பகவான் கேட்டு அணிந்த ஆடை!
மதுரா நகர மன்னரின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர் திரிபுரதாசர். அவர் «க்ஷத்ராடனம் செய்ய விரும்பியதால், மன்னரும் முறைப்படி மரியாதை செய்து, அவரை வழியனுப்பி வைத்தார்.
மதுராவில் உள்ள தனது சொத்துகளை ஏழை எளியோருக்கு தானம் செய்து விட்டு, பிருந்தாவனத்தை அடைந்த திரிபுரதாசர் அங்கேயே தனது ஆயுளைக் கழிக்க விரும்பினார். தினந்தோறும் இறைவன் புகழ் பாடிப் பிச்சை எடுத்து, அதை பாகவதர்களுக்கும் அளித்துத் தாமும் உண்பார். நாம சங்கீர்த்தனம் செய்வதையே வாழ்க்கை லட்சிய மாகக் கொண்டிருந்தார்.
ஒரு ஜன்மாஷ்டமி உற்சவத்தின் போது, பக்தர்கள் இறைவனுக்கு புதுப் பட்டாடை அணிவித்ததைப் பார்த்த திரிபுரதாசர், தாமும் இறைவனுக்கு பட்டாடை சமர்ப்பிக்க விரும்பினார். இந்த ஆசையைத் தன் மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் மனைவி, ‘‘உஞ்சவிருத்தி எடுத்து உண்ணும் நம்மால் பட்டாடை வாங்க இயலுமா? அவருக்கு என்ன குறை… அவருக்குத்தான் நிறைய பட்டாடைகள் வந்து குவிகிறதே!’’ என்றாள்.
‘‘அவருக்கு எந்த ஒரு குறையுமில்லை. எனக்குத் தான் அப்படி ஓர் ஆசை!’’ என்று சொல்லியவர், வீட்டிலிருந்த ஒரு பித்தளைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் புறப்பட்டார். அதை விற்று விட்டு அந்தப் பணத்தில் நூலாடை ஒன்றை வாங்கிக் கொண்டு கண்ணபிரான் ஆலயத்துக்குள் நுழைந்தார். கோயிலில் சந்தியா கால தீபாராதனையின்போது, பக்தர் கூட்டம் கண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது. திரிபுரதாசர், அர்ச்சகரிடம் ஆடையைக் கொடுத்து அதை எம்பெருமான் திரு மேனியில் சாத்தி, கற்பூர ஆரத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஆடையை வாங்கிய அர்ச்சகர், அவரை ஒரு முறை அலட்சியமாகப் பார்த்து விட்டு, ‘‘பெரிய செல்வந்தர்கள் தரும் விலை உயர்ந்த பட்டாடைகளே அணிவிக்க முடியாமல் ஆலயத்தில் குவிந்திருக்கின்றன. இதைச் சமர்ப்பிக்கவா ஓடோடி வந்தீர்? இந்தத் துணியை எடுத்துச் செல்லுங்கள்!’’ என்றார் சத்தமாக. உடனே திரிபுரதாசர், ‘‘ஐயா! இந்த ஏழையின் ஆடையை ஒரு முறையேனும் இறைவன் திருமேனியில் சாத்த வேண்டும்!’’ என்று நயமாகச் சொல்லி, அதை அர்ச்சகரிடமே கொடுத்துவிட்டு கோயிலை வலம் வரச் சென்றார்.
அர்ச்சகர் ஏளனத்துடன் அந்தத் துணியைக் கீழே விரித்து, அதன் மேல் கால்களை நீட்டி அமர்ந்து விட்டார். இரவில் திருமஞ்சனம் முடிந்து பூஜைகள் ஆரம்பமானதும் மூலமூர்த்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அர்ச்சகர்கள் துப்பட்டாக்களையும், பீதாம்பரங்களையும் கொணர்ந்து போர்த்தினர். எனினும் நடுக்கம் குறைய வில்லை. தூபம், தீபம், அகில், கற்பூரம் ஆகியவற்றைக் கமழச் செய்தனர். நடுக்கம் நின்றபாடில்லை. செய்தி ஊரில் பரவ, கோயிலில் குழுமிய மக்கள், ‘இது என்ன கெட்ட காலமோ?’ என்று கலங்கினர். அப்போது, ‘‘எம் பக்தன் திரிபுரதாசன் தந்த நூல் ஆடையை அணிவித்தால் என் நடுக்கம் நிற்கும்!’’ என்றோர் அசரீரிக் குரல் அர்ச்சகரின் செவியில் விழுந்தது. அதை எல் லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் தெரிவித்த அந்த அர்ச்சகர், தான் கீழே விரித்திருந்த துணியை எடுத்து உதறிவிட்டு பயபக்தியுடன் எம்பெரு மான் திருமேனியில் சாத்தினார். அப்போது கோயில் பிராகாரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்த திரிபுரதாசர், யாரோ பிடித்து உலுக்கியது கண்டு விழித்து எழுந் தார். விவரம் அறிந்தார். ‘‘வேணுகோபாலனே! எனது எளிய ஆடையை ஏற்றுக் கொண்ட உமது பெருந் தன்மையை என்ன சொல்வேன்!’’ என்று மெய் சிலிர்க்க, கை கூப்பியபடி நின்று விட்டார்.
அங்கு ஓடோடி வந்த அர்ச்சகர், ‘‘சுவாமி! அறியாமல் அபசாரம் செய்து விட்டேன். இறைவனே வலியக் கேட்டு, உமது ஆடையை அணிந்த பெருமையை என்னவென்பேன்! என்னை மன்னியுங்கள்!’’ என்று திரிபுரதாசரின் காலடியில் விழுந்தார்.
– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4 (நவம்பர் 2007)