பங்கம்




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலில் படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயில் சயனித்தாள்.

அவர் உத்தரதேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினொரு மணிக்குத்தான் உத்தரதேவி யாழப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய ‘கலை’. வீட்டில் விரதம். சாப்பாடும் கிட்டவில்லை. பிரயாண அசதியுடன், வெறும் வயிறாக, கால்களைக் கட்டிலின் சட்டங்களில் எறிந்து எறிந்து ‘அலட்டி க்கொண்டு படுத்திருந்த சிவக்கொழுந்து கண்களை விழித்தார்.
தாவணிப் போர்வைக்குள் சரக் கட்டையாகச் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.
‘எணேய்!’
‘…ம்…’ மறுபக்கம் புரண்டாள்
‘என்னணை புது நாணயமா நித்திரை கொள்ளுறாய். விடிஞ்சல்லை போச்சு.’
திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடிப்புறமிருக்கும் நாவல் மரத்தில் ‘அடை’யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத்திலேயே துயிலெழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந்திருக்க இயலவில்லை. தேகமெல்லாம் பச்சைப் புண்ணாக நோகும் அலுப்பு. அவருடைய குரல் காதில் விழுந்த பின்னர், ‘சீ, மூதேவி வாலாயம் கூடாது’ என்ற எண்ணம் உதித்தது.
“ஓமப்பா நித்திரை சரியா அமத்திப்போட்டுது அமத்திப் போட்டுது” என்று சமாதானம் கூறியவாறு எழுந்து, சேலையைச் சரிசெய்தாள். அவர் தலைமாட்டில் கிடந்த லோட்டா தண்ணீரை மிடறு முறிக்கும் தாளத்துடன் குடித்துவிட்டு, மறு பக்கம் புரண்டு கண்களை மூடிக் கொண்டார்.
புனிதத்திற்குத் தலையைச் சுற்றியது. சுமையேற்றப்பட்ட வாக்கில் தலைப்பாரம். செமியாக் குணக்கோலத்தில் வயிற்றைக் குமட்டிக்கொண்டும் வருப் உணர்வு இத்தனைக்கும் வெள்ளியும் சனியும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு. கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத்தை அடக்கி, எலுமிச்சம் மரத்தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களால் புழுதியை எத்தி மூடினாள். எலுமிச்சம் பழமொன்றைப்பறித்து மோந்தாள். நிலை சற்றே சீரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால் கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப்பணியில் ஈடுடாள்.
பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பில் தோய்த்து வாயில் திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில் நின்று வீட்டறைப்பக்கம் பார்த்தாள். திருவாளர் எழுந்து வரும் ‘சிலமனை’க் காணவில்லை. உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது… தேங்காய்ப்பாதியைத் துருவி எடுத்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுது தான், கிணற்றடியில் அவஸ்தையுடன் ஓங்காளிக்கும் சத்தம் கேட்டது. விரல் நுனிகளிற் தன் உடல் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட்டிப்பார்த்தாள். சிவக்கொழுந்து விரல்களைத் தொண்டைக்குள் திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
கெதியாக முட்டைக் கோப்பியைக் கலந்தெடுத்தாள்.
‘என்னணை, முட்டைக் கோப்பியே? இண்டைக்கு ஏதோ விரதம் கிரதமாக்குமெண்டு நினைச்சன்.’
‘உங்களுக்கு வருஷத்திலை முன்னூத்தறுபத்தைஞ்சு நாளும் பச்சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டாசிச் சனி விரதம்’
‘விரதத்தோடை ரயில் பயணக்காரனையும் பட்டினி போட்டுட்டாய்’
‘உன்னாணை மத்தவங்களில் குத்தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங்களைப்போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விசளம் எழுத மூண்டுசேம் கிடைக்கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டுகொள்ளுவம்..’
கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஒரு மிடறு உறிஞ்சிக் குடித்தவாறே, ‘எங்கை, கொம்மாவைக் காணம்?’ என்றார்.
‘எப்பவும் நெக்கு ஊழிவம் செய்யுறதெண்டு அவவுக்குத் தலையெழுத்தே? தனிய இருக்கிறதெண்டு துணைக்கு இருந்தவை. வீரபத்திரரைக் கண்டதும், ராத்திரியே அவ தம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா.’
‘அதுக்கு, நடுச்சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது.’
கோப்பியைக் குடிக்கிறார்.
‘மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதையாக்கும்.’ வார்த்தைகளை அரையும் குறையுமாக விழுங்கிக் கொண்டே குசினிக்குள் நுழைந்தாள்.
நேற்றுத்தான் இளங்கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த தரையை, விளக்கு மாற்றினால் கூட்டி, அடுக்களையை ஒதுக்கினாள். ‘துருவலை’ க் குற்றியை எடுத்துப் போட்டு அதன் முன்னால் பெரிய பருத்தித் துறைப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்ணீர் தெளித்துக்கொண்டே, ‘பேப்பர் படிச்சது போதும். வாருங்கோவன்’ என்று அழைத்தாள்.
கைகளைக் கழுவிக்கொண்டு, சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந்தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்த்திவிட்டு, முட்டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள்.
அவர் சாப்பிடத் தொடங்கினார்.
திருவாளருக்கும் திருவாட்டி யாருக்குமிடையில், மௌனச் சுவர் எழுந்து நின்றது.
‘சோக்கா இருக்கப்பா. இப்பதான் வீட்டுச்சாப்பாடு. சிங்களச் சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு.’
நிமிர்ந்து பார்த்தபொழுது, அவள் மாட்டுக் கொட்டில் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது தெரிந்தது.
‘என்னெணை நீட்டுக் கயித்தினை யோசிக்கிறாய்?’
வெப்பமான நெடுமூச்சு.
‘இல்லை,பத்து மாசமாறையில் இருந்து இருந்து யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வரேல்லையாம்.’
‘கோச்சி வந்ததுதான் எனக்குத் தான் லீவு கிடைக்கல்லை.’
‘நான் காத்தைக் குடிச்சுத் கிடப்பன் எண்டு நினைச்சியளாக்கும்.’
‘எனக்கிருக்கிற கடன் தனி உனக்குத் தெரியுமே?’
‘ஆருக்காகப் பட்டனியள். அந்த மாத்தறைச் சிங்களத்திக்காகத்தானே?’
‘பேக்கதையள் கதைச்சுக் கோவத்தைக் கிளப்பாதை.’
‘கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக்காட்டுறதே? உங்களிட்டை வந்த தம்பையா அண்ணெட்டை என்ன சொன்னனியள்?”
‘அவன் ஒரு கோள்மூட்டி’
‘பத்து வருஷமா அவள் என்னத்தைப்பெத்தாள்? அந்த மலடியோடை நான் வாழமாட்டன். காசும் அனுப்பமாட்டன், எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ. இல்லையோ?’
‘சும்மா ஒரு கோவத்திலை சொன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுறாள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலிருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே?’
‘கங்காணியெண்டால், ஆஸ்பத்திரியிலை கங்காணி வேலையைப் பார்க்க வேணும். சிங்களக் கங்காணியளை மேய்ச்சால் விடுவாங்களே? ஒரு சிங்களத் காறையைக் கிளப்பி வெச்சிருந்தியாம். எப்படிப் பாடு?’
‘அவளாலை – அவள் சொன்ன சாட்சியாலை தான் – என்ர உத்தியோகம் திரும்பிக் கிடைச்சுது. எனக்கு ஒண்டும் தெரியாது.’
‘அதுகிடக்க, அவளுக்கு – என்ர சக்களத்திக்கு எண்டாலும் – புள்ளைப் பூச்சி வெச்சிருக்கே?’
அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் திருவாளர் சிவக்கொழுந்துவைக் குடைந்தெடுத்தது. நிதானம் தடம் புரண்டது.
‘மலட்டுப்…மலட்டுக் கதையள் தானே வரும்.’
‘இஞ்ச! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீ மேய்க்கிற சிங்களத்தியளிட்டைக் காட்டு. ஆர் மலடி?…நான் வேறையொருவனைக் கட்டியிருந்தால், அதுக்கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப்பன்.’
தேகத்தை உலுப்பி ஆட் கொண்ட கோபாவேசத்துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதையில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சிதறிக் கிடந்தன. காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் கொறிக்கின்றன.
‘அதுதானே, உந்த வேசையின்ர முகத்திலை முழிக்காமல் அங்க நிற்கிறனான்.’
ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக்கிழித்து, ஒருசுருட்டுச் சுற்றி எடுத்தார். அதைப் பற்ற வைத்தார்.
புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது.
அந்தச் சுருட்டைப் புகைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செலவழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட்டைத் தேடிப் பிடித்தார். வெற்றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணாம்பு. ஒருவகையாகச் சமாளித்து. ஒரு வாய்க்குத் தாம்பூலம் தரித்தார். சேட்டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்களில் எறிந்தார். வெளியே புறப்படும் ஆயத்தம்.
அவரை வழி மறிப்பதைப் போல, எதிரில் வந்து நின்றாள் புனிதம். ஆத்திரம்-சினம் ஆகியவற்றின் சுவடுகள் தூர்ந்திருந் முகமும் முகமும் நேராகச் தன் சந்தித்தன. புதிதாகக் காணப்படும் அவளுடைய கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத்தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் ‘செல்லும்’ குமரி. அவளுடைய கழுத்தில் சிவக்கொழுந்து தாலி கட்டிப் பத்து ஆண்டுகளாயினும், சென்ற வைகாசியிலே தான் இருபத்தியெட்டு வயது பூர்த்தியாயிற்று. தனக் கட்டுகள் சதை கூட்டிக் கொழுத்த வாக்கில் நிமிர்ந்து, சௌந்தர்யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய வாக்கில், முகத்தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வாரத் தொடங்கியிருந்தாள். இந்த ‘உத்தி’ முகத்தை உருண்டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உதட்டை நனைத்து மீண்டது.
‘நீங்கள் ஆள் சுறுக்கர்தான். துலைக்கே புறப்பட்டுட்டியள்?’
பதிலில்லை.
‘இஞ்சாருங்கப்பா. ஒருக்காச் சின்னக்கடைப் பக்கம் போயிட்டு வாருங்கோவன்.’
‘சின்னக் கடைக்கே? என்னத்துக்கு?’
‘இண்டைக்கு நாயித்துக்கிழமை யல்லே? கட்டைக் காலன்தானே உங்களுக்குப் பிடிக்கும்?’ சற்று முன்னர் நடந்த சண்டையின் சாயல் எள்ளளவும் இழையாத இதயம் குழைத்துப் பேசி, ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவடைய நாக்கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று.
சால்வையை ஈச்சேரின் சட்டத்தில் எறிந்து, மறுபடியும் குந்தினார்.
‘கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டாணை.’
செம்பில் தண்ணீர் வந்தது. வாயில் குதப்பப்பட்ட வாடல் வெற்றிலை ஒருமாதிரிக் கசந்தது. வாயை நன்றாக அலம்பிக் கொப்பளித்துத் துப்பிவிட்டு, ‘அண்ணாக்காக’த் தண்ணீர் குடித்தார். செம்பிற்குள் பார்வை தட்டுப் பட்டது.
‘இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு.’
‘ஓம். வாடாமல் போட்டு வைச்சனான்.’
‘அப்ப வெத்திலைத் தட்டையும் தா. சுண்ணாம்புக் கறண்டீக்கை கொஞ்சம் தண்ணி விட்டு இழகப் பண்ணு’.
புனிதம் மடித்துக் கொடுக்க, பத்தியமாகத் தாம்பூலம் தரித்தார். நாக்கும் நன்றாகச் சிவந்தது.
‘இஞ்சேருங்கோ, கெதியாப் போனாத்தான் நல்லதாய்க் கிடைக்கும்.’
‘எனக்குத் தெரியாத சின்னக்கடையே? கொஞ்சம் பொறுத்துப் போவம்.’
‘நீங்கள் மாத்தறைக்குப்போன ரெண்டு வருஷத்துக்குள்ளை யாழ்ப்பாணம் தலைகீழா மாறீட்டுது.”
புனிதமும் வெற்றிலை போட்டுக் கொண்டாள்.
‘உனக்கும் நல்லாச் சிவந்திருக்கணை.’
‘இதிலை தெரியும் நான் எப்பிடிப்பட்டவளெண்டு. எப்ட வேலைக்குத் திரும்பிப்போறியள்?’
‘நான் ஒரு கிழமை லீவிலை வந்தனான்’
‘மழைதான் பெய்யப்போகுது’
தன்னுடைய உத்தேசத்தைத் தரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார்.
‘எல்லாத்தையும் மறந்திடுவம். உன்னை என்னோடை கூட்டிட்டுப் போகத்தான் லீவுபோட்டு வந்தனான்.’
‘இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு…ஏன் இப்ப அந்தச் சங்களத்தி கைவிட்டுட்டாளே.’
‘உந்த விண்ணானம் கொட்டுற பொம்புளையளோடை கதைச்சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக்கிறன் எண்டு ஆரோ தட்டுவாணியள் கதை கட்டியிருக்க வேணும்.’
‘பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங்கோவன்’
அந்தச் சமயம், ‘சங்கட’த்தால் சைக்கிளை ஏற்றி, படலையைத் திறந்து கொண்டு, ஒரு வாலிபன் வந்தான். சாக்கினால் உறைபோடப்பட்டிருந்த ஒரு பெரிய போத்தல் ‘கரி’யரில் கட்டப்பட்டிருந்தது, பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தினான். சைக்கிள் ‘கான்டி’லில் தொங்கிய பையைக் கையில் எடுத்தான்.
‘அது மரஞ்சீவுறவன்’.
‘இப்ப இவங்களுக்குக் காசு மெத்தி, ஊர் பிடிபட்டு, கெப்பர் மிஞ்சிப் போச்சு. அவன் சின்னவன் கத்திக்கூடு கட்டி, முட்டிகள், தீட்டுத்தடி எல்லாத்துடனும் உடுப்புப் போட்ட மாதிரித் தான் வருவான். உவன்ர சோக்கைப் பாருங்கோவன்…’ என்று வாய்க்குள் புறுபுறுத்தார்.
சேட்டைக் கழற்றி, கொடுக்குக் கட்டி, கத்திக்கூடு மாட்டி, தளைநாரையும் முட்டியையும் கையில் எடுக்கும்வரை, அவனையே அவதானித்தார் சிவக்கொழுந்து. ஈச்சேரில் படுத்துத் தன்னைக் கவனிக்கும் அவரை இவனும் உற்றுப் பார்த்தான்.
‘என்ன அப்பிடிப் பாக்கிறாய் செல்லத்தம்பி? இவர்தான் எங்கட இவர்.’
‘ஐயாவே?அப்பிடித்தான் நினைச்சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழை தண்ணி?’ என்று சம்பிரதாயமாகக் குசலம் விசாரித்தான். அவர், அவனுடைய நெஞ்சில் சடைத்திருந்த ரோமத்தையும், உருண்டு திரண்டு கிடந்த தேகக் கட்டையும், விடுப்புப் பார்த்தார். அப்புறம் தான், ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்கு வந்தது.
‘நீ சின்னவனுக்குச் சொந்தமே?’
‘ச்சா… நாங்கள் கொட்டடிப் பகுதி.’ உரையாடலை நீட்டாமல், ‘அப்ப வாறன் ஐயா, இண்டைக்குப் பாளை தட்டுமுறை’ என்று கிணற்றடிப் பக்கம் போக அவசரம் காட்டினான்.
‘இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக்கிறாய்?’
‘அஞ்சு’
‘எதெது?’
‘கிணற்றடி கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும், வளுக்கலும், கோடிச் சிவப்பி…’ சிரத்தையின்றிப் பாடம் ஒப்புவிக்கும் வாக்கில் சொன்னான்.
‘நாவலடிச் சிவப்பி நல்லா ஊறுமெண்டு சின்னவன் சொல்லுவான்.’
‘அது பாளை மாறிப் போச்சுது, ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே?’ என்று ‘பொடி’ வைத்துப் பேச்சை முறித்துக்கொண்டு, கிணற்றடிக் கறுப்பியை நோக்கி நடந்தான்.
‘இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் குடுக்கல்லை?’ என்று மனைவியை விசாரித்தார்.
‘சீவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத்துக்கு எழுவது ரூவா மேனி மூன்னூறம்பது ரூவா தந்தவன். அந்தக் காசிலை வாங்கிவிட்ட பசுவாலும், கோழியளாலும் தான் பிச்சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்திச் சீவிக்கிறன்.’
‘இவன் ஐயம்புள்ளை ஆக்களின்ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர்.’
‘ஆனாலுமப்பா, சனியனுக்கெறு அகராதி பேசுறவன். அண்டைக்கு முத்தத்து மரத்திலை பழுத்திருக்கிற குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, ‘தேங்காய் ஆயிறவனைப் பாருங்கோ. அவனும் புழைக்கவேணும்’ எண்டு சொல்லீற்றுப் பேக்னான்.’
‘இப்ப இந்தக் கீழ்சாதியளுக்குத்தானே நடப்பு. என்னோடை அவன் அருளானந்தம் – அவன் தான் கொய்யாத்தோட்டத்து வேலை நளவன் – மாத்தறைக்கு மாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இலங்கை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக்குப் புழுத்திப் பார்த்தனே!’
‘என்னப்பா, கதையிலை குந்தீட்டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப்பிறது?’
‘ஓமப்பா, வெய்யிலும் ஏறீட்டுது. நான், அவன் ராசான்ரை கடையிலை ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு, ஓடியாறன். நீ உலையை வெய்யன்.’
சிவக்கொழுந்து புறப்படும் பொழுது, கிணற்றடி மரத்தில் பாளை தட்டும் சத்தம் கேட்டது.
சின்னக்கடையிலிருந்து சிவக்கொழுந்து திரும்புவதற்கிடையில் அவரைத் தேடி சரவணமுத்துவிம் திருநாவிக்கரசும் வந்திருந்தார்கள் அவர் கடைக்குச் சென்ற சமாச்சாரத்தை புனிதம் தெரிவித்தாள். அவர்களிருவரும், படலைக்கு முன்னால், வீதி த்ருத் குவித்திருந்த கல்லுக்குப் பக்கத்தல் குந்தியிருந்தார்கள். அப்பொழுதுதான் செல்லத்தம்பியும் சீவலை முடித்துக் கொண்டு புறப்பட்டான்,
அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஏதோ வாக்குவாதம் நடந்தது.
திருமதி சிவக்கொழுந்து உற்றுக் கேட்டாள்.
‘இன்சபார் சரவணமுத்து. உன்ர பெருமாகோயில் சண்டித் தனத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக்காட்டு. நான் கொட்டடியான். இனி மேல் என்னட்டைச் சேட்டை விட்டால், பாளைக்கத்தியாலை உன்ர குடலை எடுத்துப் போட்டுத் தான் வழக்குப் பேசுவன்.’ செல்லத்தம்பியின குரல் உரத்துக் கேட்டது.
புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற்கிடையில் அவன் சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.
அந்நேரம் சிவக்கொழுந்து அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் அவருடைய காதைக் கடித்து ஏதோ சொன்னார்கள்.
‘அப்பிடியே சங்கதி. நான் கறியைக் குடுத்திட்டு வாறன்’ என்று படலையைத் திறந்து உள்ளுக்கு வந்தார். புனிதம் ஒரு தேங்காயைக் கொடுவாக் கத்தியில் பிறத்தியால் அடித்துக் கொண்டிருந்தாள்.
சிவக்கொழுந்துவின் முகம் கறுத்து, வியர்த்துக் காட்சி தந்தது.
கறி உமலை, அவளுடைய கால்களில் பட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார். பேசாமல் திரும்பினார்.
‘துலைக்கே?’
‘கறியைக் காச்சு, வாறென்’
‘வெய்யிலுக்கை போட்டு வந்து என்ன அவசரம்? கால் ஆறிப் போகலாமே?’
‘கண்கெட்டுப்போவாளே, படலைக்கை சரவணமுத்தனும் திருநாவுக்கரசும் நிக்கிறது தெரியல்லையே. அவங்களோடை ஒரு அலுவல்’
‘அப்ப இண்டைக்குச் சாப்பாட்டுக்கும் ஆளில்லையாக்கும். அந்தக் குடிகாரங்களோடை சேந்து குடிகுடியெண்டு குடிச்சுப்போட்டு ராவைக்குத்தான் வாறதாக்கும். இங்கையல்லே உங்களுக்கு முட்டியிலை கள்ளு வாங்கி வெச்சிருக்கிறன்’
‘ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக்கதை கதைக்காதை. நீ கெதியாக் கறியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்’
படலையை அடித்துச் சாத்திவிட்டு, சிவக்கொழுந்து வெளியேறினார்.
புனிதம் எப்பொழுதும் சமையலில் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தியில், இறைச்சியை அறுத்தாள். ‘வார்’களைக் குறுணியாக்க முடியவில்லை. வெடுக்கு மணத்தில் அருவருப்பு. பெரிய துண்டுகளாகப் போட்டாள்.
ஆமைக் கொழுப்பையே உருக்கி, கடுகு-சீரகம்-கறிவேப்பிலை-அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டுத் தாழித்து, இறைச்சியைப் போட்டு வேகவைத்தாள். உப்பும் மிளகாய்த்தூளும் போட்ட பின்னர், தேங்காயின் முதற்பாலையும் விட்டுக் கொதிக்கவைத்த பொழுது, பெரிய வேலையொன்றைச் செய்து முடித்த. திருப்தி ஏற்பட்டது. இதற்கிடையிலேயே இறாலில் சொதியும் கூட்டி வைத்தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்றவேண்டியதுதான். மரக்கறியில்லை.
குழம்பை இறக்கித் திருகாணியில் வைத்து, தேசிக்காய்ப் புளியை ஊற்றிப் பிரட்டிச் சட்டியால் மூடிவிட்டு, சொதிச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள்.
அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழைந்தார். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகு-மட்டை முதலியன விரித்த படியே கிடந்தன. இன்னமும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்தில் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனைமட்டையைத் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்தில் குந்தினார். ‘ஆளுக்கு நல்ல ஏத்தம்.’
‘இதிலை கொஞ்சம் இறைச்சி போட்டி’ என்று சிரட்டையை நீட்டினார்.
‘நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டுப் போவாங்களோடை போனால், இப்பிடித்தான் ஆட்டத்திலை திரும்புவியளெண்டு…’ அகப்பையால் கோலி இறைச்சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள்.
‘டீயே, வாராத் தெரிஞ்சு போடு.’
‘சரி பிடியுங்கோ’ என்று சிரட்டையைக் கொடுத்தாள்.
தோலை முன்பற்களால் உரித்துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பினார். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ்சம் கஷ்டம்.
‘நான்தானே சொன்னனான் ங்கை கள்ளு வேண்டி வெச்சிருக்கெண்டு’
இறைச்சித் துண்டு ஒன்றைக் கொடுப்புப் பற்களுக்கிடையில் சப்பிக்கொண்டே, ‘நான் அந்த நளவன் சீவிற கள்ளைக் குடிப்ப னெண்டு நினைச்சியே’ என்றார்.
ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது.
‘இவளுக்கிப்ப சோகை புடிச்சுப்போச்சு. உப்புப் புளிக் கணக் கொண்டும் தெரியுதில்லை.’
மடிக்குள் மறைத்திருந்த போத்தலை உருவி வெளியே எடுத்தார். அரைப்போத்தலில், அரைவாசிக்குச் சாராயம் இருந்தது. கிளாஸ் கூடத் தேடாமல், போத்தல் கழுத்தை வாயில் வைத்து ஒரே மடக்காகக் குடித்தார். அஷ்டகோணமாகிப் பிளந்த இதழ்களினால் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் ‘சாப்பதே’ விழுங்கி, ஒரு முறை இருமி, அவஸ்தையைத் தணித்தார்.
‘அதுதானே பாத்தனான். கறுப்பன் கையோடை இருக்கேக் கிள்ளை ஏன் கள்ளை?’
‘நானும் பாக்கிறன், வேசைக்கு நாக்கு நீண்டு போச்சு. இப்பவே ரெண்டிலை ஒண்டு தெரிய வேணும்.”
‘என்னத்தை?’
‘நீ என்னோடை மாத்தறைக்கு வாறியா, இல்லையா?’
‘உன்னாணை அப்பா புண்ணியம் கிடைக்கும். போய் முழுகிட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்.’
குந்திலிருந்து எழுந்தார். அவளு டைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்தை வைத்துக்கொண்டு, ‘ராவிலை’ கள்ளப் புருஷனோடை தான் படுக்கிறது. இப்ப எனக்குப் பதில்வேணும்.’
சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக்கும், ‘பக்’கென்று புனிதத்தின் மூக்குத் துவாரங்களில் ஏறின. அருவருப்பு உணர்வு. வயிற்றைக்குமட்டியது.
அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது. அவளுக்குத் தலையைச் சுற்றியது.
குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடிவந்து, பொன்னுருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்துவளர்ந்திருந்த முள்முருக்கம் மரத்தில் கைகளைத் தாக்குக் கொடுத்துக் குனிந்தாள்.
‘வூஓக்…வூஓக்…’ வாந்தியெடுத்தாள்.
‘என்னடி மாய்மாலம் கொட்டுறாய்… என்னடி உனக்குச் சத்தியும் வருத்தமும்; சொல்லன்டீ; நீ என்னோடை வாறியா. இல்லையா?’
களைப்புடன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்தாள்.
‘என்னடி நான் கேக்கிறன், உன்ர பாட்டுக்கு இருக்கிறாய்?’
‘நீ கேக்கிற கேள்விக்கு மறுமொழியும் தேள்வையே? இந்த வீடு வாசலை மாடு கண்டை விட்டுட்டு, இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக் கொண்டு, கூப்பிட்ட இடத்துக்கு இவருக்குப் பின்னாலை திரியவேணும்… நான் செத்தாலும் இந்தப் படலையைத் தாண்டி உன்னோடை வர மாட்டன்.’
‘சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் எழுதினதும், சொன்னதும்… எல்லாம் சரிதான்.’
‘அந்தக் கோள்காவி நாரதர்கள் என்ன சொன்னவை? இனி மேல் அவங்கள் இந்த வீட்டுப் படலைக்கு வரட்டும்.’
‘இப்ப சண்டித்தனமும் அல்லோ காட்டுகிறாள்’. ஆவேசத்துடன் கையிலிருந்த இறைச்சிச் சிரட்டையை அவள் மீது எறிந்தார். குறி தவறாது அது சரியாக அவள் நெற்றியில்பட்டது. இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
‘ஐயோ, இந்தப் பாழ்பட்டு போவான் – குறுக்காலை தெறிப்பான் என்னைக் கொல்லுறானே’ என்று கூவித் தணிந்தாள்.
அமைதி.
‘கடைசியாச் சொல்லுறன், கேட்டுக் கொள்ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச்சுத் தந்ததில்லை சீவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்.’
‘என்னடி சொல்லுறாய்’ என்று கேட்டவண்ணம், துருவலைப் பல கையை ஓங்கிக்கொண்டுவந்தார்.
‘ஏன் நிக்கிறீர்? அடியுமன். மல்டன்களின்ர சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?’
‘நான் மலடன் எண்டால், நீ மலடிதானே?’
‘நீதான் மலடன்…நான் மலடியல்ல…’
இந்நேரம் படலையைப் பிடுங்குவது போலத் திறந்துகொண்டு அவசர அவசரமாகத் திருநாவுக்கரசு ஓடிவந்தான்.
‘சரவணமுத்துவை முச்சந்தியிலை வெச்சு நளவன் செல்லத்தம்பி அடிச்சுப் போட்டான்’ என்று முற்றத்தில் நின்று கத்தினான்.
‘இண்டைக்கு ரெண்டிலைஒண்டு முதலிலை அவனை முடிச்சுப்போட்டுத்தான். இவளின்ரை கணக்கைத் தீர்க்க வேணும்’. என்று, காடுவாக்கத்தியை எடுக்கக் குசினிப் பக்கம் பாய்ந்தார். நிதானமற்ற கால்களுடன், குசினிப்படியில் தடக்குப்பட்டு, தடாலென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோரமாக வடிந்து கொண்டிருந்தது.
‘வடுவா! நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக்கொண்டாச்சும் போயிடு. ஆனால் ஒண்டு. இண்டையிலையிருந்து நீயோ சரவணமுத்துவோ என்ர வீட்டுப் படலை துறந்தால் விளக்கு மாத்தாலை தான் அடிப்பன்’ என்று ரௌத்திர காளி போல புனிதம் கூச்சலிட்டாள்.
– தேனருவி 1962.10