பட்ணம்




(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்ணத்திற்கும் கிராமத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால், கிராமத்தில் நம்பிக்கை வளரும்; பட்ணத்தில் அவநம்பிக்கை வளரும் அவநம்பிக்கை என்றால் எல்லாவற்றிலும்தான். கடவுளிடத்தில் மட்டும் என்றல்ல; கண்ணுக்குத் தெரிகிற பொருளுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பொருள்தான் காரணம் என்ற தத்துவத்தில் மட்டும் அல்ல; மனிதனிடத்திலும் அவ நம்பிக்கைதான். மனிதர்கள் பசுத்தோல் போர்த்த சுயநல வேங்கைகளாகவோ, ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்குகளாகவோ காட்சி அளிக்கிறார்கள். இதை எல்லாம் பற்றி ஏன் நினைக்க வேண்டி இருக்கிறதென்றால்…
நேற்று பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். பஸ் ஒரு அலதியான உலகம். ஐயனார் கோயிலில் அமர்ந் திருக்கும் மண் பொம்மைக் குதிரைகளைப்போல் அசைவு ஆட்டமின்றி அதில் சில பெரிய மனிதர்கள் உட்கார்ந் திருந்தார்கள். நவராத்திரி கொலு பொம்மைகளைப்போல் சில நவநாகரிக ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். குளத்துத் தண்ணீரில் நிலவு விழுந்து மின்னுவது போலும்.அஜந்தாக் குகை அழகிகள் வழி தவறி வந்து விட்டதுபோலும் சில சினிமா எக்ஸ்டிராக்கள் பஸ்ஸை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். சில தொழிலாளி கள் மட்டும் கூலியைப்பற்றி உரக்கப் பேசிக் கொண் டிருந்தார்கள். ஆனால்,பொதுவாக ஒரு சிறப்பு உண்டு. யாராவது வாயைத் திறந்தால் யாரையாவது விழுங்கு வதற்காகத்தான் இருக்கும் என்ற திகில் பஸ் முழுவதும் நிறைந்திருந்தது. போதாக்குறைக்கு பஸ் வாசலில் ஜேப்படி மாணிக்கமும், சக்கரத்தடியில் தென் திசைக் கோனும் ஒளிந்துகொண்டிருந்தார்கள்.
இவ்வளவு சம்பிரமங்களுக்கிடையில்தான் நான் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தொழிலாளி உட்கார்ந்திருந்தான். அங்கு வேறு பிரயாணிகள் இல்லை.
பஸ் கொஞ்சதூரம் போயிற்று. தெருவில், ஏதோ ஒரு பள்ளத்தில், பஸ் பதிந்து, டக்கென்ற சத்தத்துடன் நிமிர்ந்து எழுந்தது. வண்டியிலிருந்த பேர்களை எல்லாம் அது ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எனக்கு முன்பு உட்கார்ந்திருந்த ஆளின் கையிலிருந்து ஏதோ சிதறி விழுந்தது. கண்ணுக்கு எதிர்த்தாப்போல் கீழே ஒரு அணா கிடந்தது.
நான் பார்த்தேன். அந்த ஆளும் பார்த்தான். குனிந்து பளிச்சென்று அதை அவன் எடுக்கவேண்டி யதுதானே ! திருடனைப்போல் அங்கும் இங்கும் பார்த் தான். கண்ணை மேலும் கீழும் உருட்டினான். காசென் னவோ அவனுடையதுதான். விழுந்ததை நானேதான் பார்த்தேனே ! காசைப் பளிச்சென்று எடுப்பதற்கு என்ன தடை ? காற்றைப்போலும் தண்ணீரைப்போலும் காசும் பொது உடைமைதானே என்ற சந்தேகமோ ?
பாத்திரத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும்போது காற்றும் தண்ணீரும் பாத்திரத்தின் உருவத்தைத் தானே அடைகின் றன ? அந்தக் காரணத்தினால்தானே அவை பாத்திரத்திற்குச் சொந்தமாகின்றன? அதைப் போலவே, ஒருவர் கையில் இருக்கும் வரை தான் காசு அவருக்குச் சொந்தமோ என்னவோ ! கைநழுவிப் போய்விட்டால் உரிமை கோவிந்தா ஆகிவிடுகிறதோ என்னவோ ! இல்லாவிட்டால் கெட்டுப்போன பணத் எதச் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இனாம் தருகிறேன் என்று சிலர் விளம்பரம் செய்வானேன்? எனவே, தன் காசைக்கூட எடுக்கத் திருட்டு வேஷத்துடன் முயன்றது எனக்கு ஓரளவு விளங்காமல் போகவில்லை.
இப்படியே இரண்டொரு நிமிஷம் பார்த்துவிட்டு, யாரும் கவனிக்கவில்லை என்ற நினைப்புடன் காலால் காசைத் தன்னருகில் முதல் கட்டமாக இழுத்துக் கொண்டான். அடுத்த கட்டமாக அதைக் குனிந்து எடுத்துக்கொண்டான்.
மறுபடியும் பஸ்ஸில் தேடினான், தேடினான், அப்படி மௌனமாகத் தேடினான். அவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று.
‘என்னப்பா தேடுகிறாய்?’
அவன் பதில் சொல்லவில்லை. காதில் விழவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
‘என்னப்பா தேடுகிறாய்?’ என்றேன் இரண்டாம் முறையாக.
அப்பொழுதும் பதில் இல்லை. ஒருவேளை செவிடாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. லேசாக அவன் தோள்பட்டையைத் தொட்டுவிட்டு, என் வலது கைவிரல்களை மடக்கிக்கொண்டு ‘என்ன தேடுகிறாய்?’ என்று பரத நாட்டிய முத்திரையைக் காட்டிக் கேட் டேன். அவன் மிரள மிரள விழித்தானே ஒழிய, வாய் திறக்கவில்லை. கண்ணாலே திருட்டுத்தனமாகத் தேட ஆரம்பித்தான்.
அதற்குள் பஸ் கண்டக்டர் யாருக்கோ பாக்கிச் சில்லறை கொடுப்பதற்காக அந்தப் பக்கம் வந்தார். இந்த ஆள் முகத்தைப் பார்த்தவுடனேயே, ‘என்னய்யா தேடுகிறாய்?’ என்றார்.
எனக்குத்தான் பதில் சொல்லவில்லை என்றால், அவருக்கும் சொல்லவில்லை. சில்லறையை எண்ணி, பஸ் பிரயாணியிடம் கொடுத்துவிட்டுத் திரும்புகாலில் மறுமுறை ஒருதரம் அதே கேள்வியைக் கேட்டார். அப் பொழுதும் பதில் கிடைக்கவில்லை. அதற்குமேலும் அங்கு நிற்பதற்குப் பஸ் கண்டக்டருக்கு நேரமில்லை. செவிடு போலிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டார்…
எனக்கு ஒரு புதுச் சந்தேகம் முளைத்தது. ஒருக்கால் ஆள் ஊமையோ என்னவோ! எத்தனை தரம், யார் கேட்ட போதிலும், இவரிடமிருந்து பதில் எப்படிக் கிடைக்கப் போகிறது?- என்று முடிவு செய்தேன். அடுத்தபடியாகப் பரத நாட்டிய முத்திரையோடு, பே, பே, பே’ என்ற ஊமைகளின் பாஷையையும் கூட்டிக் கொண்டு ஜாடை செய்து பார்த்தேன். ஆள் மசிய வில்லை. தன்னைக் கொள்ளை அடிக்க நான் முயல்வது. போன்ற திகிலுடன் குளத்தில் தண்ணீர்ப் பாம்பு மறை வதுபோல் தன் இடத்தை விட்டு இறங்கிக் குனிந்து தேடிப் பார்த்தான்.
நானும் விடாமல் கவனித்தேன். இரண்டொரு நிமிஷத்திற்குள் மூலையில் உருண்டு கிடந்த ஒரு அரை ரூபாயை எடுத்துக்கொண்டு, எழுந்து என் பக்கம் திரும் பினான். எனக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.
‘நான் செவிடும் இல்லை, ஊமையும் இல்லை’ என்றான் நிதானமாக.
‘பின்னே?’
‘இது விழுந்திருந்த இடம் தெரியவில்லை’ என்று அரை ரூபாயை எனக்குக் காட்டினான்.
‘பதில் சொன்னால் நான் எடுத்துக்கொண்டு விடுவேன் என்று பார்த்தாயா?’
‘அப்படி இல்லை. தோலிருக்கச் சுளை விழுங்கி என்பாங்களே-‘
‘என்னை அந்த மாதிரி-‘
‘நீங்க ஊருக்குப் புதிசு போலிருக்கிறது! இதுக்குப் பேரு பட்ணமுங்க’ என்று சொல்லிக்கொண்டே, பஸ் நின்ற இடத்தில் இறங்கிப் போய்விட்டான்.
இதுவா பட்ணம்?
– பிச்சமூர்த்தியின் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார் பிரசுரம், சென்னை.