அருளினால் எங்கள் துன்பங்கள் நீங்கியது. ஆகவே, நீயும் எங்களோடு கிராம முன்னேற்றத்திற்கு பாடுபடு. நீ கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு நல்ல கல்வி கூடம் ஏற்படுத்தி, நம் கிராம மக்களைச் சிறந்த படிப்பாளிகளாக்க முயற்சி செய். அதுவே நீ எங்களுக்குச் செய்த உதவியாக நினைக்கிறோம்!” என்றார் பொன்னம்பலம். இப்போது அக்கிராம முன்னேற்றத்திற்கு அடையாளமாக, “பொன்னம்பல கல்விகூடம்’ தலை நிமிர்ந்து நிற்பதென்றால் மிகையாகாது
– நவம்பர் 19,2010